ராஜா ராணி - சாக்ரடீஸ் - ஓரங்க நாடகம்
ராஜா ராணி - சாக்ரடீஸ் - ஓரங்க நாடகம்
சாக்ரடீஸ் ஓரங்க நாடகத்தின் மையக்கருத்தை விளக்கு.
ராஜா ராணி திரைப்படத்தில் கிரேக்க ஞானி சாக்ரடீஸ் ஓரங்க நாடகமாக இடம் பெற்று இருக்கிறது. சாக்ரடீஸ் அறிவை நம்புபவர். அறிவே ஆயுதம் என்று கூறுபவர். கத்தி வாள் போன்ற ஆயுதங்களை விட அறிவே தேவை என்று கருதுபவர்.
சாக்ரடீஸ் உரை
அப்படிப்பட்ட சாக்ரடீஸ் கிரேக்க வீதிகளில் உன்னையே நீ அறிவாய் என்று சொல்லிக் கொண்டு செல்கிறார். உலகத்தின் எந்த மொழியில் இருந்தாலும் அறிவைத் தேடிப் பெறுவதற்காக உங்களை அழைக்கிறேன் என்றார். இளைஞர்களே அறிவே ஆயுதம் என்று மக்களை ஒன்று திரட்டுகிறார். விவேகம் துணைக்கு வராவிட்டால் தீட்டிய வாளும், தூக்கிய ஈட்டியும் பயன்படாது. நான் சொல்லும் அறிவாயுதத்தை ஏந்துங்கள். உலகத்தின் அணையாத விளக்கு அறிவு தான் என்று மக்களைச் சிந்திக்கத் தூண்டுகிறார் சாக்ரடீஸ்.
சாக்ரடீஸ் கைது
இது அவருடைய எதிரிகளுக்குப் பிடிக்கவில்லை. குமுறும் எரிமலை, கொந்தளிக்கும் கடல் இவற்றையெல்லாம் விட பயங்கரமானவன். சாக்ரடீஸ் அவன் சொல்லும் அறிவாயுதம் கிரேக்கத்தில் தலை தூக்கும் என்றால் நாமெல்லாம் அழிய வேண்டியதுதான் என்று மெலிடஸ் கூறுகிறார்
அதற்குப் பதிலாக அனிடஸ் நாம் கிழித்த கோட்டைத் தாண்டாத இந்த மக்களுக்கு அவன் சொல்லும் அறிவுரை எட்டுவதற்குள் நாம் அந்த கிழவனை கொன்று விட வேண்டும் என்று கூறுகிறான் சாக்ரடீஸ் கைது செய்யப்படுகிறார்.
நீதிமன்றத்தில் வழக்கு
சாக்ரடீஸ் நாட்டில் நடமாட கூடாதவன். தனது வார்த்தைகளால் அரசாங்கத்துக்கு விரோதமான கருத்துக்களை வழங்கி இளைஞர்களைத் தூண்டி விடுபவன் என்று நீதிமன்றத்தில் மெலிடஸ் கூறுகிறான். பதிலுக்குச் சாக்ரடீஸ் என் தலையிலிருந்து சுடர் வீட்டு கிளம்பும் அறிவு, அதை அழிக்க மெலிடஸ் தலையிலிருந்து புறப்படும் கற்பனை, அரசியல்வாதி அனிடசின் தலையிலிருந்து புறப்படும் ஆணவம் இந்த மூன்றுக்கும் நடக்கும் மும்முனை போராட்டம் தான் இந்த வழக்கு என்று கூறுகிறான்.
இந்தக் கிழவன் சட்டத்தையும் சபையையும் எப்படி அவமதிக்கிறான் என்று பாருங்கள் இப்படித்தான் இளைஞர்களை எல்லாம் கெடுத்தான். இளைஞர்களைத் தன் பக்கம் இழுத்து அவர்களுக்குச் சிந்திக்கக் கற்றுத் தருகிறான் என்று அவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுத் தண்டனையாக அவனுக்கு விஷம் குடித்து மரண தண்டனைக்கு ஆளாக வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்படுகிறது.
சாக்ரடீஸ் தன் மனைவியிடம் கூறுதல்
நான் பயனற்ற தத்துவ விசாரணையில் காலத்தைக் கழிக்கிறேன். வீண்வாதம் புரிகிறேன் என்று என்னிடம் கோபித்துக் கொள்வாயே இப்பொழுது பார் உனது கணவன் உலகம் புகழும் வீரனாகத் தியாகியாக மாறிவிட்டான். அன்புள்ள எக்ஸ்சேந்துபி நீ மிகவும் பாக்கியசாலி, யாருக்கும் பணியாத பெருமையோடு கடைசியாக விழிகளை மூடப் போகும் வீரனுக்கு நீ மனைவி. குழந்தைகளை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள். அவர்கள் பெரியவர்களாக மாறியதும் நேர்மை தவறினால் நீ அவர்களை திருத்த வேண்டும் காவலர்கள் கோபிப்பார்கள். நீ போய் வா கிரீடோ இவர்களை அனுப்பி வை என்று கூறுகிறார்.
சாக்ரடீஸ் தன் நண்பனிடம் கூறுதல்
முப்பது நாள் சிறைவாசம் முடிந்து நீதிமன்ற உத்தரவுபடி தான் விஷம் சாப்பிட்டுச் சாக வேண்டிய நாள் இதுதான் என்று கூறுகிறார். கிரீடோ அழுகிறான். சாக்ரடீஸ் சந்தோஷமாகச் சாவை எதிர்கொள்கிறார். அவருக்கு இடப்பட்ட கட்டளை விஷத்தை முழுவதும் குடிக்க வேண்டும். பிறகு நடந்து கொண்டே இருக்க வேண்டும். கால்கள் மரத்து போகும் வரையில் நடக்க வேண்டும். பிறகு உட்காரலாம் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு சில்லித்துக் கொண்டே வரும். படுத்துவிட்டால் இறந்துவிடும் இதுதான் அவருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை.
ஆனால் சாக்ரடீஸ் அந்த விஷத்துக்கு அஞ்சவில்லை. இந்த விஷம் அழிக்கப் போவது என்னையல்ல, என் உடலைத் தான் என்று கூறுகிறார். அப்போது கிரீடோ சிங்கமே! கிரேக்க பெரியாரே! உம்மையும் எம்மையும் இந்த விஷம் பிரிக்கப் போகிறதா என்று அழுகிறான். நண்பா எனக்குக் கடைசியாக ஏதாவது சொல் என்று கூறுகிறான்.
அதற்குச் சாக்ரடீஸ் புதிதாக என்ன சொல்ல போகிறேன்? உன்னையே நீ எண்ணிப்பார். எதையும் எதற்காக ஏன், எப்படி, என்று, அப்படி கேட்டதால்தான் இந்தச் சிலை வடிக்கும் சிற்பி சிந்தனை சிற்பியாக மாறினேன். அவர் சொன்னார். இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம். எவர் சொன்னாலும் அதனை உந்தன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப் பார்ப்பாய். அதைத்தான் உனக்கும் இந்த நாட்டுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன் உன்னையே நீ அறிவாய். உன்னையே நீ அறிவாய் என்று கூறிவிட்டு விஷத்தை அருந்துகிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக