திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்
திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்
முன்னுரை
தமிழ்மொழி, தமிழர், தமிழர் பண்பாடு ஆகியவற்றின் உயர்ச்சிக்காகவும், மீட்சிக்காகவும் தோன்றிய இயக்கங்கள் பல. அவற்றுள் முதன்மையானது திராவிட இயக்கம் ஆகும். சமுதாயத்தில் உள்ள சாதி வேறுபாடுகளை அகற்றி மூட நம்பிக்கைகளை போக்கிக் கல்வி, வேலைவாய்ப்பு, நீதி, சமத்துவம் ஆகிய எல்லா நிலைகளிலும் திராவிடர்கள் மேம்பாடு அடைய வேண்டும் என்னும் அடிப்படை குறிக்கோளை நோக்கமாகக் கொண்டு இயங்கியது திராவிட இயக்கம் ஆகும். இவ்வியக்கம் காலத்தில் தமிழ் மொழியின் சிறப்பினையும் வளர்ச்சியினையும் இக்கட்டுரை குறிப்பிடுகிறது.
திராவிட இயக்கத்தின் தோற்றம்
1916 நவம்பர் 20 ஆம் தேதி தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் அரசியல் கட்சி தோற்றம் பெற்றது. அக்கட்சி தன் கருத்துகளைப் பரப்ப இதழ்களைத் தொடங்கியது. Justice என்னும் ஆங்கில இதழ், ஆந்திரப் பிரகாசிகா என்னும் தெலுங்கு இதழையும் ஆரம்பித்து தங்கள் கருத்துகளை வெளிபடுத்தினர்.
Justice என்னும் ஆங்கில இதழ் செல்வாக்கு பெற்று விளங்கியது. இதனால் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் நீதிக்கட்சி என்னும் பெயரில் அழைக்கப்பெற்றது.
நீதிக்கட்சி சார்பாக 1917 ஆம் ஆண்டு திராவிடன் எனும் தமிழ் இதழ் தோற்றுவிக்கப்பெற்றது. தொடக்கத்தில் இதன் ஆசிரியராகத் திரு என். பக்தவத்சலம் இருந்தார். பின்னர் திரு.ஏ. சண்முகம்பிள்ளை ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தினார். அவரைத் தொடர்ந்து தந்தை பெரியார் பொறுப்பேற்றார். அவருக்குப் பின் திரு.கனக சங்கர கண்ணப்பர் ஆசிரியராக இருந்தார்.
இயக்கக் கொள்கைகளை விளக்க மேலும் குடியரசு என்ற இதழும் தொடங்கப்பெற்றது. சுயமரியாதையை வளர்க்க தோன்றிய இயக்கம் மூலம் தமிழ்மொழியும் வளர்ச்சி பெற்றது.
தந்தை பெரியார் ஈ.வெ. இராமசாமி
குடியரசு விடுதலை இதழ்கள் தமிழ் வளத்தைப் பெருக்கியவர் ஈ.வே.ரா ஆவார். தமிழ் எழுத்துகளில் சில சீர்திருத்தங்களைக் கொணர்ந்தார். அவர் நடையில் பேச்சுநடை கலந்து தருக்கமுறைப் பண்பினைக் கொண்டிருக்கும். மேடையிலும், தலையங்கக் கட்டுரையிலும் அவர் எளிய தமிழில் அனைவரும் கவரும் வண்ணம் நுண்மை கருத்துகளை எழுதினார். இவ்வாறு இதழ்களில் வெளிவந்தவற்றை வே ஆனைமுத்து தொகுத்து பெரியார் ஈ வெ. ரா சிந்தனைகள் என்னும் மூன்று பெரு தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.
அறிஞர் அண்ணா
அறிஞர் சி. என். அண்ணாதுரை தமிழ் மேடைப் பேச்சு நடையில் தனக்கென தனி முத்திரை பதிப்பித்தவர். அவர் புரட்சிகரமான நாடகங்களை எழுதி அதில் தாமே நடிக்கவும் செய்தார். ஓர் இரவு, வேலைக்காரி, சந்திர மோகன், நீதிதேவன் மயக்கம். கண்ணீர்த்துளி என்பன அவரின் புகழ்பெற்ற நாடகங்கள்.
இவர் சிறந்த இதழாசிரியர். திராவிட நாடு என்னும் வார ஏடு ஒன்றினையும் தொடங்கி நடத்தியவர். செவ்வாழை, பிடிசாம்பல், இரங்கூன் ராதா, பார்வதி பி.ஏ போன்ற சிறுகதை, நாவல்களை எழுதிச் சீர்திருத்த கருத்துகளை மக்களிடையே பரப்பினார். தம்பிக்கு என்று அவர் எழுதிய கடிதங்கள் சமுதாய சிந்தனைகளை எடுத்துரைக்கின்றன.
கலைஞர் மு கருணாநிதி
முரசொலி இதழைத் தொடங்கித் தன் கருத்துகளைப் பரப்பியவர். இனிய எளிய தமிழ் இலக்கிய நடையில் எழுதவும் பேசவும் ஆற்றல் பெற்றவர். இவர் தென்பாண்டிச் சிங்கம், மந்திரிகுமாரி, மணிமகுடம், பூம்புகார், காகிதப் பூக்கள் எனப் பல சிறந்த நாடகங்களைப் படைத்தவர். திரைப்படங்களுக்கு உரையாடல்களை எழுதிப் புகழ் பெற்றவர். அதில் பராசக்தி, மணமகள், மனோகரா ஆகிய திரைப்படங்கள் சிறப்பு பெற்றன. தமிழ் இலக்கிய இலக்கணத்தை எளிய மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் சங்கத்தமிழ், குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா போன்ற நூல்களைப் படைத்துள்ளார்.
தமிழ்ப் பல்கலைக்கழகம் 'மாமன்னன் இராசராசன்' விருது வழங்கி சிறப்பித்தது. தம் உரையாடல்களில் அரசியல் நோக்கை இலைமறை காயாக விளக்கும் தனைமையுடையவர்.
புலவர் குழந்தை (1906 - 1973)
இராவண காவியம் என இராவணனைக் கதைத்தலைவனாகக் கொண்டு ஒரு புரட்சிக் காப்பியம் படைத்தார். அரசியலரங்கம், நெருஞ்சிப்பழம், காமஞ்சரி, (கவிதை நாடகம்), திருநணாச் சிலேடை வெண்பா, உலகப் பெரியோன் கென்னடி போன்ற இலக்கியங்களைத் தமிழுலகிற்கு அளித்தவர்.
பிற ஆசிரியர்கள்
பாரதிதாசன் மூடநம்பிக்கை எடுத்துரைத்துப் பகுத்தறிவை வளர்க்கும் முறையில் இலக்கியம் படைத்தவர். கவிஞர்கள் வாணிதாசன், முடியரசன், சுரதா, கருணானந்தம் போன்றவர்கள் இவ்வியக்கம் சார்ந்து எழுதியவர்கள் ஆவார். கவிஞர் கண்ணதாசன் பெரும்பகுதி இவ்வியக்கம் சார்ந்து தம் பாடல்களை எழுதியுள்ளார். கவிஞர் புலமைப்பித்தனும் இந்நெறி சார்ந்து எழுதினார்.
பன்மொழியறிஞர் மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் இந்நெறியில் இலக்கியம் கண்டவர் ஆவார்.
முடிவுரை
தமிழர்கள் நலம், தமிழ்ப்பற்று இவற்றை முதன்மை காரணியாகக் கொண்டு தோன்றிய திராவிட இயக்கம் தோற்றுவித்த நாளேடுகள், வார, மாத இதழ்கள் இவ்வியக்கச் சார்புடன் பல்கிப் பெருகித் தமிழுக்கு ஆக்கம் நல்கின. நாடகம், திரைப்படம் வாயிலாகத் தமிழுணர்வைப் பரப்பினார்கள். தமிழைப் பல்கலைக் கழகம் வரை கல்வி மொழியாகவும் உயர்நீதி மன்றம்வரை சட்டமொழியாகவும் தலைமைச் செயலகம் வரை ஆட்சி மொழியாகவும் கோயில்கள் அனைத்திலும் வழிபாட்டு மொழியாகவும் கொண்டு சென்ற பெருமை இவ்வியக்கத்தைச் சாரும்.
-----------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக