தானம் சொல் பற்றிய கருத்தாக்கம்
தானம்
தானம்
என்ற சொல் இயல்பாக நம்மிடையே வழங்கப்பட்டு வருவதினைக் காணமுடிகிறது. கிராம மக்களிடையே
“தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடுங்கிப் பார்க்காதே” என்ற பழமொழி இயல்பாக வழங்கப்பட்டு
வருவதினைப் பார்க்கமுடிகிறது. தானங்களிலே சிறந்தது அன்னதானம் என்று குறிப்பிடுவர்.
அதாவது உணவு தானங்களைக் கொடுக்கும் போது கொடுப்பவரும், பெறுபவரும் மன அமைதி அதாவது
திருப்தி பெறுகின்றனர். இந்நிலையை மற்ற தானங்களில் பார்க்க முடியாது. அதாவது ஆடைதானம், பொருள்தானம் இவற்றைக் கொடுப்பவர்கள்
வாங்குபவர்கள் திருப்தி அடையாத நிலையை காண முடிகிறது.
தானம்,
பெயர்ச்சொல். இது 23 பொருள்களை உணர்த்தும் சொல்லாக அகராதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவையாவன,
1. இசைச்சுரம் ( Mus. )
(எ. கா.) 'பெருந்தானத் திலே பெருமிடறுசெய்து
(ஈடு. 3, 8, ப்ர.)
2. சுரவிஸ்தார முறை ( Mus. )
3. இடம், உறைவிடம்
(எ. கா.) தானத்தி லிருத்த லோடும்
(சீவக. 1567).
4. பதவி
(எ. கா.) தான மழியாமைத் தானடங்கி
வாழ்வினிதே (இனி. நாற். 14).
5. கோயில் ((S. I. I.) i,
120.)
6. சுவர்க்கம் (பிங்.)
7. ஆசனம்
(எ. கா.) தானத்தி லிருக்க வென்றான்
(சீவக. 542).
8. எழுத்துப்பிறக்கும் இடம் (நன்.
73.).... (இலக்கணம்)
9. எண்ணின் தானம் (பேச்சு வழக்கு)
.... (கணிதம் )
10. சாதகசக்கரத்திலுள்ள வீடு....
((சோதிடவியல்) )
11. செய்யுட்பொருத்தத்தில் வரும்
பாலத் தானம், குமரத்தானம், இராசத்தானம், மூப்புத்தானம், மரணத்தானம் என்ற நிலைகள்
....(கவிதை )
12. காண்க... தானப்பொருத்தம்
13. ஆற்றலில் சமமாயிருக்கை
(எ. கா.) தானஞ் சமங்கொளல் (இரகு.
திக்வி. 24).
14. சக்தி
(எ. கா.) அந்தமி றானங்கூடலின்
(ஞானா. 59, 19).
15. நன்கொடை
16. தசபாரமிதைகளுள் ஒன்றாகிய ஈகை
(பிங்.).... (புத்தத் தத்துவம்)
17. நால்வகை உபாயங்களுள் ஒன்றான
கொடை (சீவக. 747, உரை)
18. ஆகாரதானம், அபயதானம், சாஸ்திரதானம்,
ஒளஷததானம் என்ற நால்வகை அறச்செயல்.... (Jaina.)
19. இல்லறம் (திருநூற். 17, உரை.)
20. யானைமதம் (பிங்.)
(எ. கா.) கைத்தானக் களிற் றரசர்
(கம்பரா. கார்முக. 20).
21. வேள்வி (பிங்.)
22. மகரவாழை (பிங்.)
23. ஸ்நானம்
(எ. கா.) வன்னிதானம் புகுமுன் மானததானந்தோய
மாட்டாரேனும் (குற்றா. தல. திருக்குற். 21).
நம்மைச்
சுற்றியுள்ளவர்களைப் புரிந்துகொண்டு கூட்டுறவான வாழ்வு தோன்றுகின்ற போது ஒப்புரவு நிகழ்கிறது.
ஒப்புரவு செய்வதற்கு ஒருவர் செல்வம் படைத்தவராக இருக்க வேண்டும் என்பதில்லை. பொதுத்தொண்டு
செய்ய ஒருவர் தனது நேரத்தையும் ஆற்றலையும் செலவழிக்க முன்வந்தாலே அவர் ஒப்புரவாளர்
ஆகிறார். இக்காலத்தில் நிறுவன அமைப்புகளின் வழியும் நிறைய ஒப்புரவு பணிகள் நடைபெறுகின்றன.
NGO (Non-Governmental Organization) என அறியப்படும் நிறுவனங்களில் விருப்பார்வத்தொண்டர்
(volunteer) ஆக ஊதியம் எதுவும் பெறாமல் முழுநேர/பகுதி நேரப் பணியாகச் ஒப்புரவுகள் ஆற்றப்படுகின்றன.
கழிவுகளை அகற்றி ஊரைத் தூய்மைப்படுத்துதல், குருதிக்கொடை போன்ற மருத்துவ முகாம்கள்
நடத்துதல், ஆதரவற்றோர் இல்லங்களில் முதியோர், சிறுவர், ஊனமுற்றோர் இவர்களுக்குத் தேவைப்பட்ட
உதவிகள் செய்தல். புயல், கடும்மழை, வெள்ளம், ஆழிப் பேரலை, தீ போன்ற இயற்கைப் பேரழிவுகளால்
பாதிக்கப்பட்டோருக்கு காப்பு அளித்தல். நூலகம் கட்டுதல், கல்வி நிலையம், உடற்கழகம்,
தண்ணீர்ப்பந்தல். பூங்கா, விளையாடு களம் அமைத்தல் என்றின்னவை ஒப்புரவுப் பணிகளுக்குக்
காட்டுக்கள்.
ஒப்புரவு
வேறு. ஈகை வேறு. ஈகை என்பது ஒன்று தேவைப்பட்டவர் இரந்து கேட்க அதை அவர்க்குக் கொடுத்தல்.
ஒப்புரவு பொதுநல நோக்குடன் அனைவர்க்கும் செய்யப்படும் உதவி. அன்புடைமை, அருளுடைமை என
இரு தனித்தனி அதிகாரங்கள் இருப்பதுபோல, ஒப்புரவு, ஈகை எனும் இரு பெயரால் அதிகாரங்கள்
அமைக்கப்பட்டமையே, இச்சொற்கள் வேறுபட்ட பொருளின என்பதை அறியலாம்.
தானம்
என்ற சொல், திருக்குறளில் இரண்டு இடத்திலும், சிலம்பில் ஓரிடத்திலும் "கேளாமல்
தருவது" என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கிறது. அவற்றை இனிப் பார்ப்போம். முதலில்
வான்சிறப்பில் வரும் 19 வது குறள்.
தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்.
என்ற இந்தக் குறளை "வானம்
வழங்காது எனின், தானம், தவம் ஆகிய இரண்டும் வியனுலகம் தங்கா" என்று வரிமாற்றிப்
பொருள் கொள்ள வேண்டும். வானம் மழையை வழங்கவில்லை என்றால், ஒரு நாட்டின் வளம் குன்றும்;
நல்லோர் தவம் இருக்க மாட்டார்கள்; தானம் செய்ய மாட்டர்கள்; "அவையெல்லாம் உலகில்
இருந்து விலகிவிடும்" என்கிறார் திருவள்ளுவர். அதாவது இந்த நிலைத்த பெரிய உலகில்
மழை இல்லையெனில் தானம், தாவம் இரண்டும் இவ்வுலகில் நடைபெறாது. தானம் என்பது இல்லறத்தோடு
தொடர்புடையது, தவம் துறவத்தோடு தொடர்புடையது.
"மழை வருவதற்கும், தானம் தவம்
ஆகிய இரண்டிற்கும் என்ன தொடர்பு?" என்ற சிந்தனை தோன்றுவது இயல்பானது. தானம் என்பது
பிறர் கேளாமல், ஒருவரின் தேவையை அறிந்து, மனம் உவந்து தரப்படுவது ஆகும். உள்ளம் உவகையோடு
பிறர் கேட்காமல் எவ்வாறு வழங்க மனம் வரும்? ஒருவரிடம் செல்வ வளம் அதிகமாக இருந்தால் மட்டுமே கேட்காமல் குறிப்பறிந்து பிறருக்குக்
கொடுக்கும் மனநிலை உருவாகும். உலகில் செல்வ வளம் நிலைத்திருந்தால் மட்டும்தான் பொதுநோக்கம்
ஏற்படும். இந்த பொதுநோக்கம் உருவாகும்போது சமூகச்சேவைகளும் உருவாகும். எனவே மழை என்ற
ஒன்று இருந்தால் மட்டும்தான் உலகில் வளம் ஏற்படும்; அது இருந்தால், தானம் என்பது உலகில்
தங்கும்.
மழை
என்பது தானம், தவம் என்ற இரண்டும் நடைபெறுவதற்கான மூலக் காரணியாய் உள்ளது.
இனி
தானம் என்ற சொல் பயிலும் அடுத்த குறளைப் பார்ப்போம். இதில் மனத்தொடு சேர்ந்த வாய்மை
நிலையை, தவம், தானம் ஆகிய இரண்டோ டு, வள்ளுவர் ஒப்பிட்டுப் பார்க்கிறார்.
மனத்தொடு
வாய்மை மொழியில் தவத்தொடு
தானம்
செய்வாரின் தலை (திருக்குறள் 295)
மனத்தோடு உண்மை பேசினால், அது தவம்
செய்பவர்களைக் காட்டிலும், தானம் செய்பவர்களைக் காட்டிலும், தலையாயது ஆகும் என்று இங்குக்
குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.
தானம் என்ற சொல்லாட்சி இடம்பெற்ற
குறள்கள் இரண்டும் தானம், தவம் என்றே இணைந்து வருவதினைப் பார்க்கலாம். எனவே இதிலிருந்து
தானத்தைப் போலவே தவமும் செல்வவளம், மழை ஆகியவற்றோடு தொடர்பு கொண்டது என அறிந்து கொள்ளலாம்.
தவம் என்பது வாழ்வுப் பற்றில் இருந்து விலகுவது, நீங்குவது என்ற பொருள் தரும். தவம்
என்பது பற்றை அறுத்த நிலை; அதற்கும் மேலே போய், பற்றையே துறப்பது துறவு எனப்படும்.
அதாவது தவத்தின் நீட்சி துறவு. வளமே இல்லாத நாட்டில், பற்றே ஏற்படாத நிலையில், எதைத்
துறப்பது, என்ற வினா தோன்றும். எனவே செல்வவளத்திற்குக் காரணி மழை. மழை இருந்தால் மட்டும்
தான் இல்லற வாழ்க்கைக்குரிய தானமும் துறவு வாழ்க்கைக்குரிய தவமும் நடைபெறும் என்ற கருத்தை
உணர்த்தவே திருவள்ளுவர் இவ்விரண்டு சொற்களையும் சேர்த்தே பயன்படுத்தியுள்ளார் என்பது
தெளிவாகப் புலப்படுகின்றன.
தானமும் தவமும் தாம்செயல் அரிதே
தானமும் தவமும் தாம்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே”
என்ற
பாடலில் ஔவையாரும் தானம் தவம் என்ற இரண்டையும் இணைத்தே குறிப்பிட்டுள்ளார். அதாவது
செயல்களில் சிறப்பானதும் செய்வதற்கரிய செயலாகவும் விளங்கிறது தானமும் தவமும் என்று
தான் ஔவையாரும் குறிப்பிட்டுள்ளார்.
தானம் செய்ம்மின்; நலம்பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்;
(சிலப்பதிகாரம், வரம்தருகாதை. 90)
வரும் பாடல் வரி தானம் செய்ய வலியுறுத்துகிறது.
மேலும் சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டத்தில், நீர்ப்படை காதையில், வரி 98-100ல்,
"கண்ணகி தாதை, கடவுளர் கோலத்து,
அள்நலம் பெருந்தவத்து, ஆசீ வகர்முன்
புண்ணிய தானம் புரிந்து அறங் கொள்ளவும் ...
இவ்விடத்திலும் தானம் செய்ய வேண்டும்
என்ற அறவுரையையே சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. தானம் அறச்செயல்களில் ஒன்றாகவே வழங்கப்படுவதினைப்
பார்க்க முடிகிறது.
இனியவை
நாற்பது 27 ஆம் பாடலில் “தானம் கொடுப்பான் தகையாண்மை முன்
இனிதே” என்று தானம் வழங்குவது இனிமை பயக்கும் என்று குறிப்பிட்டுள்ளதைப் பார்க்க
முடிகிறது.
தானம்
என்ற சொல்லுக்கு இணையாக அளித்தல், ஈதல், தருதல், கொடுத்தல் ஆகிய சொற்களையும் பொருத்திப்
பார்க்கலாம். ஒப்புரவறிதல், ஈகை போன்ற அதிகாரக்
கருத்துகளை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது தானம் என்ற சொல்லின் நீட்சியாக அவை
இருப்பதைக் காணமுடிகிறது.
மன்னர்கள்
காலத்தில் மன்னன் மக்களுக்கு நல்லாட்சி வழங்குபவனாக மட்டுமல்லாமல் தானம் வழங்குவதிலும்
சிறப்பு உடையவனாக இருந்துள்ளனர். புலவர்கள் தாங்கள் இயற்றிய நூலுக்காகப் பெறுவதற்கரிய
பொருட்களைத் தானமாக மன்னர்களிடமிருந்து பெற்றுள்ளனர் என்பதை இலக்கியங்களில் பார்க்க
முடிகிறது. நிலம், யானை போன்றவற்றைத் தானமாக வழங்கிச் சிறப்பு பெற்றனர் மன்னர்கள்.
முற்காலத்தில்
பயன்படுத்தப்பட்ட கன்னிகாதானம் என்ற சொல்லைப் பார்க்கும்போது மகளிரைத் தானமாக வழங்கியுள்ளனர்
என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இக்காலத்தில்
காணப்படும் கண்தானம், இரத்தத்தானம், உறுப்புத்தானம், சிறுநீரகம், இதயம் தோல் போன்றனவும்
தானமாக வழங்குவது உயர்ந்த கொடைத்தன்மையையே சுட்டி நிற்பதைக் காணலாம். இரத்தத் தட்டுகள்
கூட தானமாக வழங்கும் நிலையையும் உருவாக்கி மருத்துவத்துறையின் சாதனையாக வளர்ந்து வருவதினைப்
பார்க்க முடிகிறது.
கண்தானம்
என்ற சொல்லைப் பார்த்தவுடன் அனைவரின் நினைவிலும் கண்ணப்பநாயனார் சிவபெருமானுக்கு வ்வழங்கிய
கண்தானமே நினைவிற்கு வருகிறது.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு (திருக்குறள். 72)
என்ற குறட்பாவில் திருவள்ளுவர்
எலும்பைத் தானமாக வழங்கலாம் என்ற செய்தியைப் பதிவு செய்து மருத்துவத்துறைக்கு முன்னோடியாக
இருந்துள்ளார் என்பதைப் பார்க்க முடிகிறது வலியுறுத்துகிறது. ததிசி முனிவர் இந்திரனுக்குத்
தன் எலும்பைக் கொடுத்து வச்சிராயுத படையைச் செய்ய உதவினார் என்ற புராணக் கதையும் எலும்புத்
தானத்தைச் சுட்டி நிற்கிறது. தற்காலத்தில் எலும்பு உடைந்தவர்களுக்கு மாற்றுக் குழாய்கள்
பொருத்திச் சாதனைப் படைப்பதினைப் பார்க்க முடிகிறது.
இவ்வாறு மருத்துவத் துறை சார்ந்த தானங்களும் பெருகிக் கொண்டிருக்கும்
காலத்திலும் கூட திருவள்ளுவர் தன் திருக்குறளில் இரண்டு இடங்களிலும் பயன்படுத்திய தானம்
என்ற செயல் நடைபெறுவதற்கு மூலகாரணமாக இருப்பது மழை என்பதையே உணர்த்தி நிற்கிறது. இவ்வுலகில்
அனைத்து அறச்செயல்களும் நடைபெறுவதற்கு முக்கிய காரணி மழை என்பதை வலியுறுத்திய திருவள்ளுவர்
தானத்தைவிட சிறந்தது வாய்மை என்பதை வலியுறுத்தி உள்ளதையும் பார்க்க முடிகிறது. வாய்மை
என்பது மறைந்து கொண்டிருக்கிற காலத்தில் சிறந்த தானமாக வாய்மையைக் கொள்ள வேண்டும் என்றும்
அதுவே சிறந்த தானமாகத் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ள செய்தியையும் இளந்தலைமுறையினருக்குக்
கற்றுக் கொடுத்தால் வாய்மை நிலவும். ஊழலற்ற நேர்மையான சமுதாயம் உருவாகும் என்பதில்
ஐயமில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக