சிறப்புத் தமிழ் - நாட்டுப்புறப் பாடல்கள்

 

தாலாட்டுப் பாடல்கள்

  •  குழந்தைகளின் அழுகையை நிறுத்தவும், அவர்களை மகிழ்விக்கவும், தூங்கவைக்கவும், பெண்களால் பாடப்படும் பாடல்கள் தாலாட்டுப் பாடல்கள்
  • ‘தால்என்றால் நாக்கு என்று பொருள் தரும் 
  • நாக்கினை ஆட்டி ரா ரா ரா ரா, லு லு லு லு என்று தொடங்கி பாடுவதால் இது தாலாட்டு என்று பெயர் பெற்றது
  • மக்கள் வழக்கில் ஆராட்டு, ரோராட்டு, தாலாட்டு, ஓராட்டு, தாராட்டு, தொட்டிப் பாட்டு, தூரிப்பாட்டு என்று தாலாட்டுப் பலவாறாகச் சுட்டப்படுகின்றது. 
  • குழந்தையின் தாய்மட்டுமல்லாது குழந்தையின் பாட்டி, அத்தை, சகோதரி போன்ற உறவினர்களும் தாலாட்டுப் பாடுவர். 

 தாலாட்டுப்பாடல் 

 ஆராரோ ஆரரிரோ

ஆரடிச்சா ஏனழுதாய்

அடிச்சவரை சொல்லியழு

ஆக்கினைகள் சொல்லிடுறேன்

தொட்டாரைச் சொல்லியழு

தொழு விலங்கு போட்டுடுறேன்

அத்தை அடிச்சாளோ

அன்னமிட்ட கையாலே

மாமி அடிச்சாளோ

மருந்து போடும் கையாலே

அண்ணன் அடிச்சானோ

அல்லிப்பூ தண்டாலே

மாமா அடிச்சானோ

மல்லிகைப்பூச் செண்டாலே

தாலாட்டுப் பாடல்களில் தாய்மாமனின் புகழ், தாய் வீட்டுப் பெருமை, அத்தை, மாமி ஆகியோர் அன்னமிட்ட கையாலும், மருந்து போட்ட கையாலும் குழந்தையை அடிப்பதாகக் கூறும் தாய் மல்லிகைப்பூச் செண்டால் மாமா அடிப்பதாகக் கூறுவதைக் காணமுடிகிறது.

தாய்மாமா தன் குழந்தைக்குக் கொடுக்கும் சீர்களைப் பின்வரும் பாட்டு குறிப்பிடுகிறது. 

பால் குடிக்கக் கிண்ணி,
பழந்திங்கச் சேணாடு

நெய் குடிக்கக் கிண்ணி,
முகம் பார்க்கக் கண்ணாடி

கொண்டைக்குக் குப்பி

கொண்டு வந்தான் தாய்மாமன். 

 இப்பாடலில் தாய்மாமன் குழந்தைக்கு வாங்கி வருவதாகக் கூறப்படும் பொருட்களின் பட்டியல் பால் குடிக்கக் கிண்ணி, கண்ணாடி, கொண்டைக்குப்பி போன்றன

 குழந்தைப்பாடல்கள் 


அம்புலி அம்புலி

எங்கப் போன

ஆவாரங் காட்டுக்கு

ஏன் போன

குச்சி ஒடிக்க

ஏன் குச்சி

சோறாக்க

ஏன் சோறு

திங்க

எண்ண கொடத்துல

துள்ளி விளையாட

செறு மணல்ல

செரண்டு விளையாட

 

கடைசி நான்கடியைப் பாடும் போது குழந்தையைக் கால்களால் இயன்றவரை மேலே தூக்குவர். அது குழந்தைக்குப் பயத்தோடு கலந்த உற்சாகத்தை ஏற்படுத்தும். இதற்கு அம்புலி தூக்கல் என்று கூறுவர்.

 குழந்தைகள் பேசக் கற்றுக்கொள்ளும் போது பேச்சு திருத்தமாக அமைய வேண்டி சில பாடல்களைக் கூறி, குழந்தையைப் பாடுமாறு கூறுவர். அப்பாடலானது

 யாரு தச்ச சட்ட

தாத்தா தச்ச சட்ட

விளையாட்டுப் பாடல்கள்

 குழந்தைகள் விளையாடும் போது பாடும் பாடல்கள் ஆகும். இது அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும் மன மகிழ்ச்சியையும் தரும். சோம்பலை நீக்கும். புத்துணர்வைத் தரும்

 

காளைக் காளை வருகுது பார்

கருப்புக் காளை வருகுது பார்

சூரியனுக்கு வேண்டி விட்ட

துள்ளுக்காளை வருகுது பார்.

 எதிரணியின் எல்லைக்குள் நுழையும் போது அந்த அணியினரைச் சீண்டுவது போலவும், சவால் விடுவது போலவும், சடுகுடுப் பாடல்கள் அமைவதுண்டு. தன்னையே ‘துள்ளுக்காளை (துடிப்பான - அடக்க முடியாத காளை) என்றுக் கூறிக் கொள்வதைப் பாடலில் காணலாம். இறுதிச் சொற்கள் திரும்பத் திரும்பப் பாடப்படும். மற்றொரு சான்று காணலாம்.

நான் தாண்டா ஒப்பன்

நல்லமுத்து பேரன்

வெள்ளிச் சிலம்பெடுத்து

விளையாட வாரேன்

தங்கச் சிலம்பெடுத்து

தாலி கட்ட வாரேன்

வாரேன் வாரேன்.....

  இந்தப் பாடலும் எதிரணியினரைச் சீண்டி வம்புக்கு இழுப்பதாக அமைந்துள்ளதைக் காணலாம்.  உடற்பயிற்சி விளையாட்டுக்கு மாறான சில விளையாட்டுக்கள் உண்டு. ‘சும்மா விளையாட்டுக்குப் பாடுவதுஎன்று அச்சூழல்களில் பாடப்படும் பாடல்களைச் சுட்டுவர். இத்தகைய பாடல்கள் கேலி செய்வதாக அமைவதோடு மட்டுமல்லாமல் இளம் வயதில் மிகச் சிறந்த அறிவுரைகளை நல்குவனவாகவும் அமைவதுண்டு.

 மழவருது மழவருது

நெல்லு குத்துங்க

முக்காபடி அரிசி எடுத்து

முறுக்கு சுடுங்க

ஏர் ஓட்டுற மாமனுக்கு

எண்ணி வையுங்க

சும்மா இருக்குற மாமனுக்கு

சூடு போடுங்க.

 இது சிறுவர்கள் கேலி செய்து பாடும் விளையாட்டுப் பாடல்தான். இங்கே உழைப்பு மதிக்கப்படுவதையும் சோம்பல் இகழப்படுவதையும் காணலாம்.

 சிறுவர்களின் வளர்ச்சியின் போது பல் விழுதல், மொட்டையடித்தல், போன்ற நிகழ்வுகள் நடைபெறும். இந்த நிகழ்வுகள் சிறுவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாவதுண்டு. சான்றாக, பல் விழுந்த சிறுவனைப் பிற சிறுவர்கள் கேலி செய்து பாடும் பாடல் ஒன்று கீழே தரப்படுகிறது.

 

பொக்கப் பல்லு டோரியா

பொண்ணு பாக்கப் போறியா

பட்டாணி வாங்கித் தறேன்

பள்ளிக் கூடம் போறியா.

 

இப் பாடலில் பல் விழுந்து பொக்கை வாயாக இருப்பது கேலி செய்யப்படுகிறது. இந் நிலையில் உண்பதற்குக் கடினமான பட்டாணி வாங்கித் தருகிறேன் என்று கூறுவதும் கேலியே. பொதுவாக வயது முதிர்ந்த ஒருவர் பல்லை இழந்து பொக்கை வாயாக இருப்பார். அவர் தனக்குப் பெண் பார்க்கச் சென்றால் அது நகைப்பிற்குரியதாக இருக்கும்

பொதுவாக விளையாட்டுப் பாடல்கள் அளவால் சிறியதாக இருக்கும். பல பாடல்கள் பொருளற்றவையாகவும் இருக்கும். அத்தகையப் பாடல்களில் ஒலிக்குறிப்பு மட்டுமே முக்கியத்துவம் பெறும். சிறுவர்கள் எளிதில் நினைவில் கொள்ளத்தக்கதாகவும் விளையாட்டுக்குத் துணை செய்வதாகவும் இத்தகைய பாடல்கள் அமைந்திருக்கும்.

 ஏற்றப் பாடல்-விளக்குக.

 கிணறு, குளம், குட்டை, கால்வாய் முதலான நீர் நிலைகளிலிருந்து மேட்டுப்பாங்கான விளைநிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு இயந்திரங்கள் இல்லாத காலகட்டத்தில் ஏற்றத்தின் வாயிலாக நீர் பாய்ச்சுவர். அப்போது வேலையின் துன்பம் தெரியாமல் இருப்பதற்காக அச்சூழலில் பாடப்படும் பாடல் என்பதாகும்.

இந்த ஏற்றத்திலிருந்து நீர் இறைக்கும் போது பாடல்கள் பாடுவர். ஏற்றத்தின் மேலே மிதி மரத்திலிருந்து சென்று வருபவர் ஒருவர். கீழே சால் பிடித்து நீர் இறைப்பவர் ஒருவர். 

சால் பிடித்து நீர் இறைப்பவர் பாடல் பாடுவார். களைப்பு தெரியாமல் இருப்பது தான் இதன் முதல் நோக்கம்.

 இறைக்கப்பட்ட சால்களின் எண்ணிக்கையை அறிவது அடுத்த நோக்கம். பாடலின் ஒவ்வொரு பத்தடிக்கும் இறைக்கப்பட்ட சால்களின் எண்ணிக்கை கணக்கிடப்படும். 

மொத்த நிலத்தின் அளவு, இறைக்கப்பட்ட சால்களின் எண்ணிக்கை, இன்னும் இறைக்கப்பட வேண்டிய சால்களின் எண்ணிக்கை முதலியவற்றை ஏற்றம் இறைப்பவர் நன்கு அறிந்திருப்பார்.

 ஆபத்தான தொழில் ஆகையால் தெய்வங்களையெல்லாம் அழைத்துக் காப்பாற்றுமாறு வேண்டுவதை பல பாடல்களில் காணலாம். பாடல்கள் நீண்ட நேரம் பாடப்படும். பல பாடல்களில் பொருள் தொடர்ச்சி இருக்காது.

 

பிள்ளையாரே வாரும்

பிள்ளைப் பெருமாளே

நல்ல பிள்ளையாரே

நானென்ன படைப்பேன்

பச்சரிசி தேங்கா

பயிறும் பலகாரம்

கொள்ளுடன் துவரை

கோதுமை கடலை

பச்சரிசி தேங்கா

பயறும் பலகாரம்

இத்தனையும் சேர்த்து

எங்க பிள்ளையார்க்கு

எப்படிப் படைப்பேன்.

  ஏற்றப் பாடல் பிள்ளையார்க்கு என்னென்ன படைக்கப்படும் என்று பட்டியலிடுகிறது பாடல். ஏற்றப் பாடலின் மற்றொரு துணுக்கு வருமாறு.

 தோழா துவளாதே-நமக்கு இப்ப

சோறு வரும் நேரம்

கஞ்சா துவளாதே

கஞ்சி வரும் நேரம்

மின்ன ஓடும் தோழா உனக்கு

என்னடாதான் தேவ

ஓடையிலே போற

ஒசந்த கொண்டகாரி

சாலையிலே போற-அவ

சாஞ்ச கொண்டகாரி

சாஞ்ச கொண்டகாரி அந்தத்

தையலுமே வந்தால் எனக்கு

சம்மதந்தான் அண்ணே.

 உழவுப்பாடல்

ஏர் ஓட்டும்போது பாடல் பாடும் பழக்கம் உண்டு. இவ்வகைப் பாடல்கள் காளேரிப்பாட்டு என்று அழைக்கப்படுகின்றது. காளைகளை எந்தோழிக் காளைகளே, எந்தோழனார் காளைகளே என்று விளித்துப் பாடல்கள் பாடுகின்றனர்.

 காளேஏஏ.....முந்தி முந்தி நாயகனே என் தோழி காளைகளே

      முக்கண்ணனார் தன் மகனே

காளேஏஏ.....கந்தனுக்கு முன் பிறந்த என் தோழி காளைகளே

     கற்பகமே முன் நடவாய்

காளேஏஏ.....வேலவர்க்கு முன் பிறந்த என் தோழி காளையரே

      விக்கினரே முன் நடவாய்

காளேஏஏ.....வேம்படி வினாயகனே என் தோழி காளையரே

     விக்கினரே முன் நடவாய்

இவ்வாறே நடவு நடுதல், களையெடுத்தல், நெல் தூற்றல் போன்ற பல்வேறு வேளாண் தொழிற் சூழல்களில் பாடல்கள் பாடப்படும்.

வேளாண்மையல்லாத வேறு தொழில்கள் செய்யும் போதும் பாடல்கள் பாடப்படும். முற்காலத்தில் வீடுகட்டுவதற்குச் சுண்ணாம்புப் பாறைகளை உரலிலிட்டு இடித்துப் பயன்படுத்தி வந்தனர். அச்சூழல்களில் பாடல்கள் பாடப்படும். தொட்டிலில் போட்ட பிள்ளையைத் தூக்கிப் பார்க்கக் கூட நேரமில்லாமல் வேலை வாங்கப்படும் பெண் தொழிலாளியின் துயரக் குரல் ஒன்று கட்டிடப் பணிக்காகச் சுண்ணாம்பு இடிக்கும் பெண்ணிடமிருந்து வெளிப்படுவதைப் பின்வரும் பாடல் தெளிவுபடுத்துகிறது.

 காலையிலே என்சாமி வந்தோம் நாங்க வந்தோம் நாங்க

காலப்புண்ண என்சாமி நோவுதுங்க நோவுதுங்க

நானிடிக்கும் என்சாமி நல்சுண்ணாம்பு நல்சுண்ணாம்பு

நல்லமெத்த என்சாமி கட்டுலாமே கட்டுலாமே

பெண்ணாடிக்கும் என்சாமி புது சுண்ணாம்பு புது சுண்ணாம்பு

புதுமெத்த என்சாமி கட்டுலாமே கட்டுலாமே

தொட்டிலிலே என்சாமி போட்டபிள்ள போட்டபிள்ள

தூக்கி பார்க்க நேரமில்ல நேரமில்ல

ஒப்பாரிப் பாடல்கள்

ஒப்பு சொல்லிப் பாடுவது ஒப்பாரி. இதனை இழவுப்பாட்டு என்றும் கூறுவர். இப்பாட்டினை இழவு வீட்டில் பெண்கள் பாடுவர். இறந்தவர்களின் பெருமை, சிறப்பு போன்றனவற்றை விளக்கிப் பாடுவர். 

ஆலமரபோல அன்னாந்து நிப்பேனு
நான் ஒய்யாரமா வந்தேனே
இப்ப நீ பட்ட மரம்போல
பட்டு போயிட்டையே.

பொட்டு இல்ல பூவில்லை
பூச மஞ்சலும் இல்ல
நான் கட்டன ராசாவே
என்ன விட்டுத்தான் போனிங்க.

பட்டு இல்லை தங்கம் இல்லை
பரிமார பந்தல் இல்ல
படையெடுது வந்த ராசா
பாதியியில போரிங்க்கலே

நான் முன்னே போரேன்
நீங்க பின்னே வாருங்கோ
என சொல்லிட்டு
இடம்பிடிக்கப் போயிதங்களா.

நான் காக்காவாட்டும் கத்தரனே,
உங்க காதுக்கு கேக்கலையா
கொண்டுவந்த ராசாவே
உங்களுக்கு காதும் கேக்கலையா.

வினாக்கள்

நாட்டுப்புறப் பாடல்களைக் குறிக்க, தொல்காப்பியர் எந்தச் சொல் அல்லது சொற்களைப் பயன் படுத்தியுள்ளார்?

 பண்ணத்தி, புலன்.

சிலப்பதிகாரத்தில் நாட்டுப்புறப் பாடல்களை அடியொற்றி எழுதப்பட்ட இலக்கிய வடிவங்கள் யாவை?

 கானல்வரி, வேட்டுவவரி, அம்மானைவரி, கந்துகவரி, ஊசல்வரி, வள்ளைப்பாட்டு முதலியன சிலப்பதிகாரத்தில் நாட்டுப்புறப் பாடல்களை அடியொற்றி எழுதப்பட்ட இலக்கிய வடிவங்கள்.

தமிழ் நாட்டுப்புறப் பாடல்களை முதன் முதலில் சேகரித்து வெளியிட்டவர் யார்? நூலின் பெயர் என்ன?

 சார்லஸ் இ. கோவர்- Folk song’s of Southern India.

நாட்டுப்புறப் பாடல்களைச் சூழல் அடிப்படையில் எத்தனைப் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்? அவை யாவை?

 எட்டாக வகைப்படுத்தலாம். தாலாட்டுப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், தொழிற் பாடல்கள், காதல் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், கொண்டாட்டப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள்

மக்கள் வழக்கில் தாலாட்டு எவ்வாறு சுட்டப்படுகிறது? (அல்லது) தாலாட்டிற்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?

 ஆராட்டு, ரோராட்டு, தாலாட்டு, ஓராட்டு, ராராட்டு, தொட்டில் பாட்டு, தூரிப்பாட்டு என்று சுட்டப்படுகின்றது.

விளையாட்டுப் பாடல்களை எத்தனைப் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்? அவை யாவை?

 இரண்டு வகையாக. 1. உடற்பயிற்சி விளையாட்டுப் பாடல்கள், 2. வாய்மொழி விளையாட்டுப் பாடல்கள்.

     தொழிற் பாடல்களை எத்தனை வகையாக வகைப்படுத்தலாம்? அவையாவை?

 இரண்டு வகையாக. வேளாண்மைத் தொழிற் பாடல்கள் வேளாண்மையல்லாத தொழிற் பாடல்கள்

தால் பொருள் தருக 

    தால் என்றால் நாக்கு என்று பொருள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி