மு.வ கடிதங்கள்
1. மு.வ. கடிதத்தின் வழி தம்பிிக்குக் கூறும் அறிவுரைகளைக் குறிப்பிடுக.
நல்லவனாகவும் வல்லவனாகவும் இருத்தல்
நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்பதை மு.வ. அறிவுறுத்துகிறார். நன்மை வன்மை இரண்டும் இருந்தால்தான் இவ்வுலகில் வாழ முடியும். நல்ல தன்மை மட்டும் உடையவர்கள் இவ்வுலகில் ஏமாந்து மாய்ந்திருக்கிறார்கள், மாய்ந்தும் வருகிறார்கள். பழங்காலத்தில் இருந்த நல்லரசுகள் அழிந்ததை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. வன்மை மட்டும் உடையவர்களும் அழிந்து போகிறார்கள். ஜெர்மனி, ஜப்பான் போன்ற வல்லரசுகள் அழிந்ததை எடுத்துக்காட்டலாம். வீட்டிற்கு வாழ வந்த நல்ல மருமகள் வன்மை மிக்க மாமியரால் அழிவுற்ற நிகழ்ச்சியும் சமூகத்தில் உள்ளது. அது போன்று வன்மை மிக்க மாமியார் சில காலம் கழித்து வன்மை குறையும் போது அடங்கி ஒடுங்கி வாழ்வதையும் நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழர்கள் நல்லவர்களாக வாழ்ந்து அழிந்தது போதும். எனவே இனிமேல் தமிழர்கள் நல்ல தன்மையோடு வன்மையும் கைக்கொண்டு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மு.வ. கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இயற்கையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்
இயற்கையில் இருந்து நாம் மிக பெரிய பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். அது வாழ்வியலுக்குத் துணையாகும். வாழ்க்கையில் ஒன்றை மட்டும் போற்றி வாழ்பவன் வெற்றி பெறுவதில்லை. உடலை மட்டும் போற்றிப் பாதுகாத்து உரமாக வைத்திருப்பவன் மனமே அவனுக்குப் பகையாகித் தீயவழிக்கு அழைத்துச் சென்று அழித்து விடுகிறது. அது போன்று உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருப்பவன் உடலைப் பாதுகாப்பதை விட்டு ஒழிந்தால் அவனது உடல் பல நோய்களுக்கு ஆட்பட்டு இன்னலைத் தோற்றுவிக்கிறது. எனவே உடலும் உரமாக இருக்க வேண்டும், உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும். இவ்விரண்டும் சரியாக அமைந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்கிறார் மு.வ.
அறநெறியும் பொருள்வளமும் வேண்டுதல்
மரம் வானளாவ உயர்ந்து வளர்ந்ததும் வேரூன்றிய மண்ணை மறந்து விட முடியாது. அதுபோன்று வானையும் புறக்கணிக்க முடியாது. இந்த உண்மையை உணர்ந்த வள்ளுவர் அறநெறி, பொருள்வளம், இன்ப வாழ்வும் மூன்றும் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அறத்தைப் போற்றி பொருளை மறக்கவும் திருவள்ளுவர் குறிப்பிடவில்லை. அதனைப் போன்று பொருளையும் இன்பத்தையும் போற்றி அறத்தை மறக்கவும் அவர் தூண்டவில்லை. வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் போற்றி வாழத் திருவள்ளுவர் வழிகாட்டியுள்ளார்.
தமிழர்கள் தாழ்ச்சிக்குக் காரணம்
தமிழராகிய நாம் திருவள்ளுவரைப் பெற்றுள்ளோம், அவர் உரைத்த நூலையும் கற்றுள்ளோம் ஆனால் நல்ல தன்மையை மட்டும் நாடுகிறோம் வன்மையை மறந்து விடுகிறோம். ஆகையால் தாழ்வு நிலையை அடைந்து விட்டோம் என்று மு.வ. எடுத்துரைத்துள்ளார்.
மேடைப்பேச்சைத் தவிர்க்க வலியுறுத்தல்
மேடையில் முழங்குவதைத் தவிர்க்க வேண்டும். மேடை முழக்கம் நமக்கு மகிழ்ச்சியை உருவாக்கிக் கடமை மறதியை ஏற்படுத்தி விடும். இதை உணர்ந்த வள்ளுவர் ‘இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக’ என்று குறிப்பிட்டுள்ளார் போல என்று அக்குறளை எடுத்துரைத்து மேடைப்பேச்சியினைத் தவிர்த்துக் செயலாக்கம் செய்ய வேண்டுகிறார்.
2. வல்லமை இல்லாத நல்ல தன்மை வாழாது என்பதை வலியுறுத்த மு.வ. எடுத்துக்காட்டும் சான்றுகளைக் குறிப்பிடுக.
தமிழ் மொழி சிறப்புடைய நல்ல மொழி. ஆ்னால் வன்மை இல்லாமையால் பெரும்பான்மை மக்கள் போற்றும் மொழியாக மாறவில்லை. மக்கள் தொகையை வன்மையாக வைத்துப் பேசும் காலத்தில் தமிழ்மொழிக்கு அறிவுக் கலைகளில் செல்வாக்கு கிடைத்ததா? இல்லை நீதிமன்றங்களில்தான் உரிமை கிடைத்ததா? ஆட்சிக் கூடங்களில் வாழ்வு நல்கினோமா? இல்லையே என்று தமிழ்மொழியின் அவலநிலையை எடுத்துக்கூறி வல்லமை இல்லாத நல்ல தன்மை வாழாது என்று சுட்டிக்காட்டுகிறார் மு.வ.
நம் முன்னோர்கள் வன்மையை மறந்த காரணத்தால் நாம் இழந்தது ஏராளமாகும். தமிழ்க் கலைகள் அனைத்தும் நல்ல கலைகள் என்று போற்றுதலுக்கு உரியன. அவற்றில் யாழிசை நல்ல இசை ஆனால் அது வாழ்ந்ததா? முற்காலத்தில் செல்வாக்கு உடையவர்கள் யாழைப் புறக்கணித்தார்கள். எனவே பொதுமக்களும் அதனை மறந்தார்கள். பழங்காலத்தில் பாணரும் விறலியரும் கூத்தரும் பொருநரும் யாழின் அருமை பெருமைகளை மட்டும் எண்ணிக் கொண்டிருந்தார்கள். அதை வாழ வைக்கும் வல்லமை பற்றி எண்ணத் தவறிவிட்டார்கள். அதனால்தான் யாழ் என்னும் அருமையான இசைக்கருவி அழிந்தது. தமிழுக்கும் அந்நிலையே உருவாகிக் கொண்டு இருப்பதினை நாம் பார்க்கலாம். எனவே இவ்வுலகில் வாழ நல்ல தன்மை மட்டும் போதாது வன்மையும் வேண்டும் என்பதே மு.வவின் கருத்தாக உள்ளது.
3. சமுதாய மக்களின் நிலை குறித்து மு.வவின் கடிதம் எடுத்துரைக்கும் பாங்கினைக் கூறுக.
அக்காலத்தில் அரசன் எவ்வழி அவ்வழி குடிகள் என்ற நிலை வழக்கில் இருந்தது. இக்காலத்தில் பொதுமக்கள் எவ்வழி அவ்வழியே ஆட்சியாளர் என்னும் நிலை உள்ளது. ஆனால் பொதுமக்களின் விருப்பம் போல் இன்று ஆட்சியாளர்கள் உள்ளனரா என்றால் இல்லை என்ற பதில் தான் கிடைக்கிறது. பொதுமக்கள் போர், அணுகுண்டு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவற்றை விரும்புவதில்லை. குடியிருக்க வீடு, அறிவு வளர்க்க கல்வி, உடல் வளர்க்க உணவு போன்றவற்றைத் தான் விரும்புகின்றனர்.
பொதுமக்களுக்குத் தங்கள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சேர்த்து எண்ணித் தேவையை உணரும் திறன் இல்லாமல் களிமண்ணாய்த் திரண்டு கிடக்கிறார்கள். அவர்களை யார் யாரோ நீர் சேர்த்துப் பிசைந்து நமக்கு வேண்டியவாறு மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
களிமண் பிசைகிறவர்களின் கைகள் நாட்டைப் பற்றியோ, மொழியைப் பற்றியோ கவலைபடுவதில்லை. எனவே பொதுமக்களின் சிந்தனையில் மாற்றம் கொண்டு வரும் செயலை செய்ய வேண்டும். இவை எதுவும் செய்யாமல் தமிழ்நாடும் தமிழும் வாழ்ந்துவிடும் என்று எண்ணிக்கொண்டு காலம் கழிப்பது தவறு என்று மு.வ எச்சரிக்கை விடுக்கிறார்.
மேலும் அவர் இவ்வுலகம் வல்லமை உடைய மாமியார் போன்று உள்ளது. நம் அருமை தமிழகம் நல்ல மருமகளாக உள்ளது. ஆகையால் தற்கொலைகளும் மனவேதனைகளும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும் என்று குறிப்பிடுகிறார் மு.வ.
4. தமிழரின் பெருங்குறையாக எழிலுக்கு வளவன் எடுத்துரைககும் கருத்துகளை எழுதுக.
நாட்டுப் பற்றும் மொழி பற்றும் இருக்க வேண்டும். ஆனால் வீண்கனவு வேண்டாம். வீண்கனவுகள் நம்மை வீணர்களாக ஆக்கி விடும். மேடைப்பேச்சு உணர்ச்சி வெள்ளைத்தை உருவாக்கும். அவ்வெள்ளம் ஒரு நாள் வற்றி விடலாம். வற்றாத ஊற்றினை உள்ளத்தில் கொண்டு செயல் திறனை வளர்க்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்
தமிழர்களிடம் பிறர் சொல்லால் மயங்கும் பேதைமை காணப்படுகிறது. இதை உணர்ந்த மற்றவர்கள் உயர்ந்த புகழுரைகளை மீண்டும் மீண்டும் எடுத்துக்கூறித் தமிழர்களை ஏமாற்ற முயலுகிறார்கள். தமிழர் ஒருவரிடம் ‘கடவுள் படைப்பில் அனைவரும் சமம் என்றுரைத்தால் தமிழர் உடனே பற்றினை வெறுப்பர். எந்த வேறுபாடும் இல்லாத தூய வாழ்க்கையை வாழ்வர். தமிழர் நெஞ்சம் உயர்ந்த கொள்கைகளை உணர்ந்து தலைதலைமுறையாகப் பண்பட்டு வந்துள்ளது. சொல்கிறவர்கள் உண்மையாக உணர்ந்து சொல்கிறார்களா இல்லை நம்மை ஏமாற்றச் சொல்கிறார்களா அவர் எந்த வேறுபாடும் காட்டாமல் வாழ்கிறாரா என்றெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல் நம்பி உணர்ந்து வாழத் தொடங்கி விடுவர். இந்த ஏமாந்த தன்மையைப் பகைவர்கள் பயன்படுத்திக் கொண்டு எதற்கும் கலங்காத ஒற்றுமையாக இருந்த தமிழரை என்னுடைய சொல்லால் பிரித்துவிட்டேன். இனி நமக்குக் கவலை இல்லை. தமிழர்கள் தாமே அழிந்து விடுவர் என்று அவர் மகிழ்ச்சி கொள்வர். இத்தகைய தமிழரின் நிலைக்குக் காரணம் அவர்களின் ஆராய்ந்து அறியும் திறன் இல்லாமையே ஆகும் என்று மு.வ. எடுத்துக்காட்டியுள்ளார்.
5. தமிழரின் கடமையாக மு.வ. குறிப்பிடுவனவற்றை எழுதுக.
தமிழர்களைச் சிறிது நேரத்தில் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்துப் பிறகு வறண்ட பாலைவனம் ஆக்கும் செயலை நீக்க வேண்டும். கடமை பற்றுடைய செயல் வீரர்களாக மாற்ற வேண்டும். தமிழரின் திருமணங்களில் திருக்குறள் ஓதுவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும். கோயில்களில் தேவாரம் முதலியன முழங்க வேண்டும். கோயில்களில் தமிழ் முழங்குவது தமிழின் பெருமையைக் காத்த சான்றோர்களுக்குச் செய்யும் கடமையாகும். அதிகாரிகள் தமிழில் எழுத வேண்டும். கவர்னர் தமிழில் கையெழுத்து இட வேண்டும். வங்காளத்திற்குத் தொண்டு செய்ய சென்ற எழுபத்தெட்டு வயதில் வங்காள மொழியைக் கற்றுக் கையெழுத்து இட்ட காந்தியின் நெறியும் இதுவாகும் என்று மு.வ. குறிப்பிட்டுள்ளார்.
உலகறிந்த உண்மைகள்:
சாதி முதலான வேறுபாடுகள் உண்மையானவை அல்ல. பொய்யானவை. அவற்றை ஒழிப்பது நம் கடமை. மொழி வேறுபாடும் நாட்டு வேறுபாடும் அப்படிபட்டவை அல்ல, பொய்யானதும் அல்ல, மொழி உண்மையானது. மொழியினால் நாடு அமைவதும் இனம் உருவாவதும் நாகரீகம் தோன்றுவதும் நாட்டின் பண்பாட்டுக்குத் துணையாக இருப்பதும் உலகம் அறிந்த உண்மையாகும்.
6. வள்ளுவர் வழி அறிய வேண்டும் செய்திகளாக மு.வ. எடுத்துரைப்பன யாவை?
திருவள்ளுவர் அறத்துப்பால் மட்டும் எழுதினால் தமிழர்கள் வாழத் தெரியாதவர்களாய்த் திகைப்பர் என்று எண்ணி அறத்துப்பாலை விட விரிவாகப் பொருட்பாலை எழுதியுள்ளார். "இன்னா செய்யாமை என்னும் "அகிம்சை" வழியை அறத்துப்பாலில் வற்புறுத்திய வள்ளுவர் பகைமாட்சி, உட்பகை என்ற பகுதிகளைப் பொருட்பாலில் விளக்கியுள்ளார். உலகம் எப்படிப்பட்டது என்பதை உணர்ந்து இவ்வளவு தெளிவாக அறத்துப்பாலை விட இரண்டு மடங்கு பெரிய அளவில் பொருட்பாலை எழுதியுள்ளார்.
நம் தாயை நாம் வழிபட்டு நம் குடும்பக் கடமையை ஆர்வத்தோடு செய்யும் போது ஒருவன் குறுக்கிட்டு இது தவறு என்றுரைத்தால் இவன் பகைவன் என்று கருதி ஒதுக்க வேண்டும். இதனை வள்ளுவர் கொடுத்தும் கொளல் வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை என்று வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக