பதினெண்க்கீழ்க்கணக்கு நூல்கள் இலக்கிய வரலாறு


 

பதினெண்க்கீழ்க்கணக்கு நூல்கள்

முன்னுரை :

 சங்க மருவிய காலத்தில் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் (கி.மு. . 250  முதல் கி.மு. 600 ஆண்டுகள்) களப்பிரர்கள். இக்காலம் இருண்ட காலம் என அழைக்கப்படுகின்றன.இக்காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்கள்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த பழம் பாடல்:

"நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்

பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்

இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே

கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு." என்ற பாடல் குறிப்பிடுகிறது.

அறம்,பொருள்,இன்பம் எனும் மூன்றையோ அல்லது ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளால் வெண்பா யாப்பால் இயற்றுவது கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும். இதனை,

அடிநிமிர் பில்லாச் செய்யுள் தொகுதி

அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வந்

திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்   (பன்.பாட்.348) என்று பன்னிருப் பாட்டியல் கீழ்க்கணக்கு நூல்களுக்கு விளக்கம் தருகிறது. 

இந்நூல்களை நீதி நூல்கள் (அற நூல்கள்), அக நூல்கள், புற நூல்கள் என மூன்றாகப் பாகுபடுத்தலாம்.

நீதி நூல்கள் அல்லது அற நூல்கள்

திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி, பழமொழி நானூறு, ஆசாரக்கோவை, சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி

அகத்திணை நூல்கள்

ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கார் நாற்பது, கைந்நிலை

புறத்திணை நூல் - களவழி நாற்பது

நீதி நூல்கள் அல்லது அற நூல்கள்

திருக்குறள்

Ø  இந்நூலின் ஆசிரியர் திருவள்ளுவர்

Ø  இரண்டடி குறள் வெண்பா யாப்பினால் ஆனது

Ø  ஏழு சீர்கள் கொண்டது

Ø  இது மூன்று பால்களைக் கொண்டது (அவைகள், 1. அறத்துப்பால் (38 அதிகாரம்), 2. பொருட்பால் (70 அதிகாரம்), 3. காமத்துப்பால் (25 அதிகாரம் என்பன)

Ø  133 அதிகாரம் கொண்டது

Ø  1330 குறள்பாக்களைக் கொண்டது

Ø  109 மொழிகளில் மொழி பெயர்ப்பட்ட சிறப்பினை உடையது.

Ø  வாயுறை வாழ்த்து, முப்பால், உத்திர வேதம், தமிழ் மறை, பொது மறை, தெய்வ நூல், பொய்யா மொழி என்ற பல வேறு பெயர்களைக் கொண்டது

Ø  முதற்பாவலர், தெய்வ புலவர், நான்முகனார், மாதானுபாங்கி, செந்நாப் போதார், பெரு நாவலர் என்ற பல சிறப்புப் பெயர்களால் இந்நூலின் ஆசிரியரான திருவள்ளுவர் அழைக்கப்படுகிறார்.

Ø  இதன் காலம் கி.மு. 31 ஆம் நூற்றாண்டு

Ø  இந்நூலுக்கு பதின்மர் உரை எழுதியுள்ளனர் (தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சினார்க்கினியர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர்)

Ø  பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காளிங்கர் ஆகியோரின் உரைகள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன.

Ø  பரிமேலழகரின் உரை சிறப்பு பெற்றது

நாலடியார்

Ø  நான்கு அடிகளைக் கொண்டது

Ø  400 பாடல்களைக் கொண்டது

Ø  சமண முனிவர்கள் பலரால் பாடப்பட்டது

Ø  இதனைத் தொகுத்தவர் பதுமனார்

Ø  40 அதிகாரங்களைக் கொண்டது

Ø  12 இயல்களைக் கொண்டது

Ø  அறம் (13), பொருள் (24), இன்பம் (3) என்னும் முப்பிரிவுகளைக் கொண்டது

Ø  கடவுள் வாழ்த்து என்ற ஒர் அதிகாரமும் உள்ளது.

Ø  இந்நூலை ஜீ.யூ. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்

Ø  ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்ற பழமொழி இதன் சிறப்பினை உணர்த்தும்

Ø  இந்நூல் உலகின் நிலையாமைக் கருத்துகளை எடுத்துக்கூறி நிலைத்த இன்பத்தைப் பெற செய்ய வேண்டிய அறச்செயல்களை எடுத்துரைக்கிறது.  

Ø  இதன் காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டு

பழமொழி நானூறு

Ø  400 பாடல்களைக் கொண்டது

Ø  கடவுள் வாழ்த்தாக ஒரு பாடல் உள்ளது

Ø  தொல்காப்பியர் குறிப்பிடும் இலக்கிய வகைகளுள் முதுமொழி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது

Ø  இந்நூலினை எழுதியவர் முன்னுறை அரையனார்

Ø  ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றுள்ளது.

Ø  இந்நூல் 34 தலைப்புகளைக் கொண்டது

Ø  இந்நூலில் வரலாற்றுச் செய்திகளும், புராண இதிகாச கருத்துகளும் காணப்படுகின்றன.

Ø  கி.பி. 5 ஆம் நூற்றாண்டு

Ø  பாம்பின் கால் பாம்பறியும், இருதலைக் கொள்ளி எறும்பு என்பது போன்ற சிறப்பு மிக்க பழமொழிகள் இந்நூலில் உள்ளன

நான்மணிக்கடிகை

Ø  நான்மணிக்கடிகை என்ற சொல்லுக்கு நான்கு மணிகள் பதிக்கப்பெற்று கழுத்தில் அணியும் அணிகலன் என்பது பொருள்.

Ø  இதனைப் போன்று ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள் அமைந்து பண்பை மேம்படுத்தி மனதிற்கு அழகு ஊட்டுவதால் இப்பெயர் பெற்றது.

Ø  இதன் ஆசிரியர் விளம்பி நாகனார்

Ø  104 பாடல்களைக் கொண்டது

Ø  வெண்பா யாப்பால் ஆனது

Ø  அம்மை என்னும் வனப்பினைச் சார்ந்தது

Ø  இதன் காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டு

Ø  இந்நூலை ஜி.யூ. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்

Ø  அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் என்ற சிலப்பதிகார கருத்து இந்நூலில் உள்ளது

Ø  கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும், மான் வயிற்றில் அரிதாரம் கிடைக்கும், கடலுள் முத்து பிறக்கும் என்பது போன்ற அரிய செயல்கள் இந்நூலில் உள்ளன

இனியவை நாற்பது

Ø  இந்நூலின் ஆசிரியர் பூதஞ்சேந்தனார்

Ø  கடவுள் வாழ்த்து பாடல் ஒன்று உள்ளது

Ø  40 பாடல்களைக் (வெண்பாக்களை) கொண்டது

Ø  ஒவ்வொரு பாடலிலும் இவை இவை இனியவை என்று குறிப்பிடப்பட்டுள்ளன

Ø  இந்நூலில் 124 இனியவை குறிப்பிடப்பட்டுள்ளது

Ø  இதன் காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு

Ø  குழவி தளர்நடை காண்டல் இனிதே, கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே போன்ற பல கருத்துகள் இந்நூலினகண் உள்ளன.

இன்னா நாற்பது

Ø  இந்நூலின் ஆசிரியர் கபிலர்

Ø  40 வெண்பாக்களைக் கொண்டது

Ø  கடவுள் வாழ்த்தாக ஒரு பாடல் உள்ளது

Ø  இன்னிசை வெண்பா யாப்பில் பாடப்பட்டது

Ø  இந்நூலில் 164 இன்னாத பொருள்கள் குறிப்பிடப்பட்டுள்ளன

Ø  ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா, குழவிகள் உற்ற பிணி இன்னா என்ற பல நல்ல கருத்துக்கள் இந்நூலின்கண் உள்ளன.

திரிகடுகம்

Ø  இதன் ஆசிரியர் நல்லாதனார்

Ø  சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்றும் கலந்த மருந்திற்குத் திரிகடுகம் என்பது பெயர்

Ø  அம்மருந்து உடல் நோயைப் போக்கி உடலுக்கு உறுதி அளிக்கும்

Ø  இந்நூலின் உள்ள கருத்துகளும் மன நோயைப் போக்கி மன உறுதியை அளிப்பதால் இப்பெயர் பெற்றது

Ø  100 வெண்பாக்களைக் கொண்டது

Ø  காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு

Ø  ஒவ்வொரு பாடலிலும் இம்மூன்று அல்லது இம்மூவர் என்ற சொல் இடம்பெறும்

Ø  நெஞ்சம் அடங்குதல் வீடாகும், வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான், தாளாளன் என்பான் கடன்பட வாழாதான் என்பது போன்ற அரிய கருத்துகள் இந்நூலில் உள்ளன

சிறுபஞ்சமூலம்

Ø  இதன் ஆசிரியர் காரியாசான்

Ø  இதன் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு

Ø  கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி என்னும் ஐந்து வேர்களையும் சிறுபஞ்சமூலம் என்பர்

Ø  இவ்வைந்து வேர்களும் உடல் நோயைப் போக்கும்

Ø  இந்நூலிலுள்ள ஒவ்வொரு பாடல்களும் ஐந்து கருத்துகளைக் கொண்டு உள்ள நோயைப் போக்குவதால் இப்பெயர் பெற்றது.

Ø  கடவுள் வாழ்த்து ஒன்று, சிறப்புப் பாயிரம் ஒன்றும் என இரண்டு பாடல்கள் உள்ளன

Ø  100 பாடல்களைக் கொண்டது

ஏலாதி

Ø  ஏலம், இலவங்கப்பட்டை, சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு வகையான பொருள்களால் ஆன மருந்திற்கு ஏலாதி என்று பெயர்

Ø  இம்மருந்து மக்களின் உடல் நோயைப் போக்கும்

Ø  இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் ஆறு கருத்துகள் அமைந்து மக்களின் உள நோயைப் போக்குவதால் இப்பெயர் பெற்றது

Ø  இந்நூலின் ஆசிரியர் கணிமேதாவியார்

Ø  80 பாடல்களைக் கொண்டது

Ø  கடவுள் வாழ்த்து ஒரு பாடலும் உள்ளது

Ø  காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு

முதுமொழிக்காஞ்சி

Ø  இதன் ஆசிரியர் மதுரைக் கூடலூர்க் கிழார்

Ø  காலம் ஐந்தாம் நூற்றாண்டு

Ø  இந்நூல் பத்து அதிகாரங்களைக் கொண்டது

Ø  100 பாடல்களைக் கொண்டது

Ø  இது நிலையாமையை உணர்த்தும் காஞ்சித்திணையின் ஒரு துறையைச் சார்ந்தது

Ø  இளமையில் கல்லாமை குற்றம், வளம் இல்லாத பொழுது வள்ளன்மை செய்வது குற்றம் போன்ற குற்றங்களை எல்லாம் எடுத்துக்கூறி மனிதனை நல்வழிபடுத்தும் நோக்கில் இப்பாடல்கள் உள்ளன

ஆசாரக்கோவை

Ø  இதன் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்

Ø  காலம் 5 ஆம் நூற்றாண்டு

Ø  ஒருவர் ஒழுக வேண்டிய ஆசாரங்களைத் தொகுத்துக் கூறும் நூல்

Ø  100 பாடல்களைக் கொண்டது

Ø  கடவுள் வாழ்த்து ஒரு பாடல் உள்ளது

Ø  இந்நூலில் உலகியல் பற்றிய உண்மைகள், நீராடல், உண்ணும்முறை, துயிலும் விதம் போன்ற உடலைப் பாதுக்காக்கும் வழிமுறைகள் போன்ற அரிய செய்திகள் உள்ளன.

இன்னிலை

Ø  ஆசிரியர் பொய்கையார்

Ø  காலம் கி. பி. 5 ஆம் நூற்றாண்டு

Ø  45 பாடல்கள் உள்ளன

Ø  அறத்துப்பாலில் பத்து ப்பாடல்கள், பொருட்பாலில் ஒன்பது பாடல்கள், இன்பப்பாலில்  12 பாடல்களும் வீட்டிலக்கப் பாலில் 14 பாடல்களும் என அமைந்துள்ளன

அகநூற்கள்

கார் நாற்பது

Ø  ஆசிரியர் மதுரைக் கண்ணங்கூத்தனார்

Ø  காலம் கி.பி. 4 ஆம் நூற்றாண்டு

Ø   கார் கால சிறப்பித்துக் கூறும் 40 பாடலைகளைக் கொண்டமையால் கார் நாற்பது எனப் பெயர் பெற்றது 

Ø முல்லை நிலத்தின் அழகு,  முதல், கரு, உரிப் பொருள்களும் அழகுற விளக்கப்பட்டுள்ளன

Ø  வினை மேற் தலைவன் செல்லுதல், கார்காலத்தில் திரும்ப வருவேன் எனல், கார் காலத்தில் திலைவன் மீண்டு வாராமையால் தலைவி வருந்துதல், தோழி தலைவியைத் தேற்றுதல், தலைவனும் தலைவியை நினைத்தல், தலைவன் தேர்ப்பாகனோடு திரும்புதல் போன்ற செய்திகள் நயமுடன் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன.

Ø  இந்நூல் அகத்திணையைச் சார்ந்தது

திணைமொழி ஐம்பது

Ø  ஆசிரியர் கண்ணஞ்சேந்தனார்

Ø  காலம் கி.பி 4 ஆம் நூற்றாண்டு

Ø  ஒவ்வொரு திணைக்கும் 10 பாடல்கள் வீதம் ஐந்திணைக்கும் சேர்த்து 50 பாடல்கள் காணப்பெறுகின்றன

Ø  அகத்திணையை விளக்கும் இலக்கிய நயம் சார்ந்த நூலாகும்

திணைமாலை நூற்றைம்பது

Ø  ஆசிரியர் கணியன் மேதாவியார்

Ø  காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு

Ø  ஒவ்வொரு திணைக்கும் 30 பாடல்கள் வீதம் ஐந்திணைக்கும் சேர்த்து 150 பாடல்களை உடையது

Ø  அகத்திணையைக் குறிப்பிடும் இந்நூலில் வடசொற்கள் காணப்படுகின்றன

ஐந்திணை ஐம்பது

Ø  ஆசிரியர் மாறன் பொறையனார்

Ø  ஒவ்வொரு திணைக்கும் 10 பாடல்கள் வீதம் ஐந்திணைக்கும் சேர்த்து 50 பாடல்கள் காணப்பெறுகின்றன

Ø  காலம் கி.பி 4 ஆம் நூற்றாண்டு

Ø  அகத்திணையில் தோன்றும் உணர்வுகளை நுட்பமாக விளக்குகிறது இந்நூல்

ஐந்திணை எழுபது

Ø  சிரியர் மூவாதியார்

Ø  காலம் கி. பி. 5 ஆம் நூற்றாண்டு

Ø  ஒவ்வொரு திணைக்கும் 14 பாடல்கள் வீதம் ஐந்திணைக்கும் சேர்த்து 70 பாடல்கள் காணப்பெறுகின்றன

Ø  இந்நூலில் குறள் கருத்துகள் உள்ளன

கைந்நிலை  (ஐந்திணை அறுபது)

Ø  ஆசிரியர் புல்லங்காடானார்

Ø  காலம் கி. பி. 5 ஆம் நூற்றாண்டு

Ø  ஒவ்வொரு திணைக்கும் 12 பாடல்கள் வீதம் ஐந்திணைக்கும் 60 பாடல்கள் உள்ளன

Ø வடச் சொற்கள் இந்நூலில் உள்ளன

களவழி நாற்பது

Ø  ஆசிரியர் பொய்கையார்

Ø  40 பாடல்களைக் கொண்டது

Ø  காலம் கி. பி. 5 ஆம் நூற்றாண்டு

Ø  போர்க்கள நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறது

Ø  இது புறப்பொருள் விளக்கும் நூலாகும்

Ø  இந்நூலில் சோழன் செங்கணான் போரில் பெற்ற வெற்றி சிறப்பு, சேராமான் கணைக்கால் இரும்பொறை சோழனோடு போரிட்ட நிகழ்ச்சி ஆகியன விளக்கப்பெற்றுள்ளன

Ø  யானைப்போரைப் பற்றி மிகுதியாகக் குறிப்பிடுகிறது         

முடிவுரை

சங்க மருவிய காலத்தில் தோன்றிய ஒப்பற்ற இலக்கியமாக பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் விளங்குகின்றன. இவை அகத்தைப் பாடுவதைக் காட்டிலும் அறநெறியை மக்களுக்குப் போதிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு விளங்குகின்றன

 

 --------------------------------------------------------------------------------------------------


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி