பண்டைய தமிழரின் வாணிகம்

  


பண்டைய தமிழரின் வாணிகம்

பண்டைய தமிழரின் வாணிகம் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக.

முன்னுரை

            பழந்தமிழர் வாணிகத் தொழிலில் சிறந்து விளங்கி இருந்தனர். இதனைச் சங்க இலக்கியங்கள் மற்றும் அயல்நாட்டு வரலாற்றுக் குறிப்புகளிலிருந்தும் அறியலாம்.  பழந்தமிழர் வாழ்க்கை வசதிக்காகப் பல பண்டங்களை உற்பத்தி செய்தனர். அவர்களின்  அடிப்படை உற்பத்தித் தொழில்களாக உழவும் வாணிகமும் ஆகும். வாணிகம் குறித்து இங்கு விளக்கப்படுகின்றது.

வாணிகத்தொழிலில் ஈடுபட்ட மக்கள்

  •  மக்களில் பெரும்பாலானோர் வாணிகத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.
  •  பண்டைய தமிழ்ப் புலவர்களும் வாணிகம் செய்துள்ளனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. 
  • கூலவாணிகள் சீத்தலைச் சாத்தனார், மதுரை பண்டவாணிகள் இளந் தேவனார், மதுரை அறுவை வாணிகன் இள வேட்டனார், உறையூர் இளம்பொன் வாணிகனார், உறையூர் மருத்துவன் தாமோதரனார், ஓதலாந்தையார், கச்சுப்பேட்டு இளந் தச்சனார், கணக்காயன் தத்தனார், கணியன் பூங்குன்றனார், தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்,  மதுரைக் கொல்லன் புல்லன் எனப்   பலரைச்  சங்கப் பாடல்கள் சுட்டுகின்றன.

பண்டைய தமிழகத்தில் தொழில் மேற்கொண்ட பிற நாட்டு மக்கள்

  •   உற்பத்தி தொழிலில் தமிழ்நாட்டுக் கைவினைஞருடன் அயல்நாட்டு தொழிலாளரும் கலந்து கொண்டனர். 
  • மகத நாட்டு  இரத்தின வேலைக்காரர்கள், மராட்டியக் கம்மியர், அவந்தி நாட்டுக் கொல்லர்கள், யவனத் தச்சர்கள் ஆகியோர் தமிழ்நாட்டுக் கம்மியருடன் இணைந்து  பொருட்களைப் படைத்தார்கள் என்று மணிமேகலை கூறுகின்றது.
  •  மேலும் கோசல நாட்டு ஓவியர்களும் வத்தவ நாட்டு வண்ணக கம்மாளர்களும்  தமிழ்நாட்டில் தொழில் செய்துள்ளனர்.  

பழந்தமிழகத்தில் நடைபெற்று வந்த வாணிகங்கள்

  •    பழந்தமிழகத்தில் பலவகையான வாணிகங்கள் நடைபெற்று வந்துள்ளன.
  •  அவை அனைத்தும் சிறப்பு பெற்றவையாக இருந்துள்ளன. 
  • அவையாவன, ஆடைவாணிகம், ஓலை வணிகம், கூலவாணிகம்,  பொன் வாணிகம் போன்றன.  

பழந்தமிழகத்தில் நடைபெற்று வந்த வணிக முறைகள்

  •      பழந்தமிழகத்தில் பண்டமாற்று முறையில் வாணிகம் நடைபெற்றுள்ளது.
  •  மேலும் குறி எதிர்ப்பு என்னும் முறையும் வாணிக முறையாக வழக்கில் இருந்துள்ளது.  
  •   வணிகர்கள் கூட்டம் கூட்டமாகக் கூடித் தம் பண்டங்களைப் பல ஊர்களுக்கும் விற்பனைக்கு எடுத்துச் செல்வார்கள். 
  • இக்குழுக்களுக்கு வாணிகச் சாத்துகள் என்று பெயர்.  
  • ஆறலைக் கள்வருக்கு அஞ்சி அவர்கள் சாத்துகளாகக் கூடிச் செல்வது வழக்கம்.
  •  வணிகச் சாத்துக்  கழுதையின் மேல் மிளகுப்பொதிகளை ஏற்றிச் செல்லும் போது அவற்றுக்குச் சுங்கம் செலுத்தியுள்ளனர்.

பண்ட மாற்று முறையில் பெறப்பட்ட பொருள்கள்

1.    தேன், நெய், கிழங்கு - மீன், நறவு

2.    கரும்பு, அவல் - மான் ஊன் (இறைச்சி), கள்

3.    நெய் – எருமை

4.    உப்பு – நெல்

5.    பச்சை பயறு - கெடிறு என்னும் மீன்

உள் நாட்டு கடல் வாணிகம் 

            தொண்டியிலிருந்து மதுரைக்குக்  கப்பலில் அகில் முதலியவை கொண்டுவரப்பட்டன.

அயல் நாட்டிலிருந்து இறக்குமதி வாணிகம்

            அயல்நாடுகளுக்குக் கடல் வழியாக வாணிகம் செய்துள்ளனர். குதிரைகளை யவனர்கள் மரக்கலங்களில் ஏற்றிக் கொண்டு வந்தனர்.

அயல் நாட்டு ஏற்றுமதி வாணிகம்

            யவன நாட்டிற்குப் பொன் அணிகலன்கள்,  தீம்புளி, உப்பு, உணக்கிய மீன் ஆகிய பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளனர்

வாணிகத்தில் தங்க நாணயங்களின் பயன்பாடு

  •     அயல்நாட்டு வாணிகத்தில் தங்க நாணயங்கள் புழக்கத்தில் இருந்துள்ளன. அவற்றில் எதுவும் இன்று கிடைக்கவில்லை.  
  • காணம் என்ற பொற்காசு சங்க காலத்தில்  வழக்கில் இருந்துள்ளது.
  • அரசர்கள் புலவர்களுக்குக் காணம் என்னும் பொற்காசினைப் பரிசிலாக வழங்கியதாகச் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. 
  • தகடூர்ப் போரில் வெற்றி பெற்ற பெருஞ்சேரல் இரும்பொறை தன் வெற்றியைப் பாடிய அரிசில் கிழார் என்ற புலவருக்கு ஒன்பது நூறாயிரம் காணம் பரிசில் வழங்கினான்.
  • ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் காக்கை பாடினியார் என்ற புலவருக்கு நூறாயிரம் காணம் பொன் வழங்கினான்.
  • பட்டினப்பாலை பாடிய உருத்திரங் கண்ணனாருக்குப் பதினாறு நூறாயிரம் பொற்காசு பரிசில் வழங்கப்பட்டிருக்கிறது.
  • பொற்காசு ஒவ்வொன்றும் வேப்பம்பழம் அளவு இருந்தது. 
  • அவற்றைப் பெண்கள் மாலையாகக் கோர்த்துக் கழுத்தில் அணிந்து கொண்டனர்.
  • சங்க கால இலக்கியங்கள் வழியாகத் தங்க நாணயங்கள் வழக்கில் இருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது

 வாணிகத்திற்குப் பயன்பட்ட அளவைகள்

  •  வாணிகத்திற்குப் பல வகை அளவைகள் பயன்படுத்தப் பெற்றுள்ளன. 
  • எடுத்தல் அளவை, எண்ணலளவை, நிறுத்தல் அளவை, முகத்தல் அளவை, நீட்டல் அளவை போன்றவையாகும்.  
  • எடுத்தல் அளவையைக் கழங்கு, கழற்சிக் காய் என்றும் குறிப்பிட்டனர்.
  • எண்ணலளவை எண்ணுகின்ற எண்ணையும் கணிதத்தையும் குறிக்கும். 
  • இலட்சம் என்ற பேரெண்ணை நூறாயிரம் என்றே குறிப்பிட்டனர். 
  • திருவள்ளுவர் காலத்தில் கோடி என்ற பேரெண்ணும் பயன்பட்டுள்ளது.
  • கோடிக்கும் மேற்பட்ட எண்களைக் குறிக்கவும் தமிழில் சொற்கள் உண்டு. அவையாவன :- வெள்ளம், ஆம்பல், தாமரை, என்பன அவ்வெண்ணுப் பெயர்களில் சிலவாகும். 
  •  அளவை பெயர்கள் குறித்த சொற்களும் சங்க இலக்கியங்களில் உள்ளன.

 உழவுத் தொழில்

  • தமிழர் மண்ணை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 
  • எனவே உழவுத் தொழில் வாணிகத் தொழிலை விட சிறப்பாகக் கருதப் பெற்றது.
  • சங்க இலக்கியங்கள் நீர் மேலாண்மை மற்றும் நிலமேலாண்மையைச்  சிறப்பித்துப் பேசுகின்றன. 
  • இதற்குச் சான்று பின்வருமாறு,

            ஒரு பெண் யானை படுக்கும் அளவுள்ள இடத்தில் ஏழு ஆண் யானைகளுக்கு அளிக்கப்படும் உணவுக்கான நெல் விளையும் செழுமையுடையது சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் நாடு என்று ஆவூர் மூலங்கிழார் பாராட்டி உரைப்பதைச் சான்றாகக் கொள்ளலாம். 

  •  நெல், கரும்பு, தென்னை, வாழை, மஞ்சள், இஞ்சி, பருத்தி போன்றன தமிழகமெங்கும் விளைந்துள்ளன.
  •  நிலத்தை உழுதல், எரு இடுதல், நாற்று நடுதல், தண்ணீர் கட்டுதல், களை எடுத்தல், பயிரைக் காவல் செய்தல் என்பன உழவுப் பணிகளின் செயல்களாகும்.

முடிவுரை

    பழந்தமிழகத்தில் வாணிகமும் உழவும் அடிப்படை தொழில்களாகச் சிறப்பு பெற்றிருந்தன. கடல் கடந்து சென்று வாணிகம் மேற்கொண்டுள்ளனர் என்ற செய்திகளையும் அறிய முடிகிறது.

...............................................


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி