பெரிய புராணம் - பூசலார் நாயனார் புராணம்
3. பெரிய புராணம் - பூசலார் நாயனார் புராணம்
பெரிய புராணம் குறிப்பு
- திருத்தொண்டர் புராணம் என்றும் வழங்கப்பெறும்
- சேக்கிழார் இந்நூலை இயற்றினார்
- சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டது
- தில்லை நடராசர் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் பாடியுள்ளார்
- 63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியவர்கள் குறித்துக் குறிப்பிடுகிறது.
- அக்கால மக்களின் வாழ்க்கை பற்றி அறிவதற்கு இந்நூல் உதவுகிறது
- இது முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டங்களை உடையது
- 13 சருக்கங்களைக் கொண்டது
- முதல் காண்டம் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டம் எட்டுச் சருக்கங்களையும் கொண்டுள்ளது.
நாடு : தொண்டை நாடு (புலியூர்க் கோட்டம்)
ஊர் : குன்றத்தூர்
மரபு : வேளாளர்
பெற்றோர்
: வெள்ளியங்கிரி அழகாம்பிகை
இயற் பெயர் : அருண்மொழித்தேவர்
காலம்
: 12-ஆம் நூற்றாண்டு
சமயம் : சைவம்
இவர் இரண்டாம்
குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை அமைச்சராக இருந்தவர்.
பெரியபுராணம் என்னும் நூலை இயற்றியவர்
பூசலார் நாயனார் புராணம் - செய்யுள்
1. 1. அன்றினார்
புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி
ஒன்றும் அங்கு உதவாது ஆக உணர்வினால் எடுக்கும் தன்மை
நன்று என மனத்தினாலே நல்ல ஆலயம் தான் செய்த
நின்ற ஊர்ப் பூசலார்தம் நினைவினை உரைக்கல் உற்றார்.
2. உலகினில்
ஒழுக்கம் என்றும் உயர் பெருந்தொண்டை நாட்டு
நலம்மிகு சிறப்பின் மிக்க நான் மறை விளங்கும் மூதூர்
குல முதல் சீலம் என்றும் குறைவுஇலா மறையோர் கொள்கை
நிலவிய செல்வம் மல்கி நிகழ் திருநின்ற ஊராம்.
3. அருமறை
மரபு வாழ அப்பதி வந்து சிந்தை
தரும் உணர்வான எல்லாம் தம்பிரான் கழல்மேல் சார
வருநெறி மாறா அன்பு வளர்ந்து எழ வளர்ந்து வாய்மைப்
பொருள் பெறு வேதநீதிக் கலை உணர் பொலிவின் மிக்கார்.
4. 'அடுப்பது
சிவன்பால் அன்பர்க்கு ஆம் பணி செய்தல்' என்றே
கொடுப்பது எவ்வகையும் தேடி அவர் கொளக் கொடுத்துக்
கங்கை
மடுப்பொதி வேணி ஐயர் மகிழ்ந்து உறைவதற்கு ஓர் கோயில்
எடுப்பது மனத்துக் கொண்டார் இரு நிதி இன்மை எண்ணார்.
5. மனத்தினால்
கருதி எங்கும் மாநிதி வருந்தித் தேடி
'எனைத்தும் ஓர் பொருள் பேறு இன்றி என் செய்கேன்'
என்று நைவார்
நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ் உறு நிதியம்
எல்லாம்
தினைத்துணை முதலாத் தேடிச் சிந்தையால் திரட்டிக்
கொண்டார்.
6. சாதனத்
தோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடி
நாதனுக்கு ஆலயம் செய் நலம் பெறு நல் நாள் கொண்டே
ஆதரித்து ஆகமத்தால் அடிநிலை பாரித்து அன்பால்
காதலின் கங்குல் போதும் கண்படாது எடுக்கல் உற்றார்.
7. அடிமுதல்
உபானம் ஆதி ஆகிய படைகள் எல்லாம்
வடிவு உறும் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து,
மான
முடிவு உறு சிகரம் தானும் முன்னிய முழத்தில் கொண்டு,
நெடிது நாள் கூடக் கோயில் நிரம்பிட நினைவால் செய்தார்.
8. தூபியும்
நட்டு மிக்க சுதையும் நல்வினையும் செய்து
கூவலும் அமைத்து மாடு கோயில் சூழ் மதிலும் போக்கி,
வாவியும் தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து மன்னும்
தாபரம் சிவனுக்கு ஏற்க விதித்த நாள் சாரும் நாளில்.
9. காடவர்
கோமான் கச்சிக் கல்தளி எடுத்து முற்ற
மாடு எலாம் சிவனுக்கு ஆகப் பெரும் செல்வம் வகுத்தல்
செய்வான்
நாடமால் அறியாதாரைத் தாபிக்கும் அந்நாள் முன்நாள்
ஏடு அலர் கொன்றை வேய்ந்தார் இரவிடைக் கனவில் எய்தி.
10. 'நின்ற
ஊர்ப் பூசல் அன்பன் நெடு நாள் நினைந்து செய்த
நன்று நீடு ஆலயத்துள் நாளை நாம் புகுவோம் நீ இங்கு
ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய்' என்று,
கொன்றை வார் சடையார் தொண்டர் கோயில் கொண்டு அருளப்
போந்தார்.
11. தொண்டரை
விளக்கத் தூயோன் அருள் செயத் துயிலை நீங்கித்
திண்திறல் மன்னன் 'அந்தத் திருப்பணி செய்தார் தம்மைக்
கண்டு நான் வணங்க வேண்டும்' என்று எழும் காதலோடும்
தண் டலைச் சூழல் சூழ்ந்த நின்ற ஊர் வந்து சார்ந்தான்.
12. அப்பதி
அணைந்து 'பூசல் அன்பர் இங்கு அமைத்த கோயில்
எப்புடையது ?' என்று அங்கண் எய்தினார் தம்மைக் கேட்கச்
'செப்பிய பூசல் கோயில் செய்தது ஒன்று இல்லை' என்றார்;
'மெய்ப் பெரு மறையோர் எல்லாம் வருக' என்று உரைத்தான்
வேந்தன்.
13. பூசுரர்
எல்லாம் வந்து புரவலன் தன்னைக் காண
'மாசு இலாப் பூசலார் தாம் யார் ?' என, மறையோர் எல்லாம்
'ஆசு இல் வேதியன் இவ்வூரான்' என்று அவர் அழைக்க
ஒட்டான்
ஈசனார் அன்பர் தம்பால் எய்தினான் வெய்ய வேலான்.
14. தொண்டரைச்
சென்று கண்ட மன்னவன் தொழுது 'நீர் இங்கு
எண் திசை யோரும் ஏத்த எடுத்த ஆலயம் தான் யாது
?' இங்கு
அண்டர் நாயகரைத் தாபித்து அருளும் நாள் இன்று என்று
உம்மைக்
கண்டு அடி பணிய வந்தேன்; கண் நுதல் அருள் பெற்று'
என்றான்.
15. மன்னவன்
உரைப்பக் கேட்ட அன்பர் தாம் மருண்டு நோக்கி,
'என்னை ஓர் பொருளாக் கொண்டே எம்பிரான் அருள் செய்தாரேல்
முன்வரு நிதி இலாமை மனத்தினால் முயன்ற கோயில்
இன்னதாம்' என்று சிந்தித்து எடுத்த வாறு எடுத்துச்
சொன்னார்.
16. அரசனும்
அதனைக் கேட்டு அங்கு அதிசயம் எய்தி 'என்னே!
புரை அறு சிந்தை அன்பர் பெருமை!' என்று அவரைப் போற்றி
விரை செறி மாலை தாழ நிலமிசை வீழ்ந்து தாழ்ந்து
முரசு எறி தானை யோடு மீண்டு தன் மூது ஊர்ப் புக்கான்.
17. அன்பரும்
அமைத்த சிந்தை ஆலயத்து அரனார் தம்மை
நன் பெரும் பொழுது சாரத் தாபித்து நலத்தினோடும்.
பின்பு பூசனைகள் எல்லாம் பெருமையில் பல நாள் பேணிப்
பொன் புனை மன்றுள் ஆடும் பொன் கழல் நீழல் புக்கார்.
18. நீண்ட
செஞ்சடையினார்க்கு நினைப்பினால் கோயில் ஆக்கிப்
பூண்ட அன்பு இடை அறாத பூசலார் பொன்தாள் போற்றி
ஆண்ட கை வளவர் கோமான் உலகு உய்ய அளித்த செல்வப்
பாண்டிமா தேவியார் தம் பாதங்கள் பரவல் உற்றேன்.
பூசலார் நாயனார் மனதில் கோவிலை உருவாக்கிய விதத்தை விளக்குக
பூசலார் மனதில் கோவில் கட்ட நினைத்தல்
பூசலார்
திருநின்றவூரில் பிறந்தார்.. அவர் சிவனிடம் மாறாத அன்பு கொண்டவர். சிவனடியார்களுக்கு ஏற்ற
பணிகளைச் செய்தலே தமக்குரிய திருத்தொண்டு என்று எண்ணியவர்., சிவனுக்கு ஒரு கோயிலை அமைக்க வேண்டும் என்று விரும்பினார். தன்னிடம்
பொருட்செல்வம் இல்லை என்று தெரிந்தும் கோயில்
அமைக்கும் எண்ணத்தில் உறுதியுடன் நின்றார்.
கோயில்
அமைக்க அவருடைய உள்ளம் விரும்பியது. ஆனால், கோயில்
அமைப்பதற்குரிய பெருஞ்செல்வத்தை வருந்தித் தேடியும் கிடைக்காததால் ன்று மனம் வருந்தினார்.
மனதுள்ளேயே அக்கோயிலைக் கட்ட
வேண்டும் என்று எண்ணி அதற்குரிய செல்வத்தைச் சிறுகச் சிறுகத் தம் சிந்தனையிலேயே
திரட்டிக் கொண்டார்.
கருவிகளைத் தேர்ந்தெடுத்தல்.
தொழிற் கருவிகளோடு கட்டுதற்குரிய சாதனங்களுடன் தச்சர்களையும் தேடிக் கொண்டு கோயில் கட்டுவதற்குரிய நல்ல நாளும் தேர்ந்தெடுத்து ஆகம விதிப்படி அஸ்வதிவாரம் எடுத்து, தம்
அன்பினால் இரவும் பகலும் உறங்காது மனதுக்குள்ளேயே கோயிலை உருவாக்கினார்.
சித்திர வேலைப்பாடுகளை எண்ணுதல்
கோபுரத்தின் அடி முதல் முடி வரை அமைந்துள்ள அடுக்குகள் யாவற்றிலும் சித்திர
வேலைப்பாடுகள் அமையுமாறு மனத்தினால் அமைத்து, கோபுரத்தின் முடிவில் சிகரமும் சிற்ப நூலில்
சித்திரங்களும் உருவாக்கினார்.
விமானத்தின் உச்சியில் கூர்மையான சிகரம் அமைத்து, சுண்ணச்
சாந்து பூசி சிற்ப அலங்காரங்களைச் செய்த பின்பு, திருமஞ்சனத்திற்குரிய கிணறும், கோயிலைச்
சுற்றி மதில்களைக் கட்டிக் குளமும் அமைத்தார்.
சிவபிரான் திருமேனியின் திருவுருவமாகிய சிவலிங்க மூர்த்தியைப் பிரதிட்டை செய்யும் நாளைக்
குறித்தார்.
பல்லவ
மன்னன் கனவில் சிவன் தோன்றுதல்
பல்லவ
வேந்தன் காஞ்சி மாநகரில் பெருஞ்செல்வத்தில் கற்கோயிலை முழுமையாகக் கட்டி
முடித்தான். பின்பு சிவபிரானைப் பிரதிட்டை செய்ய குடமுழுக்கு நடத்த அனைத்து
ஏற்பாடுகளையும் செய்தான். அதற்கு முன் நாள், கொன்றை மலர்
சூடிய சிவபிரான் மன்னன் கனவில் தோன்றினார்.
“திருநின்றவூரில் பூசல் என்னும் அன்பன் பலநாள் அமைத்த புகழ் மிக்க
ஆலயத்துள் நாளை நாம் புகுகின்றோம். ஆதலால் நீ செய்யும் குடமுழுக்குச் செயலை நாளைய
தினம் தவிர்த்துப் பின்பு ஒருநாளில் அமைத்துச் செய்வாய்” என்று கூறி மறைந்தார்.
மன்னன்
பூசலாரை வணங்குதல்
திருத்தொண்டராகிய
பூசலார் நாயனாரின் பெருமையை சிவபிரான் சொல்லக் கேட்ட பல்லவ மன்னன், அத்திருப்பணி செய்தவரைக் கண்டு வணங்குதல் வேண்டும் என்று விருப்பம் கொண்டு
திருநின்றவூரை சென்றடைந்தான்.
திருநின்றவூரை
அடைந்த வேந்தன், அன்பராகிய பூசலார் அமைத்த கோயில் எப்பக்கம் உள்ளது என்று
அங்கு வந்தவர்களைக் கேட்க, அவர்களும், “தாங்கள் கூறும் பூசலார், கோயில் எதுவும் அமைத்தது
இல்லை” என்றனர். அந்நிலையில் இறைவனின் அடியவர்கள் அனைவரும் தன்னைச் சந்திக்க
வருமாறு உரைத்தான் மன்னன்.
அன்பர்கள்
அனைவரும் வந்து அரசனைக் காண, மன்னன்
அவர்களிடம் “பூசலார் என்பவர் யார்?” என்று வினவ, அவர்களும், “குற்றம் இல்லாத அந்த அன்பர் இந்த ஊரைச்
சேர்ந்தவர்” என்று கூற, பூசலாரை நாடிச் சென்றான் மன்னன்.
திருத்தொண்டராகிய
நாயனாரைக் கண்ட மன்னன் தொழுது போற்றி, “எட்டுத்
திசைகளில் உள்ளவரும் தொழுமாறு நீங்கள் கட்டிய கோயில் எங்குள்ளது? இன்று அக்கோயிலில் தேவர் தலைவனான சிவபிரானைப் பிரதிட்டை செய்யப் போவதை
அறிந்து இறைவன் அருள் பெற்று உம்மைக் கண்டு அடிபணிய வந்தேன்” என்று கூறினான்.
மன்னன் உரை கேட்ட நாயனார் மருட்சி அடைந்தவராக, “என்னை ஒரு பொருளாகக் கொண்டு எம்பிரான் அருள் செய்தார். பணமும் பொருளும்
கிடைக்கப் பெறாமையால் உள்ளத்தால் முயற்சி செய்து நினைந்து நினைந்து அமைத்த கோயில்
இதுவேயாகும்” என்று தாம் மனத்துள் எழுப்பிய ஆலயத்தை மன்னனுக்கு விளக்கமாக
எடுத்துக் கூறினார்.
நாயனாரின்
உரை கேட்ட மன்னன், அங்கு நிகழ்ந்த அதியசயத்தை எண்ணிக் “குற்றமற்ற
திருத்தொண்டர்தம் பெருமைதான் என்னே!” என்று போற்றி, தான்
சூடிய மாலை தரையில் பதியுமாறு நிலத்தில் வீழ்ந்து பூசலாரை வணங்கினான். பின்பு
முரசு ஒலிக்கும் படையோடு தன் காஞ்சி மாநரை அடைந்தான்.
பூசலார் தம்
மனக்கோவில் சிவனை பிரதிஷ்டை செய்தல்
பூசலார்
தாம் சிந்தையால் அமைத்த கோயிலில் சிவபிரானை நல்ல பொழுதில் பிரதிட்டை செய்தார். பல
நாட்கள் சிறந்த பூசைகள் யாவும் செய்தார். பின்னர் இறைவனின் அழகிய திருப்பாதத்தில்
சேர்ந்தார்.
******************************
கருத்துகள்
கருத்துரையிடுக