முக்கூடற் பள்ளு - மூத்த பள்ளி நாட்டு வளம்

 

முக்கூடற் பள்ளு


கறைபட் டுள்ளது வெண்கலைத் திங்கள்

      கடம்பட் டுள்ளது கம்பத்து வேழம்

சிறைபட் டுள்ளது விண்ணெழும் புள்ளு

      திரிபட் டுள்ளது நெய்படுந் தீபம்

குறைபட் டுள்ளது கம்மியர் அம்மி

      குழைபட் டுள்ளது வல்லியங் கொம்பு

மறைபட் டுள்ளது அரும்பொருட் செய்யுள்

      வளமை ஆசூர் வடகரை நாடே.


 1முக்கூடற் பள்ளு குறிப்பு தருக.

பள்ளு இலக்கியங்களிலேயே தலைசிறந்து விளங்குவதும் முதன்முதலில் தோன்றியதும் முக்கூடற்பள்ளு ஆகும். இதனை எழுதிய புலவர் யார் என்றே தெரியவில்லை. காலம் 18 ஆம் நூற்றாண்டு. 

 திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பொருநை (தாமிரபரணி) ஆற்றங்கரையில் முக்கூடல்என்ற நகரம் உள்ளது.  தாமிரவருணி, சிற்றாறு, கயத்தாறு மூன்றும் கூடும் இடம் முக்கூடல் எனப்படும். தற்போது சீவலப்பேரி என வழங்கப்படும் இவ்வூரில் எழுந்தருளியுள்ள அழகரின் பெருமை இந்நூலில் பேசப்படுகிறது.

இந்த நூல் அக்கால உழவுத் தொழிலைச் சிறப்புற விளக்குகிறது. இதில், நெல் வித்தின் வகை, மாட்டின் வகை, பயிர்த் தொழில், கருவி வகை ஆகியவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன.  பலவகையான மீன்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

2. முக்கூடற் பள்ளு நூல் அமைப்பு குறித்து எழுதுக.

 குடும்பன் என்னும் பொதுப்பெயரால் குறிப்பிடப்படும் உழவன் (பள்ளன்), இந்த நூலின் பாட்டுடைத் தலைவன். முக்கூடற் பள்ளியாகிய மூத்த பள்ளி, குடும்பனின் முதல் மனைவி. மருதூர்ப் பள்ளியாகிய இளைய பள்ளி, குடும்பனின் இரண்டாவது மனைவி. இவர்கள் அழகர் கோயிலுக்கு உரிய பண்ணை நிலத்தைப் பயிரிட்டு வாழ்பவர்கள். பண்ணைக்காரன் என்பவர், கோயில் நிலத்தைக் கண்காணிக்கும் நிலக்கிழார். இவர்களின் உரையாடலாக இந்த நூல், நாடக வடிவத்தில் அமைந்துள்ளது. இளைய பள்ளிமேல் அதிக அன்புகாட்டும் பள்ளன், மூத்த பள்ளியை ஒதுக்கிவைத்துத் துன்புறுத்துகிறான். இதனை மூத்த பள்ளி ஆண்டையிடம் முறையிடுகிறாள். பண்ணையார் பள்ளனைத் தண்டித்தல், பள்ளியர் புலம்பல், உழவுப்பணி தொடங்கல், பள்ளியர் மீண்டும் இணைதல் போன்ற அமைப்பில் சிந்து, விருத்தப் பாடல்கள் கொண்ட அமைப்பில் முக்கூடற் பள்ளு காணப்பெறும்.

3. ஆசூர் வடகரை நாட்டின் வளத்தைக் குறிப்பிடுக.

  • மக்களின் கலை நிரம்பிய மதியில் கறையாகிய குற்றம் இல்லை 
  • கம்பத்தில் பிணிக்கப்பட்டுள்ள யானைளுக்குத் தான் மதநீர் பொருந்தியிருக்கும் அவ்வூரில் வாழும் மக்களிடம் மதம் இல்லை 
  • யானைதான் கம்பத்தில் பிணிக்கப்பட்டுள்ளது
  • மக்கள் கடன் பட்டுக் கடன் கொடுக்கமுடியாமல் பிணிக்கப்பட்டிருத்தல்  இல்லை. விண்ணில் எழுந்து பறக்கும் பறவைகளுக்குச் சிறையாகிய இறகுகள் உள்ளன. அந்த மண்ணில் வாழும் மக்கள் குற்றம் செய்து சிறையிடைப் படுதல் இல்லை
  • நெய் பொருந்திய தீபத்தில் திரிபு ஏற்படும் ஆனால் அங்கு வாழும் கற்று அறிந்த சான்றோரின் அறிவு திரிபு படுதல் இல்லை 
  • கல்லுளித் தச்சரால் அடிக்கப்பட்ட அம்மிதான் குறைபட்டுள்ளதே யன்றி   அங்கு வாழும் தொழில் செய்வோர் யாதொரு குறைபாடும் உடையரல்லர் 
  • கொடிகளும் அவற்றால் தழுவப்பட்ட அழகிய பூங் கொம்புகளுமே அங்கே குழையாகிய இலைகள் பொருந்தியுள்ளன; அவையன்றிக் கொடி போன்ற இடையுள்ள நங்கையர்களும் அவரால்    முயங்கப்படும் பசிய கொழுகொம்பு போன்ற தலைவர்களும் துன்பத்தால் மனங்குழைந்து மெலிவது இல்லை
  • அங்கே செய்யுளாகிய பாடலின்கண் அருமையான பொருள்கள் மறைபட்டிருக்குமே யன்றிச் செய்யுள் எனப்படும் வயலினிடத்து விளைந்த அரிய பொருள்களைப் பிறருக்கு ஈயாமல் மறைத்து வைத்தல் இல்லை

 என்று மூத்த பள்ளி ஆசூர் வடகரை நாட்டின் வளத்தை எடுத்துரைக்கிறாள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி