முக்கூடற்பள்ளு (சூழல் – மழை அறிகுறிப் பாடல்)

 இ. முக்கூடற்பள்ளு

(சூழல் – மழை அறிகுறிப் பாடல்)

ஆற்று வெள்ளம் நாளை வரத்

தோற்று தேகுறி- மலை

      யாள மின்னல் ஈழமின்னல்

      சூழமின்னுதே

நேற்று மின்றுங் கொம்புசுற்றிக்

காற்ற டிக்குதே-கேணி

      நீர்ப்படு சொறித்த வளை

      கூப்பிடு குதே

சேற்று நண்டு சேற்றில்வளை

ஏற்றடைக்கு தே-மழை

      தேடியொரு கோடி வானம்

      பாடி யாடுதே

          போற்று திரு மாலழகர்க்

கேற்ற மாம்பண்ணைச்--சேரிப்

      புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்

      துள்ளிக் கொள்வோமே.

முக்கூடற்பள்ளு குறித்து எழுதுக

பள்ளு இலக்கியங்களில் தலைசிறந்து விளங்கும் நூலாகும். பள்ளு இலக்கியத்தில் முதன்முதலில் தோன்றியதும் முக்கூடற்பள்ளு ஆகும் 

இந்நூலினை எழுதிய புலவர் யார் என்றே தெரியவில்லை. 

காலம் 18 ஆம் நூற்றாண்டு. 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொருநை (தாமிரபரணி) ஆற்றங்கரையில் ’முக்கூடல்’ என்ற நகரம் உள்ளது.  தாமிரவருணி, சிற்றாறு, கயத்தாறு மூன்றும் கூடும் இடம் முக்கூடல் எனப்படும். தற்போது சீவலப்பேரி என வழங்கப்படும் இவ்வூரில் எழுந்தருளியுள்ள அழகரின் பெருமை இந்நூலில் பேசப்படுகிறது. 

குடும்பன் என்னும் பொதுப்பெயரால் குறிப்பிடப்படும் உழவன் (பள்ளன்), இந்த நூலின் பாட்டுடைத் தலைவன். முக்கூடற் பள்ளியாகிய மூத்த பள்ளி, குடும்பனின் முதல் மனைவி. மருதூர்ப் பள்ளியாகிய இளைய பள்ளி, குடும்பனின் இரண்டாவது மனைவி. இவர்கள் அழகர் கோயிலுக்கு உரிய பண்ணை நிலத்தைப் பயிரிட்டு வாழ்பவர்கள். பண்ணைக்காரன் என்பவர், கோயில் நிலத்தைக் கண்காணிக்கும் நிலக்கிழார். இவர்களின் உரையாடலாக இந்த நூல், நாடக வடிவத்தில் அமைந்துள்ளது.

இந்த நூல் உழவுத் தொழிலின் மேன்மையைப் புலப்படுத்தி, அக்கால உழவுத் தொழிலைச் சிறப்புற விளக்குகிறது. இதில், நெல் வித்தின் வகை, மாட்டின் வகை, பயிர்த் தொழில், கருவி வகை ஆகியவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன.  பலவகையான மீன்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

மழை வருகையின் அறிகுறி குறித்து முற்கூடற்பள்ளு குறிப்பிடும் கருத்துகளை விளக்குக. 

             (அல்லது) 

   பள்ளர்கள் அனைவரும் மழையை வரவேற்று ஆடிப் பாடி மகிழ்ந்ததை முக்கூடற் பள்ளு வழி விளக்குக.

நாளை ஆற்றில் வெள்ளம் வருவதற்கு உரிய அறிகுறிகள் தோன்றுகின்றன.

தென்மேற்குத் திசையில் மலையாள மின்னலும், தென்கிழக்குத் திசையில் ஈழத்து மின்னலும், சூழ வளைத்து மின்னுகின்றன;

நேற்றும் இன்றும் மரக்கொம்புகளை, பூங்கொம்புகளை வட்டமாகச் சுழற்றிச் சுழற்றிக் காற்று அடிக்கின்றது;

கிணற்று நீரிலே இருக்கின்ற சொறித்தவளைகள் சத்தமிட்டு மழை வரவைத் தெரிவிக்கின்றன. 

சேற்றிலே வாழும் நண்டுகள் தம் வளைகளுக்குள் மழைநீர் புகுந்து விடாதபடி சேற்றினால் வளை வாயில்களை அடைக்கின்றன;

ஒரு கோடி வானம்பாடிப் பறவைகள் மழையைத் தேடிப் பாடி விண்ணில் பறக்கின்றன;

உலகமெல்லாம் போற்றி வழிபடுபவர் அழகராகிய திருமால். 

        அவர்  விரும்பும்  பெரிய       பண்ணையைச் சேர்ந்த பள்ளர் எல்லாம் ஒன்றுகூடி மழையினை வரவேற்று ஆடிப்பாடித் துள்ளிக் கொண்டாடுவோம் வாருங்கள்!   

இவ்வாறு பள்ளர்கள் அனைவரும் மழையை வரவேற்று பாடி ஆடினர் என்று முக்கூடற் பள்ளு ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

 ,.......,....................


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி