உலோகக் காலம் (பெருங்கற்காலம்) (Megalithic Age) – கி.மு. 30,000 ஆண்டுகள் முதல் 300 ஆண்டுகள் வரை

 


உலோகக் காலம் (பெருங்கற்காலம்) (Megalithic Age)

 கி.மு. 30,000 ஆண்டுகள் முதல் 300 ஆண்டுகள் வரை

உலோகக் கால மக்களின் வரலாறு குறித்துத் தொகுத்துரைக்க.

முன்னுரை

    உலோக கால மக்களின் உலோக பயன்பாடு, அவர்களின் வாழ்வியல் செய்திகள் மற்றும் சான்றாதாரங்கள் குறித்தும் இங்கு விளக்கப்படுகின்றன. 

உலோகக் காலம் அல்லது பெருங்கற்காலம்

  • பெருங்கற்காலத் தமிழர்கள் இறந்தவர்களுடைய புதைகுழிகளின் மேல் பெரிய கற்களைக் கொண்டு நினைவுச் சின்னங்களைக் கட்டினர். 
  • இவை பெருங்கற்படை சின்னங்கள் எனப்படுகின்றன. 
  • இவ்வாறு பெருங்கற்களைப் பயன்படுத்தியதால் பெருங்கற்காலம் எனப்பட்டது. 
  • இக்காலத்து மக்கள் கற்கருவிகளைவிட பொன், செம்பு, வெண்கலம், இரும்பு ஆகிய உலோகங்களைப் பயன்படுத்த அறிந்திருந்தனர். 
  • எனவே இக்காலம் உலோக காலம் எனவும் அழைக்கப்படுகிறது.

உலோகக் கால மனிதர்களின் உடலமைப்பு

  • பெருங்கற்காலத் தமிழர் இன்றைய மனிதனைப் போல முகத்தோற்றத்தை அடைந்தனர்.
  • தலைமுடியைச் சீரமைத்துத் தங்களை அழகுப்படுத்திக் கொண்டனர்.
  • பஞ்சைக் கொண்டு தறிநெசவு செய்து துணியாக ஆக்கி உடுத்திக் கொண்டனர்.
  • பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்கள் அணிந்து கொண்டனர்.

பெருங்கற்காலச் சான்றுகள் கிடைத்த இடங்கள்

  •  ஆதிச்சநல்லூர், 
  • சாணூர், 
  • அமிர்தமங்கலம், 
  • கொற்கை,  
  • திருக்காம்புலியூர், 
  • உறையூர், 
  • அரிக்கமேடு, 
  • கொடுமணல், 
  • வல்லம், 
  • தேவாரம்                                                                                                            போன்ற தமிழகத்தின் பல இடங்களில் நூற்றுக்கணக்கான பெருங்கற்காலத் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பெருங்கற்காலத் தமிழரும் தங்கமும்

  •  நம் தொல்தமிழர் முதன்முதலில் கண்டுபிடித்த உலோகம் தங்கம் தான்.
  • சிறிய தகடு போல் மெல்லிய அளவிலான தங்கத்தைக் களிமண்ணின் மீது இணைத்து அணிகலன்கள் ஆக்கிப் பயன்படுத்தியதாகத் தொல்லியலார் குறிப்பிடுகின்றனர்.  
  • ஆதிச்சநல்லூரில் தங்கத்தாலான 19 மகுடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பெருங்கற்காலத் தமிழரும் செம்பும்

  • தங்கத்தை அறிந்தவர்கள் அதன் தொடர்ச்சியாகச் செம்பையும் கண்டுபிடித்து அதில் பல கருவிகளை உருவாக்கினர்.
  • உளி, சுத்தியல், ஆணி, அரம், அம்பு, வாள், கரண்டி போன்ற கருவிகளைச் செய்ய செம்பைப் பயன்படுத்தியுள்ளனர். 
  • செம்பிற்குச் செம்பொன் என்று பெயர் வைத்துள்ளனர்.
  • அக்காலத்தில் வாழ்ந்த எளிய மக்கள் அனைவரும் செம்பைப் பயன்படுத்தியுள்ளனர். 

பெருங்கற்காலத் தமிழரும் வெண்கலமும்

  • எட்டுப் பங்கு செம்பும் ஒரு பங்கு தகரமும் கலந்த கலப்பு உலோகம் வெண்கலம் எனப்பட்டது.
  • செம்பு, கும்பா, கிண்ணம், குடம், வட்டில் (கலங்கள் - பாத்திரங்கள்)
  • மாடவிளக்கு, குத்துவிளக்கு, பாவை விளக்கு
  • வாள், கரண்டி                                                                                                முதலிய கருவிகளை வெண்கலத்தால் செய்து பயன்படுத்தியுள்ளனர். 
  • வெண்கலத்தை வெம்பொன் என்று அழைத்துள்ளனர்.
  • ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெண்கலப் பொருட்கள் கிடைத்துள்ளன. 

  • வேலைப்பாடுகளுடன் கூடிய சாடிகள், வட்ட வடிவக் கிண்ணங்கள்,  அவற்றுக்கான மூடிகளின் மேல்பிடிகளில் பறவைகள் போன்ற வடிவங்கள் உள்ள வெண்கலப் பொருட்கள் கிடைத்துள்ளன. 


பெருங்கற்காலத் தமிழரும் உலோகவியல் அறிவு

  • உலகில் பிறர் செம்பு மட்டுமே அறிந்திருக்க பெருங்கற்காலத் தமிழர் வெண்கலப் பயன்பாடு அறிந்திருந்தனர். 
  • உலகத்தோடு இன்னொரு உலகத்தைக் கலக்கும் அறிவியல் தொழில்நுட்பமும் அறிந்து உருவாக்கப்பட்ட உலோகம் வெண்கலம். 
  • ஆகவே இது தமிழரின் முற்போக்கு தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துகின்றது. 

 

 பெருங்கற்காலத் தமிழரும் இரும்புக் கலங்களும்

  •  வெண்கலக் கலப்பு உலோக உருவாக்கத்திற்குப் பிறகு தனி உலோகமான இரும்பினைக் கண்டுபிடித்தனர். 
  • இரும்பு உலகெங்கும் மற்ற உலோகங்களை விட கூடுதலாகக் கிடைத்தது.
  • அக்கால மனிதனின் அறிவுத்திறனுக்கு ஏற்ற எல்லா வகையான கருவிகள் செய்வதற்கும் ஏற்றதாக அமைந்திருந்தது.
  • எனவே இது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  
  • இது கரும்பொன் என்று அழைக்கப்படுகிறது.

 இரும்பால் செய்யப்பட்ட கருவிகள் 

  • போர்க் கருவிகள் - வாள், கத்தி, அம்பு முனை, கோடரி 
  • வேளாண்மைக் கருவிகள் - கொழு, மண்வெட்டி, களைகொட்டு, கடப்பாரை போன்ற கருவிகளைச் செய்து பயன்படுத்தினர்.

இரும்பை உருக்கும் முறை  
  • இரும்புத் தாதுக்களைத் திரட்டித் தோல் துருத்தி மூலம் சூடாக்கக் கூடிய சிறிய களிமண் உலையில் இட்டு இரும்பை உருக்கினர். 
  • இதற்கு மிகுதியான வெப்பம் தரக்கூடிய கருங்காலி மரத்தின் கரியைப் பயன்படுத்தினர். 

 உலோக காலத் தமிழரின் களிமண் பயன்பாடு

  • தொடக்கத்தில் கையால் மண் பாத்திரங்கள் (தாழிகள்) செய்தனர். 
  • களிமண் பாத்திரங்கள், ஓடுகள் முதலியவற்றை உருவாக்கப் புதிய கண்டுபிடிப்பாகச் சக்கரத்தைப் பயன்படுத்தும் முறை பற்றி அறிந்து கொண்டனர்.
சக்கரம் கண்டுபிடித்தல் 
  • வட்ட வடிவம் செங்குத்துக்கோணத்தில் சுற்றும் தன்மையும் கிடைமட்ட கோணத்தில் சுற்றுந்தன்மையும் பெற்றிருப்பதைக் கண்டறிந்தான்.
  • பெருங்கற்காலத்தில் தட்டை வடிவத்தைச் சக்கரமாகப் பயன்படுத்தி அதன் மேல் மண் வைத்துச் சுற்றி பாத்திரங்களை உருவாக்கி இருப்பார்கள். 
  • இதற்குக் குயவர்களின் சக்கரம் என்று கூறுவர். 
குயவர் குறியீடு 
  • பல குயவர்கள் ஒன்றிணைந்து தங்களது பானைகளை ஒரே சூளையில் இட்டுள்ளனர். 
  • அப்போது தாங்கள் உருவாக்கிய மட்கலங்களுக்குத் தனித்த அடையாளம் காண குறியீடுகள் இட்டு கொண்டனர். 
  • இதற்குக் குயவர் குறியீடு என்பர். 
உடைமைக்குறியீடு
  • மண் பாத்திரங்களைப் பயன்படுத்துவோரும் தங்கள் குறிகளைப் பாத்திரத்தில் இட்டனர். 
  • இதற்கு உடமைக் குறி என்று பெயரிட்டனர். 
  • இதுதான் பிற்காலத்தில் எழுத்து வடிவங்களுக்கு (தமிழ் எழுத்துரு) முன்னோடி எனலாம்.

 சான்றுகள் கிடைத்த இடங்கள்

  • குன்றுகளின் அடிவாரங்களில் அதிக அளவில் பெருங்கற்காலச் சின்னங்கள் காணப்படுகின்றன. 
  • குகைகளுக்குள் பெருங்கற்கால கருப்பு சிவப்பு வண்ணப் பானை ஓடுகள் கிடைக்கின்றன. 
  • மகாராசன்கடை, மல்ல சமுத்திரம் ஆகிய இடங்களில் உள்ள கல்லறைகளில் இத்தகைய ஓவியங்கள் வரையப்பட்டிருக்கிறது.
  • பையம்பள்ளி, அப்புக்கல்லு, மல்லப்பாடி, குட்டூர் மலை, மோதூர் முதலிய இடங்களில் முதன்முதலாகக் கைகளால் செய்த பானைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 
  • சக்கரம் பயன்படுத்திச் செய்யப்பட்ட பானைகள் பையம்பள்ளி என்ற இடத்தில் கிடைத்துள்ளது. 
  • ஆதிச்சநல்லூரில் 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே மண்தாழிகள் பயன்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
  •  சீர்காழிக்கு அருகில் உள்ள எடமணல் மேலப்பாளையத்தில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. 
  • அவற்றிலிருந்து கிடைத்த மட்கலங்கள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகவும் புவிஈர்ப்புத் தன்மையை எதிர்கொள்ளும் வகையிலும் அமைந்திருந்தன. 
  • அவை தஞ்சாவூர்த் தலையாட்டி பொம்மைகளைப் போன்று ஆடி நேராக நின்று விடும் தொழில்நுட்பம் கொண்டதாக அமைந்திருந்தன.

 

 உலோககாலத் தமிழரின் மருத நில பயன்பாடு

  • உலோகாலத் தமிழர்கள் மழையை நம்பிப் (புன்செய் வேளாண்மை) பயிர் செய்ய ஆரம்பித்தனர்.
  • இதனால் வேளாண்மையில் படிநிலை வளர்ச்சி அடைந்தனர்.
  •  பஃறுளி ஆறு, குமரி ஆறு போன்ற பேராறுகளும் அவற்றின் கிளையாறுகளும் இருந்ததால் குமரிக்கண்ட காடுகள் அழிக்கப்பட்டு விளை நிலங்கள் உருவாக்கப்பட்டன. 
  • நீர்நிலைகளின் ஓரங்களில் விளைச்சல் நிலங்கள் செழித்து வளர்ந்தமையால் வயலும் வயல் சார்ந்த இடங்களும் தோன்றின. 
  • அவ்விடம் நீர்வளம் மிக்க மருத நிலமாக விளங்கியது. 
  • முதலில் நீர்ப் பாசனத்திற்கு ஆறும், பொய்கையும் பயன்பட்டன. 
  • நீர்நிலை இல்லாத இடங்களில் ஆற்று நீரை விளைநிலங்களுக்குக் கொண்டு செல்ல கால்வாய்கள் அமைத்து அதன் வழி நீரைப்பாய்ச்சிப் பயிர் செய்தனர்.
  • மழை நீரைத் தேக்கி வைக்க ஏரி, குளங்கள் அமைத்தனர். 
  • மழை இல்லாத காலங்களில் கண்ணாறுகள் வழியாக நீரைப் பாய்ச்சி பயிர் விளைவித்தனர். 
  • நீர் சுரக்கும் இடங்களில் கிணறுகள் வெட்டிப் பயிர் செய்தனர். 
  • இவ்வாறு செந்நெல், வெண்ணெல், மஞ்சள் ஆகியவற்றை பெருமளவு விளைவித்தனர். 
  • குறிஞ்சி, முல்லைக்கு அடுத்தபடியாக நீர் வளமும் நிலவளமும் மிகுந்த மருத நிலத்தில் தமிழர்கள் பரவி வாழ்ந்தனர். 
  • எட்ரபள்ளி மேல்பள்ளம் பகுதியிலுள்ள ஒரு குகையில் ஏர் உழும் பாறை ஓவியங்கள் உள்ளன. 
  • இவை பெருங்கற்காலத்து மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர் என்பதற்குச் சான்றாகும்.

 உலோககாலத் தமிழர் வீடுகள்

  •  மருத நில மண் கெட்டியாக இருந்ததால் உயர்ந்த மண் சுவர் எழுப்பிப் பெரிய வீடு கட்டிக் கூரை வேய்ந்து கொண்டனர்.
  • முல்லை நிலத்திலிருந்து கல் கொண்டு வந்து காரை (சுண்ணாம்பு கலந்த மண்) பூசிக் கல் வீடு கட்டிக் கொண்டனர். 
  • சுடுமண் கலங்கள் உருவாக்கக் கற்றப் பின்னர் சுடுமண் ஓடுகள் உருவாக்கினர்.
  • பெரிய வீடு கட்ட விரும்பியவர்கள் செங்கல்லால் வீடெழுப்பிச் சுண்ணாம்பால் காரை பூசிச் சுட்ட ஓடுகளினால் கூரை வேய்ந்து கொண்டனர். 
  • ஓடுகளை ஒன்றன்கீழ் ஒன்றாக அடிக்கி அந்த வரிசையைப் பிணைக்கச் சுண்ணாம்பு கலந்த மண்ணைப் பயன்படுத்தினர். 
  • இன்னொரு வகை ஓடுகள் தம்முள் இணைந்து கொள்ளும் வகையில் சொருகு ஓடு அமைத்தும் கூரை வேய்ந்துள்ளனர்.  

சான்றுகள்

  •  வீட்டின் தரை வடிவ அமைப்புப் போன்று காணப்படும் ஓவியம் மிகத் தொன்மையான வீட்டின் வடிவத்தைக் குறிக்கின்றது.   
  • செத்தாவரை ஊர் ஓவியங்களில் சிந்து சமவெளி முத்திரைகள்  காணப்படுகின்றன. 
  • குற்றாலப் புடைக்கீறல் வடிவங்களிலும் ஒரமணக்குண்டா ஓவியங்களிலும் வீடு, இடம்  ஆகியவற்றைக் குறிப்பிடும் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
  • கொள்ளூரில் கண்டறியப்பட்ட ஓவியத்தில் மதில் சுவர் உள்ளது.  

 நெய்தல் நிலப் பெருங்கற்காலத் தமிழர்கள்

  •   கடற்கரைப் பகுதியில் நெய்தல் என்ற ஒருவகை நீர்ச்செடி இருப்பதால் அந்த நிலம் நெய்தல் என்று வழங்கப்பட்டது. 
  •  நெய்தல் நிலக் குடியிருப்புப் பகுதிகளுக்குப் பட்டினம், பாக்கம் எனப்பட்டன.
  • அங்கு வாழ்ந்த மக்களுக்குப் பரதவர் என அழைத்தனர். 
  • அவர்கள் கட்டுமரம், திமில், படகு முதலிய  கலங்களைக் கடலில் செலுத்தித் தொழில் செய்தனர்.
  • ஆழ்கடலில் மீன் பிடித்தல்
  • உப்பு விளைவித்தல்
  • முத்துக் குளித்தல் 
  • பவழப் பாறைகளில் இருந்து பவளம் எடுத்தல்
  •  போன்ற தொழில்கள் செய்து தம் வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டனர்.  
  • இப்பொருட்களைப் பிற நிலப் பகுதிகளுக்குக் கொண்டு சென்று அம்மக்களுடன் பண்டமாற்று வாணிகம் செய்துள்ளனர். 
  • கழுதைகள் மீதும் வண்டிகளிலும் (உப்பு, மீன்,  இறால், முத்து, பவளம் ஆகியவற்றை) ஏற்றிக்கொண்டு பிற திணை நிலங்களில் வாணிகம் செய்து பொருள் வளம் பெற்றனர்.
  • பாய்மரப் படகு, நாவாய், கப்பல் முதலிய பெருங்கலங்களில் சென்று அக்கரை நாடுகளிலும் தீவுகளினும் வணிகம் செய்து, அவ்விடத்துப் பலவகைப் பண்டங்களைக் கொண்டுவந்தன.

  • இதன் வளர்ச்சி நிலையாகக் கடல்வாணிகம் உருவாகியது எனலாம்.  


 பெருங்கற்காலத்தில் கல் பதுக்கைகள்

  •  இறந்தோர் உடலைப் பதுக்கி மறைத்துப் புதைத்து வைத்ததால் இவை பதுக்கைகள் என்ற பொதுப் பெயரால் குறிப்பிடப்படுகிறது. 
  • இதற்குக் கல்படை, கல்அறை,   கல்குவை, கற்கிடை, கல்வட்டம், கல்திட்டை என்ற வேறு பல பெயர்களும் உள்ளன. 
  • பதுக்கைகள் பெருகிப் புதர் மண்டுவதால் அவை இருந்த இடம் பற்றிய தெளிவுக்காகவும் அடையாளத்துக்காகவும் புதிய பதுக்கைகளைத் தோற்றுவித்தனர். 
  • அவற்றின் அருகில் உயர்ந்த செங்குத்தான கல்லை நிறுத்தினர். 
  • இதற்கு நெடுகல் என்று பெயர். 
  • ஈமக்குழியின் நான்கு பக்கங்களிலும் பெருங்கற் பாறைகள் செங்குத்தாக நிறுத்தப்பட்டு அவற்றின் மேற்புறத்தில் ஒரு பெரிய கல்பலகையால் மூடியுள்ளனர். 
  • இதனைக் கல்திட்டை என்று அழைத்தனர். 
  •   கல்திட்டைகளில் நிலத்திற்கு மேல் நான்கு பெருங்கற்கள் பதிக்கப்பட்டு அதன் மேல் மூடி போன்ற ஒரு பெரிய கற்பலகையால் மூடப்பட்டிருக்கும். 
  • இவை கல் பதுக்கைகள் எனப்பட்டன. 
  • பெருங்கற்களைக் கொண்டு அறை போன்ற அமைப்புகளை உள்ளடக்கியதால் இவை நாளடைவில் கல்லறைகள் என்று அழைக்கப்படுகின்றன.
  • 5000 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள கல் திட்டைகள் மல்லச்சத்திரத்தில் காணப்படுகின்றன.
  • பாண்டவன் திட்டு என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கால் திட்டைத் தமிழகப் பெருங்கற்கால நினைவுச்சின்னங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 
  • இந்தக் கல் திட்டையின் மூடுகல் 80 டன் எடை கொண்டதாக இருக்கும். 
  • இதன் இடுதுறை கிழக்குப் பக்கமாக அரை வட்ட வடிவில் இருப்பது இதன் பழமையை உணர்த்தும். 
  •  மலையனூர்த் திட்டு,  கோட்டமங்கலம்,  கீழ்ச்செப்பிலி, ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளிலும் ஏராளமான கல்திட்டைகள் உள்ளன.
  • அவற்றில் இடுதுளை தெற்கு வடக்காக, கிழக்கு மேற்காக, இரண்டு நிலையிலும் உள்ளனவாகச் சில உள்ளன.
  • பெருங்கற்காலத் தமிழர்களின் மொழி வளர்ச்சி

 

  • குமரிக்கண்டத்தில் குறிஞ்சி நிலத்திலிருந்து தோன்றிய தமிழ் மொழி  பெருங்கற்காலத்தில் மருத நிலம், நெய்தல் நிலம், பாலை நிலம் என எல்லா நிலங்களிலும் பரவின.  
  • அந்த நிலங்களுக்கு ஏற்ப பல்வேறு தொழில்களும் வணிகமும் பெருகின.
  • இதனால் ஐந்து நிலங்களிலும் தமிழ்ச் சொற்கள் பலவும் புதிதாகத் தோன்றின.
  • எண் வேற்றுமைகளும் பல வகை சொற்றொடர் அமைப்புகளும்  தோன்றியிருக்க வேண்டும் என்று அறிஞர் உரைக்கின்றனர். 
  • பெருங்கற்காலத் தமிழர்கள் எழுத்துமுறையை உருவாக்கி பயன்படுத்தத் தொடங்கினர்.  
  • சில குறியீடுகளைக் கருத்து பரிமாற்றத்திற்கான ஒருவகை வரி வடிவ வடிவமாகப் (எழுத்தாக) பயன்படுத்தத் தொடங்கினர். 
  • அவை தமிழ் வடிவங்களைப் போன்று இடமிருந்து வலமாக எழுதப்பட்டுள்ளன.
  • சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு அக் குறியீடுகளைப் பயன்படுத்தும் நிலை பரவலாகத் தமிழகம் எங்கும் பரவியிருந்துள்ளது. 
  • இந்தக் குறியீடுகள் தமிழ் மொழிக்குரிய எழுத்துகளாகப் படிநிலை வளர்ச்சி பெற்றது.
முடிவுரை

     உலோககால மக்கள் உலோகங்களைப் பயன்படுத்தி வாழ்ந்துள்ளனர். பிறநாடுகளுக்கும் ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் செய்யும் அளவிலும் வளர்ந்துள்ளனர். உள்நாட்டிலும் ஒவ்வொரு நிலத்தில் விளைந்த பொருள்களைப் பண்டமாற்று முறையில் வணிகம் செய்துள்ளனர் பன்ற செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது.  
..................................................................................................

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி