நற்றிணை பாடல் 1 பொருள் விளக்கம்
நற்றிணை பாடல் 1
(நின்ற சொல்லர்)
திணை : குறிஞ்சி
கூற்று : பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி
சொல்லியது.
கூற்று விளக்கம் – பொருள்
ஈட்டுதற் கரணமாகத்
தலைவன்
தலைவியை விட்டுப் பிரிய
எண்ணியதைத் தோழி
அறிந்து,
தலைவியிடம் கூற,
தலைவி “தலைவன்
அங்ஙனம் என்னை
விட்டுப் பிரிய மாட்டார்”
எனத் தலைவனைப்
புகழ்ந்து
கூறுகின்றாள்.
பாடல்
நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;
என்றும் என் தோள் பிரிபு அறியலரே'
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
புரைய மன்ற, புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி,
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!
நற்றிணைப் பாடல் கருத்தை விளக்கிக் கூறுக.
(அல்லது)
நற்றிணைப் பாடல் உணர்த்தும் காதல் சிறப்பை எடுத்துரைக்க.
(அல்லது)
தலைவன் உயர்ந்த பண்பினை உடையவன் என்பதைக் எடுத்துக் கூறும் நற்றிணைத் தலைவி கருத்தை எடுத்துரைக்க.
பாடலின் விளக்கம்
“தோழி என் காதலர் சொன்ன சொல்லைத் தவறாமல் காப்பாற்றக் கூடிய வாய்மையுடையவர்.
நீண்ட காலம் பழகுவதற்கு மிக இனிமையானவர்.
எப்போதும் என் தோள்களைப் பிரியும் எண்ணம் இல்லாதவர்.
அத்தகையவருடைய நட்பு, தேனீக்கள் தாமரையின் குளிர்ந்த மகரந்தங்களை ஊதி, உயர்ந்து நிற்கும் சந்தன மரத்தின் தாதினையும் ஊதி, சந்தன மரத்தின் உச்சியில் கொண்டு சென்று சேர்த்து வைத்த தேனைப் போல உறுதியானது
தண்ணீர் இல்லாமல் இவ்வுலகம் இயங்காது
அதனைப் போன்று அவர் இல்லாமல் நான் வாழ மாட்டேன் என்பதை நன்கு உணர்ந்தவர்.
என் மீது மிகுந்த விருப்பம் கொண்டவர்.
என்னைப்
பிரிந்து சென்றால் என் நெற்றியில் பசலை நோய் படரும் என்று அஞ்சி என்னை விட்டுப் பிரிந்து
செல்ல மாட்டார்” என்று தலைவி கூறுகின்றாள்.
இப்பாடலில், தாமரைத் தாது தலைவன் உள்ளத்தையும், சந்தனத்தாது தலைவியின் உள்ளத்தையும் குறிப்பிடுகின்றது.
சந்தன மரத்தில் இருக்கும் இனிய தேனடை தலைவன் தலைவியரின் நட்பின் அன்பின் ஆழத்தைப் புலப்படுத்துகிறது.
இப்பாடல் தலைவன் உயர்ந்த பண்பினை உடையவன் என்பதும் அக்கால காதல் உறுதியையும் சிறப்பையும் பேசுகிறது.
..............................................
கருத்துகள்
கருத்துரையிடுக