மணிமேகலை - பாத்திரம் பெற்ற காதை

 

மணிமேகலை குறிப்பு 

  • ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. 
  • இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.
  • இது இரட்டைக் காப்பியம் என்றும் வழங்கப்பெறும் 
  • இது பௌளத்த சமய காப்பியம்
  • துறவு வாழ்க்கையை எடுத்துரைக்கும்
  • 30 காதைகளைக் கொண்டது
  • கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது

சீத்தலைச் சாத்தனார் குறிப்பு

  • மணிமேகலை என்னும் காப்பியத்தை இயற்றியவர்
  • சீத்தலை என்னும் ஊரினர்
  • இளங்கோவடிகளின் ஆசிரியர்

மணிமேகலை பாத்திரம் பெற்ற காதை - செய்யுள் 

மணிமே கலாதெய்வம் நீங்கிய பின்னர்

மணிபல் லவத்திடை மணிமே கலைதான்

வெண்மணல் குன்றமும் விரிபூஞ் சோலையும்

தண்மலர்ப் பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கிக்

காவதம் திரியக் கடவுள் கோலத்துத்

தீவ திலகை செவ்வனந் தோன்றிக்

கலம்கவிழ் மகளிரின் வந்துஈங்கு எய்திய

இலங்குதொடி நல்லாய் யார்நீ என்றலும்,

எப்பிறப் பகத்துள் யார்நீ என்றது

பொன்கொடி அன்னாய் பொருந்திக் கேளாய்

போய பிறவியில் பூமியங் கிழவன்

இராகுலன் மனையான் இலக்குமி என்பேர்

ஆய பிறவியில் ஆடலங் கணிகை

மாதவி ஈன்ற மணிமே கலையான்

என்பெயர்த் தெய்வம் ஈங்குஎனைக் கொணரஇம்

மன்பெரும் பீடிகை என்பிறப்பு உணர்ந்தேன்

ஈங்குஎன் வரவுஇதுஈங்கு எய்திய பயன்இது

பூங்கொடி அன்னாய் யார்நீ என்றலும்,

ஆயிழை தன்பிறப்பு அறிந்தமை அறிந்த

தீவ திலகை செவ்வனம் உரைக்கும்

ஈங்குஇதன் அயலகத்து இரத்தின தீவத்து

ஓங்குஉயர் சமந்தத்து உச்சி மீமிசை

அறவியங் கிழவோன் அடிஇணை ஆகிய

பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம்

அறவி நாவாய் ஆங்குஉளது ஆதலின்

தொழுதுவலம் கொண்டு வந்தேன் ஈங்குப்

பழுதுஇல் காட்சிஇந் நன்மணிப் பீடிகை

தேவர்கோன் ஏவலின் காவல் பூண்டேன்

தீவ திலகை என்பெயர் இதுகேள்:

தரும தலைவன் தலைமையின் உரைத்த

பெருமைசால் நல்அறம் பிறழா நோன்பினர்

கண்டுகை தொழுவோர் கண்டதன் பின்னர்ப்

பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி

அரியர் உலகத்து ஆகுஅவர்க்கு அறமொழி

உரியது உலகத்து ஒருதலை யாக

ஆங்ஙனம் ஆகிய அணியிழை இதுகேள்

ஈங்குஇப் பெரும்பெயர்ப் பீடிகை முன்னது

மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய

கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி

இருதுஇள வேனிலில் எரிகதிர் இடபத்து

ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின்

மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்

போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்

ஆபுத் திரன்கை அமுத சுரபிஎனும்

மாபெரும் பாத்திரம் மடக்கொடி கேளாய்

அந்நாள் இந்நாள் அப்பொழுது இப்பொழுது

நின்ஆங்கு வருவது போலும் நேர்இழை

ஆங்குஅதின் பெய்த ஆர்உயிர் மருந்து

வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது

தான்தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்

நறுமலர்க் கோதை நின்ஊர் ஆங்கண்

அறவணன் தன்பால் கேட்குவை இதன்திறம்

என்றுஅவள் உரைத்தலும், -இளங்கொடி விரும்பி

மன்பெரும் பீடிகை தொழுதனள் வணங்கித்

தீவ திலகை தன்னொடும் கூடிக்

கோமுகி வலம்செய்து கொள்கையின் நிற்றலும்

எழுந்துவலம் புரிந்த இளங்கொடி செங்கையில்

தொழுந்தகை மரபின் பாத்திரம் புகுதலும்.

பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள்

மாத்திரை இன்றி மனமகிழ் எய்தி

மாரனை வெல்லும் வீர நின்அடி

தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின்அடி

பிறர்க்குஅறம் முயலும் பெரியோய் நின்அடி

துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்அடி

எண்பிறக்கு ஒழிய இறந்தோய் நின்அடி

கண்பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின்அடி

தீமொழிக்கு அடைத்த செவியோய் நின்அடி

வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி

நரகர் துயர்கெட நடப்போய் நின்அடி

உரகர் துயரம் ஒழிப்போய் நின்அடி

வணங்குதல் அல்லது வாழ்த்தல்என் நாவிற்கு

அடங்காது என்ற ஆயிழை முன்னர்,

போதி நீழல் பொருந்தித் தோன்றும்

நாதன் பாதம் நவைகெட ஏத்தித்

தீவ திலகை சேயிழைக்கும் உரைக்கும்:

குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்

பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்

நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்

பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

பசிப்பிணி என்னும் பாவிஅது தீர்த்தோர்

இசைச்சொல் அளவைக்கு என்நா நிமிராது

புல்மரம் புகையப் புகைஅழல் பொங்கி

மன்உயிர் மடிய மழைவளம் கரத்தலின்

அரசுதலை நீங்கிய அருமறை அந்தணன்

இருநில மருங்கின் யாங்கணும் திரிவோன்

அரும்பசி களைய ஆற்றுவது காணான்

திருந்தா நாய்ஊன் தின்னுதல் உறுவோன்

இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்

வந்து தோன்றிய வானவர் பெருந்தகை

மழைவளம் தருதலின் மன்உயிர் ஓங்கிப்

பிழையா விளையுளும் பெருகியது அன்றோ

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்

ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை

மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகிக்

கயக்குஅறு நல்அறம் கண்டனை என்றலும்,

விட்ட பிறப்பில்யான் விரும்பிய காதலன்

திட்டி விடம்உணச் செல்உயிர் போவுழி

உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து

வெயில்விளங்கு அமயத்து விளங்கித் தோன்றிய

சாது சக்கரன் தனையான் ஊட்டிய

காலம் போல்வதுஓர் கனாமயக்கு உற்றேன்

ஆங்குஅதன் பயனே ஆர்உயிர் மருந்தாய்

ஈங்குஇப் பாத்திரம் என்கைப் புகுந்தது

நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து

வித்தி நல்அறம் விளைந்த அதன்பயன்

துய்ப்போர் தம்மனைத் துணிச்சிதர் உடுத்து

வயிறுகாய் பெரும்பசி அலைத்தற்கு இரங்கி

வெயில்என முனியாது புயல்என மடியாது

புறங்கடை நின்று புன்கண் கூர்ந்துமுன்

அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால்

ஈன்ற குழவி முகங்கண்டு இரங்கித்

தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே

நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சைப் பாத்திரத்து

அகன்சுரைப் பெய்த ஆர்உயிர் மருந்துஅவர்

முகம்கண்டு சுரத்தல் காண்டல்வேட் கையேன்என,

மறந்தேன் அதன்திறம் நீஎடுத்து உரைத்தனை

அறம்கரி யாக அருள்சுரந்து ஊட்டும்

சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது

ஆங்ஙனம் ஆயினை அதன்பயன் அறிந்தனை

ஈங்குநின்று எழுவாய் என்றுஅவள் உரைப்ப,

தீவ திலகை தன்அடி வணங்கி

மாபெரும் பாத்திரம் மலர்க்கையில் ஏந்திக்

கோமகன் பீடிகை தொழுது வலம்கொண்டு

வான்ஊடு எழுந்து மணிமே கலைதான்

வழுஅறு தெய்வம் வாய்மையின் உரைத்த

எழுநாள் வந்தது என்மகள் வாராள்

வழுவாய் உண்டுஎன மயங்குவோள் முன்னர்

வந்து தோன்றி,

அந்தில் அவர்க்குஓர் அற்புதம் கூறும்

இரவி வன்மன் ஒருபெரு மகளே

துரகத் தானைத் துச்சயன் தேவி

அமுத பதிவயிற்று அரிதில் தோன்றித்

தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்

அவ்வையர் ஆயினீர் நும்மடி தொழுதேன்

வாய்வ தாக மானிட யாக்கையில்

தீவினை அறுக்கும் செய்தவம் நுமக்குஈங்கு

அறவண வடிகள் தம்பால் பெறுமின்

செறிதொடி நல்லீர் உம்பிறப்பு ஈங்குஇஃது

ஆபுத் திரன்கை அமுத சுரபிஎனும்

மாபெரும் பாத்திரம் நீயிரும் தொழும்எனத்

தொழுதனர் ஏத்திய தூமொழி யாரொடும்

பழுதுஅறு மாதவன் பாதம் படர்கேம்

எழுகென எழுந்தனள் இளங்கொடி தான்என்

1.மணிமேகலை பாத்திரம் பெற்ற கதையை விளக்குக.

தீவதிலகை நீயார் எனக் கேட்டல்

மணிமேகலா தெய்வத்தால் தீவில் விடப்பட்ட மணிமேகலை மணிபல்லவத் தீவைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டாள். வெள்ளை மணல் குன்றுகளையும், அழகிய பூங்காக்களையும்,  சுற்றிப் பார்த்துக் கொண்டே சென்றாள். அப்போது  தீவதிலகை என்பவள் எதிரே தோன்றினாள். “படகு கவிழ்ந்து தப்பி வந்தவளைப் போல இங்கு வந்துள்ள தூயவளே நீ யார்?” என்று மணிமேகலையைப் பார்த்துக் கேட்டாள்.

மணிமேலை பதில் கூறல்

மணிமேகைலை தீவதிலகையிடம், “யார் நீ என்று என்னைக் கேட்டாய்? எந்தப் பிறப்பைப் பற்றிய கேள்வி இது?  முற்பிறப்பில்  அரசனான இராகுலன் மனைவி நான். என் பெயர் இலக்குமி. இந்தப் பிறவியில் நாட்டியக் கலைச்செல்வி மாதவியின் மகள். என் பெயர் மணிமேகலை. மணிமேகலா தெய்வம் என்னைக் கொண்டு வந்து இங்கு சேர்த்தது. புகழ் பெற்ற இந்தப் பீடிகையால் என் பழைய பிறப்பைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.  நீ யார் ? என மணிமேலை கேட்டாள்.

 தீவதிலகையின் பதில்

. “இந்த மணிபல்லவத் தீவின் அருகில் இரத்தினத் தீவகம் உள்ளது. அதில் உள்ள சமந்தகம் என்ற மலை உச்சியின் மேல்,  புத்தரின் பாதப் பீடிகை உள்ளது.  அதனை வலம் செய்து இங்கு வந்தேன்.  இந்தப் பாதப் பீடத்தை இந்திரனின் ஆணையால் காவல் செய்து வருகிறேன். என் பெயர் தீவதிலகை” என்று கூறினாள்.

அறநெறிகளின் தலைவர் புத்தர். அவர் கூறிய  நல்லறத்தில் தவறா நோன்பு உடையவரே, இந்தப்  பீடிகையைப் பார்ப்பதற்கும், வணங்குவதற்கும் உரியவர் ஆவர். அப்படிப் பார்த்து வணங்கிய பின்னர் அவர்கள் தம்முடைய பழம்பிறப்பை உணர்வார்கள்.

அமுத சுரபி

மிக்க புகழுடைய இந்தப் பீடிகையின் முன்பு தெரிவது கோமுகி என்ற பொய்கையாகும். நீர் நிறைந்துள்ள இந்தப் பொய்கையில் வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திரத்தன்று  புத்தர்பிரான் தோன்றிய  நாளில் ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்ற  புகழ் மிக்க பாத்திரம் வெளிப்பட்டுத் தோன்றும்.

அந்த நாள் இந்த நாளே

அந்த நல்ல நாளானப் பௌர்ணமி இன்றுதான். அந்த அரிய அமுதசுரபி பாத்திரம் தோன்றும் நேரமும் இதுதான்.  அதோ அது உன்னிடம் வருவது போலத் தெரிகிறது. இந்தப் பாத்திரத்தில் இடும் உணவானது ஆருயிர் மருந்தாகும். அது எடுக்க எடுக்கக் குறையாது பெருகும். வாங்குபவர் கைகள் வலிக்குமே அன்றி பாத்திரத்தில் குறையாது.  பெண்ணே! அறவண அடிகளிடம் இப்பாத்திரத்தின் வரலாற்றைத் தெரிந்து கொள்வாய்” என்று தீவதிலகை கூறினாள்.

அமுதசுரபி கிடைத்தது

தீவதிலகை கூறியது கேட்ட மணிமேகலை, அதனை அடைய விரும்பி அந்த புகழ் மிக்க பீடத்தை தீவதிலகையுடன் வலம் வந்து வணங்கினாள். பீடிகையின் எதிரே நின்றாள். அப்போது  அமுதசுரபி பாத்திரம் அந்தப் பொய்கையில் இருந்து தவழ்ந்து வந்து, மணிமேலை கைகளில் சென்று சேர்ந்தது. அமுத சுரபியைப் பெற்ற மணிமேகலை பெரிதும் மகிழ்ந்தாள்.

புத்த பகவானை வணங்கினாள்

தீய வழிகளான வாழ்வின் பகைகளை நீக்கியவனே! மற்றவர்களுக்குத் தரும வழி வாய்ப்பதற்கு முயலும் பெரியோனே! சுவர்க்க வாழ்வினை அடைய விரும்பாத பழையோனே!  உயிர்களுக்கு அறிவுக் கண்களை அளித்த மெய் உணர்வு உடையோனே! தீமை தரும் சொற்களைக் கேட்க மறுக்கும் காதுகளை உடையவனே! உண்மை மட்டுமே பேசும் நாவினை உடையவனே! உனது மலர்ப் பாதங்களை வணங்குவேன்  என்று கூறி புத்த பகவானை  வணங்கினாள் மணிமேகலை.

பசி என்னும் பாவி

புத்த பகவானை மணிமேகலை வணங்கியதைக் கண்ட தீவதிலகையும் புத்தரின் திருவடிகளை வணங்கினாள். பின் மணிமேகலையைப் பார்த்து, “பசியாகிய நோய் இருக்கிறதே அது மேல்குடியில் பிறந்த தகுதியை அழித்து விடும். தூய எண்ணங்களைச் சிதைத்து விடும். கல்வி என்ற பெரும் புணையையும் நீக்கிவிடும். நாணமாகிய அணியையும் போக்கிவிடும். பெருமையான அழகினைச் சீர்குலைக்கும். மனைவியோடு அடுத்தவர் வாசலில் பிச்சை எடுக்க நிறுத்திவிடும். இப்படியான பசி என்ற நோயினை நீக்க வேண்டும். அது ஒரு பாவி. அதனை விரட்டி அடிக்க வேண்டும். அப்படி நீக்கியவர்களின் புகழை அளவிட முடியாது.

உயிர் அளிப்பவர் யார்?

  இந்த உலகத்தில் வாழ்பவர்களுக்கெல்லாம் உணவு தருபவர்களே உயிர் தந்தவர்கள் ஆவர். நீயும் அப்படிப்பட்ட உயிர் தரும் தரும வழியை உறுதியாக மேற்கொண்டாய். கலக்கமற்ற நல்லறத்தினை அறிந்து கொண்டாய்” என்று தீவதிலகை மணிமேகலையிடம் கூறினாள்.

அறம் செய்த பயன்

இதைக் கேட்ட மணிமேகலை,“முன்பிறப்பிலே என் கணவனான இராகுலன் திட்டிவிடம் என்ற பாம்பு தீண்ட உயிர் விட்டான். அப்போது நானும் அவனோடு சேர்ந்து தீக்குளிக்க உடல் வெந்தது. உணர்வுகள் நீங்கின. அப்போது  உச்சிவேளையில் வந்து தோன்றிய சாது சக்கரமுனிவனுக்கு முன்னர் உணவு தந்ததுபோல நினைத்தவாறே மயக்கம் அடைந்தேன். என் உயிரும் பிரிந்தது. அந்தக் கனவின் பயனாகவே இந்த அமுதசுரபி எனக்குக் கிடைத்தது”என்றாள்

இதனைத் தாய்போல் காப்பேன்

இப்பெரிய நாவலந்தீவிலே தரும நெறிகளைப் பின்பற்றி செல்வந்தராக வாழ்வோர் சிலராவர். கந்தலான துணியை  உடுத்திக் கொண்டு பசிக்கொடுமையால்  துன்பப்பட்டுசெல்வந்தர் வீட்டு வாசல்களில் சென்று நின்று வருந்திவோர் பலராவர். தாயன்பு போல  உணவளிப்பது இந்த தெய்விகப் பாத்திரம். இந்தப் பாத்திரத்தின் உள்ளே இட்ட உணவு பசியால் வாடிய ஏழைகளின் முகத்தைக் கண்டதும் சுரத்தலைக் காணும் விருப்பமுடையவள் நான்” எனக் கூறினாள் மணிமேகலை.

வானத்தில் பறந்தாள்

அப்பாத்திரத்தின் பயனை நீ நன்றாக அறிந்துள்ளாய். தரும வழியில் மற்றவர்களுக்கு உதவவும் தயாராக இருக்கிறாய்! ஆகவே மணிபல்லவம் விட்டு உனது ஊருக்குச் செல்வாயாக!” என்றாள் தீவதிலகை. மணிமேகலை அவளது திருவடிகளில் விழுந்து வணங்கி விடை பெற்றாள். அமுதசுரபியைத் தன் கையில் ஏந்தி  வானத்தில் பறந்து புகார் நகர் நோக்கிச் சென்றாள்.

பழைய பிறப்பைக் கூறினாள்

என் மகள் மணிமேகலை வரவில்லையே, என்று நினைத்து வருந்தினாள் மாதவி. அப்போது அவர்கள் முன் வானிலிருந்து இறங்கித் தோன்றினாள் மணிமேகலை. . மணிமேகலை அவர்களிடம் ஓர் அரிய செய்தியைக் கூறினாள். முற்பிறப்பில் தாங்கள் இருவரும் எனக்குத் தமக்கையராக இருந்தீர்கள். இப்பிறப்பில் தாயார்களாக ஆனீர்கள்! உமது திருவடிகளை வணங்குகிறேன்” என்று கூறிய மணிமேலை, மாதவி சுதமதி இருவரையும் வணங்கினாள்.

அறவண அடிகள் திருவடி தொழுவோம்

இதோ இந்தப் புகழ் மிக்க பாத்திரம் அமுதசுரபியாகும். இதனை நீங்களும் வணங்குங்கள்” என்று மணிமேகலை கூற, அவர்களும் வணங்கினர். மேலும் “அறவண அடிகளின் பாதங்களை வணங்கிடச் செல்வோம். நீங்களும் வாருங்கள்” என்று  மணிமேகலை கூறி அவர்களோடு அறவண அடிகளைக் காண மணிகேகலை புறப்பட்டாள்.

                       ***********************************


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி