திருக்குறள் மாநாட்டு உரை - ஈ.வெ.ரா

                         திருக்குறள் மாநாட்டு உரை - .வெ.ரா   

திருக்குறளுக்குச் செல்வாக்கு ஏற்பட காரணமாக இருந்த நிகழ்வு  

குறள் மாநாடு நடக்கும் இந்தக் காலை நேரத்தில் விளம்பரம் இல்லாத போதும், பெரியார் ஈ.வெ.ரா. வருகிறார் என்று யாருக்கும் தெரியாத நிலையிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

 குறளுக்கு இருக்கும் செல்வாக்கு அல்லது விளம்பரம் காரணமாகப் பலர்  குறளின் பேரால் புத்தகம் போடுவதற்கும், பத்திரிகை நடத்துவதற்கும்,  பிரச்சாரம் செய்ய நல்லவாய்ப்பு உருவாகுவதன் காரணமாகவும் வியாபாரம், வருவாய் இருக்கிறது என்பதன் காரணமாகக் குறளுக்குச் செல்வாக்கு அதிகரிக்கிறது என்று குறிப்பிடுகிறார் பெரியார் ஈ.வெ.ரா.  

காங்கிரசுக்காரர்களும் காங்கிரஸ் பிரச்சாரகர்களும் தங்கள் ஸ்தாபனத்திற்கோ, தங்கள் பேருக்கோ கூட்டம் சேருவதில்லை என்கின்ற காரணத்தால் குறளின் பெயரை உபயோகித்துக் கூட்டத்தைச் சேர்த்துக் கொள்கிறார்கள்.

மேலும் அவர்கள் குறளின் பேரால் புத்தகம், பத்திரிகை, கூட்டமும் நடத்துகிறார்கள்.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியால் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம்

காங்கிரசுக்காரர்கள் காங்கிரசின் பேரால் தங்களுக்கு மதிப்பு போய்விட்டது கண்டு, தமிழ், தமிழ்க்கலை, தமிழ் இலக்கியம் என்னும் பேரால் விளம்பரம் பெற்று வாழ்க்கை நடத்துகிறார்கள். இந்த நிலைமை ஏற்பட்டதற்குக் காரணம் என்னவென்றால், 1938 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியால் தமிழுக்கு ஏற்பட்ட செல்வாக்கேயாகும் என்று பெரியார் குறிப்பிட்டுள்ளார்.

குறளுக்கும் தமிழுக்கும் சிறப்பு ஏற்படுவதற்குக் காரணம்

குறளும், தமிழும் இக்காலத்தில் சிறப்புப் பெறுவதற்குக் காரணமாக திராவிடர் கழகத்தை மட்டும் கூறிட முடியாது. பெரிதும் உண்மையான  காரணம் இன்று மக்களுக்கு ஏற்பட்ட விஞ்ஞானமும், பகுத்தறிவும், சுயமரியாதை உணர்ச்சியுமேயாகும். 1920 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்விழிப்புணர்ச்சி ஏற்படுவதற்குக் காரணம் சுமார் 200 ஆண்டுகள் பிரிட்டிஷ் அரசு ஆட்சி செய் காரணத்தால் நம்மக்களுக்கு ஏற்பட்ட விஞ்ஞான அறிவும், பகுத்தறிவுச் சுதந்திரமும் மக்களைச் சிந்திக்கச் செய்ததன் பயனாய், மக்கள் இன்று பகுத்தறிவுக் கண்களால் குறளைப் பார்க்க ஆரம்பித்ததால், இன்று குறளின் பெருமை மக்களுக்கு விளங்குகிறது.

குறள் பக்தி நூலாக மக்களிடையே நிலைபெற காரணமாகப் பெரியார் ஈ.வெ.ரா. குறிப்பிடும் கருத்துகள்

குறள் இதுவரை ஒரு மத நூலாக, பக்தி நூலாக, பார்ப்பன நூலாகவே இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு மதக்காரர்களும் குறள் எங்கள் சமய நூல் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.

சைவர் குறளைத் தங்கள் மதத்து நூல் என்றும், வைணவன் தங்கள் மதத்து நூல் என்றும், சமணன் தங்கள் மதத்து நூல் என்றும் சுய வயப்படுத்தி, அதை ஒரு புராணமாகவும் பக்தி நூலாகவும் கருதியும் பிரச்சாரம் செய்தும் வந்தார்கள்.

மேலும் அவர்கள் குறளுக்கு ஆரிய மதச் சார்பில் உரை எழுதப்பட்டுள்ளது. அந்த உரையையே தமிழ் மக்கள், தமிழ்ப்புலவர்கள், தமிழ்ச் சமயவாதிகள் ஆகியோர் ஏற்றுக்கொண்டு பள்ளிப் பாடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.

குறளினை மற்றொரு மனுதர்மச் சாஸ்திரமாகக் கொள்ளும் நிலையினை உருவாக்கி விட்டனர்.

இந்த நிலையில் ஆக்கப்பட்ட குறளானது பாரதம், இராமாயணம், கீதை, மனுதர்மச் சாஸ்திரம் ஆகியவைகளை விட எப்படி உயர்ந்ததாகக் கருதப்பட முடியும்? என்று பெரியார் எடுத்துரைக்கின்றார்.

குறளுக்கு மதிப்புரை எழுதியவர்களும், சில தமிழ்ப் பெரியார்களும் அதாவது, மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை போன்றவர்களும் குறளுக்கும் மற்ற ஆரிய நூல்களுக்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவுற எடுத்துக்காட்டி விளக்கினர்.

எனினும் இந்த நாட்டில், பார்ப்பனர்களுக்கு இருந்து வந்த ஆதிக்கம் காரணமாகக் குறளையும் ஆரியத்தையும் பிரித்துக் காணும் நிலை கடினமாக மாறி விட்டது.

காரணம் யாது எனில் தமிழ்ப் புலவர்கள் என்று வெளிவந்த எல்லாத் தமிழர்களும் ஆரியத்திற்கு அடிமையாகிக் குறளை மனுதர்மச் சாஸ்திரம் போலவும், கீதைக்கு அடுத்த பெருமை பொருந்தியது போலவும் ஒப்புக்கொண்டு வாழும் நிலையை ஆரியர் பிரச்சாரம் செய்து உருவாக்கி விட்டார்கள்.

குறளின் தனிமதிப்பு குறைய காரணமாகப் பெரியார் கூறும் காரணங்கள்   ஆரிய சாயம் பூசப்பெற்ற நிலையில் குறளுக்குத் தனிமதிப்பு எப்படி ஏற்பட முடியும்? என்ற வினாவினை எழுப்புகிறார் பெரியார். முஸ்லீம், கிறித்தவன், பகுத்தறிவுவாதி, நாஸ்திகன், தத்துவவாதி போன்றோர்கள் ஆரிய சாயம் பூசப்பெற்ற குறளை மதிக்க நினைக்க மாட்டார்கள்.

மேலும் ஆரிய மதமான இந்துமதப் பக்தனும் பாரத, இராமாயணத்தைவிட அதிகமான மதிப்பினைக் குறளுக்குத் தருவது என்பது இயலாத நிகழ்வாகும்.  

குறளின் மதிப்பு மேலோங்கக் காரணம்

மக்களுக்குள் இன்று தோன்றியிருக்கும் பகுத்தறிவு உணர்ச்சி, திராவிட இன உணர்ச்சி, தத்துவ வளர்ச்சி, நாஸ்திகப் புத்தியும்தான் குறளை ஆரிய வேத, சாஸ்திர, புராண, இதிகாசத்திலிருந்தும், தேவார, திருவாசக, பிரபந்தம் முதலிய சமயப் பக்தர்களின் கவிகளில் இருந்தும் பிரித்துக் காணமுடிந்தது. இந்த முடிவின் காரணமாகவே குறளின் மேன்மை திடீரென்று விளங்கவும், மக்கள் பாராட்டவும், மதிக்கவும், அதனிடம் அன்பு செலுத்தவும் முடிந்தது.

குறளுக்கும் பக்தி நூலுக்கும் இடையே உள்ள வேறுபாடு

குறள் பக்தி நூலல்ல; கடவுளைக் காட்டும் எந்தவிதமான மத நூலும் அல்ல, மதப் பிரச்சாரம் செய்யும் மதக்கோட்பாடு நூலுல்ல.

ஆனால், வேதசாஸ்திரம், புராணம், இதிகாசம், தேவாரம், திருவாசகம், பிரபந்தம் முதலிய அனைத்தும் மத நூல் ஆகும்.  அவைகள் கடவுள் பெருமையைக் கூறும் வேத, சாஸ்திர நூல்களாக பக்தியை ஊட்டி மோட்சத்திற்கு அனுப்பும் பக்தி நூல்களாக உள்ளன.

குறள் அப்படி அல்ல; குறள் அறிவு நூலே ஆகும். குறள் உண்மையான ஒழுக்கத்தை, அதாவது யாவருக்கும் பொருந்தும் சமத்துவமான ஒழுக்கத்தைப் போதிக்கின்றது.

ஆதலால்தான் குறளைப் பக்தி நூலல்ல, ஆஸ்திக நூலல்ல, மூடநம்பிக்கை நூலல்ல, அது ஓர் அறிவுநூல் என்றும், எல்லா மக்களும் ஏற்கக்கூடிய எல்லா மக்களுக்கும் பொருந்தக்கூடிய ஒழுக்கநூல் என்று குறிப்பிடலாம் என்று பெரியார் வலியுறுத்துகிறார்.

எந்த நூலை எடுத்துக்கொண்டாலும் அதன் மதிப்பு அந்த நூலின் பயனை அடிப்படையாகக் கொண்டதாகும்.

குறள் வெறும் ஒழுக்கத்தையும் வாழ்க்கைக்கு வேண்டிய வழிமுறைகளையும் கொண்டதாகும். அறிவு பெற்றவன், அறிவையே முதன்மையாகக் கொண்டவர்களும் ஆராய்ச்சித்தன்மை கொண்டவர்களும்  குறளை மதிப்பர். குறளைப் பாராட்டுவர். குறளை வழிகாட்டியாய்க் கொண்டு நடப்பர்.  

ஆதலால், குறளுக்கு இன்று திராவிடர்கள் சிறப்பாகத் தமிழ் மக்கள் இடையில் பெருமையும் செல்வாக்கும் இருக்கிறது என்றால் இதுதான் காரணம் என்று பெரியார் குறிப்பிட்டுள்ளார்.

எனவே குறளின் பெருமையைப் பற்றி இனிப் பேசுவதை நிறுத்திவிட்டு, இனி அதைக் காரியத்தில் கொண்டுவரும் பணியில் செயல்பட வேண்டியது, தமிழர் - திராவிடர் ஒவ்வொருவரின் கடமையுமாகும் என்று எடுத்துரைத்தார் பெரியார்.

குறள் பக்தர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று பெரியார் குறிப்பிடுகிறார்?

குறள் பாராட்டு பக்தர்கள் மேடையில் வள்ளுவரையும் பாராட்டும் பாராட்ட வேண்டும். அதற்கு மாறாக, கம்பனையும் வால்மீகியையும் பாராட்டும் செயலைத் தவிர்க்க வேண்டும்.

குறளையும் காலட்சேபம் செய்வது, திருவிளையாடல், பெரிய புராணங்களையும் காலட்சேபம் செய்வது; குறளில் நுண்பொருள் காணுவது, தேவாரத் திருவாசகப் பிரபந்தங்களில் நுண்பொருள் கண்டு கண்ணீர் சொரிவது, குறளைத் தலைகீழ்ப் பாடம் செய்து, விஞ்ஞானத்துக்குப் பொருந்தப் பொருள் உரைப்பது, சாம்பல் பூச்சுடன், கொட்டை கட்டிக்கொண்டு, கோவிலுக்குச் சென்று, குழவிக்கல்முன் நின்றும் படுத்தும் புரளுவது: ஆரியமத தர்மப் பண்டிகைகளைக் கொண்டாடுவது; ஆரிய மதக் குறிகளை அணிந்து மத வேஷத்துடன் திகழ்வது என அனைத்து வேடங்களையும் போட்டுக் கொண்டு,  குறளைக் கூறிக் கொண்டு இருப்பவர்கள் உண்மையில் குறள் பக்தர்கள் ஆக மாட்டார்கள் என்று பெரியார் குறிப்பிடுகிறார்.

ஒரு மனிதன் உண்மையான குறள் பக்தனாக இருப்பவன் குறளுக்கு எதிரான எல்லாக் கொள்கைக்கும் எதிரானவனாக இருக்கவேண்டும். எந்தக் கருத்துகளை - கொள்கைகளை எதிர்க்க, ஒழிக்கக் குறள் ஏற்பட்டதோ -  அந்தக் கருத்துகளை எதிர்த்து, கொள்கைகளை ஒழிக்க முயற்சிப்பவனாய் இருக்க வேண்டும்.

குறளைப் பாராட்டுகிறவர்கள், குறள் கொள்கையைப் பரப்புகிறவர்கள், குறளுக்காகத் தங்கள் வாழ்க்கையை ஒப்படைத்தவர்கள் குறள் வெற்றிக்காகச் சில ஆக்க வேலை செய்ய வேண்டியது எப்படி அவசியமோ அதுபோல் குறள் வெற்றிக்கு எதிரான காரியங்கள், கருத்துகள், ஆதாரங்கள், நூல்கள் ஆகியவை ஒழிய அழிவு வேலையும் செய்பவர்களாக இருக்க வேண்டும்.

ஒரு நல்ல, உயர்ந்த தத்துவங்கள் கொண்ட காரியத்திற்கு ஆக்க வேலை, நாசவேலை ஆகிய இரண்டும் செய்ய வேண்டியது இன்றியமையாததாகும். நாச வேலையை விட்டுவிட்டு ஆக்க வேலை மாத்திரம் செய்தால், எதிர் சாதனங்கள் ஆக்க வேலையை அழித்துக்கொண்டே இருக்கும் என்பது நடைமுறை வழக்காகும்.

எனவே குறள் கருத்து, கொள்கை ஆகியவைகளை மக்களிடம் பரவச்செய்ய அதை நடைமுறையில் கொண்டுவரும் ஆக்க வேலையைச் செய்ய நினைப்பவர்கள் ஆரியச் சாஸ்திர – புராணங்கள், அவைகளைப் பிரபலப் பிரச்சாரமாகக் கொண்ட தேவார, திருவாசகம், பிரபந்தங்கள், மதக்கோட்பாடுகள் ஆகியவற்றை அழிக்கும் நாசவேலையைச் செய்ய வேண்டும் என்று பெரியார் குறிப்பிட்டுள்ளார்.  

குறளைப் பிரச்சாரம்செய்து, மக்களிடையே பரப்புவது, குறள் ஆக்க வேலைகளாகும். குறளுக்கு எதிரான கருத்துகளை, காரியங்களை, நூல்களை மறையச் செய்வது என்பது குறள் ஆக்கத்திற்காகச் செய்யப்படும் அழிவு வேலையாகும்.

ஒரு காரியத்திற்காக ஆக்க வேலையும் அழிவு வேலையும் ஒரு உடலுக்கு இரண்டு கைகளைப் போன்றதாகும். இரண்டு கையும் சேர்ந்து தட்டினால்தான் ஓசை உண்டாவதுபோல் - காரியம் நடைபெறுவதுபோல், ஆக்கமும் அதற்கெதிரானவைகளின் அழிவும் சேர்ந்தால்தான் காரியம் வெற்றிபெறும். அழிவில் வெற்றி பெற்றவன்தான் ஆக்கத்தில் வெற்றிபெறுவான்.

ஆகவே, குறளைப் பரப்பக் குறளின் மேன்மையை எடுத்துச் சொல்வதும் குறள் மாநாடு கூட்டுவதும், குறள் புத்தகங்கள் - பத்திரிகைகள் நடத்துவதும் போலவே குறள் கருத்துக்கு எதிரான ராமாயணம், பாரதம், கீதை, மனுதர்மம் முதலாகியவைகளின் கேடுகளைப்பற்றிப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

இவைகளை ஒழிக்க ஒழிப்பு மாநாடும் நடத்த வேண்டும். இவையெல்லாம் குறள் பக்தர்கள் செய்ய வேண்டின என்று பெரியார் குறிப்பிட்டுள்ளார்.

இராமாயணம் கீதை குறித்து பெரியார் கூறிய கருத்துகள்

இராமாயணம் நமக்கு ஒரு தெய்வ நூலா? அது திராவிட நாசத்துக்கு வழிகாட்டியாகக் கற்பிக்கப்பட்ட நூல் ஆகும். தேவர்களுக்காக அசுரர்களை, அரக்கர்களை, இராக்கதர்களை அழிக்கக் கடவுள் மனிதனாக - இராமனாகப் பிறந்து, அரக்க வம்சத்தை அழித்தார் என்பதுதானே இராமாயண கருத்து ஆகும்.

இதில் தேவர்கள் யார்? அசுரர்கள் யார்? இராமயணப்படியே பார்த்தாலும் இராட்சதர்கள் என்கிற ஒரு ஜாதியோ, இனமோ, பிறவியோ உலகில் காணப்படவில்லையே அப்படி என்றால் தேவர்களுக்கு எதிரிகள் யார்? மனுதர்மப்படி நடக்காதவன், வர்ணாசிரமத்தை ஒப்புக்கொள்ளாதவன், பார்ப்பனர்களுக்கு அடிமையாக இல்லாதவன் அரக்கர்கள் என்று புராண, இதிகாசங்களிலும் மனுதர்மத்திலும்  கூறப்பட்டிருக்கிறது.

விபீஷணனின் துரோகம்

விபீஷணன் யார் ராவணனின் தம்பிராவணன் ஆபத்தான நிலையில் இருக்கும்போது அவன் ஆட்சியை அடைவதற்காக வஞ்சக எண்ணத்தோடு அண்ணனைக் காட்டிக் கொடுப்பதற்காக அண்ணனின் எதிரியிடம் சரணாகதி அடைந்து காட்டிக் கொடுத்துக் கூலி பெற்றவன்இதை ராமனே கூறுகிறான் ராவணனை  அழித்து  அவன் ஆட்சியைப் பெற  என்னிடம் வந்திருக்கிறான்ஆதலால்  எனக்குக்  கெடுதல் செய்யாமல் இருப்பான். அவனைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று ராமன் கூறுகிறான்.

விபீஷணன்  பலசாலியான  ராவணனிடம்   தனக்கு ஆபத்து வரும் என்று அறிந்து, பயந்து  தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இங்கே  வந்திருக்கிறான் என்பது இவனுடைய வார்த்தைகளால் தெரிகிறது.  இவனை ஏற்றுக் கொள்வதால் யாதொரு கெடுதலும் கிடையாது என்று சொல்லி விபீஷணனை ராமன் ஏற்றுக் கொண்டான் என்பது வால்மீகி ராமாயணத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

விபீஷணன் பற்றிய பிறர் கருத்து

இந்த விபீஷணன்  நன்றி கெட்டவன்தமையன்  ஆபத்தில் இருக்கும் போது  அவனை  கைவிட்டவன் தன் அண்ணனையே கை  விட்டவன் வேறு  யாரை விட மாட்டான் என்று சுக்ரீவன் சொல்கிறான். தாங்கள் வாலியைக் கொன்று  சுக்ரீவனுக்கு  ஆட்சியை கொடுத்ததை பார்த்து  தானும் இலங்கை  ராஜ்யத்தை  அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் இங்கே வந்திருக்கிறான். ஆகவே இவனை ஏற்றுக் கொள்ளலாம் என்று அனுமன் சொல்கிறான். விபீஷணன்  நம்மை வந்து சேர  இதுவா நேரம்தனது எஜமானனும் சகோதரனுமான  ராவணனுக்கு  ஆபத்து நேர்ந்திருக்கும் போது அவனைக் கைவிட  இதுவா சமயம்எப்படி யோசித்தாலும் விபீஷணனை நம்ப கூடாது என்று சாம்பவன் கூறுகிறான். சுவாமி  என்னை நம்புங்கள்ராட்சசர்களை அழிப்பதிலும் இலங்கையைப் பிடிப்பதிலும்  என் உயிருள்ள மட்டும்  என்னால்  செய்ய முடிந்ததை செய்வேன்.. என்னை நம்புங்கள் என்று ராமனிடம் விபின் கூறுகிறான்

விபீஷணனின் ஆசை

விபீஷணன் வாயாலேயே அவன் மனதில் இருந்த துரோகத்தைக் காட்டி விட்டான். அதாவது ராமனும் லட்சுமணனும்  நாக பாசத்தால் கட்டுண்டு மூர்ச்சையான சமயம் ராம லட்சுமணர்களைச்  சேர்ந்து  நான் மகிழ்ச்சி அடையலாம் என்று எண்ணி இருந்தேனே! எல்லாம் வீணாகிவிட்டதே! ராஜ்ஜியம் கிடைப்பதும் போய்விட்டதே! ராஜ்யத்தை இழந்து பரிதவிக்கிறேன். னி எனக்கு ஆபத்து ஏற்படுமே  என் அண்ணன் ராவணன் வெற்றி பெற்று விடுவானே என்று புரண்டு அழுகிறான். அப்போது விபீஷணா துக்கப்படாதே இலங்கை ராஜ்ஜியம் உனக்குக் கிடைப்பதில் சந்தேகம் இல்லை  என்று சுக்ரீவன் பேசுகிறான்.

இது மட்டும் இல்லாமல்  அண்ணன் உயிருடன் இருக்கும் போதே அவன் ஆட்சியை, அண்ணனின் எதிரி   தனக்குப்  பட்டாபிஷேகம்  நடத்தும்படி செய்து கொண்டு  அண்ணனின் உளவுகளை எல்லாம் ராமனுக்குச் சொல்லிக் கொடுக்கிறான். இப்படி ராமாயண கதை முழுவதும் துரோகம் வஞ்சனை மயமாகவே இருக்கும். இது மட்டுமில்லாமல் பாரதம் கீதை முதலிவைகளும் அப்படித்தான் காணப்படுகிறது  

கீதையைப் பற்றிப்  பேசுகையில்  அம்பேத்கர் கீதை  முட்டாள்களின் பிதற்றல்கள் என்று கூறுகிறார். இவற்றையெல்லாம்  நாம் நம்மிடம் இருந்து அழிக்க வேண்டாமா ? குறளுக்கு மதிப்பு வந்துவிட்டது என்றால்  குறளுக்கு எதிரானவைகளை அழிக்க வேண்டும். 1951ஆம் ஆண்டு குறள் பிரச்சாரமாக இவற்றை செய்யுங்கள் என்று பெரியார் என்று பெரியார் திருக்குறள் மாநாட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி