ஆண்டாள் - முதல் பாடல் திருப்பாவை
ஆண்டாள் - திருப்பாவை
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!
ஆண்டாள் குறிப்பு
- தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களில் ஒருவர்.
- வைணவம் பரப்பிய 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண் ஆழ்வார்.
- திருவில்லிபுத்தூரில் அவதரித்தவர்
- விட்டுணுசித்தர் எனும் பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டவர்
- இயற்பெயர் கோதை
- ஆண்டாள், சூடி கொடுத்த சுடர்க்கொடி என்றும் அழைக்கப்பட்டார்
இயற்றிய நூல்கள்:
- நாச்சியார் திருமொழி, திருப்பாவை என்னும் நூல்களை இயற்றியுள்ளார்
`திருப்பாவை குறிப்பு
- இந்நூலினை இயற்றியவர் ஆண்டாள்
- 30 பாடல்களைக் கொண்டது
- பாவை நோன்பு நோற்கும் கன்னிப் பெண்களால் மார்கழி மாதத்தில் இப்பாடல்கள் பாடப்படுகின்றன.
- இந்நூல் ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.
- இத்திருப்பாவையை இராமானுஜர் போற்றிக் கோயில் ஒழுங்கில் இணைத்துப் பாடி வரும்படிச் செய்ததனால், இராமானுஜர் ‘திருப்பாவை ஜீயர்’ என்றழைக்கப்பட்டார்
- தாய்லாந்தில் அரசுரிமை இருந்த காலத்தில் திருப்பாவையைப் பாடி அரச பதவி ஏற்றுள்ளனர்
ஆண்டாளின் ‘மார்கழித்திங்கள் ‘ பாடல் பொருளை விளக்குக.
- முழுநிலவு ஒளிவீசும் நல்ல நாளான இன்று, மார்கழி மாதம் பிறந்து விட்டது.
- சிறந்த அழகிய ஆபரணங்களை அணிந்தவர்களே, வளம் நிறைந்த ஆயர்பாடியின் செல்வச் சிறுமியர்களே, எழுந்திருங்கள்.
- நாம் அனைவரும் இன்று அதிகாலையில் நீராடச் செல்வோம்.
- கூர்மையான வேலாயுதத்தைக் கையில் கொண்டு போர்த்தொழிலில் வல்லவனான நந்தகோபனாரின் திருமகன்.
- அழகிய கண்களை உடைய யசோதையின் சிங்கக்குட்டி போன்ற மகன்.
- மேகங்களைப் போல கரிய மேனியும், சிவந்த கண்களையும் கொண்டவன்.
- சூரியனைப் போன்றும், சந்திரனைப் போன்றும் ஒளி நிறைந்த முகத்தினை உடையவன்.
- மேற்கூறிய தன்மைகளைக் கொண்ட நாராயணனே நமக்குப் பரம்பொருள்.
- அவன் கட்டாயம் நமக்கு நோன்பின் பலனை அருளுவான் என்று ஆண்டாள் திருமாலின் சிறப்பினையும் அருளினையும் எடுத்துக்கூறிப் பாவை நோன்பு நோற்க வருமாறு அழைப்பு விடுக்கின்றார்
------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக