முல்லைப்பாட்டு

  

முல்லைப்பாட்டு

(காவிரிப் பூம் பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்பாடியது)

நனந் தலை உலகம் வளைஇ, நேமியொடு

வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை

நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல,

பாடு இமிழ் பனிக் கடல் பருகி, வலன் ஏர்பு,

கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி  5

நல்லோர் விரிச்சி கேட்டல்

பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை,

அருங் கடி மூதூர் மருங்கில் போகி,

யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு,

நாழி கொண்ட, நறு வீ முல்லை

அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது, 10

பெரு முது பெண்டிர், விரிச்சி நிற்ப

தலைவியைத் தேற்றுதல்

சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறு துயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள்,"கைய

கொடுங் கோற் கோவலர் பின் நின்று உய்த்தர, 15

இன்னே வருகுவர், தாயர்" என்போள்

நன்னர் நல் மொழி கேட்டனம்: அதனால்,

நல்ல, நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர்

முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து

வருதல், தலைவர், வாய்வது; நீ நின்  20

பருவரல் எவ்வம் களை, மாயோய்!' என,

காட்டவும் காட்டவும் காணாள், கலுழ் சிறந்து,

பூப் போல் உண் கண் புலம்பு முத்து உறைப்ப

பாசறையின் இயல்பு


கான் யாறு தழீஇய அகல் நெடும் புறவில்,

சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி, 25

வேட்டுப் புழை அருப்பம் மாட்டி, காட்ட

இடு முள் புரிசை ஏமுற வளைஇ,

படு நீர்ப் புணரியின் பரந்த பாடி

யானைப் பாகரது செயல்

உவலைக் கூரை ஒழுகிய தெருவில்,

கவலை முற்றம் காவல் நின்ற 30

தேம் படு கவுள சிறு கண் யானை

ஓங்கு நிலைக் கரும்பொடு, கதிர் மிடைந்து யாத்த,

வயல் விளை, இன் குளகு உண்ணாது, நுதல் துடைத்து,

அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென,

கவை முட் கருவியின், வடமொழி பயிற்றி, 35

கல்லா இளைஞர், கவளம் கைப்ப

வீரர்கள் தங்கும் படைவீடுகள்

கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்

முக் கோல் அசைநிலை கடுப்ப, நல் போர்

ஓடா வல் வில் தூணி நாற்றி

கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கை  40

பூந் தலைக் குந்தம் குத்தி, கிடுகு நிரைத்து,

வாங்கு வில் அரணம் அரணம் ஆக,

அரசனுக்கு அமைத்த பாசறை

வேறு பல் பெரும் படை நாப்பண், வேறு ஓர்,

நெடுங் காழ்க் கண்டம் கோலி, அகம் நேர்பு,

மங்கையர் விளக்குகளை ஏந்துதல்

குறுந் தொடி முன்கை, கூந்தல் அம் சிறு புறத்து, 45

இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்

விரவு வரிக் கச்சின் பூண்ட, மங்கையர்

நெய் உமிழ் சுரையர் நெடுந் திரிக் கொளீஇ,

கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட,

மெய்காப்பாளர் காவல்புரிதல்

நெடு நா ஒள் மணி நிழத்திய நடு நாள், 50

அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர்

சிதர் வரல் அசைவளிக்கு அசைவந்தாங்கு,

துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப்

பெரு மூதாளர் ஏமம் சூழ

நாழிகைக் கணக்கர் பொழுது அறிவித்தல்

பொழுது அளந்து அறியும், பொய்யா மாக்கள், 55

தொழுது காண் கையர், தோன்ற வாழ்த்தி,

'எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய்! நின்

குறு நீர்க் கன்னல் இனைத்து' என்று இசைப்ப

அரசன் சிந்தனையில் ஆழ்தல்

மத்திகை வளைஇய, மறிந்து வீங்கு செறிவு உடை,

மெய்ப்பை புக்க வெரு வரும் தோற்றத்து, 60

வலி புணர் யாக்கை, வன்கண் யவனர்

புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல்,

திரு மணி விளக்கம் காட்டி, திண் ஞாண்

எழினி வாங்கிய ஈர் அறைப் பள்ளியுள்

உடம்பின் உரைக்கும், உரையா நாவின், 65

படம் புகு மிலேச்சர் உழையர் ஆக,

மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது,

எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து,

பிடிக் கணம் மறந்த வேழம் வேழத்துப்

பாம்பு பதைப்பன்ன பரூஉக் கை துமிய, 70

தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி,

சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபு

வைந் நுனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து,

உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்;

ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை 75

முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து

பாசறையில் வெற்றி முழக்கம்

பகைவர்ச் சுட்டிய படை கொள் நோன் விரல்,

நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி,

அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை

தலைவனது பிரிவினால் தலைவி பெற்ற துயரம்

இன் துயில் வதியுநன் காணாள், துயர் உழந்து, 80

நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு,

நீடு நினைந்து, தேற்றியும், ஓடு வளை திருத்தியும்,

மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,

ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி, இழை நெகிழ்ந்து,

பாவை விளக்கில் பரூஉச் சுடர் அழல, 85

இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து,

முடங்கு இறைச் சொரிதரும் மாத் திரள் அருவி

இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள்

அஞ்செவி நிறைய ஆலின

அரசன் வெற்றியுடன் மீண்டு வருதல்

வென்று, பிறர் வேண்டு புலம் கவர்ந்த,

ஈண்டு பெருந் தானையொடு, 90

விசயம், வெல் கொடி உயரி, வலன் ஏர்பு,

வயிரும் வளையும் ஆர்ப்ப,

மழையினால் செழித்த முல்லை நிலம்

அயிர செறி இலைக் காயா அஞ்சனம் மலர,

முறி இணர்க் கொன்றை நன் பொன் கால,

கோடல் குவி முகை அங்கை அவிழ, 95

தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப,

கானம் நந்திய செந் நிலப் பெரு வழி,

வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்,

திரி மருப்பு இரலையொடு மட மான் உகள,

எதிர் செல் வெண் மழை பொழியும் திங்களில், 100

அரசனது தேரின் வருகை

முதிர் காய் வள்ளிஅம் காடு பிறக்கு ஒழிய,

துனை பரி துரக்கும் செலவினர்

வினை விளங்கு நெடுந் தேர் பூண்ட மாவே. 103

முல்லைப்பாட்டு குறிப்பு தருக

பாடியவர் :– காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்

பாட்டுடைத் தலைவன் :– தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

திணை :– முல்லைத்திணை

பாவகை :– அகவல்பா (ஆசிரியப்பா)

மொத்த அடிகள் :– 103

சங்கத் தமிழ் இலக்கியத்தில் பத்துப்பாட்டு நூலுள் அகத்திணை சார்ந்த நூல்  முல்லைப் பாட்டு.

பத்துப்பாட்டு நூல்களுள் மிகவும் சிறியது.

முல்லைப்பாட்டு முல்லைத் திணைக்குரிய நூல், அகப்பொருள் பற்றியது. மழைக்காலத்துக்குமுன் திரும்பிவருவதாகச் சொல்லிப் போருக்குச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை. தலைவியோ பிரிவுத் துயரால் உடல் மெலிந்து வாடுகிறாள். தோழியரின் ஆறுதல் மொழிகளும் அவளைத் தேற்றவில்லை. போரில் வெற்றி பெற்றுத் தலைவன் திரும்பியதும் தான் தலைவி ஆறுதலடைந்து இன்பமுறுகிறாள். இந்த நிகழ்ச்சிகளைக் கருவாகக் கொண்டு நப்பூதனார் என்னும் புலவர் கவிநயத்தோடு எழுதியதே முல்லைப்பாட்டு ஆகும்.

முல்லைப்பாட்டின் அமைப்பையும் அதன் சிறப்புகளையும் தொகுத்து எழுதுக. 

1.    முன்னுரை :

பத்துப்பாட்டின் மிகச் சிறிய நூல், 103 அடிகளை உடையது. நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் சிறப்புடையது. இந்நூல் முல்லைத்திணையை விளக்குகிறது.

மழை பெழியும் காட்சி – திருமாலுக்கு உவமை

ஒலி முழங்குகின்ற குளிர்ச்சி உடைய கடல் நீரைப் பருகிய மழை மேகம் அகன்ற இடத்தையுடைய உலகத்தை வலப் பக்கமாகச் சுற்றி வளைத்துப் பொழிய ஆரம்பிக்கிறது.

இந்தக் காட்சியானது, சங்கையும் சக்கரத்தையும் கைகளில் தாங்கியவனும், திருமகளை மார்பில் கொண்டவனும், வலிமையான கையை உடையவனும் ஆகிய திருமால் மாபலிச் சக்கரவர்த்தி தன் கையிலே நீர் ஊற்றிய பொழுது விண்ணளவு உயர்ந்து வளர்ந்தவன் போன்று மழை பொழிய ஆரம்பித்தது. 

முதுபெண்டிர் விரிச்சி (நற்சொல்) கேட்கச் செல்லுதல்    

பகைவர் எளிதில் நுழைய முடியாத அரிய காவலுடைய பழைய ஊரின் எல்லைப் புறத்திற்கு முதுபெண்டிர் சென்றனர்.

யாழ் இசையைப் போன்று வண்டுகள் ஆரவாரித்துக் கொண்டிருந்தன.

நாழியில் நெல்லுடன்  முல்லைக் கொடியின் புதிய அரும்புகளையும் தூவி, கடவுளைக் கையாலே தொழுது, வயதில் முதிர்ந்த பெண்கள் நற்சொல்லுக்காகக் காத்து நின்றனர்.

சிறிய கயிற்றால் கட்டப்பட்ட இளம் கன்று தாயைப் பிரிந்த துன்பத்தினாலும் பசியின் துன்பத்தினாலும் வருந்துவதைக் கண்ட ஆயர் குலப் பெண், முதுகைத் தடவிக் கொடுத்து, “கோவலர்கள் கொடிய கோலால் பின்னின்று செலுத்த, இப்பொழுதே வருவார்கள் உங்களுடைய தாய்மார்கள்” என்றாள்.

இச்சொல்லானது விரிச்சி கேட்க நின்ற பெண்களின் காதில் விழுந்தது.

உடனே அவர்கள் அவ்விடத்தை விட்டுத் தலைவியிடம் சென்றனர்.

தலைவியைத் தேற்றுதல்

தலைவியைப் பிரிந்த துன்பத்தால் வருந்திக்கொண்டிருக்கும் தலைவியிடம் “மிகவும் நல்ல சொற்களை நாங்கள் கேட்டோம். பகைவர்களின் நிலத்தைக் கவர்ந்துக் கொண்டு, அவர்களின் திறையைப் பெற்று, போர்த்தொழிலை முடித்து வருவான் தலைவன். எனவே  வருத்தத்தை நீக்குவாயாக, என்றுரைத்தனர்.

இவ்வாறு பலவான எடுத்துச்சொல்லியும் தலைவி ஆறுதல் அடையவில்லை. மிகவும் கலங்கி, தன் பூப்போன்ற மையுண்ட கண்களிலிருந்து முத்துப் போலும் கண்ணீர்த் துளிகளைக் கொட்டினாள்.

படை வீரர்கள் பாசறை அமைத்தல்

காட்டாறு சூழ்ந்த அகன்ற நெடிய முல்லைக்காட்டில் தொலைவில் மணக்கும் மலர்களையுடைய பிடவச் செடியுடன் ஏனைய பசுமையான புதர்களையும் வெட்டி அழித்தனர்.

வேட்டுவரின் சிறிய வாயிலையுடைய அரணை அழித்தனர்.

வேட்டையாடும் விலங்குகள் உள்ளே புகாமுடியாதபடிக்கு முள்ளாலான மதிலை அமைத்தனர். 

மன்னனின் படை வீரர்கள்  அலை ஒலிக்கின்ற கடல் போன்ற தோற்றத்தைத் தரும்  அகன்ற பாசறையைக் கட்டினார்கள்.

நாற்சந்தியில் கட்டி வைக்கப்பட்டிருந்த யானையின் நிலை

பாசறையின் கூரை காய்ந்த இலை, தழைகளால் வேயப்பட்டது 

ஒழுங்கான தெருவின் நாற்சந்தியின் முற்றத்தில்  காவலாக, மதம் பாய்கின்ற கன்னத்தையுடைய சிறிய கண்ணையுடைய யானை கட்டி வைக்கப்பட்டிருந்தது .

உயர்ந்து வளர்ந்த கரும்பு, அதிமதுரதழை, வயலில் விளைந்த நெற்கதிர் ஆகியவற்றை நெருக்கமாகச் சேர்த்து கட்டி யானைக்குக் கொடுத்தான் யானைபாகன்.

தனது தும்பிக்கையால் வாங்கி உண்ணாமல் அவற்றைத் தன் நெற்றியில் தடவியது. 

கல்லா யானைப்பாகர்கள் வடமொழிச் சொற்கள் சிலவற்றைக் கூறி உணவுக் கவளங்களைத் தின்னும்படி குத்தூசியால் குத்துகின்றனர். 

பாசறை அரணின் தோற்றம் – தவசிகள் முக்கோலில் தொங்கவிடும் ஆடைக்கு உவமை

துறவிகள் தங்கள் கையில் உள்ள முக்கோலில் ஆடையினைத்  தொங்க விடுவதினைப் போன்று பாசறை அரண் காட்சியளித்தது.

வலிமையான வில்லை நிலத்தில் குத்தி, அவற்றிலே அம்புறாத்தூணிகளைத் தொங்கவிட்டனர்.

வேலை நட்டு கயிற்றால் இழுத்து இறுகக் கட்டினர்

பூ வேலைப்பாடு உடைய கை வேல்களை ஊன்றிக் கேடயத்தைப் பிணித்துக் கட்டினர்

வில்லால் அரண் அமைத்தனர் 

மன்னனுக்கு என தனியாக அமைக்கப்பட்ட பாசறை

பல்வேறு படைவீரர்களின் இருக்கைகளுக்கு நடுவே மன்னனுக்குப் பாசறை அமைத்தனர்

நீண்ட குத்துக் கோல்களை நட்டனர். 

பல நிறங்களுடைய திரைச் சீலைகளை இழுத்துக் கட்டி உள்ளறை, வெளியறை என இரு பகுதிகளாக பிரித்து அமைத்தனர்.

பாசறையில் மகளிர் விளக்கேற்றுதல்

முன் கையில் சிறிய வளையல்களையும், அழகிய சிறிய கூந்தல் முதுகில் அசைந்து கொண்டிருக்கும் மகளிர், இரவைப் பகலாக்கும் வேலையைச் செய்தனர்.

ஒளியுடைய திண்ணிய கைப்பிடியுடைய வாளினை,  கச்சாடையில் இறுகக் கட்டிருந்தனர்.

அவர்கள் நெய்யை வார்த்துப் பாவை விளக்கின் கையில் உள்ள அகலில் நீண்ட பருத்த திரியை இட்டு விளக்கேற்றினர்.

 ஒளி மங்கும் பொழுது தூண்டிவிட்டுக் காவல் செய்தனர்.

இரவு நேரத்தில் பாசறை காவலர்கள் காவல் செய்தல்

நள்ளிரவு நேரத்தில் நீண்ட நாக்கினையுடைய ஒளியுடைய மணிகளின் ஓசை குறைய தொடங்கியது. 

மலர்களையுடைய அதிரல் கொடிகளும் புதர்களும் நீர்த் திவலையோடு வீசும் காற்றிற்கு அசைந்து ஆடிக் கொண்டிருந்தன.

தலைப்பாகை அணிந்தும் உடம்பில் போர்த்திக்கொண்டும், மெய்ப்பை என்னும் சட்டை அணிந்த நல்ல ஒழுக்கத்தையுடைய, வயதில் முதிர்ந்த காவலர்கள் தூக்க மயக்கத்தில் அசைந்தபடி காவல் காத்துக்கொண்டிருந்தனர்.

நாழிகை கணக்கர் – நேரம் கணக்கிட்டு உரைத்தல்

நேரத்தை (நாழிகையை) அளந்து அறிவதில் பொய்க்காதவர்கள்

மன்னனை வாழ்த்தி வணங்கினர்

“மோதும் அலைகளையுடைய கடலால் சூழ்ந்த உலகத்தை வெல்வதற்கு செல்பவனே! சிறிய அளவில் நீர் உள்ள உன்னுடைய நாழிகைவட்டில் (கன்னல்) காட்டும் நேரம்” இது எனக் குறிப்பிட்டுக் கூறினர்.

அரசனைக் காவல் காக்கும் மெய்காப்பாளர்கள் – மிலேச்சரின் காவல் பணி

குதிரைச் சவுக்கை வளைத்து மடக்கியதால் புடைத்திருக்கும் சட்டை அணிந்திருந்தனர். 

கண்டவர் அஞ்சி நடுங்கும் தோற்றத்தைக் கொண்டவர்கள் 

`வலிமையான உடலை உடையவர் 

புலிச் சங்கிலியைத் தொங்கவிட்ட நல்ல இல்லத்தில் அழகான மணியைப் போன்ற விளக்கை எரிய வைத்தனர்

அரசனின் பள்ளியறையின்கண் சட்டை அணிந்த ஊமை மிலேச்சர் காவலாக அருகில் இருந்தனர்.

பள்ளியறையில் மன்னனின் நிலை

போரினை விரும்பும் மன்னன் ஒரு கையைப் படுக்கையின் மீது வைத்தும், ஒரு கையைத் தலையுடன் கடகம் சேரும்படி வைத்தும் படுத்திருந்தான்

அவன் உறக்கம் வராமல் அடுத்த நாள் போர் பற்றியும் முந்தைய நாள் நடைபெற்ற போர்களக் காட்சிகளையும் நினைத்துக் கொண்டிருந்தான்.

பகைவர்கள் எடுத்து எறிந்த வேல் பாய்ந்ததால் பெண் யானைகளை மறந்த தன் ஆண் யானைகளைப் பற்றி நினைத்தான்.

யானைகளின் பருத்த தும்பிக்கைகள் வெட்டுப்பட்டுப் பாம்பு துடித்தாற்போல் நிலத்தில் விழுந்து துடித்த தும்பிக்கைகளை இழந்த யானைகளை நினைத்தான்.

போரில் நல்ல வெற்றியை உண்டாக்கிய வீரர்களை நினைத்தான்

உடம்புக்குக் காவலாக இட்ட தோல் பரிசையை அறுத்துக் கொண்டு கூரிய நுனியுடைய அம்புகள் துளைத்ததால் தங்கள் செவியைச் சாய்த்துக் கொண்டு புல் உண்ணாமல் வருந்தும் தன் குதிரைகளைப் பற்றி நினைத்தான்.

வெற்றி முரசம் ஒலித்த பின் மன்னனின் நிலை

உறக்கம் வராமல் பலவற்றை எண்ணிக்கொண்டிருந்த மன்னன்  மறுநாள் போரில் பகைவரைத் தன்னுடைய வலிய கையினால் வாளால் வெட்டி அழித்தான்

 ஒளியுடைய வஞ்சி மாலைக்கு நல்ல வெற்றியை உண்டாக்கினான் 

பகை அரசரை நடுங்கச் செய்யும் வெற்றி முரசு முழங்கியதைக் கேட்டஃ இனிமையாக உறங்கினான் மன்னன்.

தலைவியின் துன்ப நிலை

பாசறையில் இனிதாக உறங்கும் தன் தலைவனைக் காணாத தலைவி வருத்தமடைந்து தலைவனிடம் சென்ற தன்னுடைய நெஞ்சை ஆற்றுப்படுத்த முயன்றும் முடியாதவளாய்த் தவித்துக் கொண்டிருந்தாள். 

தனிமையுடன் நீண்ட நேரம் நினைத்து, தன்னைத் தானே தேற்றுகிறாள் 

பிரிவுத்துயரால் உடல் மெலிந்தாள்

கழன்று ஓடும் வளையல்களைத் தடுத்து நிறுத்துகிறாள் 

நெகிழ்ந்து விழும் அணிகலன்களைத் திருத்துகிறாள்

பெருமூச்சு விட்டு அம்பினால் குத்தப்பட்ட மயிலைப் போன்று நடுங்கினாள்.

பருத்த சுடர் எரியும் பாவை விளக்குகளைக் கொண்ட உயர்ந்த ஏழு அடுக்கு மாளிகையில் வீற்றிருக்கிறாள் மலைவி

அம்மாளிகையின் கூரைகளிலிருந்து விழும் மழைநீர் முழங்குகின்ற அருவியின் இனிய இசையைப் போன்று ஒலி எழுப்புகிறது

அதனைக் கேட்டவாறு கிடந்தாள் தலைவி. 

அவளுடைய காதுகளில் தலைவன் வரும் தேரின் ஒலிகள் கேட்கத் தொடங்கின.

மன்னனின் வருகை

பகை அரசர்களின் நிலங்களைக் கவர்ந்துக்கொண்டு, 

பெரிய படையுடன்

வெற்றிக் கொடியை உயர்த்தி ஏற்றிக்கொண்டும் 

வெற்றியைத் தெரிவிக்கும் ஊதுகொம்பும் சங்கும் முழங்கிக் கொண்டும்

தலைவன் வந்துகொண்டிருந்தான்.

கார்கால முல்லை நிலக் காட்சி

நெருங்கின இலையையுடைய காயா மலர்கள் கண்ணிமைப் போல மலர்ந்திருந்தன.

தளிரையும் கொத்துக்களையுமுடைய சரக்கொன்றை மரங்கள் பொன்னைப் போன்ற மலர்களை உதிர்த்துக் கொண்டிருந்தன.

 வெண்காந்தளின் குவிந்த மொட்டுக்கள் அழகிய கைகளைப் போல் மலர்ந்திருந்தன.

இதழ்கள் நிறைந்த செங்காந்தள் குருதி போல மலர்ந்தன.

 இவ்வாறு முல்லை நிலம் செழித்துக் காணப்பட்டது 

முல்லை நிலத்தின் பெருவழியில் மழை பெய்ததால் வளைந்த கதிரையுடைய வரகிடத்தே, முறுக்குண்ட கொம்பினையுடைய ஆண் மான்களுடன் மென்மையான பெண் மான்கள் துள்ளி விளையாடின.

வெண்ணிறமான மேகங்கள் பொழியும் கார்காலத்தில் முதிர்ந்த காயையுடைய வள்ளியங்காடு பின்னால் செல்ல, 

விரைந்து செல்லும் குதிரையைத் தேரோட்டி மேலும் தூண்டிச் செலுத்த,

 உயர்ந்த தேரில் போர்த் தொழிலில் சிறந்த மன்னன் வந்தான்.

1.    முடிவுரை :

            முல்லைப்பாட்டு குறைந்த அடிகளில் தலைவியின் பிரிவித் துனபம் மற்றும் அக்கால போர்க்களக் காட்சி ஆகியவற்றை நயமுடன் எடுத்துரைக்கிறது. 

முல்லைப்பாட்டு முற்றிற்று

-----------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி