வாய்ச்சொற்கள் சிறுகதை சுருக்கம்

     வாய்ச்சொற்கள் சிறுகதை

ஜெயகாந்தன்

 

ஜெயகாந்தன் தமிழில் குறிப்பிடத்தகுந்த சிறந்த எழுத்தாளர் சிறுகதை நாவல் என்று பல படைப்புகளை தமிழுக்கு தந்தவர் அவருடைய பல நாவல்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டிருக்கின்றன.

அவருடைய வாய்ச்சொற்கள் என்ற இந்தச் சிறுகதை கண்ணில்லாத இரண்டு பேரின் காதலைக் கூறுவதாக அமைந்துள்ளது.

கதாப் பாத்திரங்கள்

ருக்குமணி, கண்ணப்பன்

ருக்மணியின் வேலைத்திறம்

ஊருக்கு வெளியே ஒரு சத்திரம் இருந்தது. அந்த சத்திரத்தின் திண்ணையில் ருக்மணி காத்திருந்தாள். அந்த சத்திரம் அதன் பக்கத்தில் இருந்த ஆலமரப் பிரதேசத்தில் பகல் நேரத்தில் மிகவும் கலகலப்பாக இருக்கும். வழிப்போக்கர்களும், பஸ் பிரயாணிகளும், ரயில் பிரயாணிகளும் அங்கு வந்து டீ குடிப்பதற்கும் சாப்பிடுவதற்கும் இளநீர் குடிப்பதற்கும் பல கடைகள் உண்டு. இரவு நேரத்தில் அந்த பிரதேசம் அமைதியாகி விடும்.

பகலில் ஆலமரத்தடியில் முறுக்கு, மசால் வடை விற்கும் முனியம்மாவிடம் கதை பேசியவாறு கூடைகள் முடைவதிலும், தடுக்குகள் பின்னுவதிலும் பொழுதை கழித்துக் கொண்டிருப்பாள் ருக்மணி. எப்போதும் அவள் அருகே ஒரு கட்டு பனை ஓலையும் மூங்கில் கம்புகளும் இருக்கும். ஒரு கூட்டம்  அவள் கூடை முடைவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். அவள் கைகளில் இருக்கும் கூர்மையான கத்தி ஓலைகளை கிழித்து, மூங்கிலை பிளக்கும். ஆனால் ஒரு முறை கூட அவள் விரல்களை வெட்டிக் கொண்டதில்லை. அவளுக்கு வேலையில் கைதான் கண்கள். ஆனால் முகத்தில் இருக்கிற கண்களில் பார்வை இல்லை. அவள் பிறவி குருடு.

ருக்மணியின் உறவு

பத்து வருடங்களுக்கு முன்பு பத்து வயது சிறுமியாக இருக்கும் ருக்மணியை அழைத்துக் கொண்டு ஆலமரத்து சத்திரத்தில் குடிபுகுந்த  நெல்லிக்குப்பத்தைச் சார்ந்த செங்கேணிதான் அவளுடைய தாத்தா.  கண் தெரியாத அவளுக்கு  அவர்தான் இந்த கூடை முடையும்  கைத்தொழிலை கற்றுத் தந்தார். வளர்ந்த பிறகு அவள் யாருடைய கையையும் எதிர்பார்க்கக் கூடாது என்று ஒரு தொழிலை பழக்கி கொடுத்தார் ருக்மணிக்கு பகலெல்லாம் ஆலமரத்தடியில் தொழில். டீக்கடையில் சாப்பாடு. இரவில் சத்திரத்தில் தனிமையில் உறக்கம் .இப்படியே அவளுடைய வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. ஆனால் போன வாரத்தில் ஒரு நாள் இரவில் பேச்சுத் துணையாக இருந்த கண்ணப்பன் அதன் பிறகு வரவே இல்லை. அதனால் அவளுக்கு இந்தத் தனிமை வெறுப்பைத் தந்தது

ருக்மணியின் கனவு

ஏதேதோ நினைத்து உறங்கிக் கொண்டிருந்த ருக்மணிக்கு திடீரென்று ஒரு கனவு வந்தது. கண்கள் இல்லாவிட்டாலும் கனவு மட்டும் அவளுக்கு வரும். கனவில் யாருடைய குரல் எல்லாமோ கேட்கும் .அன்றும் அப்படித்தான் புல்லாங்குழலின் நாதம். அருகில் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே என்ற பாட்டு கண்ணப்பனின் குரல் தான். அவன் வந்து விட்டதாக அவள் நம்பினாள். கைகளை நீட்டி பக்கத்தில் தடவிப் பார்த்தாள். ஆனால் யாரும் வரவில்லை. இன்றாவது கண்ணப்பன் வருமா? என்று யோசனையோடு ஏக்கத்தோடு காத்திருந்தாள்.

கண்ணப்பனோடு ஏற்பட்ட பழக்கம்

ஒரு நாள்  கொட்டுகிற மழையில் நனைந்து எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் மெல்ல நடந்து ஒருவன் வந்தான்ருக்மணி நாயை விரட்டும் சத்தத்தை கேட்டு சத்திரம் எங்கே என்று விசாரித்தான். பிறகு சத்திரத்தின்  படிகளில் ஏறி அவள் அருகில் அமர்ந்து கொண்டான். ருக்மணி அவனை விசாரித்தாள். அவனுக்கு விழுப்புரம் என்றும் ரயில் டிக்கெட் எடுக்காமல் வந்ததால் அவனை அங்கு இறக்கி விட்டதாக அவன் கூறினான். இந்தச் சத்திரத்தில் இரவு தங்கலாம் அல்லவா? என்று கேட்டான். இரவு என்ன எப்பொழுது வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம் என்று அவள் பதில் கூறினாள். அவன் ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு குஷியாகப் பாட ஆரம்பித்தான்

ருக்மணி கண்ணப்பன் நட்பு

ருக்மணி தன்னை மறந்து அவன் பாடுவதை கேட்டுக் கொண்டிருந்தாள். நீ நல்லா பாடுறியே! ரொம்ப நல்லா இருந்துச்சு என்று சொன்னாள். அந்தப் புகழ்ச்சி அவனுக்கு மிகவும் நம்பிக்கையை தந்தது. அவள் நீ என்ன ஜாதி என்று கேட்டாள். நான் படையாச்சி என்றான். டிக்கட் இல்லாமல் ஏன் ரயில வந்த என்று கேட்டாள். நாலு வருஷமா நான் அப்படித்தான் ரயிலில் பாட்டு பாடுவேன் சில நாள் ஒரு ரூபா கூட கிடைக்கும் இப்ப யாரோ புதுசா வந்தவங்க இறக்கி விட்டுட்டாங்க என்று கூறினான் உனக்கு பெண்டாட்டி வூடு பிள்ளை எதுவும் கிடையாதா என்று கேட்டாள் அவனதற்கு பதில் சொல்லாமல் சிரித்தான். தன்னைப் பற்றி கூறினான். அம்மா இறந்ததற்கு அப்புறம் சித்தியின் கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறினான்.

நீ இன்னொரு பாட்டு பாடு என்று சொன்னாள். சரி என்ன பாட்டு வேணும் என்று அவன் கேட்டான்’ ‘உன்னழகை காண இரு கண்கள் போதாதுஎன்று தீப்பெட்டியில் தாளம் தட்டியவாறு பாட ஆரம்பித்தான் . அவள் அந்தப் பாட்டை மிகவும் ரசித்து கேட்டாள் .அப்பொழுது அங்கு வந்த நாயின் மீது மூங்கில் கம்பால் ருக்மணி அடித்தாள். மூங்கில் கம்பை கொண்டுதான் தான் கூடை  முறம் பின்னுவதாகக் கூறினாள். அவனும் தன்னால் மூங்கிலைக் கொண்டு புல்லாங்குழல் செய்ய முடியும் என்றும், இப்பொழுது தான் பாடிய பாட்டை எல்லாம் புல்லாங்குழலில் பாடத் தெரியும் என்றும் கூறினான்

பிறகு அவன் ருக்மணியைப் பற்றி விசாரித்தான் அவள்  தன்னுடைய வாழ்க்கையைச் சொன்னாள். தன்னுடைய உறவான தாத்தாவும் இறந்து போய்விட்டதாக கூறினாள். உனக்கும் இந்தச் சத்திரம் தான் வீடா? நீயும் என்னை போல் அநாதை தானா? என்று கேட்டான். நீயாவது ஆண், நான் பெண், இரண்டு் கண்ணும் இல்லாத குருடி எனக்கு யார் இருக்கா? என்று ஆதங்கத்துடன் கூறினாள்

கண்ணப்பன் அவளை விட்டுச் செல்லுதல்

மறுநாள் காலை எழுந்து பார்க்கும் போது அவன் இல்லை தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டானே என்று நினைக்கையில் அவளுக்கு அழுகையும்,  துக்கமுமாக இருந்தது, சற்று நேரம் இறந்து போன தன் தாத்தாவை நினைத்து அழுதாள். பிறகு ஆலமரத்தடியில் இருந்த டீக்கடையில் டீ வாங்கிக் குடித்தாள். மீண்டும் தன் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தாள்.

நிறங்களையே அவள் பார்த்திராவிட்டாலும் தான் செய்யும் கிலுகிலுப்பு விசிறிகளுக்கு அழகாக வண்ணம் பூசுவாள். .அவளைப் பொறுத்தவரை  பச்சை என்றால் அது கண்ணாடி குப்பியில் இருப்பது. நீலம் என்றால் தகர டப்பாவில் இருப்பது. கொட்டாங்குச்சி இருப்பது சிவப்பு அவ்வளவுதான். அந்தக் கண்ணப்பன் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்ட தினம் அவள் சரியாகவே வேலைகளைச் செய்யவில்லை. யாரிடமும் பேசவில்லை அவனுடைய குரல் அவளுடைய காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. மீண்டும் மீண்டும் அந்தப் பாடலை மானசீகமாகக் கேட்டு மகிழ்ந்தாள். அந்த ஒரு வாரமும் அவள் தன்னை மறந்து பலமுறை அவனுடைய பாடலை அவளுக்குள்ளாகக் கேட்டு மகிழ்ந்தாள்.

கண்ணப்பன் வரவு

திடீரென்று தூரத்தில் புல்லாங்குழல் ஓசை கேட்டது கண்ணப்பன் தான் வருது என்று அவள் நினைத்தாள். உடல் முழுவதும் சந்தோஷம் பரவியது.  காலடி ஓசையும் அருகில் கேட்டது யார் அது கண்ணப்பனா?என்று கேட்டாள். ருக்மணி. ஆமாம் என்றான் ஏன்? சொல்லாமல் போய்விட்டாய் என்று வருத்தத்துடன் கேட்டாள். ஏதாவது சாப்பிட்டியா நான் சோறு கூட வச்சிருக்கேன் என்று சொன்னாள். இல்லை ருக்மணி நான் இப்பதான் சாப்பிட்டேன். அன்றைக்கு அந்தப் பசி நேரத்துக்கு வேர்கடலை கொடுத்தியே இன்னைக்கு நான் உனக்கு இந்தப் பலகாரம் வாங்கிட்டு வந்து இருக்கேன்.  உனக்கு ஏதாவது வேலை கிடைச்சிருக்கா என்று கேட்டாள். ஆமா நீ கொடுத்தியே மூங்கில் அதில் ஒரு புல்லாங்குழல் செய்து அதை எட்டணாவுக்கு விற்று. அப்புறம் ரெண்டு அணாவுக்கு மூங்கில் வாங்கிச் சின்னப் பிள்ளைகளுக்கு ஊதல், புல்லாங்குழல் எல்லாம் செஞ்சு ஒரு ரூபா சம்பாதித்தேன்.  அப்புறம் பேனா கத்தி இரும்பு ஆணி எல்லாம் வாங்கினேன் இப்ப ஊதல் செய்ய பழகிட்டேன். உன்னைப் பார்த்துத்தான் இந்தத் தொழில் செய்யணும் கத்துக்கிட்டேன் என்றான்.

அப்போது அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். நான் சொல்லுவதைக் கேட்பாயா எனக்கு உன் பாட்டு உன் குரல் நீ எல்லாம் பிடிச்சிருக்கு. அதனால் நீயும் நானும் திருமணம் செய்து கொள்ளலாமா என்று தன் மனதில் பட்டதைச் சொன்னாள். அவன் மௌனமாகப் பீடி புகைக்க ஆரம்பித்தான். ஒரு வாரமா நான் உன் பாட்டையும் பேச்சையும் கேட்கவில்லை. அதனால் நீ பாட மாட்டியா எனக்காக என்று கேட்டாள். நீ சினிமா எல்லாம் பார்ப்பாயா? நம்ம சினிமா பார்க்கலாமா என்று கேட்டாள். நானும் உன்னை மாதிரி தான் எனக்குக் கண் தெரியாது. நாலு வருஷத்துக்கு முந்தி அம்மை போட்டு கண்ணு போயிடுச்சு. உன் முகத்தைக் கூட பார்க்க முடியாத பாவி நான் காலையில ஊருக்குப் போக போறேன். எனக்குக் கண் இருந்தா இப்படி உன்னை விட்டுட்டுப் போக மாட்டேன் என்று சொன்னான்.  அவன் வருத்தம் அவளுக்குப் புரிந்தது.  கண்ணில்லை என்பதால் எனக்கு ஒரு குறையும் தெரியவில்லை.  ஜனங்களெல்லாம் என்னமோ கண்ணு கண்ணுனு பேசிக்கிறாங்க. அது நமக்கு இல்லைன்னு சொல்றாங்களே என்று தோன்றுமே ஒழிய அதனால் எனக்கு ஒன்னும் கெட்டுப் போகல. நீயும் என்னை மாதிரி தானே ரொம்ப சந்தோஷம் இதுக்காகவா என்னை மறந்து விட்டேன் என்று சொல்லுகிறாய்.  

            அந்தச் சத்திரத்தின் இரவின் தனிமையில் இருவரும் தங்கள் கதைகளை ஆசைகளை ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் காதலைப் பேசிக்கொண்டே இருந்தார்கள். விடியும் வரை பேச்சு தான். கண்ணோடு கண்ணினை நோக்கொக்கின் வாய் சொற்கள் எந்தப் பயனும் இல்லை என்று காதலுக்கு இலக்கணம் வள்ளுவர் கூறிவிட்டால் போதுமா? இவர்களுக்கு வாய் சொற்கள் தான். காதல் என்பது கண்களால் பார்த்து மனதால் உணர்வது தான். ஆனால் இவர்களுக்குக் காதல்? கண்கள் இல்லாவிட்டாலும் இரண்டு இதயங்களின் அன்புக்குக் காரணமாக அமைவது வாய் சொற்கள்தான் என்று எளிமையான இரண்டு மனிதர்களின் உண்மையான அன்பை இக்கதை உணர்த்துகிறது

........................................................................................................................

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி