கலிங்கத்துப்பரணிப் பாடல் விளக்கம்

 

அலகு 2


I. சிற்றிலக்கியம்

அ. கலிங்கத்துப்பரணி


                   - செயங்கொண்டார்


1.   விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண

     மேன்மேலும் முகம்மலரும் மேலோர் போலப்

     பருந்தினமுங் கழுகினமும் தாமே உண்ணப்

     பதுமமுகம் மலர்ந்தாரைப் பார்மின் பார்மின்.

 

2.   சாம் அளவும் பிறர்க்கு உதவா தவரை நச்சிச்

    சாருநர்போல் வீரர் உடல் தரிக்கும் ஆவி

    போம் அளவும் அவர் அருகே இருந்து விட்டுப்

    போகாத நரிக்குலத்தின் புணர்ச்சி காண்மின்.

 

3.   மாமழைபோல் பொழிகின்ற தான வாரி

மறித்துவிழும் கடகளிற்றை வெறுத்து வானோர்

பூமழைபோல் பாய்ந்து எழுந்து நிரந்த வண்டு

பொருட்பெண்டிர் போன்றமையும் காண்மின் காண்மின்.

 

4.   சாய்ந்துவிழுங் கடகளிற்றி னுடனே சாய்ந்து

     தடங்குருதி மிசைப்படியுங் கொடிகள் தங்கள்

     காந்தருடன் கனல் அமளி அதன்மேல் வைகும்

     கற்புடைமாதரை ஒத்தல் காண்மின் காண்மின்.

 

5.   தம் கணவருடன் தாமும் போக என்றே

     சாதகரைக் கேட்பாரே தடவிப் பார்ப்பார்

     எம் கணவர் கிடந்த இடம் எங்கே என்று என்று

     இடாகினியைக் கேட்பாரைக் காண்மின் காண்மின்

                             

1.   கலிங்கத்துப்பரணி நூல் குறிப்பு தருக.

 v  தமிழில் முதன் முதலில் தோன்றிய பரணி நூல் கலிங்கத்துப் பரணியே ஆகும்

v  இந்நூல் முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப் போர் வெற்றி குறித்துப் பாடப்பட்ட நூல் ஆகும்.

v  முதலாம் குலோத்துங்க சோழனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது.

v  இது செயங்கொண்டார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது.

v  599 தாழிசைகளை உடையது.

v  பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதி.

v  சமகாலப் புலவரான ஒட்டக்கூத்தர் இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி எனப் புகழ்ந்துள்ளார்.

v  குலோத்துங்க சோழனுடைய புகழ், அவனின் தலைமைப் படைத்தலைவனான கருணாகரத்தொண்டைமானின் சிறப்பு ஆகியன இந்நூலில் குறிப்பிடப்பெற்றுள்ளன.

 2.   செயங்கொண்டார் குறிப்பு தருக.

v  செயங்கொண்டார் இவர் முதற்குலோத்துங்க சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்.

v  இவருடைய ஊர், இயற்பெயர், பிறப்பு, வளர்ப்பு இதுவரைத் தெளிவாகத் தெரியவில்லை.

v  தமிழ் நாவலர் சரிதையின் 117-ஆவது பாடல் இவருடைய ஊர் தீபங்குடி என்றுரைக்கிறது.

v  இவருடைய காலம் 11-ஆம் நூற்றாண்டின் இறுதியாகவோ 12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகவோ இருக்கலாம்.

v  இவர் பரணிக்கோர் செயங்கொண்டார் எனச் சிறப்பிக்கப் பெற்றவர்.

v  இவர் கலிங்கத்துப்பரணி, இசையாயிரம்,  உலா மடல் என்னும் நூல்களை இயற்றியுள்ளார்.

3.   கலிங்கத்துப் பரணி குறிப்பிடும் போர்க்களக் காட்சிகளை விவரித்து எழுதுக?

போர்க்களத்தில் வீரர்களின் தாமரை முகம் மலர்தல்

விருந்தினர்களும், ஏழைகளும் தொடர்ந்து வந்து உணவு உண்பதைக் கண்ட நல்ல உள்ளம் படைத்த உயர்ந்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவர். அதுபோல பருந்துக் கூட்டமும், கழுகுக் கூட்டமும் தம் உடலைக் கொத்தித் தின்பதைக் கண்டு இறந்து கிடக்கும் வீரர்களின் திருமுகங்கள், தாமரை மலர்போல மகிழ்ச்சியால் மலர்ந்திருந்தன.

நரிக்கூட்டத்தின் செயல்

தாங்கள் வாழ்ந்து இறக்கும் காலம் வரையிலும் பிறர்க்கு எதையும் கொடுத்து உதவாதவர்களைச் சுற்றிக் காத்திருந்து, அவர் இறந்த பின்பு அவருடைய பொருள்களைக் கவர்ந்து செல்வர் பேதைகள். அதனைப் போல, வீரர்கள் உயிரோடு இருக்கும் வரையில் அவர்கள் அருகிலேயே இருந்து விட்டு, உயிர் போன பின்பும் கூட அவர்களை விட்டு அகலாமல் நரிக்கூட்டம் சுற்றிக் கொண்டேயிருக்கின்றன.

மதநீர் ஒழுகும் யானைகளை விலகிச் செல்லும் வண்டுகள்

போர்க்களத்தில் பெருமழைப் பொழிவதைப் போன்று யானைகள் மதநீரை பொழிந்து கொண்டிருந்தன. அதன் மதநீரை உண்ட வண்டுகள் மதயானைகள் இறந்ததும், மதநீரும் ஒழிந்தது. மன்னனின் வெற்றி கண்டு வானுலகத்தவர் பூ மழை பொழிந்தனர். அந்தப் பூக்களில் உள்ள தேனை உண்ண வண்டுகள் எல்லாம் மேலே பறந்து சென்று விட்டன. இது பொருள் உள்ளவரை ஒருவருடன் கூடி இருந்து விட்டு அவன் பொருள் எல்லாம் தீர்ந்தவுடன் அவனை விட்டு நீங்கி வேறு ஒருவனைத் தேடி அடையும் விலைமகளிரைப் போன்று இருக்கின்றது.

கொடியோடு வீழ்ந்து கிடக்கும் யானைகள்

போர்க்களத்தில் உயிர் நீத்து விழுந்து கிடக்கும் மத யானைகளுடன், மன்னர்களின் கொடிகள் பிணைந்து கிடக்கின்றன. இக்காட்சி உயிர் நீங்கிய தங்கள் கணவர்களுடன் உடன்கட்டை ஏறி உயிர் துறக்கும் பெண்களைப் போன்று இருந்தது என்று ஒப்பிட்டுரைக்கிறார் கவிஞர்.

போரில் கணவனைத் தேடும் மகளிரின் நிலை

போரில் இறந்துவிட்ட தங்கள் கணவருடன் தாமும் வீர சொர்க்கம் போக வேண்டும் என்று எண்ணிய மகளிர் போர்க்களம் சென்றனர். என் கணவர் எந்த இடத்தில் கிடக்கின்றார் எனக் காளியின் மெய்க்காப்பாளராகிய சாதகரிடம் கேட்டனர். அவர்கள் ஒன்றும் பதில் கூறாமையால் தங்கள் கைகளால் களம் முழுவதும் தடவித் தேடினர். தேடியும் காணமுடியாத நிலையில் பிணங்களைத் தின்னும் இடாகினிப் பேயிடம், எம் கணவர் உடல் கிடக்கும் இடம் எங்கே என்று கேட்கின்றனர் என்று போர்க்களத்தில் மகளிரின் நிலையினைக் குறிப்பிட்டுள்ளார்.

----------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி