மீன்கள் - தமிழ் ஒளி
தமிழ் ஒளி - மீன்கள் (அந்தி நிலா பார்க்க வா)
வான்கடல் தோன்றிடும் முத்துக்களோ – ஏழை
வாழும் குடிசையின் பொத்தல்களோ?
மாநில மீதில் உழைப்பவர்கள் – உடல்
வாய்ந்த தழும்புகளோ அவைகள்?
செந்தமிழ் நாட்டினர் கண்களெல்லாம் -அங்குச்
சேர்ந்து துடித்துக் கிடந்தனவோ?
சொந்த உரிமை இழந்திருக்கும் – பெண்கள்
சோக உணர்ச்சிச் சிதறல்களோ?
இரவெனும் வறுமையின் கந்தல்உடை – தனில்
எண்ணற்ற கண்களோ விண்மீன்கள்?
அருந்தக் கூழின்றியே வாடுபவர்- கண்ணீர்
அருவித் துளிகளோ வான்குன்றிலே?
காலம் எழுதும் எழுத்துகளோ – பிச்சைக்
காரர் இதயத்தின் விம்மல்களோ?
நீலக் கண்ணாடியின் கோட்டையிலே மின்னல்
நெளிவை இறைத்திட்ட அற்புதமோ?
வெய்யில் அரசாங்கம் வாட்டிடினும் – இருள்
வேலிகட்டி யிங்கு வைத்திடினும்
பொய்யில் தொழிலாளர் எண்ணமெலாம் – அங்குப்
பொங்கிக் குமுறி இறைத்தனவோ?
1. தமிழ் ஒளி குறிப்பு தருக
- பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்த கவிஞர் தமிழ் ஒளி பொதுவுடமை மற்றும் திராவிட இயக்கக் கருத்துகளில் எழுதுபவர்
- பிறந்த ஆண்டு : 21.09.1924
- ஊர் : தமிழ்நாட்டின் குறிஞ்சிப்பாடியை அடுத்த அடூர் கிராமத்தில் பிறந்தார்.
- பெற்றோர் : சின்னையா – செங்கேணி.
- இயற்பெயர் : விசயரங்கம்
- தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.
- இவர் கதை, நாடகங்கள், கட்டுரைகள், சிறார் படைப்புகள், காவியங்கள் எனப் பல வகை இலக்கியங்களைப் படைத்துள்ளார்.
- மே தினத்தைப் போற்றி முதலில் கவிதை எழுதியவர் தமிழ் ஒளியே ஆவார்.
இவரின் நூல்கள்
- ’அந்தி நிலா பார்க்கவா’ என்ற நூல், இவரது சிறார் படைப்புகளின் தொகுப்பாகும்.
- ’திருக்குறளும் கடவுளும்’ ’தமிழர் சமுதாயம்’ ’சிலப்பதிகாரம் நாடகமா? காவியமா?’ ஆகிய ஆய்வு நூல்களையும்
- ’சாக்கடை சமுதாயம்’ ’குருவிப்பட்டி’ முதலான சிறுகதைத் தொகுப்புகளையும்
- ’சேரன் செங்குட்டுவன்’ ’தோழர் ஸ்டாலின்’ ’கவிஞர் விழா’ முதலான நாடகங்களையும் எழுதியுள்ளார்.
- ’சிற்பியின் காதல்’ என்ற நாடகம் ’வணங்காமுடி’ என்ற பெயரில் திரைப்படமானது.
- ’மாய உலகம்’ ’அலாவுதீனும் அற்புத விளக்கும்’ ஆகிய திரைப்படங்களுக்குப் பாடல் எழுதியுள்ளார்.
’தாமரை’ ’புதுவாழ்வு’ ’குடியரசு’ ’திராவிட நாடு’ முதலான இதழ்களில் படைப்புகளை எழுதியுள்ளார்.
’முன்னணி’ ’புதுமை’ ’இலக்கியம்’ ’சாட்டை’ முதலான இதழ்களில் பணியாற்றியுள்ளார்.
மன்னர் மன்னனும் தமிழ் ஒளியும் இணைந்து ’முரசு’ என்ற கையேடு இதழை நடத்தினர்.
சனயுகம்’ என்பது இவரது சொந்த முயற்சியில் நடத்திய இதழாகும்.
சி.வி.ர., தமிழ் ஒளி, விஜயன் என்பன அவரது புனைப்பெயர்கள்.
சாதி-மத ஒழிப்பு, சமதர்மம், தமிழின மேம்பாடு குறித்துத் தொடர்ச்சியாகத் எழுதிவந்தவர்.
2. மீன்கள் என்ற கவிதை வழியாகக் கவிஞர் தமிழ் ஒளி கூறும் கருத்துக்களைத் தொகுத்து எழுதுக.
வறுமையில் வாடும் தொழிலாளர்களின் பல்வேறு துன்பங்களை விண்மீன்கள் வெளிப்படுத்துவதாகக் கவிஞர் கற்பனை செய்து படைத்துள்ளார்.
விண்மீன்கள் வானம் என்னும் கடலில் இருக்கும் முத்துக்களா? ஏழைகள் வாழும் குடிசை வீட்டில் உள்ள ஓட்டைகளா? அல்லது உழைப்பாளர்கள் உழைத்ததினால் அவர்கள் உடம்பில் ஏற்பட்டுள்ள தழும்புகளோ என்றும் செந்தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களின் கண்கள் தான் வானத்தில் விண்மீன்களாய்க் காட்சி தருகிறதோ? அல்லது தங்களுடைய உரிமைகளை இழந்த பெண்களின் சோக உணர்வு சிதறல்களோ என்று பாடுகிறார்.
இரவு பொழுதை வறுமையாகவும், வறுமையில் உள்ள ஏழைகளின் ஆடையில் உள்ள எண்ணற்ற ஓட்டைகள்தான் விண்மீன்களா? என்றும், வறுமை காரணமாகக் குடிப்பதற்குக் கூழும் இல்லாத ஏழைகளின் கண்ணீர்த் துளிகள் தான் வானத்தில் விண்மீனாக தோன்றுகிறதா என விண்மீன்களைச் சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வோடு ஒப்பிட்டுப் பாடியுள்ளார்.
காலம் எழுதிய எழுத்துக்கள் தான் விண்மீன்களா? அல்லது பிச்சைக்காரர்களின் இதயத்தில் தோன்றும் விம்மல்கள்தான் விண்மீன்களா? என்றும் வானம் என்னும் நீலக்கண்ணாடியில் மின்னல் ஒளி போல விண்மீன்கள் உள்ளனவா என்றும் பல்வேறு விதமாக விண்மீன்களைக் கற்பனை செய்து கவிஞர் பாடியுள்ளார். என்றாலும் பொய்யில்லாத தொழிலாளர்களின் எண்ணங்கள் பொங்கிக் குமுறி விண்மீன்களாக ஒளிர்ந்து கொண்டுதான் உள்ளன. இரவில் இருளில் விண்மீன்கள் தெரிவது போலத் தொழிலாளர்களின் துன்பங்களும் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கும் என்று தமிழ் ஒளி பாடியுள்ளார் .
கருத்துகள்
கருத்துரையிடுக