உரைநடை தோற்றமும் வளர்ச்சியும்

                                             உரைநடை

முன்னுரை

பொருளின் தன்மையை உள்ளவாறு உரைப்பது உரைநடையாகும். வசனம் என்ற வடமொழிச்சொல் பிற்காலத்தில் உரைநடையைக் குறிப்பதாயிற்று. முற்காலத்தில் தகுந்த எழுதுகருவிகள் இல்லாமை, எழுத்துப் பணியில் சுருக்கம், பிரதிகள் எடுப்பதில் சிரமம், மனப்பாடம் செய்யும் வழக்கத்தின் தேவை, உணர்ச்சி வெளியீட்டிற்கு உகந்த நிலை என்னும் காரணங்களால் செய்யுள் வழக்கில் நிலைபெற்றிருந்தது. உரைநடையின் தோற்றமும் அவை காலந்தோறும் வளர்ந்து வந்த வளர்ச்சியையும் இக்கட்டுரையில் காண்போம்.

உரைநடை விளக்கம்

இலக்கிய மரபு கெடாமல் கருத்தை விளக்க செய்யுள் நடையின்றி உள்ளதை உள்ளப்படி விளக்கிக் காட்டுவது உரைநடை ஆகும். கருத்தினை விளக்கப் பொருத்தமாக செய்திகளைக் கோர்த்து விளக்கியுரைப்பது உரைநடை எனலாம். அச்சுபொறிகளின் வரவு உரைநடை பெருகக் காரணமாயிற்று

உரைநடையின் தொன்மை

பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் உரைநடை வகைகளைக் குறிப்பிடுகிறது. இறையனார் களவியல் உரை, சிலப்பதிகாரம் போன்றன உரைநடையின் தொன்மையைப் பறைசாற்றுகின்றன.

தொல்காப்பியர் கூறும் உரைநடை வகை

 தொல்காப்பியர் நான்கு வகை உரைநடைகளைக் குறிப்பிடுகிறார். அவையாவன,
1.
பாட்டிடை வைத்த குறிப்பு (உரையும் பாட்டும் கலந்த உரைநடை), 

2.  பா இன்று எழுந்த கிளவி (பாட்டிற்குக் கூறப்படும் உரை அல்லது செய்யுள் பொருள் விளக்கம்), 

3. பொருள் மரபில்லாப் பொய்மொழி (பொழுது போக்கிற்காகக் கூறப்படும் கட்டுக்கதைகள்), 

4. பொருளொடு புணர்ந்நகை மொழி (நகைச்சுவை கொண்ட கதைகள்) என்பனவாகும்.  

இவற்றுள் பாட்டிடை வைத்த குறிப்பு என்ற வகைக்கு பெருந்தேவனார் பாடிய பாரதம், தகடூர் யாத்திரை என்னும் இரண்டையும் எடுத்துக்காட்டாகக் கூறலாம்.  

சிலப்பதிகாரத்தில் உரைநடை

சிலப்பதிகாரம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றழைக்கப்படுகின்றது. சிலப்பதிகாரத்தில் "உரை பெறு கட்டுரை", "உரைப்பாட்டு மடை" என்ற காதைகளில் இடையிடையே உரைநடை காணப்பெறுகின்றன.  இவை  தொடக்ககால உரைநடைக்குச் சான்றாகின்றன.

இறையனார் களவியல் உரை

2-ஆம் நூற்றாண்டில் வாய்மொழியாகத் தோன்றி 8 ஆம் நூற்றாண்டில் இது எழுதப்பெற்றது என்பர். இறையனார் களவியல் என்னும் நூலுக்கு நக்கீரர் எழுதிய உரை ஆகும். இவ்வுரைநடை இக்காலத்தில் வழங்கும் வசன கவிதை போன்று உள்ளது.

உரையாசிரியர்கள் உரைநடை

தமிழ் உரைநடை வளர்ச்சி அடைவதற்குக் காரணமாக இருந்தவர்கள் உரையாசிரியர்கள் ஆவார். இவர்கள் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களுக்கும் சங்க இலக்கியங்களுக்கும் காப்பியங்களுக்கும் உரை எழுதினர்.  அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாக விளங்கியவர்கள் இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகியோர் ஆவார். இவர்கள் அனைவரும் தொல்காப்பியத்திற்கு உரை எழுதினர். நச்சினார்க்கினியர் சீவக சிந்தாமணி, பத்துப்பாட்டு, கலித்தொகை ஆகியவற்றுக்கும் உரை எழுதினர்.  அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதினார். திருக்குறளுக்கு பரிமேலழகர் முதலான பதின்மர் உரை எழுதினர்.

பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களை எளிதல் கற்க உரையாசிரியர்களின் உரை மிகவும் பயன்பெற்றது.

மணிப்பிரவாள நடை 

பல்லவர் காலத்தில் சமணர்களும் பௌத்தர்களும் வடமொழியைத் தமிழில்   புகுத்தி புதிய உரைநடையை உருவாக்கினர்.  ஸ்ரீபுராணம், கத்திய சிந்தாமணி என்பவை இந்நடைக்குச் சான்று ஆகும். இந்நடையைப் பிற்காலத்தில் வைணவர்கள் வளர்க்கத் தொடங்கினர். அவர்களின் உரைநடை ஒன்பதாயிரம் படி, பதினாயிரம் படி, நூறாயிரம் படி என்னும் பெயர்களில் உள்ளன.

கல்வெட்டுக்களில் உரைநடை

தமிழில் கிடைக்கும் முதல் கல்வெட்டு கி.பி. 5 அல்லது 6ஆம் நூற்றாண்டில் தோன்றிய திருநாதர்குன்றத்துக் கல்வெட்டு என்பர். இதிலும் மணிப்பிரவாள நடையே உள்ளது. பிற்காலச் சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள் தமிழ்உரை நடையில் உள்ளன. இக்காலத்தில் தோன்றிய மெய்க்கீர்த்திகளும் தமிழில் வழங்கப்பட்டுள்ளன.

17ஆம் நூற்றாண்டு உரைநடை

17 ஆம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சி நடைபெற்றது. இக்காலத்தில் நிரம்ப அழகியதேசிகர், மயிலேறும் பெருமாள், சங்கர நமச்சிவாயர் ஆகியோர் இக்காலத்தில் உரைநடையை வளர்த்தனர்.

ஐரோப்பியர் வரவால் அச்சுப்பொறி உருவாக்கப்பெற்றது. இதனால் உரைநடை வேகமாக வளர்ந்தது. இந்திய மொழிகளில் முதன் முதலில் தமிழில்தான் அச்சுநூல் உருவாகியது.

 கிறிஸ்துவோபதேசம் என்னும் நூல் அச்சான முதல் தமிழ் நூலாகும். தத்துவ போதகர் மிகுதியாஉரைநடை நூல்களை எழுதியுள்ளார். சீகன் பாலகு  ஐயர் "தமிழ் இலத்தீன் ஒப்பிலக்கண ஆய்வு" நூலை எழுதினார்.

இக்காலத்தில் வாழ்ந்த ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பும் அச்சிடப்பெற்றது. சிவப்பிரகாச சுவாமிகள் "தருக்க பரிபாஷை' என்னும் உநைடை நூலை எழுதினார்.

18-ஆம் நூற்றாண்டு உரைநடை

  இக்காலத்தில் வீரமாமுனிவர் வேதியர் ஒழுக்கம்,  பரமார்த்த குருகதை போன்ற உரைநடை நூல்களை வெளியிட்டார். சிவஞான முனிவர் சிவஞான போதம், நன்னூல் உரை போன்ற உரைநூல்களைத் தந்தார். விக்கிரமாதித்தன் கதை, இராமாயண, பாரத வசன நூல்கள் இக்காலத்தில் தோன்றின.

19 ஆம் நூற்றாண்டு உரைநடை

தாண்டவராய முதலியாரின் பஞ்சதந்திரக் கதை, வீராசாமிச் செட்டியாரின்  விநோதரச மஞ்சரி, வள்ளலாரின் மனுமுறை கண்ட வாசகம் போன்றன இக்காலத்தில் தோற்றம் பெற்றன. மேலும் இக்காலத்தில் ஆறுமுகநாவலர் இலக்கண வழுவின்றி எளிய நடையில் பல உரைநடைநூல்களை  ஆக்கியுள்ளார். தமிழின் முதல் மூன்று நாவல்கள் இக்காலத்தில் தோன்றின.

உரைநடையின் வளர்ச்சி

20 ஆம் நூற்றாண்டு தொடங்கி இக்காலம் வரையுள்ள காலத்தை  உரைநடையின் வளர்ச்சி காலம் எனலாம். இக்காலத்தில் எல்லா துறை சார்ந்தும் பல்வேறு வகையான உரைநடை நூல்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன.

பாரதியார் 

சிறிய தானியம் போன்ற மூக்கு, சின்னக்கண்கள், சின்னத்தலை, வெள்ளைக் கழுத்து, அழகிய மங்கல வெண்மை நிறமுடைய பட்டுப்போர்த்திய வயிறு, இவ்விதமான உடலைச் சுமந்து கொண்டு என் வீட்டில் இரண்டு உயிர்கள்  வாழ்கின்றன என்பன பாரதியார் எழுதிய உரைநடைக்குச் சான்றாகும்.

.வே.சா

எளிய நடையில் பழகு தமிழ்ச் சொற்களைக் கொண்டு பல உரைநடை நூல்களை எழுதியவர். மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம், புதியதும் பழையதும், கண்டதும் கேட்டதும், நினைவு மஞ்சரி, என் சரித்திரம் போன்ற உரைநடை நூல்களை இயற்றி உரைநடைத் தமிழுக்கு ஆக்கம் சேர்த்தவர் உ.வே.சா. ஆவார்.

மறைமலையடிகள்

தனித்தமிழ் நடையில் எழுதுவதையே தன் மூச்சாகக் கொண்ட அடிகள் தன் பெயரைக் கூடத் தனித்தமிழாக்கிக் கொண்டார். இலக்கிய விளக்கங்கள், சமய தத்துவம், வரலாறு, புதினம் ஆகிய அனைத்திலும் தனக்கென உயரிய தனித்தமிழ் நடையில் எழுதியவர். மாணிக்கவாசகர் வரலாறும் காலமும், குமுதவல்லி, மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை, முல்லைப்பாட்டு ஆராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி என்னும் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். தனித் தமிழ் நடைக்குத் தந்தை எனப் போற்றப்பட்டவர்.

திரு.வி..

சின்னஞ்சிறு வாக்கியங்களால் ஆன அழகிய இனிய தெளிந்த நடை திரு.வி. வின் நடையாகும்.

செய்தித்தாள் துறையில் அழகு தமிழைப் பயன்படுத்தியவர்.     இவர் தலையங்கம் முதல் அனைத்துப் பகுதிகளையும் அனைவருக்கும் புரியும்படி நல்ல தமிழில் எழுதினார். இவர் பெண்ணின் பெருமை, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், முருகன் அல்லது அழகு போன்ற நூல்களை எழுதியுள்ளார்.  

டாக்டர் மு..

நடையழகில் திரு.வி..வைப் பின்பற்றிப் படைப்பிலக்கியம், திறனாய்வு,     இலக்கிய ஆராய்ச்சி, மொழியியல், நாடகம் முதலிய எல்லா துறைகளிலும் எழுதியவர். நற்றிணைச் செல்வம், குறுந்தொகை விருந்து, நெடுந்தொகை விருந்து போன்ற எண்ணற்ற இலக்கிய ஆய்வு நூல்களை உருவாக்கியவர்.  

ஆறுமுக நாவலர் (1822-1889)

யாழ்ப்பாணத்து நல்லூரில் பிறந்தவர். இவர் சென்னையில் தங்கி அச்சுக்கூடம் நிறுவித் நிறுவித் தமிழ்ப் பணி ஆற்றினார். திருவாவடுதுறை ஆதினம் இவருக்கு நாவலர் பட்டம் வழங்கியது. தமிழில் சிறுபிழை கூட ஏற்படாதவாறு நூல்களைப் பதிப்பித்தார். இலக்கண வினாவிடை என்ற உரைநடை எழுதியுள்ளார். உரைநடையின் தந்தை என்றழைக்கப் பெற்றார்.    

சி.வை தாமோதரம் பிள்ளை (1832-1901) 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். "தினவர்த்தமானி" இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர். மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றியவர். நீதிநெறி விளக்கம், தொல்காப்பியச் சொல்லதிகாரச் சேனாவரையர் உரை, வீரசோழியம், திருத்தணிகைப் புராணம், இறையனார் அகப்பொருள், கலித்தொகை,  இலக்கண விளக்கம், சூளாமணி ஆகியவற்றைச் செம்மையாகப் பதிப்பித்தார். இவர் எழுதிய புதினம் காந்தமலை அல்லது கற்பின் மாட்சி ஆகும். மேலும், இவர் தயதாரகை என்னும் இதழுக்கும் ஆசிரியராக விளங்கினார்.

.வி. கனக சபைப் பிள்ளை (1855-1906)

1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் என்னும் நூலை எழுதினார். பழந்தமிழ்ச் சுவடிகளைத் தேடித் தொகுத்தார். இவர்  தாம் தேடித் தொகுத்த பத்துப்பாட்டு, புறநானூறு போன்ற நூல்களை உவேசா விடம் பதிப்பிக்க அளித்தார்.

சுவாமி விபுலானந்தர் (1892-1947)

அறிவியல் கற்ற பேரறிஞர் இலக்கியம், சமயம், தத்துவம், இசை எனப் பலதுறை அறிவும் பெற்றார். இவர் மதங்க சூளாமணி என்னும் நாட்டிய இலக்கண நூலை இயற்றியுள்ளார்.

சிலப்பதிகார ரங்கேற்றுக் காதையில் கூறப்படும் யாழ் பற்றிய செய்திகளை விரித்து யாழ்நூல் இயற்றியுள்ளார்.

.சி. கந்தையா பிள்ளை (1893-1967)

இவர் பத்துப்பாட்டு, அகநானூறு, பதிற்றுப்பத்து, கலிங்கத்துப்பரணி, பரிபாடல், கலித்தொகை நூல்களை வசன நடையில் எழுதியுள்ளார். தமிழர் சமயம் எது?, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தமிழர் போன்ற ஆராய்ச்சி நூல்களை எழுதினார்.

ரா.பி. சேதுப்பிள்ளை

சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பெறும் ரா.பி.சேதுப்பிள்ளை ஊரும் பேரும், வேலும் வில்லும், செந்தமிழும் கொடுந்தமிழும் தமிழின்பம், வீரமாநகர் போன்ற நூல்களை இயற்றி உரைநடைக்கு ஆக்கம் அளித்துள்ளார்

பிற ஆசிரியர்கள்

புதுமைப்பித்தன், கல்கி, அகிலன், அண்ணாதுரை, அரசஞ் சண்முகனார், செல்வக் கேசவராய முதலியார், பண்டிதமணி கதிரைவேற்பிள்ளை ரா.பி. சேதுப்பிள்ளை, வையாபுரிப் பிள்ளை, சைமன் காசிச்செட்டி போன்ற எண்ணற்ற தமிழ்ப் பெருமக்கள் உரைநடை வளர்ச்சிக்கும் பெரும் பங்கு ஆற்றியிருக்கிறார்கள். லா.. ராமாமிரதம், ஜெயகாந்தன், கோவி மணிசேகரன், தி. ஜானகிராமன் ஆகியோர் படைப்பிலக்கியங்களில் உடைநடையை வளர்த்தனர்

விமர்சன நூல்கள் 

20ஆம் நூற்றாண்டில் விமர்சன உலகில் சிறந்து விளங்கிய கைலாசபதி ஓப்பியல் இலக்கியம், அடியும் முடியும், தமிழ் நாவல் இலக்கியம், இரு மகாகவிகள் போன்ற ஒப்பற்ற ஆராய்ச்சி நூல்களைத் தந்துள்ளார். கா. சிவத்தம்பியும் இத்துறையில் எழுதியுள்ளார்.

முடிவுரை

தொல்காப்பியம் தொடங்கி தற்காலம் வரை உரைநடைகள் பெருகி வளர்ந்து வருகின்றமையைக் காண முடிகிறது

-------------------------------------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி