திருக்குற்றாலக் குறவஞ்சி - திரிகூடராசப்பக் கவிராயர்

 ஆ. திருக்குற்றாலக் குறவஞ்சி

- திரிகூடராசப்பக் கவிராயர்

குறத்தி தன் மலைவளம் கூறுதல்

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்

கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்

தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்

செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்

கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்

குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே


1. திருக்குற்றாலக் குறவஞ்சி நூல் குறிப்பு தருக?

திருக்குற்றாலம் தமிழ்நாட்டின் தென்கோடியில் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் ஊராகும்

இவ்வூரின்கண் உள்ள குற்றால மலையில் வீற்றிருக்கும் இறைவனான  குற்றாலநாதரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. 

இந்நூலுக்கு குறவஞ்சி நாடகம்  என்னும் வேறு பெயரும் உண்டு. இந்நூலினைப் பாராட்டி முத்துவிஜரங்க சொக்கநாத நாயக்க மன்னர் குறவஞ்சி மேடு என்னும் பெருநிலப் பகுதியைப் பரிசாகக் கொடுத்தார்.

இந்நூல் திரிகூடராசப்பக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. 

குற்றாலக் குறவஞ்சியில் தமிழகத்தின் காட்டு விலங்குகளைப் பற்றியும் செடியினங்களைப் பற்றியும் மிகப்பல குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்நூலில் காணப்படும் எளிய-இனிய சொற்கள், எதுகை-மோனை எழில், கற்பனை வளம், கவிதைச் சுவை ஆகியன உணர்ந்து மகிழத்தக்கன. 

2. திருக்குற்றாலக் குறவஞ்சி நூல் அமைப்பு குறித்து எழுதுக.

குறவஞ்சி நாடகத்திற்கென வரையறை செய்யப்பட்ட கதை அமைப்போடே இந்நூலும் விளங்குகிறது. குற்றாலநாதரின் திருவுலா தொடங்குகிறது. குற்றாலநாதாரின் திருவுலாவைக் காணப் பெண்கள் வருகின்றனர். அப்பொழுது பந்து ஆடிக்கொண்டிருந்த வசந்தவல்லி (கதைத் தலைவி) என்பவளும் திருவுலாக் காண வருகிறாள். தோழியின் வாயிலாக இறைவனைப் பற்றி அறிந்த வசந்தவல்லி, இறைவன் மீது காதல் கொள்கிறாள். இந்நிலையில் குறிசொல்லும் குறத்தியானவள், வசந்தவல்லியின் கையைப் பார்த்து அவள் குற்றாலநாதர் மீது காதல் கொண்டுள்ள செய்தியைச் சொல்லி வசந்தவல்லியின் எண்ணம் நிறைவேறும் என்று குறி சொல்லிப் பரிசு பெறுகிறாள்.  குறத்தியின் கணவன் குறத்தியைத் தேடிவருகிறான். அவனிடம் குறத்தி நடந்ததைச் சொல்ல, இருவரும் குற்றாலநாதரைப் பாடி இன்பம் அடைகின்றனர். இவ்வாறு கதை முடிகிறது.


3. திருக்குற்றாலக் குறவஞ்சி நூலின் ஆசிரியர் குறித்து எழுதுக.


 திருக்குற்றாலக் குறவஞ்சி நூலின் ஆசிரியர் திரிகூடராசப்பக் கவிராயர் ஆவார். இவர் தென்காசிக்கு அருகில் உள்ள மேலகரம் ஊரைச் சார்ந்தவர். 

இவர் வடகரை அரசரான சின்னணஞ்சாத் தேவரின் அவைப்புலவராக விளங்கியவர்  

முத்துவிஜரங்க சொக்கநாத நாயக்க மன்னரின் பாராட்டினையும் பரிசினையும் பெற்றவர்.


4. திருக்குற்றாலக் குறவஞ்சி குறிப்பிடும் குற்றால மலையின் வளத்தினைக் குறிப்பிடுக.


ஆண் குரங்குகள் பல வகையான பழங்களைப் பறித்துக் கொண்டு வந்து தன் பெண்குரங்குகளுக்குக் கொடுத்து கொஞ்சி விளையாடுகின்றன.   அந்தக் குரங்குகள் சிந்துகின்ற கனிகளைக் சுவைப்பதற்குத் தேவர்கள் கெஞ்சிக் கொண்டிருப்பார்கள். வேடர்கள் தேவர்களைத் தம் கண்களால் விருந்துக்கு அழைக்கின்றனர். சித்தர்கள்  காயசித்தி மூலிகையை விளைவிப்பர்.  மலை அருவிகளின் அலைகள் வானம் வரை சென்று வழிந்தோடும். இதனால் சூரியனின் தேர்ச்சக்கரங்களும், குதிரைகளின் கால்களும் வழுக்கும்.  இத்தகைய வளமுடைய குற்றால மலையில் வளைந்த இளம்பிறையைச் சடைமுடியில் சூடியுள்ள திருக்ககுற்றால நாதர் வீற்றிருக்கும் மலை எங்கள் மலையாகும் என்று குறத்தி மலை வளம் குறித்து விளக்குகிறாள்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி