பக்தி இலக்கியம் 2. மாணிக்கவாசகர் - திருவாசகம்
மாணிக்கவாசகர் - திருவாசகம்
சிவபுராணம்
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தாற்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்கசிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க.
மாணிக்கவாசகர் குறிப்பு
- பாண்டிய நாட்டில் திருவாதவூரில் ‘திருவாதவூரர்’ ( மாணிக்கவாசகர்) பிறந்தார்.
- அறிவாற்றலில் சிறந்து விளங்கியவர்
- இவர் அரிமர்த்தனப் பாண்டியனிடம் அமைச்சராகப் பணியாற்றினார்
- ‘தென்னவன் பிரம்மராயன்’ என்னும் பட்டமளித்துப் பாராட்டப் பெற்றார்.
- மன்னனுக்குக் குதிரை வாங்குவதற்காக நிறையப் பொன்னுடன் கீழைக்கரைக்குச்சென்றபோது, திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் இறைவன் ஞானாசிரியனாய் வெளிப்பட்டு உபதேசம் செய்ய, ஞான உபதேசம் பெற்றதும் தன் நிலைமறந்து கொண்டுவந்த பொன்னையெல்லாம் இறைப்பணியில் செலவிட்டார்.
- இதனையறிந்த மன்னன் இவரைச் சிறையிலிட்டுத் துன்புறுத்தவே, இறைவன் அவர் பொருட்டு நரியைப் பரியாக்கி பரியாக்கி, வைகையில் வெள்ளப் பெருக்கு உண்டாக்கி, பிட்டுக்கு மண்சுமந்து, பிரம்படிபட்டு எனப் பல்வேறு வகையான திருவிளையாடல்களைப் புரிந்தார்.
- அதன்பிறகு மன்னன் மாணிக்கவாசகரின் பெருமையை உணர்ந்தான்.
- சிறையிலிருந்தும், பதவியிலிருந்தும் விடுதலைபெற்று இவர் சிவத்தொண்டில் ஈடுபட்டார்.
- இவர் பாடிய பாடல்களின் தொகுப்பு திருவாசகம், திருக்கோவையார் ஆகியன வாகும் .
- திருவாசகத்தில் சிவபுராணம் தொடங்கி அச்சோப் பதிகம் ஈறாக 659 பாடல் கள் உள்ளன.
- இவை 51 தலைப்புகளில் தொகுக்கப் பட்டுள்ளன.
- ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் சிறப்புகொண்டது
- ‘திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்’ என்பர்.
- திருவாசகத்தின் சிறப்பால் ஈர்க்கப்பட்ட இராமலிங்க அடிகளார் அதனை வழிபடு நூலாக ஏற்றுக்கொண்டார்
வான்கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை
கலந்து என் ஊன்கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே
என்று மட்டுமல்லாமல் மேலும் அவர்
வாட்டமிலா மாணிக்கவாசக நின் வாசகத்தைக்
கேட்டபொழுது அங்கிருந்த கீழ்ப்பறவைச் சா திகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்கினமும் மெய்ஞான
நாட்டமுறும் எனில் நானுறுதல் வியப்பன்றே
என்றும் இராமலிங்க அடிகள் பாடிச் சிறப்பிக்கிறார்.
- துறைமங்கலம் சிவபிரகாச அடிகள் தமது நால்வர் நான்மணிமாலையில்,
திருவாசகம் இங்கு ஒருகால் ஓதின்
கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள்
தொடுமணற் கேணியில் சுரந்துநீர் பாய
மெய்ம் மயிர் ப் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி
அன்பர் ஆகுநர் அன்றி
மன் பதை உலகின் மற்றையர் இலரே
என்று போற்றியுள்ளார்.
1. மாணிக்கவாசகர்
இறைவனை எவ்வாறு போற்றுகிறார்?
- திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க
- திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க
- இமைக்கும் நேரமுங் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க
- திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னையாட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க
- ஆகம வடிவாகி நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க
- ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க.
- மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி வெல்க
- பிறவித் தளையை அறுக்கிற இறைவனது வீரக்கழலணிந்த திருவடிகள் வெல்க
- தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாதவனா யிருப்பவனது தாமரை மலர் போலும் திருவடிகள் வெல்க
- கை குவித்து வணங்குவோர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் வெல்க
- கைகளைத் தலைமேல் உயர்த்தி வணங்குவோரை வாழ்வில் உயரச் செய்கின்ற சிறப்புடையவனது திருவடி வெல்க என்று இறைவனின் திருவடிகளை வாழ்த்துகின்றார் மாணிக்கவாசகர்.
- -----------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக