உடும்பு பேசிய படலம்

                                                                சீறாப்புராணம்

உடும்பு பேசிய படலம்

முன்னுரை

            வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க நபிகள் நாயகம் வரலாற்றை சீறாப்புராணமாக உமறுப்புலவர் பாடினார். இந்நூலில் 3 காண்டங்களும், 92 படலங்களும், 5027 பாடல்களும் உள்ளன. நபிகள் நாயகத்தின் வரலாற்றையும் அவர் செய்த அற்புதங்களையும் இந்நூல் கூறுகின்றது. இந்நூலில் உள்ள நுபுவத்துக் காண்டத்தில் ஐந்தாவது படலமாக உடும்பு பேசிய படலம் அமைந்துள்ளது.

இஸ்லாமிய மார்க்கத்தின் சுதந்திரர்கள்

            நபிகள் நாயகமும், அழகுப் பொருந்திய வள்ளலான உமறு கத்தாப்பும் தீனுல் இஸ்லாம் என்னும் மார்க்கத்திற்கு சுதந்தரர்களான பின்னர் முஸ்லீம்கள் அனைவரும் அச்சம் நீங்கப்பெற்று மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இஸ்லாம் மார்க்கத்தில் பயிர் போன்று வளர்ந்த கலிமாவை தகுதிப்படுத்தி, அனைவரும் நன்மையுறும் வண்ணம் அவர்களின் மனத்தில் பெருகச் செய்த இஸ்லாமிய அன்பர்கள் யாவரும் நபிகள் நாயகத்தை தங்கள் உயிர் என்று எண்ணி அவர் மீது அன்பு கொண்டனர்.

சோலையின் கண் தங்கியிருத்தல்

            உமறு மற்றும் தேன்கள் சிந்தக் கூடிய மாலையை அணிந்த அறபி மன்னர்கள் அனைவரும் குற்றம் நீங்கப் பெற்ற முகமது நபியைச் சூழ்ந்து, பெருமை பொருந்திய மதில்களையுடைய மக்கா நகரத்தை விடுத்து வெளியேறி வாசனை நிறைந்த மலர்களை உடைய ஒரு சோலையின்கண் அழகிய சந்திரனும் நட்சத்திரங்களும் இணைந்திருப்பதைப் போல தங்கியிருந்தார்கள்.

முகமது நபியை வணங்கி நிற்றல்

            முகமது நபியின் ஒளி பொருந்திய உடலின் அழகை அச்சோலையில் உள்ள கற்கள், மரங்கள், புற்களையுடைய காடுகள், தடாகங்கள், மெல்லிய சிறகுகளையுடைய பறவைகள்,  விலங்குக் கூட்டங்கள், ஊர்ந்து செல்லக் கூடிய உயிரினங்கள் மற்றும் காட்டில் கண் பார்வைக்குத் தெரியக் கூடிய எல்லா வகைகளும் பார்த்தனர். பின்னர் இவை கேட்கும் படியாக அறிவு தன்மையுடைய "அஸ்ஸலாமு அலைக்கும்'' என்று சலாஞ் சொல்லி நின்றன. மறுநாளும் முகமது நபியுடன் மக்கா நகரத்தை விடுத்து வேறொரு சோலையை அடைந்தனர்.

வேடன் முகமது நபியைக் காணல்

            கூரிய நகத்தையடைய உடும்பைப் பிடித்த மகிழ்ச்சியில் வேடன் வந்தான். முஸ்லீம்கள் சூழ நடு நாயகமாக விளங்கிய முகமது நபியை வேடன் கண்டான். பின் அங்கிருந்தவர்களிடம், நடுவில் வீற்றிருக்கும் இவர் யார்? என வினவ, அதற்கு அவர்கள், இவர் நன்மைப் பொருந்திய அல்லாவின் முதன்மை தூதுவரான முகமது நபி என்று பதிலளித்தனர்.

முகமது நபி - வேடன் வினவுதல்

            வேடன் அந்நிலையில் சில கேள்விகளை முகமது நபியிடம் கேட்டான்.

            “நீங்கள் எந்த வேதத்திற்கு உரியவர்? நீங்கள் வழி நடத்தும் மார்க்கம் எது? அதை நான் அறியும் படியாகச் சொல்வீராக என்று கேட்டான்.

            அதை கேட்ட முகமது நபி, “வேடனே! நான் இந்த பூமிக்குக் கடைசியாக வந்த நபி. எனக்கு அடுத்து அலீமென்று சொல்லப்படும் வேதமானது உயர்வானதுஎன்று கூறினர்.

            என் வார்த்தைகளின் வழி நின்று இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுபவர்கள், ஒளிபொருந்திய என் வார்த்தைகளின் வழி நின்றால் சொர்க்கத்தை அடைவார்கள். நான் கூறும் வார்த்தைகளின் உண்மையை அறியாமல் தீது, குற்றம் என்று கூறும் பாவிகள் அக்கினியினது குழிகளை உடைய நரகத்தை அடைவார்கள் என்று கூறுகிறார். உன் மனதுக்கு நல்லது என்று தோன்றும் என் நன்மை பொருந்திய கலிமாவை சொல்லி உன் பாவத்தைப் போக்கிக் கொள் என்று வேடனிடம் நபிகள் நாயகம் கூறினார்.

வேடன் இதை நம்பாமல்நீங்கள் சொல்வதை நான் நம்ப வேண்டுமென்றால் நீங்கள் செய்யும் அற்புதங்களை நான் கண்களால் காண வேண்டும் என்று கேட்டான்.

            எதைக் கொண்டு நான் அற்புதம் நிகழ்த்த என்று நபிகள் கேட்க என்னிடம் உள்ள இந்த உடம்பை உங்களிடம் பேச வைத்தால் நான் நம்புகிறேன் என்று கூறினான். இதையடுத்து நபிகள்உன் கையில் உள்ள உடும்பினைக் கீழே விடுகஎன்று கூறினார். நபிகள் நாயகம் கூறியதைக் கேட்ட வேடன், நறிய தேன் சிந்தும் மாலைகளை அணிந்தவர்களே, நான் இந்த உடும்பை அலைந்து திரிந்து பிடித்தேன். இதனால் என் கால்கள் தளர்ச்சியடைந்தன. இப்போது இதைக் கீழே விட்டால் மீண்டும் அதைப் பிடிப்பது என்பது முடியாத செயல். ஆதலால் உடும்பைக் கீழே வீடுவதற்குப் பதிலாக என் மடி மீது வைத்துக் கொள்கின்றேன் என்று கூறினான்.

            அப்போது முகமது நபி உடும்பை என்முன்விடு என்று கூறியவுடனே வேடனும் நபிகளின் அருகில் கொண்டு கீழே விட்டான்.

முகமது நபி - உடும்பு உரையாடல்

            முகமது நபியின் முன் விடப்பட்ட உடும்பானது தன் தலையைத் தூக்கி, வாலை நிமிர்த்தி, முள்ளைப் போல் உள்ள நகங்களால் பூமியை நன்கு பிடித்து, அவ்விடத்தை விடுத்துத் தப்பிக்க வழி இருந்தும் அவ்வாறு செய்யாமல் முகமது நபியைத் தன் மனதின் கண் நிறுத்திப் பார்த்தது.

            தன்னைப் பார்த்து நிற்கும் உடும்பை முகமது நபி ஒப்பற்ற வார்த்தைகளால் அழைக்க, உடும்பானது தான் கீர்த்தி பெற்றதை எண்ணித் தன்கண்களைத் திறந்து நபியைப் பார்த்த பின்பு தன் பிளந்த வாயால் பேசத் தொடங்கியது.

            இம்மை, மறுமை என்று இரண்டினாலும் பல யுகங்கள் தோன்றியிருக்கின்றன. இப்பூமியில் நபிமார்கள் பல அவதரித்துள்ளார்கள். அவர்களுடனே எப்போது மனமானது இருக்கும். இவர்கள் வேதங்களில் சொல்லப்பட்ட வானம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று லோகங்களும் துதிக்கும் வண்ணம் தகுதியுடையவர்கள்.

            தேவர்களான மலாயிக்கத்துமார்கள் வணங்கி நிற்கும் தங்களின் பாதங்களைத் தினமும் வணங்கி, கண்களிலும் தலையிலும் பொருந்தும் வண்ணம் வணங்கும் யான் பெரும் பேறு பெறும் வண்ணம் தங்களின் வாயை திறந்து கூப்பிட்ட காரணத்தை உடும்பு கேட்டது. இதைக் காதுகளில் கேட்ட நபியவர்கள் உடும்பிடம், நீ யாரை வணங்குகின்றாய்? அதை மறைக்காமல் சொல் என்றார்.

            கஸ்தூரி வாசனை நிறைந்து காணப்படும் வள்ளலவர்களே! நான் வணங்குகின்ற நாயகன் ஏகன். அவனுடைய அழகிய சிம்மாசனம் ஒப்பற்ற வானலோகத்திலும், இராஜாங்கம் பூமியிலும், கருணை பொன்னாலான சொர்க்கலோகத்திலும் நிறைந்துள்ளது.

            தீமையும் பகைமையும் இல்லாமல் அவன் கோபித்துச் செய்கின்ற வேதனையானது நரகலோகம். மாறுபாடில்லா ஒப்பில்லாத பெரியவனான அல்லாவை நான் வணங்குகின்றேன் என்ற உடும்பு கூறியதைக் கேட்ட நபிகள் நாயகம், என்னை யார் என்று மதித்தாய் என்று கேட்டார்.

            சமுத்திரம், ஆகாயம், பூலோகம், மலைகள், சூரியன் மற்றும் அனைத்தும் தங்களின் ஒளியில் உள்ளன. இப்பூலோகத்தில் தோன்றிய நபிமார்களில் ஒளியும், மேன்மையும் கொண்டவராக விளங்குபவர் கடைசியில் வந்த நபியாகிய முகமது நபியே. முகமது நபி தன வாக்கினால் சொன்ன மார்க்கமே இறுதியானது. இதை அறிந்து பின்பற்றுபவர்கள் சொர்க்கலோகத்தையும், குற்றமென்று விடுபவர்கள் நரகத்தையும் அடைவார்கள்.

            இக்காட்டில் என்னுடன் வாழும் உயிரினங்கள் தங்களுடைய திருநாமத்தையுடைய கலிமாவை போற்றித் துதிக்கின்றன. மிகுந்த புகழையும் நன்மையும் பொருந்திய நீங்களே நபிகளில் சிறந்தவர் என்று கூறிற்று.

அறபிவேடன் முகமது நபியை வணங்குதல்:

            உடும்பு முகமது நபியுடன் கண்ட அறபிவேடன் தன் மனதில் விருப்பமுடன் தன்னுடைய துன்பம் நீங்கும் வண்ணம், முகமது நபியின் பாதங்களைப் பற்றினான். என்னுடைய பாவத்தையும், என் குடும்பத்தினரின் பாவத்தையும் நீ ஒழித்து அருள்க என்று வணங்கினான். வேடன் நபியின் பாதங்களில் கைகளை வைத்து அதைத் தன் கண்களில் வைத்தும் முத்தமிட்டும், சுற்றியுள்ளவர்கள் யாவரும் நெகிழ்ச்சியுறும் படி அருமையான கலிமாவைத் தமது வாயினால் ஓதினான். அதைக் கண்ட முகமது நபி, மகத்தான விதியினது ஒழுங்குகளையுடைய தொழுகையை விரும்பி செய்யும் இவ்வேடன் அறிவில் முதியவர் என்று சொல்லப்படும் இஸ்லாமியர் ஆனார்.

அறபிவேடனின் மனமாற்றம்:

            பனைமரத்தை ஒத்த பெரிய துதிக்கையைக் கொண்ட யானையைப் போன்ற வலிமையையுடைய அவ்வேடன் உடும்பிடம், நான் உன்னை நெருங்கிப் பிடித்தேன். ஆனால் உன் செய்கையானது இன்றைய நாள் வரை நான் செய்த பாவங்களைப் போக்கியது. ஆதலால் இவ்வலையை விடுத்து உனது வீடாகிய பெரிய வலையின் கண் செல்வாயாக என்று கூறி ஆசீர்வதித்தார். அப்போது அந்த உடும்பானது அங்குள்ளவர்களான அரபிமார்களைப் பார்த்து மகிழ்ந்தது. பின் தாமரை மலர் போன்ற முகத்தையுடைய நபிகள் நாயகத்தின் முகத்தைப் பார்த்துத் தான் பூரணமடைந்ததை எண்ணி மகிழ்ந்து நின்றது. அதை கண்ட முகமது நபி தனது வாயைத் திறந்து நீ உன் இருப்பிடத்திற்குச் செல்லென்று மகிழ்ச்சி பொருந்தும் வண்ணம் சொன்னதை விலங்கினமாகிய உடும்பு தனது காதுகளினாற் கேட்டு மகிழ்ச்சி அடைந்து தன் விருப்பத்தோடு காட்டின் கண் சென்றது.

முடிவுரை 

            இவ்வாறு உடும்பு பேசிய படலத்தில் இஸ்லாம் மதத்தின் இறுதி தூதரான முகமது நபியின் மார்க்கம் மற்றும் சிறப்புகள் சொல்லப்பட்டுள்ளது. முகமது நபி தன் மார்க்கத்தின் சிறப்புக்களை அறபி வேடன் புரியும் வண்ணம் உடும்பைப் பேச வைத்து அவனது பாவத்தைப் போக்கச் செய்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி