எட்டாவது சீர் - ஈரோடு தமிழன்பன்
ஈரோடு தமிழன்பன் - எட்டாவது சீர் (வணக்கம் வள்ளுவ)
’வணக்கம் வள்ளுவ’ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிஞர் ஈரோடு தமிழன்பனின் கவிதை இங்குப் பாடமாக உள்ளது.
எட்டாவது சீர்
ஏழு ஏழாக மனிதர் மனதைப் பிரிக்கிறோம். அடடா …, காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்!
ஏழாவது சுரம்
கதவை இழுத்து மூடியதால்
எட்டாவது சுரம்
ஏமாந்து திரும்பியிருக்கலாம்!
ஆனால் இசை தேவதை
ஆலாபனை நிறுத்திவிட்டுக்
கதவைத் திறக்க
ஓடியிருக்க மாட்டாளா?
ஏழு வண்ண வில்
எழுதி வைத்திருக்கலாம் வாசலில்
'எட்டாவது வண்ணத்திற்கு
இங்கு இடம் இல்லை!'
அதற்காக
உறங்க முடியாத வானம்
நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில்
வருந்தி அழுதிருக்காதா?
வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த
எட்டாவது கிழமை
ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம்!
அதனால்
மாதத்தின் மார்பு துடித்து
வெடித்திருக்காதா?
வள்ளுவ!
எட்டாவது சீர்
உன்னைத் தேடி வந்தபோது
என்ன செய்தாய்?
'போடுவதற்கு ஒன்றுமில்லை
போ'
என்று
வாசல் யாசகனை
வீடுகளில் விரட்டுவதுபோல்
விரட்டி விட்டாயா?
எட்டாவது சீர்
ஏன் உனக்குத் தேவைப்படவில்லை?
யாப்பு
கூப்பிட்டு மிரட்டியதால்
ஏற்பட்ட அச்சமா?
ஏழு சீர்களிலேயே
ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று
முச்சீரடியில் உனக்கும்
மூச்சு முட்டியதா?
'காசும்' 'பிறப்பும்'
உன்முன் வந்து கண்களைக்
கசக்கினவா?
'நாளும்' 'மலரும்'
நச்சரித்தனவா?
இல்லை,
எட்டாவது சீர்தான்
அடுத்த குறளின் முதற் சீரா?
அப்படியே ஆனாலும்
கடைசிக் குறளின் காலடியே
எட்டாவது சீர் ஒன்று
தோளில் என்னைத் தூக்கிக்கொள்
என்று கெஞ்சியிருக்குமே!
கடலின்
கடைசி அலையின்
தாகத்தைத் தணிப்பது என்வேலை
இல்லை என்கிறாயா?
சிந்தனைகளை எண்ணியவனே
நீ
சீர்களை எண்ணவில்லையோ?
உனக்கு
எண்ணங்களே முக்கியம்
எங்களுக்கோ
எண்ணிக்கையே முக்கியம்.
ஏழு சீர்களில்
சொன்னதே எதற்கு என்று
எண்ணிக் கொண்டிருக்கிறேன்...
ஏன்
எட்டாவது சீர்க் கவலை உங்களுக்கு
என்கிறாயா?
போதைப் 'பொருளுக்கு'
அறத்தையும் இன்பத்தையும்
அவசரமாய் அடகு வைப்பவர்கள்
நாங்கள்
அப்படித்தான் இருப்போம்!
வீடு தேடுகிற
வெறியில்
அறம் பொருள் இன்பத்தை
மிதித்துக் கொண்டு
ஒடுகிறவர்கள் நாங்கள்
அப்படித்தான் இருப்போம்!
இலக்கணக்காரன்
இப்போது எப்படி ஏங்குகிறான்
தெரியுமா?
'எட்டாவது சீருக்கு
இடம் தந்திருந்தால் இன்னும் ஏதேனும்
சொல்லியிருப்பாயே!'
'வாய்ப்புள்ளவன்
அந்த ஒரு சீரில் சிந்தித்து
வரிகளைச் சமப்படுத்தட்டும்
என நான்தான்
விட்டு வைத்திருக்கிறேன்' என்கிறாயா?
என்னோடு
நிறைவடைந்து விடவில்லை
சிந்திக்க இடம்
இன்னும் உண்டு என்பதைக்
கோடி காட்டுகிறாயா?
உண்மையின்
உள்ளத்திலிருந்து பேசுபவர்
எவரோ அவரே - நீ
எழுதாது விட்ட எட்டாவது சீரா?
ஆனால்
வள்ளுவ!
எட்டாவது சீர்கள் எல்லாம்
இப்போது உன் சிலை முன்
உண்ணாவிரதம் இருக்கின்றன.
என்ன கோரிக்கை தெரியுமா?
திரும்பவும்
நீ வந்து இன்னொரு திருக்குறள்
எழுதும்போது
ஏழு சீர்களுக்குள் இடம் தரவேண்டுமாம்!
1. ஈரோடு தமிழன்பன் குறிப்பு தருக.
- இன்றைய தமிழ்க் கவிஞர்களில் குறிப்டத் தக்கவர் தமிழன்பன்.
- ஈரோடு மாவட்டம் சென்னிமலையை ஊரைச் சேர்ந்தவர்
- பெற்றோர் : நடராஜா - வள்ளியம்மாள்
- பிறந்த நாள் : 28.9.1940
- இயற்பெயர் : ஜெகதீசன்.
- திராவிட இயக்கக் கொள்கை, பொதுவுடைமைச் சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டவர்
- மரபுக் கவிதை, புதுக்கவிதை என இரண்டும் புனைந்து, தமிழ்க் கவிதை உலகில் தனிப்புகழ் பெற்றவர்.
- கவியரங்கக் கவிதைகள், நாடகங்கள், புதினங்கள், சிறுகதை, குழந்தை இலக்கியங்கள், திறனாய்வுக் கட்டுரைகள், திரைப்படப் பாடல்கள், சொற்பொழிவு, ஓவியம் எனப் பல துறைகளில் இயங்கிய பன்முக ஆளுமை ஆவார்.
- சென்னைப் புதுக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
- சென்னைத் தொலைக்காட்சியில் செய்தி வழங்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
- ’உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன்… வால்ட் விட்மன்’ என்ற இவரது நூல், புதுக்கவிதை நடையில் அமைந்த முதல் பயண இலக்கியம் ஆகும்.
- 2004 இல் ’வணக்கம் வள்ளுவ’ நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
- ஜப்பானியக் கவிதை வடிவமான சென்ரியூவை ’ஒரு வண்டி சென்ரியூ’ எனும் தொகுப்பின் மூலம் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
- ’லிமரைக்கூ’ வடிவினைப் பயன்படுத்தி ’சென்னிமலை கிளியோபாத்ராக்கள்’ எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
- பழமொழியையும் சென்ரியூவையும் இணைத்துப் ’பழமொன்ரியூ’ கவிதை வடிவத்தையும் முதன் முதலில் உருவாக்கியுள்ளார். மேலும் கஜல் கவிதைகளையும் படைத்துள்ளார்.
இவரது நூல்கள் :
’தோணி வருகிறது’, ’தீவுகள் கரையேறுகின்றன’, ’அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்’, ’ஊமை வெயில்’, ’என் வீட்டிற்கு எதிரே ஒர் எருக்கஞ்செடி’, ’நடை மறந்த நதியும் திசைமாறிய ஓடையும்’ போன்ற பல கவிதை நூல்களைப் படைத்துள்ளார்.
- ’நெஞ்சின் நிழல்’ என்பது இவரது நாவல்.
- தமிழன்பன், மலையமான், விடிவெள்ளி ஆகிய புனைப்பெயர்களில் இவர் படைப்புகளை எழுதியுள்ளார்.
- தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி விருது’ உலகத் தமிழ் ஹைக்கூ மன்றத்தின் ’பாஷோ’ விருது, ’கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ ’நாவலர் விருது’ முதலான விருதுகளால் இவர் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.
திருக்குறள் குறள்வெண்பா என்னும் யாப்பு வடிவத்தில் எழுதப்பட்டது. இந்த யாப்பு வடிவத்தில் மொத்தம் ஏழு சீர்கள் அமைந்திருக்கும். முதல் அடியில் நான்கு சீர்களும், இரண்டாவது அடியில் மூன்று சீர்களும் அமைந்திருக்கும்.
இரண்டாவது அடியிலும் நான்கு சீர்கள் கொண்டதாக அதாவது எட்டாவது சீராக ஒரு சீரை வள்ளுவர் ஏன் அமைக்கவில்லை ? என்று கவிஞர் தமிழன்பன் கற்பனை செய்து இக்கவிதையைப் படைத்துள்ளார்.
இசையில் ஏழு சுரங்கள் மட்டுமே (சரிகமபதநி) இருக்கும். ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம் ஏமாந்து திரும்பி இருக்கும். இருப்பினும் இசை தேவதை ஓடிவந்து கதவை திறந்து இருக்கலாம் எனக் கற்பனை செய்கிறார்
வானவில்லில் ஏழு வண்ணங்கள் உள்ளன. அதில் எட்டாவது வண்ணம் இல்லை. எட்டாவது வண்ணம் இல்லையே என்று வானம் வருத்தப்பட்டு அழுது இருக்கும். வாரத்தில் மொத்தம் ஏழு நாட்களே உள்ளன. எட்டாவதாக ஒரு நாள் இல்லை ஞாயிற்றுக்கிழமை இறுதியில் எட்டாவது கிழமை தீக்குளித்திருக்கும். அதனால் மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? என்று கற்பனை செய்துள்ளார்
திருக்குறளில் ஏழு சீர்கள்
இசையில் ஏழு சுரங்கள். வானவில்லில் ஏழு வண்ணங்கள், வாரத்தில் ஏழு கிழமைகள். இவற்றில் எட்டாவதாக ஒன்று சேர்வதற்கு வாய்ப்பில்லை. அதைப் போல வள்ளுவரே ! குறள் எழுதும் போது ஏழாவது சீரோடு நிறுத்திக் கொண்டீர்களே ! எட்டாவது சீர் வந்து நிற்கும் போது நீங்கள் என்ன செய்தீர்கள்? என வள்ளுவரிடம் வினா எழுப்புகிறார்.
எட்டாவது சீரை ஏன் அமைக்கவில்லை
போடுவதற்கு ஒன்றுமில்லை எனப் பிச்சைக்காரர்களை விரட்டுவது போல எட்டாவது சீரை விரட்டி விட்டீர்களா? அந்தச் சீர் ஏன் தேவைப்படவில்லை? யாப்பு இலக்கண வரையறையால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களில் எண்ணங்கள் தீர்ந்து போய் விட்டதா? ஈற்றடியின் முச்சீரில் உனக்கும் மூச்சு முட்டியதா? நாள், மலர், காசு, பிறப்பு ஆகிய இறுதிச் சீர்கள் போதும். இதற்கு மேல் வேண்டாம் என்று நச்சரித்தனவா? இல்லை அடுத்த குறளின் முதல் சீர் தான் எட்டாவது சீரோ எனக் கேள்வி எழுப்புகிறார்.
எட்டாவது சீர் இல்லாததன் காரணம்
கடலின் கடைசி அலையின் தாகத்தைத் தீர்ப்பது என் வேலை இல்லை என்கிறாயோ? சிந்தனைகளை எண்ணியதால் சீர்களை எண்ணவில்லை எனக் கூறுகிறாயோ? என எட்டாவது சீர் விடுபட்டதன் காரணத்தைத் தமிழன்பன் கூறுகிறார்.
உனக்கு எண்ணங்கள் முக்கியம் என்றால் எங்களுக்கு எண்ணிக்கையே முக்கியம். ஏழு சீர்களில் சொன்னதே ஏன் என சிந்திக்கும் போது எட்டாவது சீர் எதற்கு என்கிறாயா? சிந்திக்க தவறிப் பொருளை அடகு வைக்கும் நாங்கள் அப்படித்தான் இருப்போம். வீடு பேற்றை அடைய வெறிகொண்டு அதனை தேடுபவர்கள் நாங்கள். அறம் பொருள், இன்பத்தை மிதித்துக்கொண்டு ஓடுபவர்கள் நாங்கள் அப்படித்தான் இருப்போம்
எட்டாவது சீருக்கு இடம் கொடுத்திருந்தால் இன்னும் ஏதேனும் சொல்லி இருப்பாய் என இலக்கணக்காரர்கள் எண்ணியிருப்பார்கள். வாய்ப்புள்ளவர்கள் எட்டாவது சீரை நிரப்பட்டும் என விட்டு விட்டாயா? அல்லது என்னோடு முடியவில்லை நீங்களும் சிந்திக்கலாம் என உணர்த்துவதற்காக விட்டு வைத்தாயா? உண்மையாய் வாழ்பவர், பேசுபவர் எவரோ அவர்தான் எட்டாவது சீரோ? என்றெல்லாம் வள்ளுவரிடம் கவிஞர் தமிழன்பன் கேட்கிறார்
எட்டாவது சீரின் விண்ணப்பம்
வள்ளுவரின் சிலை முன் நின்று எட்டாவது சீர்கள் கோரிக்கை வைக்கின்றன. அக்கோரிக்கை என்னவென்றால் திரும்பவும் ஒரு திருக்குறளை எழுதினால் ஏழு சீர்களுக்குள் எங்களையும் வைக்க வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கையாகும்.
திருக்குறளில் ஏழு சீர்கள் மட்டுமே அமையும் எட்டாவது சீர் என ஒன்று இல்லையா? எட்டாவது சீர் பற்றிச் சிந்திக்கவில்லையா? எட்டாவது சீர் உங்களிடம் எங்களை ஏன் பயன்படுத்தவில்லை எனக் கேட்கவில்லையா எனக் கற்பனை நயத்துடன் கவிதையை அமைத்துள்ளார் தமிழன்பன்.
கருத்துகள்
கருத்துரையிடுக