புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

1.   முன்னுரை

2.   புதுக்கவிதையின் வேறு பெயர்கள்

3.   புதுக்கவிதையின் தோற்றம்

4.   புதுக்கவிதையின் இலக்கணம்

5.   புதுக்கவிதை இயக்கங்கள்

6.   புதுக்கவிதையின் வளர்ச்சி

7.   முடிவுரை

முன்னுரை

இலக்கிய உலகின் மாற்றம் வளர்ச்சியின் அடையாளமாகத் திகழ்கிறது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் கவிதைத்துறையும் புதுமைக் கண்ணோட்டத்திற்கு ஆட்பட்டது. சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் பரந்து விரியும் பாடுபொருளுக்கும் வடிகாலாகப் புதுக்கவிதைத் துறையும் தோன்றியது.

புதுக்கவிதையின் வேறு பெயர்கள்

·         இலகு கவிதை

·         கட்டிலடங்காக் கவிதை,

·         வசன கவிதை, உரைவீச்சு,

·         மாடர்ன் பொயட்ரி,

·         நியூ பொயட்ரி

புதுக்கவிதையின்தோற்றம்

தமிழ்மொழியில் புதுக்கவிதை இயக்கத்தின் முதல்வராக விளங்கியவர் பாரதியார்.  பாரதியாரின் வசனகவிதைகளின் தோற்றமே புதுக்கவிதை இயக்கத்தின் வித்தாகும். இக்காலக்கட்டத்தில் ஆங்கிலச் செல்வாக்கின் தாக்கம் விரைவாகவும் அழுத்தமாகவும் படியத் தொடங்கியது. ஆங்கில இலக்கியத்தின் சானட் வடிவக் கவிதைகள் தமிழில் நுழையத்தொடங்கியது. பாரதியாரின் சந்திரிகை, யான் என்ற கவிதைகள் இவ்வடிவத்தைச் சார்ந்ததாகும். பாரதியை அடியொற்றி தூரனும் தருவாய் என்ற தலைப்பில் சானட் வடிவை எழுதினார். இவ்வகை வந்த வேகத்திலே அழிந்து விட்டது.

புதுக்கவிதை வால்ட் விட்மன் என்ற அமெரிக்கக் கவிஞரால் ஆங்கில இலக்கியத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இவர் புல்லின் இதழ்கள் என்ற கவிதை இலக்கியம் மூலம் அறிமுகமானார். இவரைத் தொடர்ந்து எஸ்ராபவுண்ட், டி.எஸ்.எலியட் ஆகியோரால் உருவான கவிதை இயக்கம் பாரதி மூலம் தமிழிற்கு அறிமுகம் ஆனது.

புதுக்கவிதை இலக்கணம் 

தொல்காப்பியர் குறிப்பிடும் விருந்து என்னும் வகைக்குள் இன்றைய புதுக்கவிதையை அடக்கலாம்.

1912 ஆம் ஆண்டில் எஸ்ராபவுண்ட் அவர்கள் டின்டன் என்பவருடன் இணைந்து புதுக்கவிதைக்கெனச் சில கொள்கைகளை உருவாக்கினார். அவையாவன;

1.    எழுதும் பொருள் எதுவாயினும் நேர்முகமாய் அணுகவேண்டும்.

2.    கவிதையின் வெளிப்பாட்டுக்குப் பயன்படாத எந்த ஒரு சொல்லையும் சேர்க்கக் கூடாது.

3.    சொற்றொடர்களில் இசை தழுவிய தொடர்ச்சி அமைய வேண்டும்.

உள்ளத்து உணர்ச்சிகளையும் தாம் உணர்ந்த அனுபவங்களையும் உள்ளது உள்ளவாறே மொழிக்கருவியால் வடித்து எழுதப்படுவதே புதுக்கவிதை.

உள்ளத்துள்ளது கவிதை - இன்பம்

            உருவெடுப்பது கவிதை

            தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை           

            தெரிந்துரைப்பது கவிதை

எனக் கவிதைக்கு இலக்கணமாக, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை குறிப்பிடுகிறார்.

.நா.சுப்பிரமணியன் புதுக்கவிதையின் அடிப்படை இலக்கணமாக மூன்றினைக் குறிப்பிடுகிறார். அவையாவன,

1.  இன்றைய சமுதாய வாழ்க்கைச் சிக்கலை அது எடுத்துக்காட்ட வேண்டும்.

             2. வார்த்தைகளை, சிந்தனைகளை உடைத்துப் புதுவளத்துடன் கையாள வேண்டும்.

3. சிடுக்குச் சிடுக்காகக் காட்ட வேண்டும். சிடுக்கில்லை என்று மூடிமறைக்கக் கூடாது.

எவ்வகைப் பொருளையும் கருவாகக் கொண்டு சமுதாய மேம்பாட்டினைக் குறிக்கோளாகக் கொண்டு பாடப்படுபவையே புதுக்கவிதை எனத் துணியலாம்.

புதுக்கவிதை இயக்கங்கள் :

·         மணிக்கொடிப் பரம்பரை,

·         எழுத்துப் பரம்பரை,

·         வானம்பாடிப்பரம்பரை

  என மூன்று வகையாகும்.

மணிக்கொடிப் பரம்பரை (1930 முதல் 1945 வரை)

பிறமொழி இலக்கியத்தாக்கமும் கருத்து வெளிப்பாட்டிற்கு வேறுபட்ட யாப்பு வடிவம் காண வேண்டும் என்ற உந்துதலும் கொண்டு கவிதை எழுதினர். .பிச்சமூர்த்தி, கு..ரா., புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன் ஆகியோர் இப்பரம்பரையின் முதல்வர்கள் ஆவார்.  

எழுத்துப் பரம்பரை (1950 முதல் 1970 வரை)

புதுக்கவிதை வரலாற்றில் எழுத்து இதழுக்கும் அதன் ஆசிரியர் சி.சு. செல்லப்பாவிற்கும் பெரும் பங்கு உண்டு. தோற்றத்தில் மட்டுமின்றிப் பாடுபொருளிலும் புதுமை காணவேண்டும் என்னும் நோக்கில் ஆங்கிலச்சொற்களையும் பயன்படுத்தினர். பாலியல் தொடர்புப் பொருண்மைகளை உள்ளவாறே வெளிப்படுத்த வேண்டும் என்னும் முறையில் கனவுநிலை உணர்வுகள், நம்பிக்கை, வறட்சி, சோர்வு ஆகியவற்றை கவிதைகளில் வெளிப்படுத்தினர். இக்காலத்தைப் புதுக்கவிதையின் சோதனைக்காலம் என்று குறிப்பிடுவர்.  

வானம்பாடிப்பரம்பரை (1971க்குப் பிறகு)

இறந்தகாலப் பிடிப்பும் நிகழ்காலச்சிந்தனையும் எதிர்காலக் கண்ணோட்டமும் பெற்றிருந்த வானம்பாடிக் கவிஞர்கள் உண்மையையும் உணர்ச்சியையும் இரு சிறகுகளாகக் கொண்டு கவிதை எழுதினர். சமுதாய அவலங்களைச் சுட்டிக்காட்டியவர்கள்.

வளர்ச்சி

தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுக்கவிதையானது பல்கி பெருகியது. அவற்றில் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒரு சிலர் மட்டும் இங்கே குறிப்பிடப்படுகின்றனர்.

சிற்பி பாலசுப்பிரமணியம்

v  கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஊரைச் சார்ந்தவர்

v  பெற்றோர்பொன்னுசாமி, கண்டியம்மாள்

v  பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

v  இயற்றிய நூல்கள்நிலவுப்பூ, சூரிய நிழல், ஒளிப்பறவை, ஒரு கிராமத்து நதி

v   ஒரு கிராமத்து நதி என்ற நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது.

கவிக்கோ அப்துல் ரகுமான்

v  கவிக்கோ என்ற சிறப்புப் பட்டத்தினைப் பெற்றவர்.

v  பெற்றோர் - சையத் அஹமத் – ஜைனத் பேகம்

v  பிறப்பு – மதுரை மாவட்டம், 1937 நவம்பர் 2 ஆம் நாள்

v  வாணியம்பாடி இசுலாமியா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்

v  தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றியுள்ளார்.

v  1999    ஆண்டு ஆலாபனை என்ற கவிதை நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது.

v  கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது,பாரதிதாசன் விருது, உமறுப்புலவர் விருது,கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

பால் வீதி, நேயர் விருப்பம், சுட்டுவிரல், பாலை நிலா, கண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லை போன்ற கவிதை நூற்களை இயற்றியுள்ளார்.

ஈரோடு தமிழன்பன்

v  இயற்பெயர்ஜெகதீசன்

v  புனைபெயர் - ஈரோடு தமிழன்பன்

v  பிறப்புகோவை மாவட்டம் சென்னிமலையில் 28-09-1940 இல் பிறந்தார்.

v  பெற்றோர்நடராஜர், வள்ளியம்மாள்

v  படைப்புகள்தமிழன்பன் கவிதைகள், நெஞ்சில் நிழல், ஊமை வெயில், சூரியப் பிறைகள், வணக்கம் வள்ளுவ

v  தமிழன்பன் கவிதைள் என்ற நூல் தமிழ்நாடு அரசின் பரிசினைப் பெற்றது

v  2000 ஆண்டு வணக்கம் வள்ளுவ என்ற கவிதை நூல் சாகித்ய அகாதெமி விருது பெற்றது

v  திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர் மற்றும் பாடலாசிரியர், சிறுகதை, நாவல், நாடகம், சிறுவர் இலக்கியம் போன்ற பல் வகை படைப்புகளைப் படைப்பதில் வல்லவர்.

v  பாரதிதாசன் பரம்பரையைச் சார்ந்த கவிஞர். மரபுக்கவிதை, புதுக்கவிதை என்ற இரண்டையும் எழுதுவதில் வல்லவர்.

v  சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர், தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர், தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினர், சாகித்ய அகாதெமி குழு உறுப்பினர் போன்ற பல்வேறு  பணியாற்றி உள்ளார்.

கவிஞர் இரா மீனாட்சி

v  பெயர் - இரா மீனாட்சி

v  பெற்றோர்இராமச்சந்திரன், மதுரம்

v  பிறப்புதிருவாரூரில் 23-01-1944 அன்று தோன்றினார்

v  தற்கால இலக்கியத்தில் புலமை பெற்றவர்.

v  புதுச்சேரி ஆரோவில் சர்வதேச நகரத்தில் தொண்டாற்றி வருகிறார்.

v  பெண்களின் பல்வேறு பிரச்சினைகள் இவர் கவிதையின் பாடுபொருள் ஆகும்.

v  கவிதை நூற்கள்நெருஞ்சி, சுடு பூக்கள், தீபாவளிப்பகல், மறுபயணம், கொடிவிளக்கு,  செம்மண் மடல்கள்

v  ஆய்வு நூற்கள்மொழி வளம் பெற, தமிழில் கடித இலக்கியம், புனிதச் சமையல்

விருதுகள் - உதய நகரிலிருந்து என்ற நூலுக்கு 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசு, செம்மண் மடல்கள் 2012 ஆண்டிற்கான சிறந்த நூல் விருது, கவிஞர் சிற்பி இலக்கிய விருது, புதுவை பாரதி விருது, கவிக்கோ விருது, கல்லாடனார் இலக்கிய விருது, சித்த மருத்துவச் சேவை செம்மல் விருது.

கவிஞர் இரா. வைரமுத்து

v  பெற்றோர்இராமசாமி உடையார்த் தேவர், அங்கம்மாள்

v  பிறப்புதேனி மாவட்டம் வடுகப்பட்டியில் 1953 அன்று தோன்றினார்

v  சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

v  வானொலியில் முதன் முதலாகப் புதுக்கவிதை பாடியவர்.

v  கவிதை நூற்கள்திருத்தி எழுதிய தீர்ப்புகள், இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல, பெய்யெனப் பெய்யும் மழை, தமிழுக்கு நிறமுண்டு, கவிராஜன் கதை

v  இது வரை நான்என்ற தன் வரலாற்று நூலை எழுதியுள்ளார்.

v  சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன், என் ஜன்னலின் வழியே என்ற பல கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். நாவல்களையும் படைத்துள்ளார்.

v  விருதுகள்தமிழக அரசால்கலைமாமணிபட்டமும், மத்திய அரசால்பத்ம பூசன்விருதும், கவிப்பேரரசு பட்டமும் பெற்றவர்.

v  2003 ஆண்டு கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நாவல் நூலுக்குச் சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.

கவிஞர் பழநி பாரதி

v  பிறப்பு -காரைக்குடி மாவட்டம் சிவகங்கை

v  பெற்றோர்பழனிப்பன் கமலா தம்பதியர்

v  திரைப்பாடலாசிரியர், கவிதையாசிரியர் எனத் தன்னை அடையாளப்படுத்தியவர்.

v  இளைய ராஜா இலக்கிய விருது, கலைமாமணி விருது, கலைவித்தகர் கண்ணதாசன் விருது, சிறந்த பாடலாசிரியருக்கான சினிமா எக்சுபிரசு விருது, தமிழக அரசின் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர்

v  நெருப்புப் பார்வைகள், வெளி நடப்பு, காதலின் பின் கதவு, மழைப்பெண் போன்ற கவிதை நூற்களைப் படைத்துள்ளார்

மு.மேத்தா

v  பிறப்பு : செப்டம்பர் 5, 1945 பெரியகுளம்

v  சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்

v  2006-ஆம் ஆண்டு ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற கவிதை நூலுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றார்.

v  ஊர்வலம் என்ற கவிதை நூலுக்காகத் தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்றவர்

v  இவரின் சோழ நிலா" என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.

v  இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதி வருகிறார்

v  கண்ணீர்பூக்கள், ஊர்வலம், மனச்சிறகு, அவர்கள்வருகிறார்கள், முகத்துக்கு முகம், காத்திருந்த காற்று, ஒரு வானம் இரு சிறகு, திருவிழாவில் தெருப்பாடகன், நந்தவனநாட்கள் போன்ற 22 கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.

அறிவுமதி

v  பெற்றோர் : கேசவன்- சின்னப்பிள்ளை (விருத்தாசலம் நகருக்கு அருகில் உள்ள சு.கீணணூர்)

v  இயற்பெயர் – மதியழகன்

v  தமிழ்க் கவிஞர் மற்றும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், திரைப்பட இயக்குநர், திரைப்பட உதவி இயக்குநர், சிறுகதை ஆசிரியர் போன்ற பல்வேறு ஆளுமை கொண்டவர்

v  அவிழரும்பு, என் பிரிய வசந்தமே, நிரந்தர மனிதர்கள், அன்பான இராட்சசி, புல்லின் நுனியில் பனித்துளி, அணுத்திமிர் அடக்கு, ஆயுளின் அந்திவரை, கடைசி மழைத்துளி, நட்புக்காலம், மணிமுத்த ஆற்றங்கரையில் போன்ற 13 கவிதை நூற்களை இயற்றியுள்ளார்.

நா. முத்துக்குமார்

v  பிறப்பு - காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரம் 1975 சூலை 12

v  தமிழ் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், திரைப்பட இயக்குநர், பதிப்பாசிரியர்

v  திரைப்படப் பாடல்களுக்காகத் தேசிய விருது பெற்றவர்.

v  நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன், ஆணா ஆவண்ணா, என்னை சந்திக்க கனவில் வராதே, குழந்தைகள் நிறைந்த வீடு போன்ற கவிதை நூற்களைப் படைத்துள்ளார்.

இளம்பிறை

v  பிறப்பு - நாகப்பட்டினம் மாவட்டம் சாட்டியக்குடி

v  இயற்பெயர் - ச. பஞ்சவர்ணம்.

v  ஆசிரியர் பணி, கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர்

v  யாளி, களம், திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருதுகள்  மற்றும் கவிஞர்கள் தின விருதும் பெற்றவர்.

v  மவுனக்கூடு’, ‘நிசப்தம்’, ‘முதல் மனுசி’ என்ற கவிதைத்தொகுதிகளைப் படைத்துள்ளார்.

கவிஞர் சுகிர்தராணி

v  இராணிப்பேட்டை மாவட்டம், இலாலாப்பேட்டை என்னும் கிராமத்தில் 1973 ஆம் ஆண்டு பிறந்தார்.

v  பெற்றோர் : சண்முகம் – தவமணி

v  இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

v  பெண்ணியக் கவிஞர்

v  பொருளாதாரம் மற்றும் தமிழ் இலக்கியம் ஆகிய பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

v  தேவமகள் கவிதூவி விருது, பெண்கள் முன்னணியின் சாதனையாளர் விருது, புதுமைப்பித்தன் நினைவு விருது விளக்கு விருது போன்ற விருதுகளைப் பெற்றவர்

v  கைபற்றி யென் கனவு கேள், இரவு மிருகம், காமத்திப்பூ, தீண்டப்படாத முத்தம், அவளை மொழிபெயர்த்தல், இப்படிக்கு ஏவாள், நீர் வளர் ஆம்பல், சுகிர்தராணி கவிதைகள் போன்ற கவிதை நூற்களை இயற்றியுள்ளார்.

இவர்களைத் தவிர புதுக்கவிதை இலக்கிய உலகில் குறிப்பிடதக்கவர்களாக விளங்கியவர்கள் நா.காமராசன், கவிஞர் மீரா, புதுமைப்பித்தன், இன்குலாப், மேத்தா, ஞானக்கூத்தன், கலாப்பிரியா, பிச்சமூர்த்தி, மீனாட்சி, கனிமொழி, சல்மா, வெண்ணிலா, குட்டிரேவதி எனப் பலரைக் கொண்டு விளங்குகிறது. இவ்வாறு தற்காலத்திலும் ஆல் போல் தழைத்து வளர்ந்து இளம் படைப்பாளர்கள் பலர் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.             காலத்தின் தேவைக்கேற்ப அனைத்தும் மாறுவது போல கவிதை வடிவமும் மாறி தோன்றிய இன்றைய புதுக்கவிதையானது அழியாமல் நிலைத்து விட்டது.

முடிவுரை

தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுக்கவிதைகள் தனக்கெனத் தனியிடம் பிடித்துள்ளன.  மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்குச் சான்றாகப் புதுக்கவிதை எழுதும் கவிஞர்கள் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டு இருக்கின்றார்கள் என்றால் மிகையில்லை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி