சிறப்புத் தமிழ் - சங்க இலக்கியப் பாடல்கள்
புறநானூறு விளக்கம்
- புறநானூறு நானூறு பாடல்களைக் கொண்டது
- இது எட்டுத்தொகை நூல்களில் ஒன்று
- புறத்திணையை விளக்கும் சங்க இலக்கிய நூலாகும்
- புறம், புறப்பாட்டு, நந்தா விளக்கம் என்னும் வேறு பெயராலும் வழங்கப்பெறும்.
- இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை.
- இந்நூலின் சிற்றெல்லை 4 அடி
- பேரெல்லை 40 அடி
- ஆசிரியப்பாவால் ஆனது.
- புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன.
- இதனை ஜி. யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
புறநானூறு 187 பாடல்
பாடியவர் : ஒளவையார்
"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே"
பாடற் பொருள் :
நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும், தாழ்ந்த நிலமாக (அவலாக) - பள்ளமாக - இருந்தாலும், மேடான நிலமாக (மிசையாக) இருந்தாலும், எவ்விடத்தில் ஆடவர் நல்லவராய் விளங்குகின்றனரோ, அவ்விடத்தில் மேன்மை பெற்றுத் திகழ்வாய், நிலமே. இப்பாடல் ஆடவர் ஒழுக்கமே உலக மேன்மைக்கு அடிப்படை எனப் பகர்வது !
புறநானூறு 192
இவரின் புறநானூற்றுப் பாடல் பழங்காலத் தமிழர்களின் பண்பாட்டை விளக்குகிறது.
“ யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
பாடல் விளக்கம்
எல்லா ஊரும் நம்முடைய சொந்ந ஊரே. எல்லோரும் நம்முடைய உறவினரே. நன்மை, தீமை, துன்பம், இன்பம் போன்றனவும் பிறரால் வருவதில்லை. நாம் செய்யும் வினைப்பெயராலேயே வருவதாகும். இறப்பு என்பது இவ்வுலகில் புதியதாக நடைபெறுவதில்லை. வாழ்க்கையில் இன்பம் வரும்போது மகிழ்ச்சி அடைதலும், துன்பம் வரும்போது அதனை வெறுத்தலும் கூடாது. பேரியாற்று நீரில் செல்லும் படகு போல் நம்முடைய உயிரும் முறையாகச் செல்லும் இயல்பினை உடையதே. இது துறவுடையோர் காட்சியினால் தெளிந்த உணைமையாகும். எனவே, செல்வம் உடைய பெரியவரை மதித்தலும் சிறியோரை இகழ்தலும் கூடாது. அவரவர், ஒழுக்கம் ஒன்றையே கருதி வாழ வேண்டும்.
குறுந்தொகை
- குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று.
- இந்நூல் "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பிக்கப்படுகிறது.
- 400 பாடல்களைக் கொண்டது.
- இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ
- தொகுப்பித்தவர் பெயர் இதுவரை கிடைக்கப்பெறவில்லை
- இது அகத்திணையை விளக்கும் நூலாகும்
- 4 அடி சிற்றெல்லை கொண்டது
- எட்டு அடி பேரெல்லை உடையது
பாடல்
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே- சாரல்
கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
திணை – குறிஞ்சி
பாடியவர் – தேவகுலத்தார்
துறை - தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி, தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது.
துறை விளக்கம் – தலைவன் தலைவி வீட்டின் அருகே வந்து நின்றான். தலைவியை அவன் மணந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவன் இயல்புகளை இகழ்ந்து கூறுகின்றாள் தோழி. அதைக் கேட்ட தலைவி, தலைவனின் இயல்புகளைப் புகழ்ந்து கூறுகின்றாள்.
பாடல் விளக்கம்
தோழியே நான் கூறுவதினைக் கேட்பாயாக. கரிய கொம்புகளில் பூத்துக் குலுங்குகின்ற குறிஞ்சிப் பூக்களில் உள்ள தேனை எடுத்து, மலையில் உள்ள உயர்ந்த மரங்களில் தேனடைகளைச் சேகரித்து வைக்கின்ற மலைநாட்டில் வாழ்கின்றவன் என்னுடைய தலைவன். அவனோடு நான் கொண்ட நட்பு, நிலத்தை விடப் பெரியது, வானத்தை விட உயர்ந்தது. கடலைவிட ஆழமானது என்று தலைவி தோழிக்குக் கூறுகின்றாள்.
பாடல்
வேம்பின் பைங்காய்என் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே.
தோழி கூற்று
பாடியவர்: மிளைக் கந்தனார்
திணை: மருதம்.
கூற்று: வாயில் வேண்டிப் புக்க கிழவற்குத் தோழி கூறியது.
கூற்று விளக்கம்: தலைவி தலைவனோடு ஊடியிருக்கிறாள். ஊடலை நீக்கித் தலைவி தன்னை ஏற்றுக் கொள்வதற்குத் தோழியின் உதவியைத் தலைவன் வேண்டுகிறான். ”முன்பு, நீர் மிகுந்த அன்புடையவராக இருந்தீர். இப்பொழுது, நீர் அவ்வாறு அன்புடையவராக இல்லை. ஆகவே, தலைவி எவ்வாறு உம்மை ஏற்றுக் கொள்ளுவாள்?” என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
பாடல் விளக்கம்
என் தோழியாகிய தலைவி, முன்பெல்லாம் வேம்பின் பச்சைக் காயைத் தந்தால், அதை இனிய மணமுள்ள வெல்லக்கட்டி, என்று பாராட்டிக் கூறினீர்; இப்பொழுது, பாரியென்னும் வள்ளலுக்குரிய பறம்பு மலையிலுள்ள, சுனையில் ஊறிய தெளிந்த நீரை தை மாதத்தில் குளிர்ச்சியாகத் தந்தாலும், அதை வெப்பமுடையதாகவும், உவர்ப்புச் சுவை உடையதாகவும் கூறுகின்றீர். உமது அன்பின் இயல்பு இவ்வாறு உள்ளது என்று தோழி தலைவனிடம் கேட்கின்றாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக