உலோகவியல்
உலோகவியல்
உலோகங்களின் வகைகளையும் அவற்றின் நுட்பங்களையும்
குறித்து கட்டுரைக்க.
முன்னுரை
உலோகவியல் என்பது உலோகங்களின் வேதியியல் பண்புகள் முதலியவற்றை ஆய்வு செய்கின்ற அறிவியல் துறை ஆகும். புவிக்கடியில் இயற்கையாகக் கிடைக்கும் தனிமங்களைக் கண்டறிந்து பிரித்தெடுத்துப் பயன்படுத்தும் அறிவியல் நுட்பத்தை விளக்கும் துறையாகும்.
உலோகத்தின்
பயன்பாட்டினை மனிதன் அனுபவிக்கத் தொடங்கியது சமுதாய மாற்றத்திற்கு முக்கிய காரணமாக
அமைத்தது. நுட்பமான வேலைகள் செய்வதற்கும், கால மேலாண்மைக்கும் இவ்வுலோகவியல் அறிவு அடிப்படையாக
உள்ளது.
இவ்வகை,
உலோகவியல் அறிவினைப் பழந்தமிழர் கைக்கொண்டிருந்தனர் என்பது,
அவர்கள் பயன்படுத்திய பலவித அணிகலன்கள், பல்வேறு கருவிகள், பல துறை எந்திரங்கள் போன்றவற்றின்
வழி அறிய முடிகிறது. குறிப்பாக, பொன்னாலான அணிகலன்களை மிகுதியும் பயன்படுத்தியுள்ளனர்.
பழந்தமிழ் நூல்களின் பலவிடங்களிலும் எஃகு உலை, கொல்லர்கள், பொன்செய்
கம்மர்கள், குறிப்பிடப்பட்டுள்ளனர். இல்லப் பயன்பாட்டுப் பொருள்கள், வேளாண்மைக் கருவிகள்,
கட்டுமானப் பொருள்கள், படைக்கலன்கள், எந்திரக்
கருவிகள் போன்றவற்றில் உலோகத்தின் பயன்பாடு மிகுதியும் காணப்படுகின்றது.
பல
நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்புத் தாதுக்களைச் சேகரித்து உருக்கி இரும்புக்கட்டி
தயாரித்து அவற்றிலிருந்து பல்வேறு ஆயுதங்கள், கருவிகள்
போன்றவற்றைச் செய்யும் அளவிற்கு அறிவுத் திறன் பெற்றிருந்தனர்.
இரும்பு உலோகம்
பூமியில் அதிக அளவில் கிடைக்கும் உலோகங்களுள் ஒன்று இரும்பு.
இரும்பை உருக்க 1100 டிகிரி சென்டிகிரேடு வெப்பமும் எஃகாக மாற்ற 1300 சென்டிகிரேடு
வெப்பமும் தேவை. இதனைக் கொடுமணலில் கிடைத்த உலைக்கலன்கள் கொண்டிருந்தன என்பதை, இலண்டன்
பல்கலைக் கழக உலோகவியல் பகுப்பாய்வு உறுதி செய்துள்ளது.
இரும்பில் பொன் கரும்பொன் என்றே முதலில் அழைக்கப்பட்டது.
கரும்பொனியல் பன்றி (சிவக சிந்தாமணி 104) உலையில் கரும்பொன் புகுந்து உமியோடு கரியும்
(சீறாப்புராணம்). என்ற இலக்கிய வரிகள் இரும்பு உலோகத்தைப் பயன்படுத்திய பழந்தமிழ்களைக்
குறிப்பிடுகின்றன.
இரும்புச்சத்து நிறைந்த மூலிகைகளையும், இரும்பாலாகிய உலோகத்தையும்
பயன்படுத்தி மருந்துகளைத் தயாரிப்பது சித்த மருத்துவத்தில் வழக்கமாக இருந்துள்ளது.
சித்த மருத்துவர்கள் இந்த மருந்துகளை நோயாளிகளின் தேவைக்கேற்ற அளவுகளில் கொடுத்து நோயைக்
குணப்படுத்தியுள்ளனர்.
கிருட்டிணாபுரத்திலும், ஆதிச்சநல்லூரிலும் நடத்திய அறிவியல்
ஆய்வுகளின்படி அவை சுரங்கத் தொழில் நகரங்களாக இருந்துள்ளன. இவ்விடங்களில் காணப்பட்ட கட்டட செங்கற்கள் உருக்கிய
உலோகக் உளையில் இடப்பட்ட கரிக்கட்டைகள் பயன்படுத்தப்பட்ட தாது மூலப்பொருள் ஆகியவற்றின்
அடிப்படையில் இரும்பு உலோகங்கள் உள்ளூரிலேயே தோண்டி எடுக்கப்பட்டு உருக்கப்பட்ட இரும்புத்
தாதுப் பொருள்களில் டைட்டானியம், வனடியம், கார்பன் போன்ற தனிமங்கள் கலந்து இருந்ததன்
மூலம் இங்கு தயாரிக்கப்பட்ட இரும்புரு பொருள்கள் மிகவும் உயர்ந்த தரம் வாய்த்தவையாக
இருந்துள்ளன.
வீட்டுப் பயன்பாட்டுப் பொருளாகிய விளக்கினை இரும்பில் வடிவமைத்திருந்தமையை அறிய முடிகிறது. இரும்பினால் செய்த விளக்கில் திரியிட்டு, நெய்வார்த்த செய்தியை, “இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ” {நெடுநல்.42) என்ற அடி சுட்டுகிறது.
"இரும்பு செய் கொல் எனத் தோன்றும்" (அகநானூறு
72.6), "வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே" (புறநானூறு 31.2.2),
"கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது",
"இரும்பு பயன்படுக்குங் கருங்கைக் கொல்லன் விசைத்து எறி கூடமொடு பொடுஉம் உலைக்கல்
அன்ன வல்லாளன்னே" போன்ற இலக்கிய வரிகள் மூலம் இரும்பின் பயன்பாட்டைத் தமிழர்கள்
நன்கு அறிந்திருந்தனர் என்பதை அறிந்துகொள்ளலாம்.
எஃகு
எஃகு அல்லது உருக்கு என்பது இரும்பை முக்கிய பாகமாகக் கொண்ட உலோகமாகும். எஃகின் தரம், வலு, நெகிழ்வுத்தன்மை
ஆகியவை இதனுடன் சேர்க்கப்படும் உலோகத்தைப் பொறுத்து அமையும். இலக்கியங்களில் வேல் என்னும் ஆயுதத்தை எஃகு என்றே குறித்தனர். “அடுபோர்
எஃகு விளங்கு தடக் கை மலையன் காளத்து", "ஒளிறு இலைய எஃகு ஏந்தி" போன்ற
வரிகள் எஃகின் வலிமையை விளக்குகின்றன.
எஃகால்
செய்யப்பட்ட நுண் கருவிகள்
1.
ஊசி
எஃகு
உலையில் மிகக் கூர்மையான
ஊசிகளைச் செய்யும் நுட்பங்களைப் பழந்தமிழர் அறிந்திருந்தனர். கூரிய
ஊசியிளை உடைய, தோல்தொழிலில் வல்லோனை,
“எக்குடை
யிரும்பின் உள்ளமைத்து வல்லோன்
சூடு நிலையுற்றுச் சுடர்விடு தோற்றம்”
(பதி.74:13,14)
என்ற
அடியும், மருத்துவத்
துறையில் அறுவை மருத்துவத்திற்குப் பயன்படும்
வண்ணம் உருவாக்கிய
நுண்மையான நெடிய ஊசியை, “சிரல்
பெயர்த் தன்ன நெடுவள் ஊசி”
(பதி.42:33 என்ற அடியும் காட்டுகின்றன. அதேபோல, அரத்தால் அராவப்பட்ட ஊசியின் திரண்ட
முனை செந்நாயின் பற்கள் போல் விளங்கியதை, “அரம்தின்
ஊசித் திரள்நுதி அள்ள”
(அகம். 199:8) என்ற அடி சுட்டுகின்றது.
2.
உளி
எஃகு
கருவிகளுள் ஒன்றான உளியின் பலவகைப் பயன்பாடுகள் சுட்டப்படுகிறது.
உளி வேட்டையாடும் கருவியாகவும், பாறை உடைத்தல்,
கிணறு தோண்டுதல், மரத்தைப் பிளத்தல் போன்றவற்றில்
உடைக்கும் கருவியாகவும்,
எழுத்தாணியாகவும் பயன்பட்டது. மீன்பிடித்
தொழிலில் பெரிய
மீன்களை பிடிக்க எறி உளி என்ற கருவியைப் பயன்படுத்தினர்.
இதனை, “எறிஉளி பொருத ஏமுறு பெருமீன்" (அகம்
210:2) என்பதில் அறிய முடிகிறது.
பொன்னைத்
தோண்டுதல்
பழந்தமிழர்,
மலையிலிருந்து பொன்னைத்
தோண்டி எடுத்ததற்கான
குறிப்பினை இலக்கியத்தில் காணமுடிகிறது. வளமான
மலையில் கானவர்கள்
யானைத் தந்தத்தைக் கொண்டு பொன்னைத்
தோண்டியதையும், அங்கு பொன்னோடு,
பிற மணிகளும் கிடைத்ததையும்,
“யானை
வெண்கோடு கொண்டு
நீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வோன்
கண்பொருது
இமைக்கும் திண்மணி கிளர்ப்ப” (அகம்.282:1-10)
என்ற
பாடலடிகள் காட்டுகின்றன. இதில், யானையின் கொம்பால்
மலையில் சிறந்த பொன்னைத் தோண்டிட,
பொன்னுடனே மணிகள் மேலே
வெளிப்பட்டு விளங்கியதைக் காண முடிகிறது.
புடமிடல்
பழந்தமிழகத்தில்
பொன்னைப் புடமிடும் நுட்பம் காணப்படுகிறது. இதனை,
“கடுபொன்
ஞெகிழந்து முத்தரி சென்றார்ப்ப” (பரி.21:18)
“கடுநீர்
வினைக்குழையின் ஞாலச் சிவந்த”
(பரி.12:87) என்ற பாடல்வரிகள் மூலம் அறியமுடிகிறது.
பொன்னால்
செய்யப்பட்ட அணிகலன்கள்
பொன்னணிகள்
மூலம் தொழில் நுட்பங்கள் வெளிப்பட்டு நின்ற பாங்கினைப் பழந்தமிழ் நூல்கள் காட்டுகின்றன.
மகளிர் மட்டுமன்றி, ஆடவரும், அரசரும் பொன்னணியினை
அணிந்தனர். அரசருக்கென்று வடிவமைக்கப்பட அணிகள் பொன் தொழில்நுட்பத்தின் உச்சமாக விளங்கின.
ஒள்ளிய பொறிகள் பொறித்துள்ள வீரக்கணிடையை, “ஓடாப்
பூட்கை ஒண்பொறிக் கழற்கால்”
(பதி.34:2) என்பதிலும், பொன்னால் செய்த வேந்தன் பூண்களை, “பொலம்பூண்
வேந்தர் பலர்தில் லம்ம”
(பதி.64:2) என்பதிலும் அறியலாம்.
பொன்வணிகத்திற்கென்று
தனியே தெருக்கள் இருந்தன. பொன்னையுடைய கடைத்தெருக்களின் காட்சியை, “பொன்னுடை
நியமத்துப் பிழிநொடை கொடுக்கும்”
(பதி:30:13) என்கிறது இலக்கியம். பொன் விற்கப்பட்டதால்,
அக்கடைத்தெருவைப் பொன்னுடை நியமம் என்றனர்.
விரல்களில்
அணியும் மோதிரங்கள், கால்களில்
அணியும் பாதசாலம், சிலம்பு, பாடகம், தொடையில் அணியும் குரங்கு
செறி, இடையில் அணியும் மேகலை, சிவந்த
பொன்னாலான வளையல், நவமணிகள்
பதித்த வளையல், பல்வேறு பவழ வளையல் என்னும் கையணிகள்,
மாணிக்கம் பதித்த மோதிரம், நுண்ணிய சங்கிலியும்,
பூணப்படும் பொன்சரடும், புனையப்பட்ட
தொழில்களையுடைய முத்தாரம் என்னும் கழுத்தணி,
முதுகுப்புறம் மறைக்கும் கோவை, காதில் அணியும் குதம்பை,
கூந்தலில்
அணியும் தொய்யகம், புல்லகம்
ஆகிய அணி முதலியவற்றின் பட்டியலைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
பொன்
உரைகல்
பொன்னின்
தரத்தை உறுதிசெய்து அறிய ஒருவகை கல் பயன்படுத்தப்பட்டது.
இக்கல்லை கட்டளைக்கல் என்றும்,
பொன் உரைகல் என்றும்
இலக்கியங்கள் வழங்குகின்றன. இதன் வழி
தரமான பொன்னை
அறிந்திருந்தனர் என்பது தெரிகிறது. இவ்வகையான பொன்னின்
மாற்றினை உரைப்பவர்களைக் குறித்து மணிமேகலை சுட்டுகிறது.
பொன்
வைக்கும் பெட்டி
அணிகலன்களைப்
பாதுகாக்க, திறந்து மூடும் வகையிலான தொழில்நுட்பத்துடன் கூடிய அமைப்பினையுடைய நகைப்
பெட்டிகள் செய்யப்பட்டன. இதனை, “பொன்பெய்
பேழை மூய்திறந் தன்ன”
(குறுந்.233:3) என்ற பாடல்வரி மூலம் அறியலாம்.
காசுகள்
உலோகத்தினாலும்,
பளிங்கினாலும் செய்யப்பட்ட காசுகளை இலக்கியங்கள் காட்டுகின்றன. காசுகளை அணிகலன்களில்
கோத்துப் பயன்படுத்தினர். அவையே பண்டமாற்றத்திலும்
பயன்பட்டன. காசுகள்
பெரும்பாலும் ஓட்டையுடன் கூடிய அமைப்பினைப் பெற்றிருந்தன. பிற்காலத்தில் ‘ஓட்டைக்
காசுகள்’ என்ற
ஒருவகைக் காசுகள்
புழக்கத்திலிருந்தது. பண்டமாற்றில்
பொருள்களுக்கு அடுத்து பொற்காசுகள் மதிப்பீடாக அமைத்திருந்தன.
செப்பு உலோகம்
இத்தனிமம் செம்பு, தாமிரம் எனவும் வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
மிகவும் மென்மையானதாகவும், தகடாக அடிக்கக்கூடியதாகவும்,
கம்பியாக நீட்டம் கூடியதாகவும், மிகவும் உயர் வெப்பம் மற்றும் மின் கடத்தியாகவும் தாமிரம்
விளங்குகிறது. இதன் மேற்பரப்பு சிவப்பு நிறத்தில் இருப்பதால் இதனைச் செம்பொன் என்றும்
அழைக்கிறார்கள்.
கட்டுமானப் பொருள்களிலும் வேறு கலப்பு உலோகங்களின் பகுதிப்
பொருள்களாகவும், நாணயங்கள் தயாரிப்பிலும் செப்பு பயன்படுகிறது.
பாண்டியனின் அரண்மனை மற்றும் அந்தப்புர நெடுஞ்சுவர்கள் செம்பினால்
செய்யப்பட்டது போன்று உறுதியுடன் இருந்தது என்பதை, “செம்பியன்று அன்ன செய்வுறு நெடுஞ்சுவர்"
என்னும் பாடல் வரிகள் மூலம் அறியலாம்.
ஆதிச்சநல்லூர், மேல் சித்தாமூர், கொடுமணல் அகழாய்வில் செம்புப்
பாத்திரங்கள் உண்டெடுக்கப்பட்டுள்ளன. செம்பினாலான மயில் பொம்மை ஒன்று மேல் சித்தாமூர்
அகழாய்வில் கிடைத்துள்ளது.
சோழர் மற்றும் பாண்டியர் கால நாணயங்கள் செப்பால் ஆனவையே ஆகும்.
3-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பாண்டியனின் செப்புக் காசின் பின்புறம், மீன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
முன்புறம் தமிழ்பிராமி எழுத்துப் பொறியும்
வரையப்பட்டுள்ளது.
முடிவுரை
உலோகவியல் அறிவிலும் பழந்தமிழர் சிறப்புற்றிருந்தனர் என்பது தெளிவாகிறது.
-----------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக