தொல் பழங்கால வரலாறு - தொல் தமிழர் வரலாறு
தொல் பழங்கால (தொல் தமிழர்) வரலாறு
தொல் பழங்கால வரலாறு குறித்துத் தொகுத்துரைக்க.
முன்னுரை
நில உருவாக்கம் மற்றும் தொல்பழங்கால வரலாறு குறித்தும் இங்குக் காணலாம்.
நில உருவாக்கம்
- கதிரவனிலிருந்து பிரிந்த ஒரு பகுதி உலகமாக உருவாகியது.
- உலகின் மேற்பக்கம் கடல் நீரால் சூழப்பட்டது.
- உலகின் உள்ளேயே தங்கிவிட்ட வாயுக்கள் அழுத்தம் தாங்காமல் வெடித்து எரிமலைக் குழம்பினை உருவாக்கின.
- இத்தகைய நிகழ்வுகள் பல கோடி ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றன.
- அதன் விளைவாகத் தொடர்ந்து வெளியேறிய எரிமலைக் குழம்பு தண்ணீரால் இறுகி மலைகளும் நிலமும் உருவாகின.
பங்கேயா உருவாகுதல்
- தொடக்க காலத்தில் நிலப் பகுதி இப்போது இருப்பது போலப் பல கண்டங்களாகப் பிரிந்து இருக்கவில்லை.
- அனைத்து நிலப்பரப்பும் இணைந்து ஒரே நிலப்பரப்பாக இருந்தன.
- இதனைப் பங்கேயா என்பர்.
- ஒரே நிலமாக இணைந்திருந்த பங்கேயாவில் காணப்பட்ட புதை வடிவ மண் பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை.
- அத்தகைய புதை வடிவ மண் நம் தமிழகத்திலும் காணப்படுகின்றது.
பங்கேயா இரண்டாகப் பிரிதல்
- சில கோடி ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நிலப்பரப்பாக விளங்கிய பங்கேயா வடக்கு, தெற்கு என இரண்டு கண்டங்களாகப் பிரிந்தது.
- வடக்குப் பகுதியை இலாராசியா (Laurasia) என்றும் தெற்குப் பகுதியைக் கோண்டுவானா (Gondwanaland) என்றும் அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இலாராசியா கண்டம்
- நிலநடுக் கோட்டின் மேல் திசையில் அமைந்திருந்தது.
- இப்போதைய வட அமெரிக்கா, ஐரோப்பிய நிலப்பரப்பை உள்ளடக்கியது இக்கண்டம்
பால்டிகா கண்டம்
- பல இலட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு இலாராசியாவிலிருந்து ஐரோப்பிய நிலப்பரப்பு கிழக்கே பிரிந்து பால்டிகா கண்டம் தோன்றியது.
கோண்டுவானா (Gondwanaland)
- பங்கேயாவின் தென் பகுதியில் இருந்து பிரிந்த கோண்டுவானா நிலப் பகுதி பெருங்கண்டமாக விளங்கியது.
- இலாராசியாவும் பால்டிகாவும் மோதிக்கொண்டதில் கோண்டுவானா தென்அட்லாண்டிக் நோக்கி நகர்ந்து தென்துருவப் பகுதிக்குச் சென்றது.
- இந்தக் கோண்டுவானா கண்டம் பழந்தமிழ்நாடு (இன்றைய இந்தியா) என்று அழைக்கப்பட்டது.
- ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், இத்தாலி, பால்கன் தீபகற்பம், மத்திய கிழக்கு நாடுகள், துருக்கி, ஈரான் ஆகிய இன்றைய நாடுகளின் நிலப்பரப்புகளை உள்ளடக்கிய பெரும் கண்டம் கோண்டுவானா ஆகும்.
- இத்தனை பகுதிகளையும் உள்ளடக்கிய மாபெரும் கண்டத்துக்குக் கோண்டுவானா என்று பெயரிட்டார்.
- குளோசோப்டரிஸ் (Glossopteris) என்ற தாவரவியல் பெயர் (Botanical name) கொண்ட செடி இந்திய பகுதி எங்கும் காணப்பட்டது.
- இந்த வகைச் செடி தென் அமெரிக்காவிலும் காணப்பட்டது.
- இந்தியாவில் கோண்டு இன பழங்குடி மக்கள் வாழும் மாவட்டங்களில் இந்தச் செடி காணப்பட்டமையால் இந்த மாபெரும் கண்டத்திற்கு அப்பெயர் இட்டார் எட்வர்டு சூயஸ்.
குமரிக்கண்டம்
- கோண்டுவானா கண்டம் காலப்போக்கில் மேலும் பிளவுபட்டது.
- அவ்வாறு பிரிந்ததில் ஒன்று பழந்தமிழ் நாடு (இன்றைய இந்தியா)
- இன்றைய தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, கிழக்கு இந்திய தீவுகளாலான சாவா, சாலித்தீவு ஆகியவை தென்துருவம் வரையும் ஒரே நிலப்பரப்பாக இருந்தது.
- இந்த நிலப்பரப்பைத் தான் உலக கடலாய்வு வல்லுநர்கள் லெமூரியா கண்டம் (குமரிக்கண்டம்) என்று அழைத்தனர்.
- இலெமூர் என்ற பாலூட்டி விலங்கு வாழ்ந்த நிலப் பகுதியாக இருந்ததால் அதன் பெயரிலேயே இக்கண்டம் அழைக்கப்பட்டது.
- ஆனால் பழந்தமிழர் இந்த நிலப்பகுதியைக் குமரி என்றும் குமரி நிலம் என்றும் அழைத்தனர்.
- குமரி நிலத்தின் தென்பகுதியில் பரவி இருந்த மாபெரும் மலைத்தொடரின் பெயர் குமரிமலை என்று வழங்கலாயிற்று.
- அந்நிலத்தின் வட பகுதியில் குமரி ஆறு ஓடியது.
- இக்கண்டத்தின் தென்பகுதி உலகத்தின் நடு பகுதியாக இருந்தது.
- இந்த நிலப்பகுதி உயிர்கள் தோன்றுவதற்குத் தேவையான தட்பவெட்ப நிலையைக் கொண்டிருந்தது.
- எனவே இங்குத்தான் முதல் உயிர் தோற்றம் நடைபெற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
முதல் உயிரினத் தோற்றம்
- உலகின் நடுப்பகுதியான குமரிக்கண்டம் உயிர்கள் வாழும் நிலையை அடைந்தது.
- அக்காலத்தில் கார்பன் (கரிய) கூட்டுப் பொருள்கள் மிகுதியாக இருந்ததால் அக்கடல் பகுதியில் உலகின் முதல் உயிரினமான நீலப் பச்சைப் பாசி தோன்றின.
- இவை பல கோடி ஆண்டுகளில் மாற்றமடைந்து நீர்வாழ் செடியாக மாறின.
- பின்னர் அங்கிருந்து நிலத்திற்குப் பரவின.
- பிறகு நிலைத்திணைகளான தாவரங்கள் தோன்றின
- அவை அப்போது உலகில் இருந்த கார்பன் டை ஆக்சைடு, மழைநீர், கதிரவன் ஒளி ஆகியவற்றை கொண்டு வளரத் தொடங்கின.
- நிலைத்திணைகள் கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து ஆக்ஸிஜனை வெளியிட்டன.
- இதனால் கார்பன் டை ஆக்சைடு அளவு குறைந்து ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கத் தொடங்கியது.
- இந்த ஆக்ஸிஜன் யுவி கதிர்களால் (புற ஊதாக் கதிர்கள்) தாக்கப்பட்டு ஓசோன் மண்டலம் உருவானது.
- இந்த ஓசோன் மண்டலம் தான் இவ்வுலகைப் புற ஊதாக் கதிர்களிடமிருந்து காப்பாற்றி மேலும் பல வகையான உயிர்கள் தோன்றக் காரணமாக அமைந்தது.
- நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய உயிரினங்களும் தொடர்ந்து பாம்பு, பல்லி போன்ற ஊர்வனவும் தோன்றின.
- பெரும்பல்லி எனப்படும் டயனோசர் தோன்றி அதிலிருந்து பிரிந்து பறவை இனங்கள் தோன்றின.
- பலகோடி ஆண்டுகளுக்குப் பிறகு விலங்குகளும் பாலூட்டி இனங்களும் உருவாயின.
- அதற்கு முன்னர் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் உயிரினங்கள் இருந்தன.
- விலங்குகள் அனைத்தும் குட்டி இட்டுப் பால் கொடுப்பவை.
- இத்தகைய விலங்குகள் 7 ½ கோடி ஆண்டுகளுக்கு முன் உருவாகின.
- இவ்வாறு 300 - 400
கோடி ஆண்டுகளில் படிப்படியான பரிணாம வளர்ச்சியின்
பயனாக உலகில் ஏராளமான உயிர்கள் உருவாகின.
கல்மரம் அல்லது படிவப் பாறை மரங்கள்
- தாவரங்கள் மண்ணுள் புதைந்து பாறைப் படிவ நிலைமையில் உருமாறுவதைக் கல்மரம்
என்பர்.
- புதுச்சேரிக்கு அருகில் உள்ள திருவக்கரை என்ற ஊரில் 2 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த மரம் “படிவப் பாறை மரங்களாக” (Fossilized trees) உள்ளன.
- பூக்காத தாவரங்கள் கூம்பினி வகையைச் சேர்ந்த இம்மரம் 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய திருச்சிராப்பள்ளி பாறையினப் பகுதியில் அமைந்துள்ளது.
- வெண்சுதைப்பாறை ஊழியில் (cretaceous) ஆற்றுநீரால் அடித்து வரப்பட்டுக் கடலில் அமிழ்ந்து மணல், களிமண் ஆகியவற்றால் மூடப்பட்டுக் காலப்போக்கில் கல் மரம் ஆகிவிட்டது.
தொல் பழங்காலத்தை அறிய உதவும் சான்றுகள்
- மனித வரலாற்றின் நீண்ட பெருங்காலமாகத் தொல்பழங்காலம் விளங்கியது.
- இக்காலத்தில்தான் உலகம் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டது.
- உணவு திரட்டுதல், விலங்குகளை வேட்டையாடுதல், விளைவித்தல், விலங்குகளைப் பழக்குதல் என வரலாற்றுக்கு விளக்கமாக இருந்த காலம் தொல்பழங்காலமாகும்.
- இக்கால வரலாற்றை அறிவதற்கு எழுத்து வடிவச் சான்றுகள் இல்லை.
- அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் விட்டுச் சென்ற கற்கள், பானை ஓடுகள் மற்றும் உலோகக் கருவிகள், ஓவியங்கள், எலும்புகள் முதலியவை சான்றாகக் கிடைத்துள்ளன.
தொல் பழங்காலத்தின் கால பிரிவுகள்
தொல்பழந் தமிழர்களின்
வரலாற்றுக் காலத்தைப் பின் வருமாறு பகுக்கலாம்.
1.
பழைய கற்காலம்
(கி.மு. 5 இலட்சம் – 1 இலட்சம் ஆண்டுகள்)
2.
புதிய கற்காலம்
(கி.மு. 1 லட்சம்
– 30,000 ஆண்டுகள்)
3.
பெருங்கற்காலம் (கி.மு.
30,000 – 300) ஆண்டுகள்.
தமிழர் யார்
- தமிழர் யார் என்ற கேள்விக்கு விடை காண பலரும் முயற்சி செய்தனர்.
- தமிழர் அல்லாத வரலாற்று ஆய்வாளரான ஹீராஸ் பாதிரியார், வரலாற்று புகழ்பெற்ற சிந்துவெளியில் நடைபெற்ற அகழ்வாராட்சியில் புதைபொருட்கள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றும்,
- அவை சிந்துவெளியில் மிகப் பழங்காலத்தில் பெரியதொரு நாகரீகம் செழித்து வளர்ந்து இருந்தது என்றும் அது முற்றிலும் அழிந்துவிட்டது என்றும் குறிப்பிடுகிறார்.
- சிந்துவெளி மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய நகரங்கள் தற்போது பாகிஸ்தானில் உள்ளன.
- இவையன்றி சானுடாரோ, கோப்பீஜி, லோதல், காளிப்பங்கன் ஆகிய இடங்களிலும் பண்டைய நாகரிக சின்னங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
- இதனை வரலாற்றுத் துறைக்கு தந்தவர் சர் ஜான் மார்ஷல் ஆவார்.
- தமிழகத்தின் 17 ஆற்றங்கரை நாகரிகங்கள் தொல் தமிழர் வரலாற்றை எடுத்துக்காட்டுகின்றன.
முடிவுரை
மேற்குறிப்பிட்டுள்ள கருத்துகள் வாயிலாகத் தொல்பழங்காலத்தில் நாகரிகம் தோன்றி வளர்ந்த இடம் பழந்தமிழகம் எனபதும், உலகம் முழுவதும் பரவி வாழ்ந்த பூர்வக் குடிகள் தொல் தமிழர் என்பதும் புலப்படுகிறது.
--------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக