இராவண காவியம் - தாய்மொழிப் படலம்
இராவண
காவியம்
(’தமிழகக் காண்டம்’ எனத் தொடங்கும் முதல் காண்டத்தின் ஆறாவது
படலம் தாய் மொழிப் படலம் ஆகும். பழந்தமிழகத்தின் கல்விநிலை குறித்து தனித் தமிழ் நடையில் மிக உயர்வாகப் பேசுகிறார் புலவர் குழந்தை)
ஏடுகையில்லாரில்லை இயலிசை கல்லாரில்லைப்
பாடுகையில்லாரில்லை பள்ளியோ செல்லாரில்லை
ஆடுகையில் லாரில்லை அதன்பயன் கொள்ளாரில்லை
நாடுகையில் லாரில்லை நற்றமிழ் வளர்ச்சியம்மா
1
தமிழ்எனது இருகண்பார்வை தமிழ்எனது உருவப்போர்வை
தமிழ்எனது உயிரின் காப்புத் தமிழ்எனது
உளஏமாப்பு
தமிழ்எனது உடைமைப் பெட்டி தமிழ்எனது உயர்வுப்
பட்டி
தமிழ்எனதுஉரிமை என்னத் தனித்தமிழ் வளர்ப்பர்
மாதோ 2
நாடெலாம் புலவர் கூட்டம் நகரெலாம் பள்ளி
ஈட்டம்
வீடெலாம் தமிழ்த்தாய் கோட்டம் விழவெலாம்
தமிழ்க் கொண்டாட்டம்
பாடெலாம் தமிழின் தேட்டம் பணையெலாம் தமிழ்க்கூத்
தாட்டம்
மாடெலாம் தமிழ்ச் சொல்லாட்டம் வண்டமிழகத்து
மாதோ 3
உண்டியை யுண்ணார் பொன்பட் டுடையினை யென்னார்
கன்னல்
கண்டினைப் பேணார் செம்பொன் கலன்களைப் பூணார்
வண்ணச்
செண்டினைச் சூடார் சாந்தத் திரளினை நாடார்
யாழின்
தண்டினைத் தீண்டார் யாரும் தமிழமொழி பயிலாக்
காலே 4
பாடுபவருக்கும் உரை பண்ணுபவருக்கும்
ஏடதுவிரித்து உரை இசைப்பவர் தமக்கும்
நாடு நகரோடு அவர் நயப்பவை கொடுத்தும்
தேடி வருவித்தும் உயர் செந்தமிழ் வளர்த்தார்
5
புலவர் குழந்தை குறிப்பு வரைக
- ஈரோடு நகருக்கு அருகில் உள்ள ஓலவலசு என்ற சிற்றூரில் பிறந்தவர்
- சின்னம்மை, முத்துசாமி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்
- 1906 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் நாள் பிறந்தார் .
- பவானி அரசு மேநிலைப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பணி யாற்றியவர்.
- சிறந்த பேச்சாளர், கவிவாணர், மரபுக் கவிஞர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர்
- 1938, 1948, 1965 ஆகிய ஆண்டுகளில் இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடியவர்
- ‘வேளாண்'' என்ற இதழை 1946 முதல் 1958 வரை தொடர்ந்து நடத்தியவர்.
- 1972 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் நாள் இவர் இயற்கை எய்தினார்.
இவர் இயற்றிய நூல்கள்
- 1946 ஆம் ஆண்டு இராவண காவியம் வெளியிட்டார்.
- தொல்காப்பியம்,
- பொருளதிகார உரை,
- இராவண காவியம்,
- தொல்காப்பியர் தமிழர்,
- திருக்குறளும் பரிமேலழகரும்,
- பூவா முல்லை,
- கொங்குநாடு,
- தமிழக வரலாறு,
- கொங்குநாடும் தமிழகமும்,
- அருந்தமிழ் விருந்து,
- அருந்தமிழ் அமிழ்து,
- தீரன் சின்னமலை,
- யாப்பதிகாரம்,
- தொடையதிகாரம்,
- நெருஞ்சிப் பழம்,
- திருநணாச் சிலேடை வெண்பா,
- காமஞ்சரி (கவிதை நாடகம்),
- குழந்தைப் பாடல்கள் என்ற கவிதைத் தொகுப்பு என்பனவாகும்
இராவண காவியம் குறிப்பு வரைக
- கம்பராமாயணத்தில் முரண் பாத்திரமாக விளங்கும் இராவணனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு உருவான காவியம் இராவணகாவியம்.
- இந்நூல் உருவான காலத்தில் சுயமரியாதை இயக்கக் கொள்கை பரவி இருந்தது.
- இந்நூல் 5 காண்டங்களையும் 57 படலங்களையும் 3,100 பாடல்களையும் கொண்டுள்ளது.
- ஐந்து காண்டங்களாவன : 1. தமிழகக் காண்டம், 2. இலங்கைக் காண்டம், 3. விந்தக் காண்டம், 4. பழிபுரி காண்டம், 5. போர்க் காண்டம் ஆகியவை.
- இது, இராமாயணத்திற்கு எதிராகப் பாடப்பட்ட நூல்.
- இந்நூலுக்குப் பாரதிதாசன் சிறப்புப் பாயிரம் எழுதியுள்ளார்.
- சி.என்.சி.என்.அண்ணாதுரை முன்னுரை எழுதியுள்ளார்.
1. பழந்தமிழகத்தில் தமிழ் மொழி உயர்வு பெற்றிருந்த
நிலையைப் புலவர் குழந்தை எவ்வாறு விளக்குகிறார்?
அல்லது
2.
தமிழ்மொழியின் சிறப்பினையும் பழந்தமிழர் தமிழ்மொழியினைப் போற்றி வளர்த்த தன்மையினையும் புலவர் குழந்தை இராவணக்காப்பியத்தில்
எவ்வாறு குறிப்பிடுகிறார்?
பழந்தமிழகத்தின் கல்வி சிறப்பு
- கல்வி கேள்விகளால் அறிவு பெற்ற மக்கள் நிரம்பிய நாடு பழந்தமிழகம் .
- இங்கு கல்வி பயிலும் ஏடுகள் இல்லாமல் ஒருவரையும் பார்க்க இயலாது.
- இயல், இசை கற்காதவர் எவரும் இங்கு இல்லை.
- தமிழிசையைப் பாடி மகிழாதவர் இல்லை.
- கல்விக் கூடங்களுக்குச் சென்று கல்வியறிவு பெறாதவர்கள் இல்லை.
- தமிழிசையைப் போற்றி ஆடல் தொழிலை மேற்கொள்ளாதவரும் இல்லை.
- இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழின் பயனை அடையாதவர்கள் இல்லை.
- நற்றமிழின் வளர்ச்சியை விரும்பாதவர்களும் இல்லை என்று பழந்தமிழகத்தின் சிறப்பினைப் புலவர் குழந்தை எளிய தமிழ்நடையில் விவரிக்கிறார்.
தமிழைப் போற்றி வாழ்தல்
- அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தமிழைத் தங்கள் உயிராக மதித்தனர்.
- தமிழினை அவர்கள் தங்களின் இரு கண்களாகப் போற்றிப் பாதுகாத்தனர்.
- மானத்தைக் காக்கின்ற போர்வையாக தமிழை அணிந்து கொண்டனர்
- உயிரைக் காக்கும் கருவியாகத் தமிழைக் கைக்கொண்டனர்.
- உள்ளத்தின் சிந்தனையை ஊட்டும் என்றும், செல்வங்கள் பொதிந்திருக்கின்ற பெட்டி என்றும், உயர்வின் உறைவிடம் என்றும் மதித்துத் தமிழைப் போற்றி வாழ்ந்தனர்.
தமிழின் சிறப்பு
- அந்நாட்டில் புலவர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர்.
- நகர் முழுவதும் பள்ளிக்கூடங்கள் காணப்பட்டன.
- வீடுகள் யாவும் தமிழ்த்தாய் உறைகின்ற கோயில்களாகக் காட்சியளித்தன.
- கொண்டாடும் விழாக்கள் அனைத்திலும் தமிழின் மேன்மைகள் ஓங்கின.
- வயல்வெளிகளிலும் தமிழ்ப்பாடல்கள் ஒலித்தன.
- தமிழ்க் கூத்துகள் மக்களை மகிழ்வித்தன.
- திரும்பிய திசையெல்லாம் தமிழ்ச்சொற்கள் ஒலித்தன.
- வண்டமிழ்ச் சிறப்பினை அறிந்த மக்கள் நிரம்பிய நாடாகக் காட்சியளித்தது.
நாளும் தமிழைக் கற்றல்
- தமிழ் மொழியைப் பயிலாத நாட்களில் அங்குள்ள மக்கள் யாரும் உணவை உண்பதில்லை.
- பொன் பட்டாடைகளை உடுத்துவதில்லை.
- கரும்பு, கற்கண்டுச் சுவையினை எண்ணுவதில்லை.
- செம்பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களைப் பயன்படுத்துவதில்லை. வண்ணப் பூக்களைச் சூடுவதில்லை.
- நறுமணம் வீசும் சாந்தத்தைப் பயன்படுத்துவதில்லை. யாழின் நரம்புகளை மீட்டுவதில்லை.
தமிழ் அறிஞர்களைப் போற்றுதல்
- தமிழைப் பாடுபவர்களுக்கு, தமிழில் உரையாற்றுபவர்களுக்குகு, நூலைப் படித்து உரை செய்கின்றவர்களுக்கு நாடு, நகரத்தோடு அவர் விரும்பிய பொருட்களைக் கொடுத்து அவர்களைத் தங்கள் நாட்டிற்கு வரவழைத்துச் செந்தமிழ் வளர்த்தனர் அம்மக்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக