திருமூலர் - திருமந்திரம்

     திருமூலர் - திருமந்திரம்

    அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்

    அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

    அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

    அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. (270)

    பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்

    மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை

    துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்

    பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே. (271)

    என்அன் புருக்கி இறைவனை ஏத்துமின்

    முன்அன் புருக்கி முதல்வனை நாடுமின்

    பின்அன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்

    தன்அன் பெனக்கே தலைநின்ற வாறே. (274)

    தானொரு காலம் சயம்பு என் றேத்தினும்

    வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்

    தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்

    தானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே. (275)

    கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி

    கண்டேன் கரியுரி யான்தன் கழலிணை

    கண்டேன் கமல மலர்உறை வானடி

    கண்டேன் கழலதென் அன்பினுள் யானே. (285)

    திருமூலர் குறிப்பு வரைக

  •     இவர் திருமூல நாயனார் என்றும் வழங்கப்படுகிறார். 
  • வாழ்க்கையின் பல்வேறு நிலையாமையினையும் கண்டு தெளிந்தவர் 
  • திருக்கயிலையில் நந்திதேவரின் திருவருள் பெற்ற சிவயோகியருள் ஒருவர். 
  • எண்பெருஞ் சித்திகளும் கைவரப்பெற்றவர் இச்சித்தர்
  • திருவாவடுதுறைக் கோயிலில் உள்ள அரசமரத்தடியில் 3,000 ஆண்டுக்காலம் யோகத்தில் இருந்தவர் 
  • இவர் எழுதிய நூல் திருமந்திரம் ஆகும். 
  • இது 3,000 பாடல்களைக் கொண்டது 
  • இந்நூல் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது 
  • இவரது காலம் கி.பி. 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டாக இருத்தல் கூடும்.

 

    திருமந்திரம் குறிப்பு வரைக

 

  •     மிழில் மெய்ப்பொருள் உணர்வினை விளக்கும் தொன்மையான இலக்கியங்களில் முதலில் தோன்றிய முழுமையான நூலாகும்.
  • இந்நூல் பொது அறம், மந்திரம், சோதிடம், மருத்துவம், சித்தாந்த அடிப்படை விளக்கம் ஆகிய அனைத்தையும் விளக்குகிறது. 
  • இந்நூல் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது
  • இந்நூலில் 9 தந்திரங்களும் 232 அதிகாரங்களும் அடங்கியுள்ளன. 
  • இந்நூலில் வடசொற்கள் பயின்று வருகின்றன. 
  • சைவ சித்தாந்தம் என்ற தொடரை முதன் முதலில் இந்நூலில் காணமுடிகிறது .
  • இதன் பாக்கள் பெரும்பாலும் மறைபொருள் செய்தியாக அமைந்துள்ளன. 
  • எளிய சொற்களால் அரிய பொருளைத் தருகின்ற நூல் 
  • இந்நூலில் ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ 
  • ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ 
  • அன்பும் சிவமும் இரண்டென்ப அறிவிலார்

போன்ற அரிய தொடர்களும் அரிய கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.

 

1.திருமூலர் குறிப்பிடும் இறைவனின் தன்மைகளைக் குறிப்பிடுக.

                    (அல்லது)

திருமூலர் பாடல் வெளிப்படுத்தும் கருத்துகளைத் தொகுத்தெழுதுக.

    அன்பே சிவனின் வடிவம்

  •     அன்பு என்ற உணர்வும், சிவன் என்ற உணர்வும்  வேறு வேறு என்று கூறுபவர்கள் உண்மை ஞானம் அறியாதவர்கள். 
  • ஓர் அறிவு முதல் ஆறறிவு வரை உள்ள அனைத்து உயிர்கள் மீதும் செலுத்தப்படுகின்ற  தூய்மையான அன்புதான் சிவம் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. 
  • இறைவனது திருவருளால் தமக்குள்ளும் பிறருக்குள்ளும் இருந்து வெளிப்படும்  அன்புதான் சிவம் என்பதை அறிந்து உணர்ந்தபின், அந்த அறிவே சிவமாக  உள்ளத்தில் அமர்ந்து இருப்பார்.

சாம்பலில் நடனமாடுபவனின் அன்பு

  • பொன்னைக் காட்டிலும் ஒளி வீசுகின்ற புலித்தோலை ஆடையாக உடுத்தியிருப்பவன் சிவபெருமான். 
  • வானில் மின்னுகின்ற பிறைச் சந்திரனைத் தன் சடை முடியில் சூடியிருப்பவன்.
  •  சுடுகாட்டில் எஞ்சியிருக்கும் சூடான சாம்பலைப் பொடி போல திருமேனி எங்கும் பூசிக் கொள்பவன். 
  • அந்தச் சாம்பலின் பொடி மீது திருநடனம் ஆடுகின்றவன். 
  • அப்படிப்பட்ட இறைவனிடம் நான் கொண்டுள்ள அன்பும், இறைவன் என் மீது கொண்டுள்ள அன்பும் இரண்டறக் கலந்துள்ளது.

    இறைவனை அடைய அனைவரிடமும் அன்பு செலுத்துதலே எளிய வழி

  •      உள்ளம் உருக இறைவனைப் போற்றி வழிபடுங்கள். 
  • உடலை விட்டு உயிர் பிரியும் முன்பே அனைத்து உயிர்களின் மீதும் அன்பை செலுத்தி, அதன் மூலம் இறைவனைத் தேடுங்கள். 
  • அப்படிச் செய்தால், உயிர் உடலை விட்டுப் பிரிந்த பின்பும் தனது அளவில்லாத பெருங்கருணையைக் கொடுத்து இறைவன் நம்மோடு  இருப்பார்.

    பேரன்பின் உருவம் விண்ணுலகம் வரை துணையிருப்பவன்

  •      தானே சுயமாகத் தோன்றியவன். 
  • தம்மை அன்போடு வணங்கி வாழ்ந்த உயிர்கள் இறந்து விண்ணுலகம் செல்லும் காலம் வரை அவர்களோடு வழித்துணையாக வருபவன். 
  • கொன்றை மலர்களைத் தன் இடப்பாகத்தில் மாலையாக அணிந்திருப்பவன்.
  • அப்படிப்பட்ட சிவபெருமான் பேரன்பின் உருவமாக என்னுடன் கலந்து நிற்கின்றான்.

  பேரன்பால் இறைவனைக் கண்டு கொள்ளல்   

  •     கொன்றை மலர்களைச் சூடியிருக்கின்றவனின் திருவடிகளை நான் கண்டு  கொண்டேன்.  
  • யானைத் தோலைத்  தன் மேல் போர்த்திக் கொண்டனின் அழகிய கழல்களை நான் கண்டு கொண்டேன். 
  • தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் இறைவனின் திருடிகளை நான் கண்டு கொண்டேன். 
  • இறைவன் மீது நான் கொண்ட பேரன்பால் அழகிய கழல்களை அணிந்து அன்பு உருவமாக நிற்கின்ற சிவனின் திருமேனியை நான் கண்டு கொண்டேன்.
--------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி