நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்தப் புலவர்

 ஈ. நாராய் நாராய் செங்கால் நாராய்

    - சத்தி முத்தப் புலவர்

 நாராய் நாராய் செங்கால் நாராய்

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய் செங்கால் நாராய்

நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி

வடதிசைக்கு ஏகுவீராயின்

எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி

நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி

பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு

எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்

ஆடையின்றி வாடையில் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்தி

காலது கொண்டு மேலது தழீஇப்

பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழையாளனைக் கண்டனம் எனுமே


 

1. சத்தி முத்தப்புலவர் குறிப்பு எழுதுக.

  • பிறந்த ஊர் : கும்பகோணத்தை அடுத்த சத்திமுத்தம்
  •  மதுரையில் வாழ்ந்தார் எனக் கூறுவர்.  

  • இயற்பெயர் : அறியப்படவில்லை.

  • இவரைக் குறித்துப் பாரதிதாசன் படைத்த, 'சத்திமுத்தப் புலவர்'  என்னும் சிறு நாடகம் 1950 இல் வெளியானது. 


2. சத்தி முத்தப்புலவர் நாரையைத் தூதாக விடுக்கும் செய்தியை விவரி.  

         நாரையை வருணித்தல் (நாரையைப் புகழ்தல்)

சிவந்த கால்களை உடைய நாரையே!
பனங்கிழங்கை நடுவில் பிளந்தாற்போன்ற சிவந்த கூர்மையான வாயை உடைய நாரையே!

         நாரைக்கு வழிகாட்டுதல் 

நீயும் உன் மனைவியும், தென்திசையில் நீராடிவிட்டு வடதிசைக்கு சென்றால்,  சத்திமுத்தம் என்னும் என் ஊரில் உள்ள நீர் நிலையில் தங்கி இளைப்பாறுங்கள்

         மனைவியின் பண்பினைக் கூறுதல்  

மழையில் நனைந்த சுவரை உடைய வீட்டின் கூரையில் பல்லியின் குரலை எதிர்பார்த்துக் காத்திருப்பாள் என் மனைவி என்று நாரையிடம் தன் மனைவியின் இயல்பினைப் புலவர் குறிப்பிடுகிறார்

         தன் நிலை கூறுதல்  

பாண்டியனின் மதுரையில் தக்க ஆடையில்லாமல் குளிர்க்காற்றால் தளர்ந்து வருந்தி, அக்குளிரைப்போக்க இரு கைகளாலும் உடலைப்போர்த்திக்கொண்டு  பெட்டிக்குள் இருக்கும் பாம்பைப்போல் மூச்சுவிடும் வறியவன் என்னைக்கண்டதாக என் மனைவியிடம் கூறுங்கள் என்று உரைக்கிறார் சத்தி முத்தப் புலவர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி