மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - திருஞான சம்மந்தர்
திருஞானசம்மந்தர் குறிப்பு எழுதுக
Ø திருஞானசம்பந்தர் சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் ஒருவர்.
Ø தேவார மூவருள் முதலாமவர்.
Ø இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில் பிறந்தார்.
Ø தந்தையார் சிவபாத இருதயர்.
Ø தாயார் பகவதி அம்மையார்.
Ø இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது உமாதேவியாரால் ஞானப்பால் ஊட்டப்பட்டமையால் ஞானம் பெற்றுப் பாடல் பாடத் தொடங்கியவர்.
Ø தமிழில் அறிவுசேரர் என்று பொருள்தரும் திருஞானசம்பந்தர் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
Ø மகன்மை நெறியில் (சத்புத்ரமார்க்கம்) இறைவனை வழிபட்டார்.
Ø இவர் பாடிய பதிகங்கள் பதினாறாயிரம்.
Ø கிடைக்கப்பெற்றவை 384 பதிகங்கள்.
Ø இவர் பாடிய முதல் பதிகம் “தோடுடைய செவியன்…”
Ø இவர் பாடிய பதிகங்கள் பன்னிரு திருமுறைகளுள் முதல் மூன்று திருமுறைகளாக வைத்துப்போற்றப்படுகிறது.
Ø பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க தனது பதினாறாவது வயதில் திருநல்லூர் நம்பாண்டர் மகள் சொக்கியாரை மணம் முடிக்கச் சம்மதித்தார்.
Ø திருப்பெருமணநல்லூரில் திருமணத்திற்கு முன் ஒரு பதிகம் பாடி திருமணக்கோலத்துடன் சுற்றம் சூழ இறைஒளியில் கலந்து விட்டார்.
Ø திருஞானசம்பந்தர் 220 பதிகளுக்குச் சென்று இறைவனை வழிபட்டவர்.
திருஞானசம்மந்தரின் வேறு பெயர்கள்
- ஆளுடைய பிள்ளை,
- காழி வள்ளல்
- அறிவு சேரர்
- திராவிடசிசு
- நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்
திருஞானசம்மந்தருக்கு ஆதிசங்கரர் வழங்கிய பெயர்
v திராவிட சிசு
ஆதிசங்கரர் எழுதிய நூல் பெயர்
v சௌந்தர்ய லகரி
திருஞானசம்மந்தர் இறைவனிடமிருந்து பெற்ற பரிசுகள்
v மூன்று வயதில் உமையம்மையாரிடம் திருஞானப்பால் உண்டமை
v சிவபெருமானிடத்தே பொற்றாளமும், முத்துப்பல்லக்கும், முத்துச்சின்னமும், முத்துக்குடையும், முத்துப்பந்தரும் பெற்றமை
v சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றமை
திருஞான சம்மந்தர் செய்த அற்புதங்கள
vவேதாரணியத்தில் திருக்கதவு அடைக்கப் பாடியமை
v பாண்டியனுக்குக் கூனை நிமிர்த்த நின்றசீர் நெடுமாறன் ஆக்கியமை
v பாண்டிய மன்னனின் வெப்புநோய் போக்கியமை
v தேவாரத் திருவேட்டை அக்கினியில் இட்டுப் பச்சையாய் எடுத்தமை
v வைகையிலே திருவேட்டை விட்டு எதிரேறும்படி செய்தமை
v விடத்தினால் இறந்த வணிகனை உயிர்ப்பித்தமை
v குடத்தில் சாம்பலாக இருந்த அங்கம்பூம்பாவையை உயிர் பெற செய்தமை
பதிகம் - அமைப்பு முறை
சைவத்திருமுறைகள் பதிகம் என்ற சொல்லால் குறிக்கப்பெறும்.
ஒரு பதிகம் என்பது பத்து அல்லது பதினொன்று பாடல்கள் கொண்டதாய் இருக்கும்.
முதல் ஏழுபாடல்கள் தல வரலாற்றின் பெருமையை எடுத்துரைக்கும்.
எட்டாவது பாடல் சைவர்கள் அல்லாத மற்றவர்களின் செயல்களை எடுத்துக்கூறி இகழ்ந்துரைப்பதாய் இருக்கும்
ஒன்பாதவது பாடல் அயன், அரி இவர்களைவிட அரிதான சிறப்பினை உடைய சிவபெருமானின் பெருமையைக் குறித்து விளக்கும்.
பத்தாவது பாடல் பிற சமயங்களான சமண, பௌத்த சமயங்களை இகழ்ந்துரைத்து சைவமே சிறந்தது என்பதைக் குறிப்பிடும்.
பதின்னொன்றாவது பாடலில் பாடியவர் பெயர், ஊர், பதிகம் பாடுபவர் அல்லது கேட்பவருக்குக் கிடைக்கும் பயன்கள் ஆகியன விளக்கப்பட்டிருக்கும்.
மண்ணின் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவில்லை
கண்ணினல் லஃதுறங் கழுமல வளநகர்ப்
பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே
விளக்கம்
உயிர்கள் இவ்வுலகில் வளமோடு இன்பவாழ்வு வாழலாம் தினந்தோறும் இறைவனை நினைத்து வழிபட யாதொரு குறையும் இல்லாத முக்தி இன்பமும் பெறலாம் இத்தகைய பேற்றினை அளிக்கும் பொருட்டு கண்ணுக்கு இனிய நல்ல வளத்தை உடைய கழுமலம் என்னும் ஊரில் பெண்ணின் நல்லாளாகிய உமா தேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்றான்
போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத்
தாதையார் முனிவுறத்தான் எனை யாண்டவன்
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்
பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே
விளக்கம்
பொற்கின்னத்தில் ஞானம் பெருகும் அடிச்சிலை இறைவனின் ஆணைப்படி உமா தேவியார் திருஞானசம்பந்த பெருமானுக்கு ஊட்ட வாயில் பால் வடிந்ததைக் கண்டு அவரைப் பார்த்து யார் தந்த அடிசிலை உண்டனை என்ற தந்தையார் கோபித்து வினவ இறைவன் தன் திருக்காட்சியினை நல்கி எனை ஆட்கொண்டார். அத்தகைய பெருமை உடைய சிவபெருமான் காதில் குழையோடும் பேதையாகிய உமாதேவியோடும் கழுமலம் என்னும் வளநகரில் வீற்றிருந்து அருளுகின்றார்
தொண்டனை செய்தொழில் துயரறுத் துய்யலாம்
வண்டனை கொனறையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே
விளக்கம்
தொன்று தொட்டு உயிர்களைப் பற்றி வருகின்ற வினையால் உண்டாகும் துன்பத்தை நீக்கி உய்விக்கும் பொருட்டு வண்டுகள் மொய்க்கின்ற தேனை உடைய கொன்றை மலர்களைச் சடைமுடியில் அணிந்தும் நெற்றியில் ஒரு கண் கொண்டும் கழுமலம் என்னும் வளநகரில் உமா தேவியை உடனாகக் கொண்டும் பெருந்தகையாகிய சிவபெருமான் வீறறிருந்து அருளுகின்றான்
அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள் நேரிழை யவளோடும்
கயல்வயல் குதிக்கொளுங் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப் பெருந்தகை யிருந்ததே
விளக்கம்
நெஞ்சமே வினையால் இத்துன்பம் வந்தது என்று எண்ணி தளர்ச்சியுற்று சோம்பி இருத்தலை ஒழிப்பாயாக ஒளி மிக்க வளையல்கள் முன் கைகளில் விளங்க சிறந்த ஆபரணங்களை அணிந்த உமா தேவியோடு பெருந்தகை ஆகிய சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்றான்
அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழும்
கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்
பெடை நடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே
விளக்கம்
நெஞ்சமே இத்துன்பம் வினையால் வந்தது என்று எண்ணி தளர்ச்சி அடையாதே காளை ஊர்தியினை உடைய சிவபெருமானை தேவர்கள் எல்லாம் தொழுது வணங்குகின்றனர். அத்தகைய இறைவன் திருக்கழுமலம் என்னும் ஊரில் உமாதேவியோடு வீற்றிருந்து அருள் வழங்குகின்றான்.
மற்றொரு பறறிலை நெஞ்சமே மறைபல
கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்
பெற்றெனை யாளுடைப் பெருந்தகை இருந்ததே
விளக்கம்
நெஞ்சமே இறைவனைத் தவிர மற்றோர் பற்று எதுவும் இல்லை நான்கு வேதங்களையும் நன்கு கற்று கற்றதன்படி ஒழுகுகின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருக்கழுமலம் என்னும் வளநகரில் சிற்றிடையும் பெரிய அல்குலுமுடைய அழகிய ஆபரணங்கள் அணிந்த உமா தேவியோடு என்னை ஆட்கொண்ட பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்றார்
குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமே நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடும்
கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே
விளக்கம்
நெஞ்சமே மனக்குறை கொண்டு மொழியும் சொற்களை விடுவாயாக நிறைந்த வளையல்களை முன் கையில் அணிந்து சிறந்த ஆபரணங்களை அணிந்த உமா தேவியோடு இருண்ட சோலைகளை உடைய அழகிய திருக்கழுமலம் என்னும் வளநகரில் பிறை சந்திரனை சடைமுடியில் சூடிய பெருந்தகை சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்றார்
அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே
கருக்குவா ளருள்செய்தான் கழுமல வளநகர்ப் பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே
விளக்கம்
பெருமையை உடைய கயிலை மலையை எடுத்த அரக்கனான இராவணன் அலறும்படி தம் கால் பெருவிரலை ஊன்றி இறைவன் அம்மலையின் கீழ் அவனை நெருக்கினார் பின் அவன் தன் தவறு உணர்ந்து நீண்ட யாழை எடுத்து இன்னிசையோடு பாட கூர்மையான வாழை அருளினார் திருக்கழுமலம் என்னும் வளநகரில் உயிர்களுக்கு மிக்க அருள் செய்யும் உமா தேவியோடு பெருந்தகை சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்றார்
நெடியவன் பிரமனும் நினைப்பரி தாய்அவர்
அடியொடு முடியறி யாஅழல் உருவினன்
கடிக்கமழ் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிடி நடை அவளொடும் பெருந்தகை யிருந்ததே
விளக்கம்
நினைந்து உருகும் தன்மை இல்லாத திருமாலும் பிரமனும் அடிமுடி அறியா வண்ணம் சிவபெருமான் அழல் உருவாய் ஓங்கி நின்றனன் நறுமணம் கமழும் சோலைகளுடைய திருக்கழுமலம் என்னும் வளநகரில் பெண் யானையின் நடை போன்று விளங்கும் நடையை உடைய உமா தேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்றான்
தாருறு தட்டுடைச் சமணர்சாக் கியர்கள்தம்
ஆருறு சொற்களைந் தடியிணை அடைந்துய்ம்மின்
காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்
பேரறத்தாளொடும் பெருந்தகை யிருந்ததே
விளக்கம்
மாலை போன்று பாயை விரும்பி ஆடையாக அணிந்துள்ள சமணர்களும் புத்தர்களும் இறை உண்மையை எடுத்துரைக்காது தமக்கு பொருந்தியவாறு கூறுதலால் அவற்றை விடுத்து இறைவனின் திருவடிகளை வழிபட்டு உய்வீர்களாக பசுமை வாய்ந்த அழகிய சோலைகள் வளர்ந்துள்ள திருக்கழுமலம் என்னும் வளநகரில் பேரறத்தாளாகிய உமா தேவியோடு பெருந்தகை ஆகிய சிவபெருமான் வீறறிருந்து அருளுகின்றான்
கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்
விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே
விளக்கம்
தேன் செறிந்து விளங்கும் வளமையான திருக்கழுமலம் என்னும் ஊரில் உமாதேவியோடு வீற்றிருக்கும் சிவபெருமானைக் குறித்துத் திருஞானசம்மந்தன் பாடிய இப்பதிகத்தினைப் படித்தவர் விரும்பியவர் கேட்டவர் தேவர் உலகம் செல்லும் பெரும் பயனை அடைவார்கள்
------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக