தொழில்நுட்ப மேலாண்மை

 

தொழில்நுட்ப மேலாண்மை

பழந்தமிழரின் தொழில் நுட்ப மேலாண்மை குறித்து விளக்கி எழுதுக.

முன்னுரை

நம் முன்னோர்கள் தொழில்நுட்ப மேலாண்மையில் சிறந்து விளங்கினர்.


தொழில்நு
ட்ப
மேலாண்மை என்பது புதிய தொழில் நுட்பங்களை உருவாக்குதல், புதுப்பித்தல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். நம் முன்னோர்கள் வேளாண்மை தொழில், நெசவுத் தொழில், மருத்துவத் தொழில், இயந்திரத் தொழில், கட்டிடத்தொழில், கைவினைப் பொருள்கள், பாதுகாப்புத் துறை என அனைத்துத் தொழில் நுட்ப மேலாண்மையிலும் சிறந்து விளங்கினர்.

வேளாண்மைத் துறையில் எந்திரப் பயன்பாடு

நிலத்தைப் பண்படுத்துதல், பலவகை வித்துக்களைப் பயன்படுத்துதல், நீரினைத் தேக்கி வைத்தல் போன்ற நுட்பமான செயல்களில் வேளாண் உற்பத்தி பெருகியது எனலாம்.

பயிர்களைப் பாதுகாக்கும் தொழில் நுட்பம்

விளை பயிர்களை விலங்குகள் மற்றும் பறவைகளிடமிருந்து காக்க விலங்குப் பொறிகளை உருவாக்கினர். விலங்குகளின் தன்மைக்கேற்ப பொறிகளின் செயல் திறனும் வடிவமைப்பும் அமைக்கப்பட்டிருந்தது.

முள்ளம்பன்றி தினைப்புனம் நோக்கி வரும்போது அதனைப் பிடிக்க வைக்கப்பட்ட பெரிய துவாரத்தினை உடைய 'பெருங்கல் அடாஅர்' என்னும் எந்திரத்தில் ஒள்ளிய நிறமுள்ள வலிய புலி அகப்பட்ட காட்சியை, தினை உண் கேழல் இரிய புனவன் சிறு பொறி மாட்டிய பெருங் கல் அடாஅர் ஒண் கேழ் வயப் புலி படூஉம் (நற்.119:1-3) என்ற பாடல்மூலம் அறியமுடிகிறது. இதில் வலிமை மிகுந்த புலி மாட்டும் என்ற செய்தி குறிப்பிட்டுள்ளதன் மூலம் எந்திரத்தின் தொழில்நுட்பமும் செயல்திறமும் விளங்குகின்றது.

தினைப் புனத்தை அழித்து விடுவதால் பன்றிகட்கு அஞ்சி அவை வரும் வழியில் வைக்கப்பட்ட எந்திரப் பொறியைப் பற்றி மலைபடுகடாமும் ( 193-195) சுட்டுகிறது.

            சிறிய வடிவில் கையால் இயக்கும் தன்மையில் வடிவமைக்கப்பட்ட தழல் மற்றும் தட்டை கருவிகள் மூலம் பயிர்களைப் பறவைகளிடமிருந்து பாதுகாத்துள்ளனர். இதனை, மலைபக்கத்தே கட்டின் பரணிமீது ஏறித் தழலும் தட்டையுமாகி கிளிகளைக் கடியும் கருவிகளைக் கையிலே வாங்கிக் கிளிகளை ஓட்டிவர (குறிஞ்சி. 41-44), தலைவி வேங்கை மாலை சூடித் தழலினைச் சுற்றியும் தட்டையினைத் தட்டியும் தினைப்புனம் காத்தாள் (அகம் 1881-13), தழலும் தட்டையுமாகிய கிளி கடி கருவிகளைத் தந்தும் தழையாடையைக் கொடுத்தும் இப்பொருள்கள் உனக்கு ஏற்படையன என்று புனைந்துரைகளைக் கூறித் தலைவியின் ஆய்நலத்தைத் தலைவன் கொள்ளை கொண்டான் (குறு.223:4-7) என்பன போன்ற குறிப்புகளிலிருந்து வேளாண்மைத் துறையில் பாதுகாப்புக் கருவிகளாகத் தழலும் தட்டையும் விளங்கியமை தெரிகிறது.

நெசவுத் தொழில்நுட்ப மேலாண்மை

உடை என்பது உணவிற்கு அடுத்த நிலையில் மனிதனுக்கு மிகவும் வேண்டிய ஒன்றாகும். இது ஒரு சமூகத்தின் நாகரிகத்தையும், தொழில்நுட்பத் திறத்தையும் அடையாளப்படுத்துவதாக உள்ளது. உடை பற்றிய பண்டைய இலக்கியக் குறிப்புகளிலிருந்து நெசவுத் தொழில்நுட்பத்தை அறியலாம்.

ஆதி மனிதன் விலங்குகளின் தோல், தாவரங்களின் இலை,  தழைகளையும் ஆடையாகப் பயன்படுத்தினான். தழையுடுத்தும் இப்பண்பாடு மக்களிடையே நிலவி வந்ததைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  தலைவிக்குத் தலைவன் தழையும் தாரும் பரிசளித்தான் என்ற செய்தியை நற்றிணை (80.5) பாடல் புலப்படுத்துகிறது.  ஆடவரும் தழை அணிந்தனர் என்ற செய்தியும் இலக்கியங்களில் காணப்படுகிறது.

பழந்தமிழகத்தில் நெசவுத் தொழில் சிறுதொழிலாக இல்லங்கள் தோறும் மேற்கொள்ளப்பட்டது. பருத்தியை விளைவித்து, அதிலிருந்து பஞ்சினை எடுத்து அதிலிருந்த தூசுகளையும், செற்றைகளையும் நீக்கி உலர்த்தினர். பழந்தமிழ் இல்லங்களின் முற்றங்களில் பஞ்சு உலர்த்தப்பட்டிருந்தது என்பதனை “பஞ்சி முன்னிற் சிற்றி லாங்கட்" என்ற புறநானூற்று வரிகளில் இதனை அறியலாம்.

நெவுத்தொழிலில் ஈடுபட்ட பெண்டிர் பருத்திப் பெண்டிர் என அழைக்கப்பட்டனர். "பருத்திப் பெண்டின் பனுவலன்ன" என்ற புறநானூற்று பாடல் வரி இதனைக் குறிப்பிடுகிறது.

உடைகளை உற்பத்தி செய்ததோடு அவற்றில் வண்ணம் ஏற்றுதல், உடைகளில் பூ வேலைப்பாடுகள் செய்தல் முதலிய பல்வேறு நுட்பங்களையும் பழந்தமிழர் கையாண்டனர். மேலும் உடைகள், பின்னப்பட்ட நூலிலைகளின் இடைவெளியை அறிய முடியாத தன்மையிலும் பூ வேலைப்பாடுகளுடனும், பாம்பின் மேல் தோல் போன்ற தன்மை வாய்ந்ததாகவும் நுண்ணிய தொழில்நுட்பத்தோடு பின்னப்பட்டிருந்தன என்பதை, "நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து அரவுரி அன்ன அறுவை நல்கி" என்ற பொருநராற்றுப்படை வரிகள் தெளிவுபடுத்துகின்றன.

மூலப் பொருள்களை உற்பத்தி செய்து, அவற்றிலிருந்து இரண்டாம் நிலைப் பொருள்களான நூல், பட்டு, இழை உருவாக்கி, மூன்றாம் நிலையில்  துணியைச் செய்து பின்னர்ப் பயன்பாட்டிற்கு ஏற்பப் பல வடிவங்களிலும், வண்ணங்களிலும், அலங்கார வடிவமைப்புடனும் கூடிய ஆடைகளாகத் தொடங்கிய நிலை தொழில்நுட்பத்தின் உயர்நிலையைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன.

பழந்தமிழர் மருத்துவ தொழில்நுட்பம்

பழந்தமிழரின் மருத்துவத்தை உடல் நல மருத்துவம், மனநல மருத்துவம் என இரு கூறுகளாகப் பிரிக்கலாம். இவற்றுள் உடல்நல மருத்துவத்தை இயற்கை மருத்துவம் (கை மருத்துவம்), இசை மருத்துவம், நுண் மருத்துவம் என தொழில்நுட்பம் சார்ந்தது வகைப்படுத்தலாம்.

நுண் மருத்துவம்

சங்க இலக்கியத்தில் மருத்துவர்கள் அறவோன் (நற்றிணை 100), மருத்தன், மருத்துவன் (கலி 17,20,21), நோய் மருங்கு அறிஞர் (தொல். அக. 192), கற்றான் (குறள் 940), தீர்ப்பான் (குறள் 960) என்ற சொற்களால் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சங்க இலக்கியங்களில் மருத்துவர் நோயின் தன்மைக்கு ஏற்ப மருந்துகளை ஆராய்ந்து கொடுத்துக் குணப்படுத்தினர் என்பதைப் பின்வரும் நற்றிணைப் பாடல் வழி அறியலாம். "அரும்பிணி உறுநர்க்கு, வேட்டது கொடாஅது மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல" (136:2-3) என்று காட்டுகிறது நற்றிணை.

மருத்துவத்திற்கான இலக்கணத்தை வள்ளுவர் "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்." (குறள் 401) என்றுரைத்துள்ளார்.

புண்ணிற்குப் பஞ்சு வைத்துக் கட்டுப் போடுதல் போன்ற மருத்துவத் துறையின் அறுவை நுண் மருத்துவ முறைகளும் பழந்தமிழகத்தில் இருந்துள்ளது. மேலும், அறிவியல் உலகின் அறிய சாதனையான அறுவைச் சிகிச்சையினைப் பதிற்றுப்பத்தில்

"மீன்றேர்கொட்பிற் பனிக்கய மூழ்கிச் சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள் ளுசி நெடுவசி பரந்த உடுவாழ் மார்பின் அம்புசே ருடம்பினர்ச் சேர்ந்தோ ரல்லது தும்பை சூடாது மலைந்த மாட்சி" என்று ஐந்தாம் பத்தின் இரண்டாம் பாடலடிகள் போரில் வெட்டுண்ட உடலை கொண்டு தைத்த மருத்துவன் செயலை விளக்குகின்றன.

மருத்துவத்திற்குப் பயன்படும் வண்ணம் உருவாக்கிய நுண் ஊசியை நெடுவன் ஊசி என்கிறது பதிற்றுப்பத்து (42.3).

புண்ணுக்கு மருந்து வைக்கும்போது, புண்ணின் மேல் பஞ்சு வைத்துக்கட்டும் வழக்கம் பழங்காலத்திலேயே இருந்ததை,  “செருவா யுழக்கிக் குருதியோட்டிக் கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு பஞ்சியுங் களையாப் புண்ணர்" என்ற புறநானூற்று அடிகள் (8) உறுதி செய்கிறது.

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனாரின் பாடல் வரிகளில், வெட்டுண்டு உடல் தசையினைத் தைத்து மருந்தூட்டி அப்புண்ணின் மேல் பஞ்சினை வைத்து அளித்தமையை உணர்த்துகின்றன.

நவீன சிகிச்சை முறையால் போர்க்களத்தில் உடம்பில் பெற்ற விழுப்புண்களிள் வடுகள் இருந்த இடமே தெரியாமல் மறைந்து பழைய தோற்றத்துடன் காணப்பட்ட வீரனை, "இறையுறு விழுமம் தாங்கி அமர்அகத்து இரும்புசுவைக் கொண்ட விழுப்புண்நோய் தீர்ந்து மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி வழுவின்றி வடிந்த யாக்கையன்" என்ற புறநானூற்றுப் பாடலடிகள் (41) காட்டுகின்றன.

இன்றைய நவீன சிகிச்சை முறைகள் அனைத்தையும் பழந்தமிழர்கள் அறிந்து உபயோகப்படுத்தியுள்ளார்கள் என்பதை நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன.

"மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்" என்ற குறளில் வள்ளுவர் மருந்திலா மருத்துவத்தை நமக்கு உணர்த்துகிறார்.

மாற்றுறுப்பு பொருத்துதல்

தம் உடல் உறுப்புகளில் இயங்காமல் பழுதுபட்ட ஓர் உறுப்பை எடுத்துவிட்டு வேறோர் உறுப்பைப் பொருத்துதல் என்பது இன்றைய மருத்துவ உலகின் சாதனையாகக் காணப்படுகிறது. இதனைப் பற்றிய குறிப்பொன்று வெம்பில் காணப்படுகின்றது.

"நாடுவிளங் கொண்புகழ் நாடுதல் வேண்டித் தன் ஆடுமழைத் தடக்கை யறுத்து முறைசெய்த பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன்” என்ற பாடல் வரியில் பாண்டிய மன்னன் ஒருவன் சேந்தையின் இல்லக் கதவைத் தான் தட்டியதற்குத் தண்டனையாக, தன் கையைத் தரவே துண்டித்துக் கொள்கிறான் அதன்பின் பொன்னாலான கையைச் செய்து வைத்துக்கொண்டான், அன்றிலிருந்து 'பொற்கைப் பாண்டியன் என அழைக்கப்பட்டான் என்கிறது அச்செய்தி, தன் கையை இழந்த பாண்டியன் செயற்கை உறுப்பினைப் பொருத்திக்கொண்டு பயன்படுத்தியதை இப்பாடலில் அறியலாம்.

இயந்திரத் தொழில்நுட்ப மேலாண்மை

இன்றைய அன்றாட வாழ்வில் இயந்திரப்பயன்பாடு என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அதனைப் போன்று பழந்தமிழரும் இயந்திரங்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம்.

கரும்புப் பிழி எந்திரம்

கரும்பிலிருந்து கரும்புச் சாற்றினைப் பிரித்தெடுக்க 'கரும்புபிழி எந்திரம்' உருவாக்கப்பட்டது. இவ்வெந்திரம் ஆண் யானை முழங்கும் முழக்கத்திற்கு மாறாக ஒலித்ததை, 'கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்' (ஐங்குறு. 55:1), எந்திரத்தின் மிக்கொலியை, 'கரும்பின் எந்திரம் கட்பினோதை’ (மதுரைக்.258) என்றும் இலக்கியங்கள் கட்டுகின்றன. மருதநிலத்து நீர் நிலைகளில் உள்ள வாளை மீன்கள் துள்ளிப் பாயும் அளவிற்கு ஒலி எழுப்பிய கரும்பு பிழி எந்திரத்தை, கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது இருஞ்சுவல் வாளை பிறழும் (புறம்.322:7-8) என்ற அடிகளில் அறியமுடிகிறது. "தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த" என்னும் பதிற்றுப்பத்து (13.19) வரிகள் மூலம் நாம் இதனை அறியலாம்.

இலவந்திகை (எந்திரக் கிணறு)

     பழந்தமிழர் நீச்சல் குளங்களை "எந்திரக் கிணறு" என்று அழைத்தனர். இதனை எந்திர வாவி என்றும், இலவந்திகை என்றும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. நீரை நிரப்பவும் வெளியேற்றவும் உதவும் இயந்திரத் தொழில்நுட்பம் உடைய குளத்தில் நம் முன்னோர்கள் நீராடி மகிழ்ந்திருந்தனர். இவ் எந்திரவாவியை, வேண்டும் பொழுது நீர் நிறைத்தற்கும். வேண்டாதபொழுது போக்குதற்கும் உரிய எந்திரங்களுடைய நீர்நிலை என்று விளக்குகிறார் உ.வே.சாமிநாதையர் (மணி.உ.வே.சா. உரை. ப.326). "எந்திர வாவியில்இளைஞரும் மகளிரும் தந்தமில் ஆடிய சாந்துகழி நீரும்" என மணிமேகலை (28.7), "நிறைக்குறின் நிறைத்துப் போக்குரின் போக்கும் பொறிப்படை அமைந்த பொங்கு இலவந்திகை" எனப் பெருங்கதையும் சுட்டுகிறது.

வானவூர்தி

புறநானூறு 'வலவன் ஏவா வான ஊர்தி' (புறம் 27:7,8) என்ற பாடலடி  ஆளில்லா விமானம் பற்றிப் பேசுகிறது.  அதேபோல, உம்பர் உறையும் ஒளிகிளர் வானத்தின்கண், வைமானிகர் ஊர்ந்து திரியும் விமானங்களின் நிழல், வைகை ஆற்று நீரில் விழுந்து ஒளிவிட்டதை, உம்பர் உறையும் ஒளிகிளர்வா னூர்பாடும் அம்பி கரவா வழக்கிற்றே (பரி.15:70,71) என்ற அடிகள் சுட்டுகின்றன.

எந்திரப் பாவை

மகளிர் பாவை வைத்து விளையாடுதல் பழந்தமிழர் பழக்கவழக்கங்களில் ஒன்றாகும். மண்பாவை, மரப்பாவை போன்றவை இவ்விளையாட்டில் எந்திரத்தினாலான பாவையும் பயன்பாட்டிலிருந்தமை தெரியவருகிறது. இவ்வெந்திரப் பாவை தானே இயங்கும் எந்திரத் தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனை, நல் வினைப் பொறி அழி பாவையின் கலங்கி (நற்.308:6,7) என்கிறது நற்றிணை. நல்ல வேலைப்பாடமைந்த, தானே இயங்கும் எந்திரப் பாவை, அதிலுள்ள எந்திரம் அழிந்துபட்டதால் இயங்காமல் கிடந்தது உவமையாக்கப்பட்டுள்ளது.

திரிகை (அரைக்கும் எந்திரம்)

இல்லங்களில் உழுந்து, அரிசி, தினை போன்ற தானியங்களை அரைக்க, திரிகையைப் பயன்படுத்தும் நுட்பம் காணப்படுகிறது. அரிசியை இட்டுச் சுழலும் திரிகையின் ஒலி போன்று தேரின் சக்கரம் மணலை அறுத்துக் கொண்டு வந்ததை, ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த திரிமரக் குரல் இசை கடுப்ப (அகம். 224:12,13) என்ற அடிகள் காட்டுகின்றன. அதேபோல, முல்லை நில மக்கள் இல்லின் முன், யானையின் காலை ஒத்த திரிமரம் - வர திரிகை - நட்டு நிற்கும் பந்தரும் காணப்படுகிறது (பெருபாண். 185-187) என்ற செய்தியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறையில் எந்திரப் பயன்பாடு

மதிலுறுப்பு

 பதப்பாடு, எந்திரம், சோசம், தோணி, விதப்பு, ஞாயில், நாஞ்சில் மதிலுறுப்பே' (சேந்தன் திவாகரம், ப.318) எனும் நூற்பா மதிலுறுப்பின் பெயர் ஏழினைச் கட்டும். இவற்றுள் பதப்பாடு, சோசம், விதப்பு எனும் பெயர்கள் பழந்தமிழ் நூல்களில் வழக்குப் பெறவில்லை.

மதிலுறுப்புகளில் எந்திரமும் ஒன்று. எய்தல், எத்துதல், எட்டுதல் போன்ற திரமும் உடைய பொறி எந்திரம் எனப்பட்டது.

செம்பொறிச் சிலம்பொடு அணித்தழை தூங்கும் எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில் (பதி.33:6-7), அமர் எனின் திங்களும் நுழையா எந்திரப் படுபுழை (புறம்.177:4-5) என்ற பாடல்வரிகளால் போர் காலங்களில் அயல் படைகளைத் தாக்க, அழிக்கப் பயன்படும் வகையில், அரண்களில் பல்வேறு பொறிகள் பொருத்தப்பட்டிருந்தன என்பது தெரியவருகிறது.

பகை வீரர்களின் கண்ணுக்கு எளிதில் புலப்படாது பகை வீரர்கள் புழைகளைக் கடக்கும் பொழுது அந்த எந்திரப் பொறிகளில் சிக்கித் துன்புற்று அழியும் வகையில்   கோட்டை மதில்மேல் பல எந்திரப் பொறிகளும் இடம்பெற்றிருந்தன.

மதிலின் உச்சியைப் பற்றுவார் கையைத் துளைத்துத் துன்புறுத்தி அப்புறப்படுத்தும் ஊசிப் பொறிகளும், பகைவர் மீது பாய்ந்து தாக்கும் மீன்கொத்திப் பறவை போன்ற பொறிகளும், மதிலில் ஏறியவரைக் கோட்டால் கிழித்தெறியும் பன்றிப் பொறிகளும், கதவிற்கு வலிமை சேருமாறு கதவின் குறுக்கே உட்பக்கத்தில் அமைக்கப்படும் கணையம் போன்ற பொறிகளும், களிற்றுப்பொறி, புலிப்பொறி ஆகிய பிற எந்திரப் பொறிகளும் சுட்டப்படுகின்றன.

ஞாயில்

ஞாயில் என்பது கோட்டையின் ஏவறை  ஆகும் இதனை, வாயிலொடு புழை அமைத்து ஞாயில் தொறும் புதை நிறீஇ (பட்டினப்.287–288) எனும் தொடர் ஞாயிலின் இயல்பு உணர்த்தும். பெரிய வாயில்களுடன் சிறிய வழிகளையும் அமைத்துச் சூட்டுதொறும் அம்புக் கட்டுகளைக் கட்டி வைத்தலுக்கு உரியது ஞாயில் ஆகும்.

மேலும், ஞாயில் தோறும் பகைவர் காட்சியினின்றும் - கருவிகளின் தாக்குதலினின்றும் மறைந்து பாதுகாக்கும் புதுமையும் உண்டு என்பது விளங்கும். 'குறுந்தாள் ஞாயில்' (பதி.71:12) என்பதால் குறுகியிருக்கும் படிகளையுடையது ஞாயில் எனவும், நெடுமதிலின்கண் வரிசையாக இருக்கும் சூட்டுகள், 'நிரைஞாயில்' (மதுரைக்.66), 'நிரை நிலை ஞாயில்' (அகம்.124:16) எனவும் குறிக்கப்படுகின்றன.

 மதிலின் மேல் விளங்கும் ஞாயில்கள் வானில் விளங்கும் விண்மீன்களை ஒத்துத் தோன்றின (புறம். 21:3-4), 'மதிலும் ஞாயிலும் இன்றே' (புறம்.355:1) எனும் தொடரால் மதிலின்கணி விளங்கும் ஓர் உறுப்பு ஞாயில் என்பது விளங்கும். இக்குறிப்புகளின் வழி, மதிலின் முக்கிய உறுப்பாகிய ஞாயிலின் கட்டமைப்பில் காணப்படும் தொழில்நுட்பம் பெறப்படுகிறது.

புழை

புழை என்பது துளை, வாயில் ஒடுக்க வழி, மதிலில் அம்பெய்யுமிடம் (ஏவறை) எனும் பொருளுடையதாகும். 'வாயிலொடு புழை அமைத்து (பட்டினப்.287) எனும் தொடரால் கோட்டைகளில் பெருவாயிலொடு சிறுவழிகளையும் அமைத்திருந்தனர் என்பது விளங்கும். அம்பெய்வதற்கு அமைக்கப்பட்ட சிற்றிடம் ஏப்புழை எனப்பட்டது.

தானே எய்யக் கூடியதும், தொடர்ச்சியாகத் தாக்கவல்ல ஆயுதங்களை வெளியிடக் கூடியதுமான பலவித எந்திரப் பொறிகளையும் பொருத்தினர். அதற்கான எந்திரங்களை வடிவமைக்கும் நுட்பத்தினையும் பெற்றிருந்தனர். இத்தன்மை வாய்ந்த அரண்கள், குன்றுகள் போல அருக அருகருகே அமைக்கப்பட்டிருந்தன. போர்க் காலங்களில் நிலவின் ஒளியும் நுழைய முடியாதவாறு அமைக்கப்பட்ட பலவகை எந்திரப் பொறிகள் நிறைந்த புழைகளை,

தமரெனின் யாவரும் புகுப அமரெனில் திங்களு நுழையா எந்திரப் படுபுழை (புறம்.177:4-5) என்ற அடிகள் சுட்டுகின்றன.

படைக் கருவிகளோடு கூடிய அரண்கள்

வீரர்களால் எடுத்துச் செல்லக்கூடியவை, ஒரே இடத்தில் நிலையாக இருந்து எய்யக் கூடியவை என வேறுபட்ட படைக் கருவிகளும், படைக் கருவிகளோடு கூடிய அரண்களின் அமைப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆழமான அகழிகளையும், நீண்ட மதில்களையும், வலிமையான காவல் மிக்க அரண் 'அம்புதுஞ்சும் கடியரண்' (புறம்.20:16) எனப்பட்டது. கோட்டைகள் மிகவும் பாதுகாப்பானதாகவும் எதிரிகளைத் தாக்கும் எந்திரங்களையும், ஆழமான அகழிகளையும், நீண்ட மதில்களையும் கொண்ட தொழில்நுட்பம் உடையதாகவும் விளங்கின. இவ்விதமான எல்லாவகை படைக்கலன்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் அரணை 'முழுமுதல் அரணம்' என்கிறார் தொல்காப்பியர். (தொல்.1011).

கணையமரம் செறிக்கப்பட்ட உயரிய நிலையினையுடைய மதில் வாயிலிடத்தே தூங்குமாறு கட்டிய வில்லினது அம்பு செலுத்தும் வன்மையோடு பொருந்திய, விழுமிய சிறப்புடைய ஐயவித் துலாமும், காவற்காடும், ஆழ்ந்த கிடங்கும், நெடிய மதிலிடத்தே நிரல்படவமைத்த பதணமும் கொண்டு விளங்கிய எந்திரப் பொறிகளமைந்த கோட்டையை பதிற்றுப்பத்து 22:21-25 என்ற பாடலடிகள் காட்டுகின்றன. இதில், ஐயவி துலாம் என்பது மதிலில் பொருத்தப்படும் ஒருவகை போர்க்கருவி. இதனை வாயிலில் தொங்கும்படி அமைப்பர்.

தோல் தொழில்நுட்பம்

தேர்ந்தெடுத்துப் பதப்படுத்திய தோலில், நன்மணிகளைக் கோத்துப் பின்னப்பட்ட தோலாடையை, புள்ளி இரலைத் தோல் ஊன் உதிர்த்துத் தீது களைந்து எஞ்சிய திகழ்விடு பாண்டில் பருதி போகிய புடைகிளை கட்டி எஃகுடை இரும்பின் உள்ளமைத்து வல்லோன் சூடுநிலை உற்றுச் சுடர்விடு தோற்றம் (பதிற்றுப்பத்து.74:10-14) என்ற அடிகள் காட்டுகின்றன.

தோலினாலான காலணிகளைச் செய்யும் நுட்பம் பெற்றிருந்தனர். மறவர் காலில் செருப்பு அணிந்திருந்தனர் (புறம்.257:1; அகம்.129:12-13) அச்செருப்பு 'தொடுதோல் என்று குறிக்கப்பட்டது (பெரும்பாண்.169). அக்காலத்திலிருந்த அடிமூடும் காலணி (shoe) 'அடிபுதை தொடுதோல்' (அகம். 101-9) எனப்பட்டது.

தோலினால் பலவகை இசைக்கருவிகள் தயாரிக்கப்பட்டன. விலங்குகளின் தோலால் செய்யப்பட்ட பறையை, 'மான்றோல் சிறுபறை அயரும் குரவை' (321) என்கிறது மலைபடுகடாம். எருதுகளைப் போர்செய்ய விட்டு அவற்றுள் புறமுதுகு காட்டி ஓடாத, வெல்லும் நல்ல வீரம் பொருந்திய எருதின் தோல், முரசு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதை, ஓடா நல் ஏற்று உரிவை தைஇய ஆடு கொள் முரசம் இழுமென முழங்க (அகம்.334:1,2) என்பதன் மூலம் அறியலாம்.

மென்மையான மயிரை உடைய, ஆடுகளின் தோலை உரித்து ஒன்றாகத் தைத்த, வார் மிதித்த தோல் படுக்கையை, துய்ம்மயிர் அடக்கிய சேக்கை அன்ன மெய்யுரித்து இயற்றிய மிதியதட் பள்ளி (மலைபடு.418,419) என்ற அடிகளில் அறியலாம். பிள்ளையைப் பெற்ற எயிற்றி மான் தோலாகிய படுக்கையிலே அப்பிள்ளையோடே முடங்கிக் கிடந்தாள் என்கிறது பெரும்பாணாற்றுப்படை (89,90).  இவற்றில் மென்மையான, அதிக உழைப்பைத் தரக் கூடிய தன்மையினாலான தோல் படுக்கையை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தினைப் பழந்தமிழர் கொண்டிருந்தனர் என்பது பெறப்படும்.

பழந்தமிழர் தோலினால் ஆன போர்க்கருவியை உருவாக்கும் தொழில்நுட்பம் பெற்றிருந்தனர். இத்தோற்கருவி ‘கேடயம்' அல்லது 'பரிசை' எனப்பட்டது. இக்கருவியின் மிகுதன்மையைத் 'தோலது பெருக்கமும் (தொல். 1013) என்கிறார் தொல்காப்பியர்.

திரண்ட முகிலெனக் கருதி மயங்கும் பலதோற் படையினையுடைய வேந்தன் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை (புறம்.17:34,40) அதியமான், கடல் போன்ற படையுடனே கழல் வடிவாகவும் கிண்கிணி வடிவாகவும் செய்து செறிக்கப்பட்டு அம்பு படுதலால் துளைபட்ட தோலை உடையவன் (புறம்.97:14-16) என்கிறது. மேகத்தை ஒத்துக் கரிய பெரிய தோற்படை தோன்றும் (பதி. 52:6,62.2) விடியற்காலத்து மேகக் கூட்டத்தின் உச்சியை ஒத்த தோற்றத்தையுடைய தோலின் மேல் வேல் எழும் (பதி.66:11, 12), கழிகளுடன் பிணிக்கப்பட்ட கரிய தோலிடத்தே பொழியும் அம்புகள் தைத்தலால் எழும் ஓசை, யானை மணி ஒலியுடனும் முரசொலியுடனும் சேர்ந்து நள்ளிரவில் ஒலித்தது (அகம், 24:13-15) என்ற பாடல் வரிகள் சுட்டுகின்றன.

தோல் கருவி மார்பு கவசமாக விளங்கியதை 'தோல்தா தோல்தா என்று கேட்கின்றாய் தோலோடு துறுகல் ஒன்றைக் கொண்டு நின் மார்பை மறைப்பாய் ஆயினும் உய்குவாய் அல்லை' (புறம்.300:1,2) என்ற அரிசில்கிழாரின் பாடல் குறிப்பிடுகிறது. மதில் மேல் பகைப்படை பாயாதவாறு காத்து நிற்கும் தோலினைப் போல விசும்பிலே மேகம் செல்லும் என்று உவமிக்கிறது நற்றிணை (197:10-12).

வேள்வி செய்வோன் மான்தோலைத் தூய்மை செய்து, போர்த்திக்கொள்ள, அவன் மனைவி அத்தோலை வட்டமாக அறுத்து அதனைச் சுற்றிலும் முத்தாலும், மணியாலும் அலங்கரித்து அதைத் தோளணியாகச் செய்து அணிவாள் (பதி.74:10-16) என்ற செய்திகள் தோல் தொழில் நுட்ப மேலாண்மையை விளக்குகின்றன.

கப்பல் கட்டுமானத் தொழில்நுட்பம்

கடல் வாணிகத்தில் தலைசிறந்து விளங்கியவர் பழந்தமிழர். துறைமுகங்களில் கப்பல்கள் சுற்றித்திரிந்த காட்சியைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. இக்கடல் வாணிகத்திற்காக, கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் நுட்பத்தினைப் பெற்றிருந்தனர். தமிழரின் கடல் வாணிகம் குறித்தும், கடல் பயணம் குறித்தும் பல்வகையான இலக்கியப் பதிவுகளும், வெளிநாட்டுக் கடல் பயணிகளின் குறிப்புகளும் பகர்கின்றன. இலக்கியங்களிலும், நிகண்டுகளிலும் காணப்படும் கடல் போக்குவரத்திற்கான கலன்கள் குறித்த பல்வேறு பெயர்கள் பழந்தமிழரின் கடல்போக்குவரத்தினையும், கலன்களின் கட்டுமானத் தொழில்நுட்பத்தினையும் உறுதிசெய்கின்றன.

நீர்ப்போக்குவரத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு கலன்களின் பயன்பாடும் பல்வேறு பயன்பாட்டிற்கேற்ற பல்வேறு வடிவங்களில் அவற்றை உருவாக்கிய பழந்தமிழரின் நுட்பமும் அறியமுடிகிறது.

 முந்நீர் வழக்கம் பெண்களோடு இல்லை என்கிறது தொல்காப்பியம் (தொல்.980). கடல் வாணிகத்தில் பயணத்தின் இடையில் பழுது ஏற்பட்டால் அவற்றை நீக்குதற்காகக் கப்பல் பொறியாளர் பயணக் களத்தில் பணி அமர்த்தப்பட்டனர். கடல்வாணிகத்தில் ஈடுபட்டு, சுற்றித் திரிந்து பழுதுபட்டுவிட்ட கப்பலைப் பழுதுநீக்குவோரை, பெருங்கட னீந்திய மரம்வலி யுறுக்கும் பண்ணிய விலைஞர் என்றுரைக்கிறது பதிற்றுப்பத்து (76:4-5). கப்பல் கட்டுமானக் கூடத்தின் ஒரு பகுதியாக, பழுதுபட்ட கலன்களைச் செப்பனிடும் தொழிற்கூடம் அதேபோல, (பணிமனை) அமைந்திருந்ததையும் அறியமுடிகிறது.

பிற தொழில்நுட்பங்கள்

நாழிகை வட்டில், கண்ணாடி தயாரிப்பு, முத்துக்கோத்தல், யாழ் நரம்பு தயாரித்தல், அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பு, மெத்தை தயாரிப்பு ஆகிய பிற தொழில் நுட்பங்களையும் பழந்தமிழர் அறிந்திருந்தனர் என்பதற்கான சான்றுகளை இலக்கியங்கள் கொண்டுள்ளன.

நாழிகை வட்டில்

பண்டைத் தமிழகத்தில் காலத்தைக் கணக்கிட்டு அறிதற் பொருட்டு, 'நாழிகை வட்டில்' என்ற கருவியை உருவாக்கினர். இக்கருவியைக் 'குறுநீர்க் கன்னல்' என்று இலக்கியங்கள் மொழிகின்றன. இந்த நாழிகை வட்டிலைப் பயன்படுத்தி, நாழிகையைக் கணக்கிட்டு அறிவிக்க அரணமனையில் காலம்அறி வல்லுநர் அமர்த்தப்பட்டனர். அவ்விதம் அறிந்து கூறுபவர் 'நாழிகைக் கணக்கர் என்று சுட்டப்பட்டனர். இந்நாழிகைக் கணக்கரை, குறுநீர்க் கன்னல் எண்ணுநர் (அகம்.43:6) என்கிறது இலக்கியம். அரண்மனையில் குறிய நீரினைக் கொண்ட நாழிகை வட்டிலால், நாழிகைக் கணக்கிடுவோர் நாழிகையைக் குறிப்பிட்டு எழுப்பும் ஒலியை, கோமகன் கோயிற் குறுநீர்க் கன்னலின் யாமங் கொள்பவர் ஏத்தொலி அரவமும் என்ற அடிகள் மொழிகின்றன. நாழிகைக் கணக்கர், காலத்தைக் கணக்கிட்டு மன்னனுக்கு அறிவித்ததை, குறு நீர்க் கன்னல் இனைத்து என்று இசைப்ப' (முல்லை.58) என்பதிலும், நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்' (சிலம்பு.5:49) என்பதிலும் காணமுடிகிறது.

மென் படுக்கை (மெத்தை விரிப்பு)

அன்னத்தின் தூவிகளை நிரப்பி, தோலால் உருவாக்கப்பட்ட மெத்தைப் படுக்கையைப் பழந்தமிழ் நூல்களில் காணமுடிகிறது (மலைபடு.418-419). அதே போல, பல அடுக்குகளில் உருவாக்கப்பட்ட மெத்தைகளால் உயர்ந்த வளம் மிக்க படுக்கையை, 'பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை' (அகம்.305:5) என்பதில் அறியமுடிகிறது. சேவலும் பெடையுமாய் அன்னப்பறவைகள் புணர்கின்றபோது, அவற்றின் வயிற்றினின்று தாமே உதிரும் மென்மையான தூவிகளைச் சேர்த்துத் தைத்த மென் அணையை, 'துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை' (கலி.72:2) என்ற அடி சுட்டுகிறது. இதே போல காதல் துணைகளாய்த் தமக்குள் புணர்ந்த அன்னத்தின் வெண்மையான தூவியால் செய்யப்பட்ட அணையை மேம்பட விரித்து அதன்மேல் அணைகளையும் இட்டு, கஞ்சியிட்டு மணம் ஊட்டப்பட்ட தூய துணியை விரித்த படுக்கையை துணை புணர் அன்னத் தூ நிறத் தூவி இணை அணை மேம்படப் பாய் அணை இட்டு காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத் தோடு அமை தூமடி விரித்த தூமடி விரித்த சேக்கை (நெடுநல்வாடை.132-135) என்ற அடிகள் காட்சிப்படுத்துகின்றன. மேலும், விலங்குத் தலைபோல வேலைப்பாடு அமைந்த கட்டிலில் அன்னத்தின் தூவியால் செய்த மென்மையான படுக்கையை, 'இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள்' (கலி.13:15) என்பதிலும் அறியமுடிகிறது.

யாழ் நரம்பு தயாரிப்பு

பலவகையான இசைக்கருவிகளை உருவாக்கும் நுட்பத்தினையும் பல்வகை இசையினை இசைக்கும் கலையையும் பழந்தமிழர் கொண்டிருந்தனர். தீக்கடை கோலில், கையால் கடைந்து உண்டாக்கிய கொள்ளியால் துளையிட்டுக் குழல் அமைப்பர். அதில் எழுப்பிய பாலை என்னும் பண்ணைக் கேட்டு அவர் வெறுத்தபோது, குமிழின் உள் தொளைப் பொருந்திய கொம்பை வளைத்துக் கட்டப்பட்ட கயிறான நரம்பையுடைய வில் யாழால் குறிஞ்சிப்பண்ணை மீட்டி எழுப்புவர் என்ற செய்தியினை, இன்றீம் பாலை முனையிற் குமிழின் புழற்கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின் வில்யாழ் இசைக்கும் விரலெறி குறிஞ்சி (பெரும்பாண்.180-182) என்ற பாடலடிகள் காட்டுகின்றன. இதில், இசைக் கருவிகளையும், அதன் உறுப்பாகிய யாழ் நரம்பினையும், ஒருவகை மரப்பட்டையில் இருந்து உருவாக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்தனர் என்பது புலப்படுகிறது.  ஒப்பனைப் பொருள்கள் தயாரிப்பு

பழங்காலத்திலும் சுண்ணம், சாந்து, கூந்தலுக்கான நறுமண நெய் முதலிய பொருள்கள் தயாரிக்கப்பட்டன. இந்த வரிசையில் உடலுக்கு அழகு தரும் ஒருவகைக் கூழ்மப் பொருளைத் தயாரித்த நுட்பத்தினை, பலர் தொகுபு இடித்த தாது உகு கண்ணத்தர் தகைசெய் தீம் சேற்று இன் நீர்ப் பசுங்காய் நீடுகொடி இலையினர்... (மதுரைக். 400-401) என்ற அடிகள் காட்டுகின்றன. இதில், கருங்காலி மரத்தைச் சீவி ஊற வைத்துத் தயாரிக்கப்பட்ட, உடலுக்கு அழகுசேர்க்கும் இனிய 'செங்களி செய்யும் நுட்பம் சுட்டப்பட்டுள்ளது.

கண்ணாடிப் பாதுகாப்பு நுட்பம்

பழந்தமிழர் முகம் பார்க்கும் ஆடியினைப் (கண்ணாடி) பயன்படுத்தவும், அதனைப் பாதுகாக்கவும் அறிந்திருந்தனர். மகளிர் கண்ணாடியின் அழுக்குப் போக நறுமண நெய்யைப் பூசி கற்பொடியிட்டுத் துலக்கியதை, வாச நறு நெய் ஆடி வான் துகள் மாசு அறக் கண்ணாடி வயக்கி (பரி.12:19-20) என்ற அடிகள் குறிப்பிடுகின்றன. பளிங்கு மணியைப் போன்ற கண்ணாடிக்குள் பவழம் வைக்கப்பட்டதை 'மணிபுரை வயங்கலும் துப்பெறிந் தவைபோல' (கலி.33:3) என்ற அடி உவமையாக்குகிறது. குற்றம் இல்லாது உருவாக்கப்பட்ட உருவம் பார்க்கும் கண்ணாடியின் உள்ளே ஊதிய ஆவி முன் பரந்து பின் சுருங்குதலை எள் அற இயற்றி நிழல் காண் மண்டிலத்து உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி (அகம்.71:12-14) என்ற அடிகள் காட்டுகின்றன.

தச்சுத் தொழில் நுட்பம்

தச்சுத் தொழில்நுட்பத்தினைப் பழந்தமிழ் நூல்கள் சுட்டுகின்றன. பாண்டில் என்னும் உயரிய வேலைப்பாடமைந்த கட்டில் செய்யும் தச்சுச் தொழில்நுட்பத்தினை நெடுநல்வாடை நுட்பமாக விவரிக்கிறது. நாற்பது வயதுடையதும், முரசம் போன்ற கால்களைக் கொண்டதும், போர்ச் செயலில் புகழப்பட்டதும், உயர் அழகை உடையதும், புள்ளிகள் நிறைந்த் நெற்றியையுடையதும், போரில் விழுப்புண்பட்டு இறந்ததாகிய யானையின் தாமே விழுந்த கொம்புகளின் பக்கங்களைச் சீவி, சீரும் சிறப்பும் பொருந்தச் கைத்தொழில் வல்ல தச்சன், கூர்மையான உளியால் செய்த பெரிய இலைத்தொழிலை இடையில் அமையப் பெற்ற பெரிய எல்லையைப் பெற்ற கச்சுக் கட்டில் என்னும் பெயரினை உடைய பாண்டிலை, பேர் அளவு எய்திய பெரும் பெயர்ப் பாண்டில் (நெடுநல் .123) என்ற பாடலடி செய்முறை நுட்பத்தோடு காட்சிப்படுத்துகின்றன.

விசிறி

மடித்து உறையிலிடவும், விரித்துப் பயன்படுத்தவும் ஏற்ற வகையில், தொழில்நுட்பத்தோடு உருவாக்கப்பட்ட விசிறி கூதிர் காலத்தில் மடித்து உறையிலிடப்பட்டதால் சிலந்தியின் நூலால் பின்னப்பட்டுத் தொங்குகிறது. இதனை, கை வல் கம்மியன் கவின் பெறப் புனைந்த செங் கேழ் வட்டம் சுருக்கி கொடுந் தறி சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க (நெடுநல்.56-59) என்று காட்டுகிறார் நக்கீரர். இதில், விசிறி செய்வோன் கம்மியன் என்றும் விசிறி செங்கேழ் வட்டம் என்றும் வழங்கப்படுகிறது.

முடிவுரை

வேளாண்மைத் துறையில் வேளாண் கருவிகள், உற்பத்திப் பொருள்களைப் பிரித்தெடுக்கும் எந்திரங்கள். விலங்குகளிடமிருந்து விளைபொருள்களைப் பாதுகாக்கும் விலங்குப் பொறிகள் போன்றவற்றிலும், பாதுகாப்புத் துறையில் மதிலுறுப்புகள், எந்திரப் புழைகள், தானியங்கி எந்திரப் பொறிகள் போன்றவற்றிலும் கட்டடத் துறையில் அரண்களில் கருவிகளை ஏவப் பயன்படுத்தப்படும் எந்திர மேடை, அணைகளில் பயன்படுத்தப்பட்ட தானியங்கி நீர் இயக்கிகள் போன்றவற்றிலும், கைவினைப் பொருள்களில் தானியங்கி எந்திரப் பாவையும் பழந்தமிழரின் எந்திரத் தொழில்நுட்ப மேலாண்மையில் சிறந்து விளங்கினர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

........................................................................

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி