பண்டைய தமிழரின் கல்வியும் கலைகளும்


கல்வியும் கலைகளும்


முன்னுரை

            தொடக்க காலத்தில் குகைகள் வழியாகத் தொடங்கிய கல்வியானது சங்க காலத்தில் வழங்கப்பட்ட தன்மை குறித்து இங்கு விளக்கப்படுகிறது.  

 கல்வி கற்றல் மற்றும் கற்பித்தலின் தொடக்கம்

  •  பண்டைத் தமிழர் கல்வி கற்பதிலும் கற்பிப்பதிலும் ஈடுபட்டதற்குச் சான்றுகள் இல்லை
  • ஆனாலும் அவர்கள் தங்களது பட்டறிவின் வெளிப்பாடாகக் குகைகளில் வரைந்து வைத்துள்ள ஓவியங்கள் வழியாகக் கற்றலையும் கற்பித்தலையும்  தொடங்கினர் எனலாம்
  • தங்களுக்குப் பின்பு அந்தக் குகைகளில் தங்க வருபவருக்கு அவர்கள் ஒவியங்கள் வரைந்து வைத்து வழிகாட்டியுள்ளனர்
  • இதனால் ஓவியக்கலை வளர்ந்தது எனலாம். 
கல்வியின் பயன் அறிதல் 

  •  நாகரிக வளர்ச்சி அடைந்த காலத்தில் கல்வியின் பயன் அறிந்து கொண்டனர்.
  •  பாமர மக்களும் கல்வியறிவு அல்லது எழுத்தறிவு பெற்றனர் 
  • இதற்குச் சான்றாக, 
  • கீழடி அகழாய்வில் கிடைத்த எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், 
  • புலிமான் கோம்பை உள்ள கல்வெட்டுகள்                                                   ஆகியனவற்றைச் சான்றாகக் கொள்ளலாம்.

 பண்டைய தமிழரின் கல்விக்கு வழங்கிய சிறப்பு

  •  சங்ககாலத்தில் தமிழர் கல்வியின் சிறப்பை நன்கு உணர்ந்திருந்தனர்.
  • திருக்குறளில் கல்வியைப் பற்றிப் பேசும் அதிகாரங்கள் நான்கு உள்ளன. 
  • அவற்றில் கல்வி எவ்வாறு கற்க வேண்டும் என்று குறிப்பிடப் பெற்றுள்ளன. அவையாவன :-
  • குற்றமற கற்க வேண்டும், 
  • கற்றபின் அதன்படி நடக்க வேண்டும்,
  • கற்றவர்களுக்கு உலகம் முழுவதும் தன் சொந்த ஊராகவே தோன்றும்
  • கல்விச்செல்வம் ஒன்றே அழியாச் செல்வம், 
  • கல்லாதவன் மேனியழகு ஒரு பொம்மைக்கு நிகரானது, 
  • கல்வியை விட கேள்வியே மேம்பட்டது, 
  • யார் எது சொன்னாலும் அதன் உண்மை பொருளை அறிவதே நல்லறிவு           என்பனவாகும். 

 கல்வி பயிலும் உரிமை 

  • கல்வி பயிலும் உரிமை சங்ககாலத்தில் அனைவருக்கும் உரியதாக இருந்தது
  • எல்லா குல மக்களும் கல்வி கற்றனர்
  • வறியவர், 
  • மன்னர்
  • எளிய குடிமக்களில் ஆண்களும் பெண்களும் தேடிக் கல்வி பயின்றனர்.
  • இளைஞர்கள் திருமணம் ஆன பிறகும் தங்கள் மனைவியைப் பிரிந்து சென்றும் கல்வி கற்றனர்.  
 கல்வி பயிலும் காலம் 

  •  இளமையிலேயே கல்வி பயிற்சியைத் தொடங்கினர்
  • இதனால் இளமையில் கல் என்றனர். 
 கல்வி வழங்குதல் தந்தையின் கடமை 
  • நாற்குலத்தில் கீழ்க்குலத்தில் பிறந்தவரையும் உயர்த்தும் தன்மை உடையது கல்வி
  • இத்தகைய கல்வியை வழங்குவது தந்தையின் கடமையாக இருந்தது
  • அறிஞர் அவையின் வரிசையில் தன் மகனை அமரச் செய்வது தந்தையின் கடமை என்பதோடு தமிழர் அறமாகப் போற்றப்பட்டது. 
  • கல்வி கற்றவர் எந்த வேறுபாடு இல்லாமல் சமூகத்தாரால் மதிக்கப் பெற்றிருந்தார்.  
 கல்வி கற்பவரின் பண்புகள் 
  • உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் ஆசிரியரிடம் அடக்கமாகும் அன்பாகவும் கல்வி கற்க வேண்டும். 
  • கல்வி பயிற்சிக்கு வறுமை மேற்பகையாகும்.
  • மாணவர்கள் கல்விப் பயிலும் போது இரந்து உண்ணும் வழக்கம் அக்காலத்தில் இருந்து வந்துள்ளது
  • இரந்துண்டு கல்வி கற்றல் உயர்ந்த பண்பாடாகக் கருதப்பட்டது.
கல்வி கற்பிக்கும் இடம்
  •  ஒவ்வொரு ஊரிலும் பள்ளிகள் நடைபெற்றதாகத் தகவல் ஏதுமில்லை 
  • கல்வி பயிற்றப்படும் இடம் பள்ளி எனப்பட்டது. 
  • பெரும்பாலும் திண்ணைகளிலேயே பள்ளிகள் நடைபெற்று வந்தன.
கல்வி கற்பிக்கும் ஆசிரியர் 

  • கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்குக் கணக்காயர் என்று பெயர். 
  • கணக்காயர் இல்லாத ஊரில் வாழ்தல் நன்மை பயத்தல் இல்லை என்று சங்க நூல்கள் கூறுகின்றன.  
  • பல குலத்தைச் சார்ந்த புலவர்கள் தமிழகம் எங்கும் இருந்துள்ளனர்
  • அவர்கள் மன்னர் உதவியுடன் மதுரையில் சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்துள்ளனர்
  • அப்புலவர்கள் பாடிய பாடல்களைக் கேட்டுக் கற்றுணர்ந்து பண்பட்டு வாழ்ந்த  பொதுமக்கள் நாடெங்கும் நிரம்பி இருந்தனர். 
  • தமிழ் மன்னர்கள் மட்டும் அல்லாமல் தமிழ்ப் புலவர்களும் மக்களின் பாராட்டையும் மதிப்பையும் பகிர்ந்து கொண்டனர்.
குலபதி நக்கண்ணனார்
  • இவர் சங்க கால ஆசிரியர்
  • இவர் கிடங்கில் (தற்போது திண்டிவனம்) என்ற ஊரில் வாழ்ந்தவர்
  • இவர் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களை ஒன்று கூட்டி அவர்களுக்கு  கல்வி அளித்துள்ளார் என்று குறுந்தொகை 252 ஆம் பாடல் குறிப்பிடுகிறது. 
  • குலபதி என்ற பட்டம் பதினாயிரம் மாணவர்களுக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. 

 கல்வியின் பயன்

  • கல்வியின் பயன் கடவுளை அறிதலே  என்ற கொள்கை வலியுறுத்தப்பட்டது. 
  •  கல்வி பயிற்சியுடன் அறிவு வளர்ச்சியும் இணைந்து வளர்ந்தது  

 மாணவர்கள் கல்வி கற்ற முறைகள்

  • மாணவர்கள் ஓலையின் மேல் எழுத்தாணி கொண்டு எழுதிக் கற்றனர்.  
  • ஆசிரியர்களுக்குப் பொருள் கொடுத்தும் தொண்டுகள் புரிந்தும் மக்கள் கல்வி பயின்றனர் 
  • கற்ற கல்வியைச் சான்றோர்கள் முன்னிலையில் அரங்கேற்றும் வழக்கம் இருந்தது
கல்வித் திறமையை வெளிப்படுத்தும் முறைகள்

  • சங்க காலத்தில் கல்விப் புலமையில் சிறந்த விளங்கிய கபிலர், பரணர், திருவள்ளுவர், நக்கீரர் போன்ற பெரும் புலவர் பலர்  வாழ்ந்து வந்தனர்.
  • ஒருவருடைய புலமையை அறிஞர்கள் எளிதில் ஒப்புக்கொள்வதில்லை.
  • அவருடைய பாடல்களையோ நூல்களோ தமிழ் சங்கத்தார் முன்பு அரங்கேற்றம் செய்ய வேண்டும். 
  • அவ்வரங்கேற்றத்தில் சங்கப் புலவர்கள் அனைவரும் அப்புலவரின் புலமையை ஒப்புக்கொள்ள வேண்டும். 
  • கூத்தும் இசையும் மன்னரின் முன்பு அரங்கேற்றப்பட்டன
  • பல துறைகளில் புலமை சார்ந்த பேரறிஞர்கள் வாழ்ந்தனர்
  • அவர்கள் போலி ஆசிரியரை அறைகூவல் விடுத்து அவர்களுடன் சொற்போர் நடத்தி அவர்களைத் தோல்வியுறச் செய்து நல்லறிவு புகட்டினர் 
  • இந்த சொற்போர் வழக்கம் அக்காலத்தில் புலமையைச் சோதிக்கும் வழக்கமாக இருந்துள்ளது

சங்க காலத்தில் மாணவர்கள் கற்ற நூற்கள் 

  • மாணவர்கள்  இலக்கண நூல்களைக் (தொல்காப்பியம், காக்கைபாடினியம்) கற்றனர். 
  • ஏரம்பம் என்ற கணித நூலையும் கற்றுள்ளனர். 
  • அந்த நூல் இப்போது மறைந்து போயிற்று.  
  • கணிதத்தில் மிக நுண்ணிய அளவையும் 
  • மிகப் பெரிய அளவையும் கற்றுள்ளனர்   
தேர்த்துகள்
  • மிக நுண்ணிய நீட்டல் அளவைக்குத் தேர்த்துகள் என்று பெயர். 
  • இருண்ட அறை ஒன்றன் கூரையிலிருந்து  பாயும் சூரிய கதிர் ஒளியில்  மிதந்தோடும் துகள் எட்டுக் கொண்டது ஒரு தேர்த்துகள் ஆகும். 

 மிகப் பெரிய அளவை

  • மிகப்பெரிய எண் அளவை வெள்ளம் என்று குறிக்கப் பெற்றுள்ளது 
சங்க கால வானவியல் அறிவு 

  •  அக்கால மக்களுக்கு வானியல் புலமையும் இருந்தது. 
  • வானவியல் புலவர்கள் கணிகள் என்று பெயர். 
  • கோள்கள், அவற்றின் செலவுகள், நாண்மீன்கள், திங்களின் இயக்கம் ஆகியவற்றை அவர்கள் அறிவர். 
  • நாண்மீன்கள், கோள்கள், திங்கள்கள் ஆகியவற்றிற்கு தனித்தமிழ் பெயர் வழங்கினர்
  • இதன் மூலம் பழந்தமிழரின் வானவியல் அறிவை நன்கு உணரலாம். 
  • ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு கேது ஆகியவற்றை கோள்கள் என்கிறோம். 
  • இக்காலத்து வானவியலார் ஞாயிறு, திங்கள், ராகு, கேதுக்களை  கோள்களின் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளனர். 
  • செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி இவைந்தையும் கோள்களின் கணக்கில் சேர்த்துள்ளனர் 
  • நாம் வசிக்கும் இவ்வுலகம் ஒரு கோள்தான் என்னும் உண்மையை அவர்கள் அறியவில்லை 
  • ஓர் ஆண்டை 12 மாதங்களாகப் பிரித்துப் பெயரிட்டு வழங்குவது வியப்பிற்கு உரியது
  • தமிழரின் ஆண்டானது கதிரவனின் செலவைக் கணக்கிட்டு அறுதியிடப்பட்டது.
  •  எனவே ஓராண்டில் 12 திங்கள்களுக்கு மேலே இரா. 
  • ஆனால் சந்திரனின் ஓட்டத்தைக் கொண்டு அமைந்த ஆண்டில் 12 திங்களுக்கு  மேலும் வருவதுண்டு. 
  • ஒரே மாதம் ஓராண்டில் இரட்டித்து வருவதுமுண்டு. 
  • இக் குழப்பங்கள் தமிழரின் ஆண்டு கணக்கில் வருவதில்லை. 
  • சூரியன் எந்த ராசியில் எத்தனை நாள் நிற்கின்றானோ அத்தனை நாளையும் ஒரே ராசியாக வழங்கியுள்ளனர் 
  • எடுத்துக்காட்டுகள் : சித்திரை நாண்மீனில் நிலவு முழுமை அடையும் திங்களுக்கு சித்திரை என்று பெயர். 
  • விசாகத்தில் சந்திரன் முழுமதி ஆகும் மாதத்திற்கு வைகாசி என்ற பெயர்.

 சங்க கால சோதிடக் கலை

  •  தமிழர் சோதிடக் கலையிலும் வல்லுநராகக் காணப்பட்டனர். 
  • இவர்கள் கணிகர் என்றழைக்கப்பட்டனர்
  • கோள்கள், மீன்கள் ஆகியவற்றின் நிலைகளைக் கொண்டு வருங்கால நிகழ்ச்சிகளைக் கணித்துக் கூறினர்

முடிவுரை

            சங்க கால மக்கள் கல்வியறிவு பெற்றிருந்தனர். அக்காலத்தில் இலக்கணம், கணித நூற்கள், அளவை நூற்கள் ஆகிய கல்வியும் கலைகளும் சிறப்பிடம் பெற்றிருந்தன என்பதை அறிய முடிகிறது.

-----------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி