நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
நாடகம்
முன்னுரை
நாடு+ அகம் = நாடகம், அகத்தை நாடுவது நாடகம் என்பர். தமிழ்மொழி இயல்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்றும் முத்தமிழைக் கொண்டது. இலக்கிய இலக்கணங்கள் சேர்ந்தது இயல்தமிழ் என்றும் இசையோடு கூடியப் பாடல்களை இசைத்தமிழ் என்றும், இயலும் இசையும் கலந்து நடித்துக் காட்டப்படுவது நாடகத் தமிழ் ஆகும்.
நாடகம், நாட்டின் நாகரிகக் கண்ணாடி, பாமரர்களின் பலகலைக்கழகம், கலைக்கரசு என்றும் போற்றப்படும் சிறப்பினையுடையது. எண்வகை உணர்ச்சிகளைத் தூண்டி ஒருவர் தம் மெய்ப்பாடு தோன்ற நடித்து உள்ளத்தில் புதைந்து கிடக்கும் அன்பையும் அறிவையும் தூய்மையையும் பண்படுத்தும் மகத்தான கலை வடிவமே நாடகக் கலையாகும்.
தமிழ் நாடகத்தின் தொன்மை
தொல்காப்பியத்தில் வரும் ‘நாடக வழக்கினும்’ என்னும் சொல்லாட்சி நாடகத்தின் தொன்மையை விளக்கும். அகத்தியம், குணநூல், கூத்த நூல், சயந்தம், மதிவாணர் நாடகத் தமிழ், முறுவல் போன்ற நாடக நூல்கள் பழந்தமிழகத்தில் வழக்கில் இருந்தன என்பதினை அடியார்க்கு நல்லார் தன் சிலப்பதிகார உரையில் குறிப்பிட்டுள்ளார்.
சங்க காலத்தில் குரவைக் கூத்து, துணங்கைக் கூத்து, வள்ளிக்கூத்து, ஆடிப்பாவை போன்ற கூத்துவகைகள் வழக்கத்தில் இருந்துள்ளன என்பதினைச் சங்கப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன.
இருவகை நாடகங்கள்
நாடகத்தை வேத்தியல், பொதுவியல் என இரண்டாகப் பகுக்கலாம். அரசர்க்கென ஆடப்படுவது வேத்தியல் என்றும் பொது மக்களுக்கென ஆடுவது பொதுவியல் என்றும் குறிப்பிட்டனர்.
நாடகத்தின் தோற்றம்
தமிழ் நாடகம் தொடக்க காலத்தில் மதங்களின் காரணமாக உண்டானது என்பர். திருவிழாக் காலங்களில் ஆடல் பாடல் இரண்டையும் சேர்த்து நிகழ்த்துவதால் நாடகம் உண்டாயிற்று. பின்னர் பாடல் இசை, உரைநடை இவற்றோடு
உரையாடல்களும் சேர்க்கப்பட்டு நாடகமாயின
சங்கம் மருவிய காலத்தில் நாடகம்
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய சிலப்பதிகாரம் முழுவதும் நாடகத் தன்மை கொண்டது. சிலப்பதிகாரத்தில் நாடகம் என்ற சொல் பல இடங்களில் வந்துள்ளது. மேடை அமைப்பு, திரைசீலைகள், அபிநயங்கள், பாடலாசிரியன், தண்ணுமையாசிரியன், யாழ் ஆசிரியன், அரங்கில் ஆடும் முறை, பண் இசைக்கும் முறை,மாதவி ஆடிய பதினோர்வகை கூட்டு ஆடல், வரிப்பாடல்கள், எண்வகைக்கூத்து, நால்வகைப் பண்கள் போன்றவற்றையும் சிலப்பதிகாரம் மூலம் அறியலாம்.
பல்லவர் கால நாடகங்கள்
இக்காலத்தில் இன்னிசைக்கூத்து, வரலாற்றுக் கூத்து என்னும் இருவகை நாடக மரபுகள் காணப்பட்டன. மகேந்திர வர்மன் எழுதிய மத்தவிலாச பிரகடனம் என்னும் நாடகநூல் சிறப்பு பெற்றிருந்தது.
சோழர் கால நாடகங்கள்
சோழர் காலத்தில் இராஜராஜனின் வெற்றி சிறப்பைப் பாராட்டும் இராஜராஜவிஜயம், இராசராசேசுவரம் போன்ற நாடகங்கள் நடித்துக் காட்டப்பெற்றது. இந்நாடகத்தில் நடித்தவர்களுக்கு ராசராச நாடகப்பிரியன் என்று பட்டம் வழங்கப்பெற்றது என்பதைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. சித்திரைத் திருவிழாவில் சாக்கைக் கூத்தினைப் பெண்கள் ஆடினர் எனத் தஞ்சை மானம்பாடிக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
கமலாயபட்டர் பூம்புலியூர் நாடகம் நடித்து இறையிலி நிலம் பெற்றதாகத் தென்னாற்காடு கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
17, 18 ஆம் நூற்றாண்டுகளில் நாடகங்கள்
இந்நூற்றாண்டில் கோயில்களில் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நொண்டி நாடகங்கள் தோன்றின. திருச்செந்தூர் நொண்டி நாடகம், சீதக்காதி நொண்டி நாடகம், சாத்தூர் அய்யன் நொண்டி நாடகம், திருவிடைமருதூர் நொண்டி நாடகம், ஞான நொண்டி நாடகம் போன்றவை குறிப்பிடத்தக்க நொண்டி நாடகங்களாகும்.
பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய பெரும்பாலான நாடகங்கள் மகாபாரதம், இராமாயணம் முதலிய காவியங்களின் கதைக் கூறிலிருந்து படைக்கப்பட்டன. அருணாச்சலக் கவிராயரின் இராமநாடகம், அசோமுகி நாடங்கள் பாட்டு வடிவில் இயற்றப்பெற்றன. திருவிளையாடற் புராணம், கந்தபுராணம், வள்ளித்திருமணம், பெரியபுராணம், பகவத்கீதை கதைகள் போன்ற சமய தொடர்பான நாடகங்களும் நடிக்கப்பட்டன. குறவஞ்சி, பள்ளு வகை நாடகங்களும் நடித்துக் காட்டப்பெற்றன.
19, 20 ஆம் நூற்றாண்டுகளில் நாடகங்கள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சமுதாயத்தை மையமிட்ட நாடகங்கள் பல தோன்றின. சமூக நாடகங்களுக்கு முன்னோடியாகத் திகழ்வது 1890-ல் முத்துக்குட்டிப் புலவரால் இயற்றப்பட்ட தேவசகாயபிள்ளை வாசகப்பா என்னும் நாடகம் ஆகும்.
காசி விசுவநாத முதலியார் இந்நூற்றாண்டின் புகழ் பெற்ற நாடக ஆசிரியர்களுள் ஒருவர். இவர் இயற்றிய நாடகங்கள் ஆண் பெண் சமத்துவம், விதவை மறுமணம், உடன் கட்டை ஏறுதல் செல்வந்தர்கள், ஏழைகளின் நிலை ஆகியனவற்றை சுட்டிக்காட்டும் தன்மையில் அமைந்திருக்கும்.
இவர் எழுதிய தாசில்தார், டம்பாச்சாரி விலாசம், கூலிக்கு மாரடித்த கூத்தாடிச்சியின் நடிப்பு, பிரம்ம சமாஜம் போன்றன சிறப்பு பெற்ற நாடகங்கள் ஆகும்.
20 ஆம் நூற்றாண்டில் நாடகத்தின் வளர்ச்சி
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெருக்கூத்து என்று நடிக்கப்பட்ட நாடகங்கள் வளர்ச்சி அடைந்து இன்றைய நாடக வடிவம் பெற்றது. இந்நூநூற்றாண்டின் மேடை நாடகத்திற்கு வழிவகுத்தவர் பு. கோவிந்தசாமிராவ் அவர்கள் ஆவார்.
இவர் தெருக்களிலும் நான்கு சந்துகளிலும் வெட்டவெளியிலும் நடைபெற்று வந்த நாடகங்களை அரங்கிற்குள் கொண்டு வந்தார். 1891-ம் ஆண்டுக்குப் பின்னர் வெளிவந்த நாடகம் சுந்தரம் பிள்ளையின் மனோன்மணீயம் என்பதாகும்.
இக்காலக் கட்டத்தில் கூட்டத்தில் தோன்றியவர் சங்கரதாஸ் சுவாமிகள். இவர் நாடக உலகைச் சீர்திருத்தினார். எனவே இவரை நாடக உலகின் இமயம் என்றும் நாடகத் தந்தை என்றும் அழைப்பர். சங்கரதாஸ் சுவாமிகளின் காலத்தில் வாழ்ந்தவர்கள் புராணம், இதிகாசம், கர்ணப்பரம்பரைக் கதைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நாடகங்களை எழுதிவந்தனர். சுவாமிகள் இயற்றிய பவளக்கொடி, நல்லதங்காள், வள்ளித்திருமணம், ஞான சவுந்தரி போன்ற நாடகங்கள் புகழ் பெற்றவை.
இவரால் பல பாலர் சபைகள் தோன்றின. புராண இதிகாசக் கதைகள் தோன்றிய போதும் மேலை நாட்டுப் பாணியைப் பின்பற்றியும் நாடகங்கள் எழுந்தன. இவர் நடிகவேள், நவாப் டி.எஸ். இராசமாணிக்கம், டி.கே.எஸ்.சகோதரர்கள் போன்ற நாடகக் கலைஞர்களை உருவாக்கியுள்ளார்.
நாடக நடிகர்களைப் பற்றிய இழிவான நிலையினை மாற்றிய பெருமை பம்மல் சம்பந்த முதலியாரையே சாரும். சம்பந்த முதலியாரின் சுகுண விலாச சபை இத்துறையில் பெரும் பணியாற்றியது. இச்சபை மேலை நாட்டு நாடகங்களுக்குச் சமமாகத் தமிழ் நாடகங்கள் தோன்ற வேண்டும் என்பதற்காகப் புதிய புதிய நாடகங்களை நடத்தினர்.
சங்கரதாஸ் சுவாமிகளையும் சம்பந்த முதலியாரையும் சார்ந்து நூற்றுக்கணக்கான நாடக இயக்கங்கள் தோன்றின. மகளிர் நாடகக்குழுக்கள், பாலர் சபைகள், மங்கள் பாலகான சபா, ஸ்ரீராம பாலகான சபா, என்.எஸ்.கே. நாடக சபை, சக்தி நாடக சபைகள் உருவாகி நாடகக் கலைக்குப் புத்துயிர் ஊட்டின.
பேராசிரியர் சுந்தரம்பிள்ளை (1855-1897)
இவர் தத்துவப் பேராசிரியர். ஆங்கிலத்தில் லிட்டன் பிரபு எழுதிய இரகசிய வழி (The secret way) என்னும் கதைப் பாடலைத் தழுவி மனோன்மணியம் என்னும் நாடகக்
காப்பியத்தை இயற்றினார். இது படிப்பதற்காக எழுதப்பட்ட நாடகமாகும்.
மேனாட்டுத் திறனாய்வாளர்கள் கூறும் நாடக இலக்கணங்களைப் பெற்ற முதல் நாடகம் இதுவாகும். இந்நாடகத்துள் நாடகமாகச் 'சிவகாமி சரிதம்" என்ற கதைப்பாடலும் உள்ளது. ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது. தமிழக அரசு திருநெல்வேலியில் அமைந்துள்ள பல்கலைக் கழகத்திற்கு "மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம்" எனப் பெயர் சூட்டி இவரைப் பெருமைபடுத்தியுள்ளது.
பரிதிமாற் கலைஞர் (1870-1903)
இவரது இயற்பெயர் சூரிய நாராயணசாஸ்த்திரி. தனித்தமிழ்ப் பற்றின் காரணமாகத் தம்முடைய பெயரைப் "பரிதிமாற் கலைஞர்" என மாற்றினார். தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றவர்.
"நாடகவியல்" என்ற நாடக இலக்கண நூலை (1897) எழுதினார். தமிழில் தோன்றிய முதல் நாடக இலக்கண நூல் இதுவேயாகும். வடமொழி நூலான "முத்ரா ராக்ஷஸம்” என்ற நூலைத் தமிழில் மொழி பெயர்த்தார்.
கலாவதி, ரூபாவதி, மானவிஜயம், சூர்ப்பனகை போன்ற நாடகத்தை எழுதியுள்ளார்.
தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்
இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர். பல நாடகக் குழுக்களில் ஆசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். நாடக உலகில் தோன்றிய பண்டைய நாடகங்களை ஒழுங்குபடுத்தியும் புதிய நாடகங்கள் பலவற்றை எழுதியும் தமிழ்நாடகக் கலைக்கு அரும்பணி புரிந்தவர். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேடை நாடகங்களைக் காத்தவர்.
தமிழ் நாடகத் தலைமையாசிரியர், தமிழ் நாடக உலகின் தந்தை, தமிழ் நாடக மேதை" எனப் பலராலும் பாராட்டப் பெற்றவர். இவர் அபிமன்யு சுந்தரி, பவளக்கொடி, சதிஅநுசியா, சீமந்தனி, பிரகலாதன், சிறுத்தொண்டர், சத்தியவான் சாவித்திரி, வள்ளி திருமணம் போன்ற 40 நாடகங்களை எழுதியுள்ளார்.
வடமொழி நாடகமாகிய ''மிருச்சகடிகம்" என்னும் நூலைத்
தமிழ்ப்படுத்தியுள்ளார். மேலும் சேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியத், சிம்பலைன் போன்ற நாடகங்களையும் மொழி பெயர்த்துள்ளார்.
1910-இல் சுவாமிகள் "சமரச சன்மார்க்க நாடக சபை"யைத் தொடங்கினார். இதன் மூலம் 'பாலர் நாடக சபைகள்" தோன்றக் காரணமாக இருந்தார். டி.கே.எஸ். சகோதரர்கள், கிட்டப்பா, மாரியப்பா போன்றோர் இவருடைய மாணவர்களே
சுவாமிகளின் கலைத்திறன் கண்டு வியந்த யாழ்ப்பாணம் தமிழ்ச் சங்கத்தார் "வலம்புரிச் சங்கம் ஒன்றைப் பரிசளித்துப் பாராட்டினர்.
பம்மல் சம்பந்த முதலியார் (1973-1919)
1891-ல் சென்னையில் "சுகுணவிலாச சபா" என்னும் நாடகச் சங்கத்தை நிறுவினார். அவரே பல நாடகங்களை இயற்றி, இயக்கி நடிக்கவும் செய்தார். இவர் 90-க்கும் அதிகமான நாடகங்களை எழுதியிருக்கிறார். ஆங்கில நாடகங்கள் பலவற்றைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கின்றார் வடமொழியிலுள்ள காளிதாசரின் "மாளவிகாக்னிமித்திரம்", ஹர்ஷவர்த்தனரின் "இரத்தினாவளி" முதலிய நாடகங்களையும் மொழி பெயர்த்துள்ளார். இவருடைய "மனோகரா" நாடகம் திரைப்படமாகவும் வந்துள்ளது. "வேதாள உலகம், சபாபதி, ரத்னாவளி, புஷ்பவல்லி, கள்வர் தலைவன்" முதலிய நாடகங்கள் குறிப்பிடத்தக்க சிறப்புப்
பெற்றவை
நாடகத் துறையில் தாம் பெற்றிருந்த அனுபவத்தையும், ஆர்வத்தையும், பயிற்சியையும் நூல்வடிவில் தந்துள்ளார். "நாடக மேடை நினைவுகள்" (6 தொகுதிகள்), "நான் கண்ட நாடகக் கலைஞர்கள்", "நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி?" போன்றவை ஆகும்.
ஆங்கில அரசு "இராவ்பகதூர்" பட்டமும், இந்திய அரசு "பத்மபூஷன்" விருதும் வழங்கியது. "தமிழ் நாடகத்தின் தந்தை" என அழைக்கப்பெற்ற இவரைத் "தமிழ் சேக்ஸ்பியர்" என்றும் கூறுவர்
எம். கந்தசாமி முதலியார்
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, பாலாமணி நாடகக் கம்பெனி, ஸ்ரீபாலசண்முகானந்தா சபா போன்ற பல நாடகக் குழுக்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். திரு ஜே.ஆர் ரங்கராஜீ அவர்களின் இவர் புகழ்பெற்ற நாவல்களான இராஜாம்பாள், இராஜேந்திரா, ஆனந்த கிருஷ்ணன், மோகன சுந்தரம் போன்றவற்றை நாடகங்களாக்கி மேடைக்குக் கொண்டு வந்தவர். நடிப்புக் கலை பயிற்றுவிப்பதில் தலை சிறந்து விளங்கிய இவர் "நாடக மறுமலர்ச்சித் தந்தை" என அழைக்கப்படுகின்றார்.
தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர்
இந்திய நாட்டின் விடுதலையை மையமாகக் கொண்டு நாடகம் இயற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர் தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர் ஆவார். இவரது கதரின் வெற்றி, பம்பாய் மெயில், தேசியக்கொடி போன்ற நாடகங்கள் சமூக நாடகங்கள் ஆகும். இராஜா பர்த்ருஹரி கற்பனை கலந்த சரித்திர நாடகமாகும்
நாடக பாலாமணி அம்மையார்
முதன்முதலாகப் பெண்களைக் மேடைக்கு ஏற்றிய பெருமைக்குரியவர். கும்பகோண முழுக்க 60க்கும் அதிகமான பெண்களைக் கொண்ட நாடகக் கம்பெனியை நடத்தியவர். நாடகப் பணிக்காகவே தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். பெட்ரோமார்க்ஸ் விளக்கினை அறிமுகப்படுத்தியவர். "தாரரச சாங்கம், மனோகரா" போன்ற நாடகங்கள் இவருடைய நாடகக் கம்பெனியால் நடத்தப்பட்டன. இவருடைய நாடகத்தைப் பார்ப்பதற்காகவே பாலாமணி ஸ்பெஷல் ரயில் விடப்பட்டதாகக் கூறுவர்.
நவாப் இராஜ மாணிக்கம்
இவர் 1933 இல மதுரை தேவி பாலவிநோத சங்கீத சபையைத் தோற்றுவித்தார். பங்கிம் சந்திர சட்டர்ஜியின் "துர்கேஷ் நந்தினி" யைப் "பிரேமகுமாரி" என்ற பெயரில் நாடகமாக்கினார். சி.ஏ. அய்யா முத்துவின் "இன்ப சாகரனை" நாடகமாக்கியும் இவருடைய நாடக சபையார் நடித்தனர். 'இராமாயணம், தசாவதாரம், குமார விஜயம், சபரிமலை ஐயப்பன், சக்திலீலா, பக்த ராமதாஸ்" முதலிய நாடகங்களை மிகச் சிறப்பான முறையில் நடத்திப் புகழ் பெற்றார்.
இரா. வேங்கடாசலத்தின் "முதல் முழக்கம்", டி.கே.முத்துச்சாமியின் "குமஸ்தாவின் பெண்", வே. சாமிநாம சர்மாவின் "பாணபுரத்து வீரன்", விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, தேசிங்கு, 'சிவாஜி' ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை நாடகங்களாக எழுதினர்.
புகழ் பெற்ற நாடகக் கலைஞர்கள்
நாடக சபைகள் மூலம் கலைஞர்கள் தோன்றினார்கள். அவர்களுள் ஒருவர் எம்.ஜி.ஆர்.. இவர் நாடகக்குழு ஒன்றை அமைத்து அட்வகேட் அமரன், இன்பக்கனவு போன்ற சமூக சீர்த்திருத்த நாடகத்தில் நடித்து சமூகத் தொண்டாற்றினார்.
நடிகர் திலகம் என்று சொல்லப்படும் செவாலியே சிவாஜி தன் நடிப்பிற்காகப் பல பெற்றவர். சந்திரமோகன் என்ற நாடகத்தின் நடிப்பினைப் பாராட்டி ஈ.வெ.ரா. சிவாஜி என்ற பட்டத்தை இவருக்கு அளித்தார்.
இவரின் நடிப்புத் திறமையால் திரைப்படத்துறைக்குள் நுழைந்தார். திரைப்படத்தில் நடித்துக் கொண்டே சிவாஜி நாடக மன்றத்தை அமைத்து தேசபக்தன், வீரபாண்டிய கட்டபொம்மன், சிதம்பரனார், களம் கண்ட கவிஞன் போன்ற நாடகங்களை நடத்தியுள்ளார். இவர் நடித்து திரைப்படமாக எடுக்கப்பட்ட வியட்நாம் வீடு, தங்கப்பதக்கம் போன்றவை புகழ் பெற்றவை, நடிப்புத் துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். கலைஞர்களுக்கு நடிகர் திலகமாக, இமயமாக விளங்கினார்.
நடிகவேள் எம்.ஆர் ராதா தம் நாடகங்களின் மூலம் பல சமுதாயக் கருத்துகளை நகைச்சுவையுடனும், நையாண்டியுடனும் கூறியுள்ளார். இவர் நாடகசபா அமைத்து அதன் மூலம் ஈவேராவின் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பியவர். பத்தில் திருவாரூர் தங்கராசு இயற்றிய கீமாயணம், இரத்தக்கண்ணீர், காட்டிச் தூக்கு மேடை போன்ற நாடகங்களில் புரட்சி செய்தவர்.
இவர்களைப் போலவே பலர் நாடக உலகிற்குச் சேவை செய்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக மேஜர் சுந்தாராஜன், சோ, வி.கே.ராமசாமி, கண்ணையா மனோகர், நாகேஷ், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.என். நம்பியார். தங்கவேல், மதுரம் மனோரமா பேன்றோரைக் குறிப்பிடலாம்.
நாட்டிய நாடகங்கள்
நாட்டிய நாடகங்களின் மூலம் புகழ் பெற்றவர்கள் கமலா, பத்மினி, வைஜெயந்தி மாலா, இராஜசுலோசனா, மனோரமா, ஜெயலலிதா போன்ற நடிகையர்கள். இவர்கள் தங்களுக்கென்று தனித்தனி நாட்டிய குழுக்கள் அமைத்து நாடகங்களை நடத்தி வந்தனர்.
கமலாவின் சிலப்பதிகாரம், வள்ளிபாரதம், பத்மினியின் கண்ணகி, சாகுந்தலம், இராமாயணம், சந்திரகாந்தாவின் அனார்க்கலி, பொன்னியின் செல்வி, இராஜசுலோசனாவின் பத்மாவதி, பரிணயம், பஸ்மாகரமோகினி, ஞானப்பழம், ஜெயலலிதாவின் காவிரி தந்த கலைச்செல்வி, வைஜெயந்தி மாலாவின் ஆண்டாள் நாடகம் போன்றவை நாட்டிய குழுக்களின் நாடகங்களில் குறிப்பிடத்தக்கவை.
நாட்டிய நாடகங்களுக்காகவே தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் நடராஜ் சாகுந்தலா குழுவினர். இவர்களின் திருவள்ளுவர், பாஞ்சாலிசபதம் போன்றவை சிறப்பு மிக்க நாடகங்கள் ஆகும்.
அறிஞர் அண்ணா
சமூகத்தைச் சீர்த்திருத்தும் நோக்கில் நாடகத்தை வலிமை வாய்ந்த கருவியாகப் பயன்படுத்தியவர் அறிஞர் அண்ணா. இவர் ஏழைகளின் கண்ணீர், விதவையின் துயரம், மாந்தர்களின் செயல் போன்றவற்றை விளக்கி நாடகங்கள் படைத்தார். சந்திரோதயம், வேலைக்காரி, ஓர் இரவு, நல்ல தம்பி, காதல் ஜோதி போன்ற நாடகங்கள் இயற்றினார்.
கலைஞர் கருணாநிதி
தூக்குமேடை, நச்சுக்கோப்பை போன்ற நாடகங்களை உருவாக்கி மக்களிடையே விழிப்புணர்வு ஊட்டியவர். இவர் சாதி வெறி, மதுவின் கொடுமை, மூடப்பழக்க வழக்கங்கள், போன்றவற்றை எதிர்த்து எழுதியவர்.
நாடக வகைகள்
இருபதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நாடகங்களை பல வகையாகப் பிரிக்கலாம். 1. சமூக நாடகங்கள், 2. வரலாற்று நாடகங்கள், 3. இலக்கிய நாடகங்கள், 4. நகைச்சுவை நாடகங்கள், 5. புராண இதிகாச நாடகங்கள், 6. மொழிபெயர்ப்பு நாடகங்கள், 8. மேடை நாடகங்கள் 9. நவீன நாடகங்கள் எனப் பலவகையாகப் பிரிக்கலாம்.
இலக்கிய நாடகங்கள்
பாரதிதாசனின் சேரதாண்டவம், வ.சுப. மாணிக்கத்தின் மனைவியின் உரிமை, ஆறு. அழகப்பனின் நாடகச் செல்வம், கி.ஆ.பெ.விசுவநாதனின் தமிழ்ச்செல்வம் போன்றவை இவ்வகைக்குச் சான்றாகும்.
வரலாற்று நாடகங்கள்
வரலாற்று நிகழ்ச்சிகளை மையமிட்டு எழுந்த நாடகங்கள் வரலாற்று நாடகங்கள் எனப்படும். அரு. ராமநாதனின் இராசராச சோழன், மறைமலை அடிகளின் அம்பிகாவதி அமராவதி, மதுரைத் திருமாறனின் சாணக்கிய சபதம், இரா. வேங்கடாசலத்தின் இமயத்தில் நாம் போன்ற ய சிறந்த நாடகங்கள் வரலாற்று நாடகங்கள் எனப்பட்டன.
புராண இதிகாச நாடகங்கள்
புராணக் கதைகளாகிய அரிச்சந்திர புராணம், இராமாயணம், மகாபாரதம் போன்றன
சமுக நாடகங்கள்
சமுதாயத்தில் பெண்களுக்கு விதிக்கப்படும் கொடுமைகள், வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, அரசியல் சூழ்ச்சி, சாதி ஏற்றத்தாழ்வு, நாட்டின் பொருளாதாரம், நாட்டின் கலாச்சார பண்பாட்டு சீர்கேடு பற்றியும் சமூக நாடகங்கள் கூறுகின்றன. சந்திரோதயம், வேலைக்காரி, ஓர் இரவு, நல்ல தம்பி, காதல் ஜோதி போன்ற நாடகங்கள் இவ்வகையில் அடங்கும்.
மேடை நாடகங்கள்
மேடையில நடிக்கப்படும் நாடகங்கள் மேடை நாடகங்கள் எனப்படும். இன்று அவை நூல்களாக வடிவம் பெற்றுள்ளன. டி.கே.சண்முகம், கந்தசாமி முதலியார், எம்.ஆர்.ராதா, என் எஸ். கிருஷ்ணன், சிவாஜி, சகஸ்ரநாமம், பி.யூ.சின்னப்பா, கே.பி. சுந்தராம்பாள், கே.பாலச்சந்தர், தி.ஜானகிராமன், பி.எஸ். இராமையா ஆகியோர் தமிழ் நாடக மேடையில் சிறப்புற்று விளங்கினர்.
நவீன நாடகங்கள்
கூத்துப்பட்டறை, வீதி நாடக இயக்கம், நிஜ நாடக இயக்கம், பரிக்ஷா, அரூபம், தேடல், அரங்கம், ஆடுகளம், சென்னைக் கலைக்குழு, மௌனக்குரல், சென்னைப் பல்கலை அரங்கம் போன்ற நாடக இயக்கங்கள் வழி தமிழில் இன்று நவீன நாடகங்கள் வளர்ச்சி பெற்றுள்ளன.
பேரா.சே. ராமானுஜம், ந.முத்துசாமி, மு.இராமசாமி, இந்திராபார்த்தசாரதி, கே.ஏ.குணசேகரன், பிரசன்னா ராமசாமி, அ. மங்கை, பிரளயன், பரிக்ஷா ஞானி, முருகபூபதி, கருணாபிரசாத் போன்றோர் நவீன எழுச்சி மிக்க நாடகங்களைப் படைத்துள்ளனர்
இன்றைய நாடகத்தின் நிலை
நாற்சந்துகள் சந்திக்கும் இடங்களிலும் திருவிழா காலங்களிலும் அவ்வப்போது மேடைகள் அமைக்கப்பெற்று நாடகம் நடைபெற்று வந்தது. இவ்வாறு நடிக்கப் பெற்று வந்த நாடகம் இன்று எல்லா வசதிகளும் நிறைந்த அரங்குகளில் ஒளி, ஒலி அமைப்பு வசதிகளுடன் நடத்தப் பெற்று வருகின்றன. இந்நூற்றாண்டில் நாடகங்கள் பல்வேறு மாற்றங்களைப் பெற்றும், சமூகச் சிந்தனையுடனும் நடிக்கப்படுகின்றன. வானொலி, தொலைக்காட்சி போன்ற மக்கள் தொடர்பு சாதனங்களின் துணைக் கொண்டு புதுப்பொலிவடைந்துள்ளது எனலாம். இன்றும் மேலை நாடுகளில் நாடகங்கள் நிகழ்த்தப்பெறுகின்றன.
-------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக