மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் வருகைப்பருவம் 5 பாடல்கள் மட்டும்

 மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைதமிழ் என்ற நூல் பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. இது பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படுகிறது. மதுரையில் எழுந்தருளியுள்ள மீனாட்சியம்மையைப் பாட்டுடைத்தலைவியாகக் கொண்டது. குமரகுருபரர் என்ற புலவரால் பாடப்பட்ட நூல்.  விஜயநகர பேரரசின் நாயக்க மன்னரான திருமலை நாயக்கர் முன்னிலையில் மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் பாடப்பட்டது. 102 பாடல்கள் உள்ளன.

குமரகுருபரர்

குமரகுருபரர் பாண்டி நாட்டிலுள்ள திரு வைகுண்டம் என்ற ஊரில் பிறந்தார். இவரின் பெற்றோர் சண்முக சிகாமணிக் கவிராயரும், சிவகாமி அம்மையும் ஆவர். இவர் மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியர். சிவத்தொண்டில் சிறந்து விளங்கியவர். இளமையிலேயே முருகன் அருள் பெற்றவர். இவர் பிறந்து ஐந்தாண்டுகள் பேசவில்லை. அதைக் கண்ட இவர் தம் பெற்றோர் திருச்செந்தூர் முருகனை வேண்ட இவர் பேசும் பேறு பெற்றார் என்பர். கல்வி கேள்விகளில் சிறந்தவர்.  இவர் 'சிற்றிலக்கிய வேந்து' என்றும் அழைக்கப்படுவார். இவர் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேற்றத்தின் போது இறைவியே எழுந்தருளி இவருக்குப் பரிசளித்தாள் என்பது வரலாறு. இவரின் காலம் கி.பி. பதினேழாம் நூற்றாண்டு என்பர்.

குமரகுருபரர் இயற்றிய நூல்கள்

கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மைக் குறம், மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, சிவகாமியம்மை இரட்டைமணிமாலை, பண்டார மும்மணிக்கொவை, காசிக்கலம்பகம், சகலகலா வல்லிமாலை ஆகிய நூல்களையும் இயற்றிவர்.

வருகைப்பருவம்

பிள்ளைத்தமிழ் பருவங்களில் ஆறாவது பருவம் வருகைப் பருவம். இப்பருவம் குழந்தையின் பதின்மூன்றாம் மாத்ததில் நிகழ்வதாகும். இதனை வாரானைப் பருவம் என்றும் கூறுவர். குழந்தையைத் தளர்நடையிட்டு வருமாறு வேண்டிப் பாடுவது வருகைப் பருவமாகும்.

பாடல் எண் : 1

அஞ்சிலம் போலிட அரிக்குரற்கிண்கிணி

           அரற்றுசெஞ் சீறடிபெயர்த்

    தடியிடுந் தொறுநின் அலத்தகச்சுவடுபட்

           டம்புவி அரம்பையர்கள்தம்

மஞ்சு துஞ் சளகத் திளம்பிறையு மெந்தைமுடி

           வளரிளம் பிறையுநாற

    மணிநூ புரத்தவிழும் மென்குரற்கோவசையும்

           மடநடைக் கோதொடர்ந்துன்

செஞ்சிலம் படிபற்று தெய்வக்குழாத்தினொடு

           சிறையோதி மம்பின்செலச்

    சிற்றிடைக் கொல்கிமணி மேகலைஇரங்கத்

           திருக்கோயில் எனவெனெஞ்சக்

கஞ்சமுஞ் செஞ்சொல் தமிழ்க்கூடலுங்கொண்ட

           காமர்பூங் கொடிவருகவே

    கற்பகா டவியில்கடம்பா டவிப்பொலி

           கயற்கணா யகிவருகவே

விளக்கம் :

அழகிய சிலம்பணி ஒலியைச் செய்ய, மணிகளின் ஒலியமைந்த கிண்கிணி இரைதலைச் செய்ய, சிறிய அடிகளைப் பெயர்த்து வைத்து, நீ நடக்கும்பொழுதெல்லாம் உனது செம்பஞ்சுக் குழம்பு தோய்ந்த அடித் தழும்பு பட்டு அழகிய பூமியில் வந்திருக்கும் அரம்பை மாதர்களுடைய மேகம் போன்ற கூந்தலில் அணிந்துள்ள இளம்பிறையிலும், எம்பிரான் சடைமுடியில் அணிந்துள்ள இளம்பிறையிலும் (அத்தழும்பு) தோன்ற, அழகிய சிலம்பினின்று வெளியாகும் மெல்லிய குரலைக் கருதியோ அல்லது தளர்கின்ற இளநடையைக் குறித்தோ தொடர்ந்து உனது சிலம்பணிந்த பாதத்தைப் பற்றி வருகின்ற தெய்வப்பெண்கள் கூட்டத்தினுடன் சிறகுகளையுடைய அன்னமும் பின்தொடர்ந்து வரும்படி, சிறிய இடைக்காக வருந்திய மணிமேகலை என்னும் அரையணி ஒலிக்க,  எனது மனமாகிய தாமரை மலரையும் அழகிய சொல்லையுடைய தமிழ்மொழி பழகும் அழகிய மலர்க்கொம்பு போன்றவளே! வருக, கற்பகக்காடு போலக் கடம்பவனத்தில் நிறைந்து விளங்குகின்ற கயற்கண் அம்மையே! வருக!

பாடல் எண் :2

குண்டுபடு பேர்அகழி வயிறுஉளைந்து ஈன்றபைங்

                கோதையும் மதுரம்ஒழுகும்

        கொழிதமிழ்ப் பனுவல் துறைப்படியும் மடநடைக்

                கூந்தல்அம் பிடியும் அறுகால்

வண்டுபடு முண்டக மனைக்குடி புகச்சிவ

                மணங்கமழ விண்டதொண்டர்

        மானதத் தடமலர்ப் பொன்கோயில் குடிகொண்ட

                மாணிக்க வல்லிவில்வேள்

துண்டுபடு மதிநுதல் தோகையொடும் அளவில்பல

                தொல்உரு எடுத்துஅமர்செயும்

        தொடுசிலை எனக்ககன முகடுமுட் டிப்பூந்

                துணர்த்தலை வணங்கிநிற்கும்

கண்டுபடும் கன்னல்பைங் காடுபடு கூடல்

                கலாபமா மயில்வருகவே

        கற்பக அடவியில் கடம்பாடு அடவிப்பொலி

                கயல்கண்நா யகிவருகவே

விளக்கம் :

ஆழமான பெரிய திருப்பாற்கடல் வயிறு வருந்திப் பெற்ற கரிய கூந்தலையுடைய இலக்குமியும், இனிமை சொரியும் தமிழ் மொழிக் கடலின் நூலாகிய துறையில் மூழ்கும் மெல்லிய நடையையுடைய கூந்தலைக் கொண்ட பெண் யானையாகிய கலைமகளும், ஆறு கால்களையுடைய வண்டுகள் பொருந்தும் தாமரை மலராகிய வீட்டில் புகுந்து கொள்ள, சிவனின் வாசனை கமழும்படி விரிந்த தொண்டர்களுடைய உள்ளமாகிய தடாகத்தில் மலராக மலர்ந்து கோயிலில் குடிபுகுந்துள்ள மாணிக்க வல்லியே!, வில்லைப் பிடித்த மன்மதன் பிளவுப்பட்ட பிறையை ஒத்த நெற்றியையுடைய தன் மனைவியாகிய இரதியுடன் பலவகையான பழைய வடிவங்களைத் தாங்கிப் போர்புரிவதற்கு எடுத்திருக்கும் பல விற்களைப் போல, ஆகாய உச்சியை எட்டிப் பூங்கொத்துடன் தலையை வணங்கி நிற்கின்ற, சர்க்கரை உண்டாகின்ற கரும்பாகிய இனிய காடுகளையுடைய மதுரையில் எழுந்தருளியிருக்கின்ற தோகையுடைய சிறந்த மயில் போல்வாளே! வருக! கற்பகக்காடு போலக் கடம்பவனத்தில் நிறைந்து விளங்குகின்ற கயற்கண் அம்மையே! வருக!

பாடல் எண் : 3

முயல்பாய் மதிக்குழவி தவழ்சூல்அடிப்பலவின்

           முட்பொதி குடக்கனியொடு

    முடவுத் தடந்தாழை முப்புடைக்கனிசிந்த

           மோதிநீர் உண்டிருண்ட

புயல்பாய்படப்பபைத் தடம்பொழில்கள் அன்றியேழ்

           பொழிலையும் ஒருங்கலைத்துப்

    புறமூடும் அண்டச் சுவர்த்தலம்இடித்தப்

           புறக்கடல் மடுத்துழக்கிச்

செயல்பாய்கடற்றானை செங்களங்கொள அம்மை

           திக்குவிச யங்கொண்டநாள்

    தெய்வக் கயற்கொடிகள்திசைதிசை எடுத்தெனத்

           திக்கெட்டு முட்டவெடிபோய்க்

கயல்பாய் குரம்பணை பெரும்பணைத்தமிழ்மதுரை

           காவலன் மகள் வருகவே

    கற்பகா டவியில் கடம்பாடவிப்பொலி

           கயற்கணா யகிவருகவே

விளக்கம் :

முயற்கறை பரவிய இளஞ்சந்திரன் தவழ்கின்ற கருப்பம் தாங்கும் பலாமரத்தின் முட்கள் நிறைந்த குடம் போன்ற பழத்துடன், வளைந்த பெரிய தென்னையின் மூன்று பக்கம் புடைத்திருக்கின்ற தேங்காய் சிந்தும்படி தாக்கி நீரைப் பருகி இருள் அடைந்துள்ள மேகம் பரவி நின்ற மருத நிலத்தின் பெரிய சோலைகள் அல்லாமலும், மேல் ஏழு உலகங்களையும் ஒரு சேர வருத்தி வெளியில் மூடியுள்ள அண்டச் சுவர்த்தலத்தையும் தகர்த்து, வெளியிலுள்ள பெரும் புறக் கடல் நீரையும் உட்கொண்டு கலக்கிச் செயலில்  பரந்த கடல் போன்ற சேனைகள் போர்க்களத்தை இடமாகக் கொண்டு தாயாகிய நீ திசை எங்கும் வெற்றி அடைந்து வந்த நாளில் தெய்வத் தன்மையுடைய கயல் மீன் கொடிகளைத் திசைகள் எங்கும் தூக்கி உயர்த்தி காட்டியது போல எட்டுத் திசைகளிலும் மோதும்படி குதித்துக் கயல் மீன்கள் பாய்கின்ற வரம்புகள் நெருங்கிய பெரிய வயல் இடங்களையுடைய தமிழ் வளர்ந்த மதுரைக் காவலனான பாண்டியன் மகளே! வருக! கற்பகக்காடு போலக் கடம்பவனத்தில் நிறைந்து விளங்குகின்ற கயற்கண் அம்மையே! வருக!

பாடல் எண் : 4

வடம்பட்ட நின்துணைக் கொங்கைக் குடம்கொட்டு

                மதுரஅமு துண்டுகடைவாய்

        வழியும்வெள் அருவியென நிலவுபொழி கிம்புரி

                மருப்பில் பொருப்புஇடித்துத்

தடம்பட்ட பொன்தாது சிந்துரம் கும்பத்

                தலத்துஅணிவது ஒப்பஅப்பிச்

        சலராசி ஏழும் தடக்கையின் முகந்துபின்

                தானநீ ரால்நிரப்பி

முடம்பட்ட மதியம் குசப்படை எனக்ககன

                முகடுகை தடவிஉடுமீன்

        முத்தம் பதித்திட்ட முகபடாம் எனவெழு

                முகில்படாம் நெற்றிசுற்றும்

கடம்பட்ட சிறுகண் பெருங்கொலைய மழஇளங்

                களிறுஈன்ற பிடிவருகவே

        கற்பக அடவியில் கடம்பாடு அடவிப்பொலி

                கயல்கண்நா யகிவருகவே

விளக்கம் :

மணி வடங்கள் பொருந்திய உன் இரண்டு கொங்கைகள் ஆகிய குடங்கள் சொரிகின்ற இனிய அமுதைப் பருகி, வாயின் கடையில் ஒழுகும் வெள்ளை அருவி என்னும்படி நிலவைச் சொரியும் கிம்புரிப் பூண் அணிந்த தந்தங்களினால், மலையை இடித்துப் பெருமையான பொன்னாகிய செந்தூளை மத்தகத்தில் அணிவதைப் போலப் பூசி ஏழு கடலையும் பெரிய கையால் முகந்து குறைத்துப் பின் மத நீரினால் நிறைத்து, வளைவுற்ற சந்திரனை அங்குசப்படை என்று கூற வானத்துச்சியைத் துதிக்கையால் தடவி, நட்சத்திரங்கள் ஆகிய முத்துக்களைப் பதித்த முகபடாம் என்று சொல்லும்படி ஏழு முகில்கள் என்ற கூட்டங்களை நெற்றியில் சுற்றும், மதம் பொருந்திய சிறிய கண்களையும் பெரியகொலைத் தொழிலையுமுடைய மிகவும் இளைய யானையை (பிள்ளையாரை)ப் பெற்ற பெண் யானையே! வருக! கற்பகக்காடு போலக் கடம்பவனத்தில் நிறைந்து விளங்குகின்ற கயற்கண் அம்மையே! வருக!

பாடல் எண் : 5

தேனொழுகு கஞ்சப் பொலன்சீ றடிக்கூட்டு

                செம்பஞ்சி யின்குழம்பால்

        தெள்ளமுது இறைக்கும் பசுங்குழவி வெண்திங்கள்

                செக்கர்மதி யாக்கரைபொரும்

வானொழுகு துங்கத் தரங்கப் பெருங்கங்கை

                வாணிநதி யாச்சிவபிரான்

        மகுடகோ டீரத்து அடிச்சுவடு அழுத்தியிடு

                மரகதக் கொம்புகதிர்கால்

மீன்ஒழுகு மாயிரு விசும்பில் செலும்கடவுள்

                வேழத்தின் மத்தகத்து

        வீற்றிருக் கும்சேய் இழைக்கும் பசுங்கமுகு

                வெண்கவரி வீசும்வாசக்

கான்ஒழுகு தடமலர்க் கடிபொழில் கூடல்வளர்

                கவுரியன் மகள்வருகவே

        கற்பக அடவியில் கடம்பாடு அவிப்பொலி

                கயல்கண்நா யகிவருகவே

விளக்கம் :

தேன் சிந்துகின்ற தாமரைமலர் போன்ற பொன் மயமான சிறிய பாதங்கட்கு ஊட்டப்படுகின்ற செம்பஞ்சுக் குழம்பினால், தெளிந்த அமுதை அள்ளி எறியும் மிக இளைய வெள்ளிய சந்திரன் சிவந்த நிற மதியாகக் காட்சியளிக்க, கரையை மோதும் ஆகாயத்தில் ஒழுகுகின்ற உயர்வான அலைகளையுடைய பெரிய கங்கையாறு  வீற்றிருக்கும் சிவபெருமானுடைய சடையில் பாதத்தின் சுவடுபட அழுத்துகின்ற பச்சை நிறமுள்ள பூங்கொம்பே! ஒளியை வீசுகின்ற நட்சத்திரங்கள் நடக்கின்ற பெரிய வானத்தில் செல்லுகின்ற தெய்வத் தன்மையுள்ள ஐராவதமாகிய யானையின் முதுகில் வீற்றிருக்கின்ற இந்திராணி பச்சை நிறமான கமுகமரம் வெண்கவரி வீசுவதற்கு நிற்பது போல உயர்ந்திருக்கும், நறுமணக் காற்று வீசுகின்ற அகன்ற பூக்களையுடைய சிறந்த சோலைகளும் சூழ்ந்த கூடலில் வளர்கின்ற பாண்டியன் மகளே! வருக! கற்பகக்காடு போலக் கடம்பவனத்தில் நிறைந்து விளங்குகின்ற கயற்கண் அம்மையே! வருக!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி