கடிதம் சிறுகதை சுருக்கம்

 

புதுமைப்பித்தன் - கடிதம்

புதுமைப்பித்தன்  தனது சிறுகதையில் புதிய பாணியைக் கடைப்பிடித்தவர்சமூகத்தின் குறைபாடுகளைத்  தனது சிறுகதையில்  கிண்டலாக வெளிப்படுத்தியவர்கடவுளும் கந்தசாமி பிள்ளையும், பொன் நகரம், சாப விமோசனம்  முதலியன இவரது புகழ்பெற்ற சிறுகதைகள்.

கடிதம் என்ற இந்தச் சிறுகதை அவருக்கே உரித்தான நடையில் ஒரு எழுத்தாளனின்  மனவிரக்தியை வெளிப்படுத்துமாறு  அமைந்துள்ளது.

கதாபாத்திரங்கள்

சிங்காரவேலு, சுந்தரம்

சிங்காரவேலுவின் கதைக்கரு

சிங்காரவேலு ஒரு எழுத்தாளர் வாழ்க்கையின் சிக்கல்களை, வாழ்க்கையே திறந்து காண்பிக்கும் ஜன்னல்களாக சிங்காரவேலுவின் கதைகள் அமைந்திருக்கும். ஆனால் அப்படிப்பட்ட கதையைப் படித்துப் பாராட்ட யாருமே இல்லை என்ற ஆதங்கம் சிங்காரவேலுவுக்கு உண்டு.

சிங்காரவேலுவின்  ஏக்கம்

பேனாவை வைத்து அரசனாகி விடுவோம் என்று அவர் நினைத்ததில்லை, அதே போன்று பேனாவை வைத்துக்கொண்டு பிச்சை எடுக்க வேண்டும் என்றும் அவர் நினைக்கவில்லையாருமே அங்கீகரிக்காத இந்தச் சமூகத்தில் உயிர் வாழ வேண்டும் என்றால் ஒன்று உண்ணாவிரதம் இருந்து முக்தி அடைய வேண்டும் இல்லையென்றால் ஏதாவது ஒரு கருணை தெய்வத்தின் அட்சய பாத்திரம் கிடைத்திருக்க வேண்டும் என்று அவர் நினைப்பார்

அவருடைய சமூகமாகச் சில நண்பர்களும் ரசிகர்களும் இருந்தனர். இருந்தாலும் போதிய அளவு அவருடைய கதைகளைப் படித்துப் பாராட்ட ஆட்கள் இல்லை. புகழில்லாமல் இலக்கியவாதிகள் உயிர் வாழ முடியாது. பாராட்ட வேண்டாம், ஆனால் உள்ளதை உள்ளவாறு கூற வேண்டாமா? என்று அவர் ஏங்குவார். அவரைப் பொறுத்தவரை நேர்மையான புகழ் இலக்கிய கர்த்தாவுக்கு ஊக்கம் அளிக்கும் உணவு என்னும் சிந்தனை கொண்டவர்.

சுந்தரம் வருகை

இவ்வாறு அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போது வெற்றிலை போடுவது வழக்கம். அப்போது அவரது நண்பர் சுந்தரம் வந்தார். அவர் வந்தவுடன் வெளியில் போகலாமா என்று அழைத்தார்முதலில் வெற்றிலையைப் போடு என்றார் சிங்காரவேலு. என்ன இன்னும் இந்தக் கதையை முடிக்கவில்லையா என்று கேட்டார். ஆமாம் எழுதி என்ன பிரயோஜனம் சும்மா எழுது என்றால் எப்படி? நான்கு பேர்கள் நன்றாக இருக்கு என்று சொல்வதற்கு வேண்டாமா என்று சொன்னார். ஏன் உனது கதைகளை ரசிக்க நாங்கள் இல்லையா என்று சுந்தரம் கேட்டார்.

நீ எனது சினேகிதன் உனக்கு என் மேல் அன்பு உண்டு நான் என்ன எழுதினாலும் நீ ரசிப்பாய். மூன்றாவது மனிதன் யாராவது என் கதையை ரசிக்க வேண்டாமா? அதனால்தான் நான் எழுதவில்லை. இவ்வாறு கூறிவிட்டு இரண்டு பேரும் வெளியில் சென்றனர்

பாராட்டுக் கடிதம்

ஒரு ஐந்தாறு நாட்கள் கழித்து இரவு 7 மணி இருக்கும் . சிங்காரவேலு தனது அறையில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தார். அவர் எழுத ஆரம்பித்த கதை அப்படியேதான் இருந்தது. சிங்காரவேலுவுக்கு  எப்போதாவது தான் கடிதம் வரும். ஜன்னல் வழியாக வந்து விழுந்த அந்தக் கடிதத்தை எடுத்து முகவரியைப் பார்த்தார். அவருக்கு வந்த கடிதம் தான் அது. அந்தக் கடிதத்தில் சிங்காரவேலுவின் கதைகள் குறித்துப் புகழ்ந்து எழுதப்பட்டிருந்தது. குறிப்பாகப் பாலாவின் சங்கடங்கள் என்ற கதை சமூகத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்ததாகவும் கதை கடிதத்தை எழுதியவருக்குப் படிப்பறிவு அவ்வளவாக இல்லாததால் அவருடைய கதைகளைச் சிறப்பாக விமர்சிக்க முடியவில்லை என்றும் அவர் நிறைய எழுத வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் புகழ்ந்து எழுதப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தை எழுதியவர் பெயர் நாகப்பன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது

சிங்காரவேலனின் மகிழ்ச்சி

கடிதத்தைப் படித்ததும் அவரது முகம் மகிழ்ச்சி அடைந்தது உள்ளம் பூரிப்படைந்தது. மறுபடியும் மறுபடியும் அந்தக் கடிதத்தைப் படித்தார். இந்தச் சமூகத்தின் மேல் நம்பிக்கை இருக்கிறது என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார். கடிதத்தைத் தனது நண்பன் சுந்தரத்திற்குக் காட்ட வேண்டும் என்று  நினைத்தார். நாகப்பனுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்தார்

உண்மை தெரிந்தது

மீண்டும் அந்தக் கடிதத்தை படிக்கும் போது சில எழுத்துக்கள் தமக்கு அறிமுகமான யாரோ ஒருவருடைய எழுத்துக்கள் மாதிரி புரிந்தது. யாரோ தெரிந்தவர் தான் எழுதியிருக்க வேண்டும் இல்லை என்றால் தன்னுடைய முகவரி எப்படி தெரிந்து இருக்கும். தான் நாகப்பனை  எவ்வளவு உயர்வாக நினைத்தோம். ஆனால் அவனும் இந்தச் சமூகத்தில் ஒருவன் தான்உண்மையில் அவன் கதையை ரசித்தால் பகிரங்கமாகப் பத்திரிக்கைக்கு ஏன் எழுதக்கூடாது, என்னைத் திருப்தி படுத்த அவன் எழுதினான். இந்த முட்டாள் கூட்டத்திற்கு நான் கதை எழுத வேண்டுமா நாளைக்கு வரட்டும் கதை வேண்டுமாம் கதை என்று நினைத்துக் கொண்டார். அவருக்கு மனம் முழுக்க அதிருப்தி ஏற்பட்டது. இப்படிப்பட்ட சமூகத்தில் வாழ வேண்டியிருப்பதற்காக வருத்தப்பட்டுக் கொண்டார். அதற்காக எழுதாமலும் இருக்க முடியாது. அந்தக் கடிதத்தை எரித்து விட்டார். அறை முழுவதும் காகிதம் எரியும் நாற்றம் அடித்தது. வெற்றிலை பெட்டியை  எடுத்து வெற்றிலை போட்டுக் கொண்டார் அன்று அவர் வெகு நேரம் தூங்கவில்லை விளக்கு அணைந்தது.

சிங்காரவேலுவின் மனமாற்றம்

அன்று அவர் வெகு நேரம் தூங்கவில்லை. இந்த மாதிரியான சமூகத்தை எப்படி மாற்றுவது, தைரியமான மனிதர்களாக எப்படி மாற்றுவது, இருள் இருந்தால் தானே ஒளி? ஒளி வராமல் போய்விடுமா? அதுவரை காத்திருக்க வேண்டும். எத்தனை காலமோ? ஒளிவரும் போது நாம் இருக்க வேண்டும் என்று அவசியம் உண்டா? எனது படைப்புகள் இருந்தால் போதும் என்று நினைத்துக் கொண்டார்.

எழுத்தாளர்களுக்கு இந்தச் சமூகத்தில்  புதிய மதிப்பும் மரியாதையும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை. என்றாலும் எழுத்தாளர்கள் தங்கள் பணியை செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்கள் மறைந்தாலும் அவர்கள் படைப்புகள் நிரந்தரத்துவம் பெற்று இருக்கின்றன. இந்த உண்மையை விளக்கும் வகையில் இக்கதை சிறப்பாக அமைந்துள்ளது.

....................................................................

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி