பழந்தமிழரின் நீர் மேலாண்மை

 நீர் மேலாண்மை 

பழந்தமிழரின் நீர் மேலாண்மை குறித்து எழுதுக.

முன்னுரை

தாவரங்கள், விலங்குக


ள் மற்றும் மனித சமூகத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று நீர். உயிரின வாழ்வின் இன்றியமையாத காரணியாக விளக்கும் நீர்நிலைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதே நீர் மேலாண்மை ஆகும். "நீரின்றி அமையாது உலகு" என்பது பழந்தமிழர் உணர்ந்த பேருண்மையாகும். பழந்தமிழர்கள் மிகச் சிறப்பான முறையில் நீர் மேலாண்மையை மேற்கொண்டிருந்தனர். அவர்களின் நீர் மேலாண்மை குறித்து இங்கு விளக்கப்படுகின்றன.

 நீர்நிலைகளை உருவாக்குதல்

     நீர் மேலாண்மையின் முதல்நிலையாக விளங்குவது நீர்நிலைகளை உருவாக்கி நீர்வளத்தைச் சேகரித்துப் பாதுகாப்பதாகும். இது மழைநீர்ச் சேமிப்பு உத்திகளை அடித்தளமாகக் கொன்டது. கடலில் கலந்து வீணாகும் நீரின் அளவு மிகுதியாக உள்ளது. எனவே மழைப்பொழிவின் போது பெருக்கெடுத்து ஓடிவரும் மழைநீரினைச் சேமித்தும் பாதுகாத்து நிலவளத்தை மேம்படுத்தி வேளாண்மைக்குப் பயன்படுத்தும் நோக்கில் நீர்நிலைகளை உருவாக்க வேண்டும்.

 நீரின் இயல்பானது பள்ளமான இடங்களில் தேங்குவதாகும். எனவேதான், எங்கெல்லாம் பள்ளமான இடங்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் நீரினை நிலைபெறச் செய்ய வேண்டும். இதனைப் பழந்தமிழர் நன்குணர்ந்து நீர்நிலைகளை அமைத்துள்ளனர்.

பழந்தமிழ் இலக்கியங்களில் குளம், அணை, ஏரி, மடு, பொய்கை, கிணறு ஊருணி என்று பல்வேறு நீர் நிலைகள் இடம்பெறுகின்றன. இவை ஒவ்வொன்றும்  அமைப்புமுறையாலும் பயனாலும் வேறுவேறாக விளங்குகின்றன.

“வரப்புயர நீர் உயரும் நீர் உயர்ந்தால் நெல் உயரும் நெல் உயர்ந்தால் குடி உயரும் குடி உயர்ந்தால் கோன் உயர்வான்" என்று ஒளவையார் கூறியுள்ளார். எனவே, அரசர்களும் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதை அறியலாம்.

ஏரிகள் குறித்த எண்ணற்ற சான்றுகள் இலக்கியங்களில் உள்ளன. சிறுபஞ்சமூலம் நூலில் ஏரிகள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதை, "குளந் தொட்டுக் காவு பதித்து வழி சீத்து உழம்தொட்டு உழுவயல் ஆக்கி வளம்தொட்டுப் பாகுபடும் கிணற்றோடு என்று இவை பார்படுத்தால் சொர்க்கம் இனிது" என்ற பாடல் மூலம் விளக்குகிறது. குளங்கள், கிணறுகள் போன்ற நீர் நிலைகனை உருவாக்கும் செயல்களைச் செய்பவர்கள் சொர்க்கத்திற்குச் செல்வார்கள் என்றுரைக்கிறது சிறுபஞ்சமூலம்.

நீர்த்தேக்கம்

 தன்போக்கில் ஓடிக் கொண்டிருக்கும் நீரைத் தேக்கி வைக்கும் முறை தமிழர்களின் பழமையான பண்பாக இருந்துள்ளது. இத்தகைய நீர்நிலைகள் பின்வருமாறு அழைக்கப்பட்டன. குளம், இலஞ்சி, பொய்கை, வாவி, கூவல் என்றழைக்கப்பட்டன.

கிணறு வெட்டுதல் பற்றி விளக்கும் நூல் கூவ நூல் எனப்பட்டது.   வேளாண்மைப் பெருக்கத்திற்குக் காடுகளை அழிப்பதும், குளங்களை வெட்டுவதும் இன்றியமையாதன என்பதைப் பண்டைத் தமிழர்கள் அறிந்திருந்தனர். இதனைப் பட்டினப்பாலை "காடு கொன்று நாடாக்கி குளம் தொட்டு வளம் பெருக்கி" என்றுரைக்கிறது.

ஏரி

வேளாண்மைக்குப் பயன்படும் நீர்நிலைகளில் முதன்மையானது ஏரி. எனவே, ஏரி சிறிதாயின் நீர் கொள்ளாது வழியும் என்று பெரிதாக அமைக்க வலியுறுத்தப்பட்டது. ஏரி சிறிதாயின் நீரூரும் இல்லது (நான்மணி.102.1) என்ற பாடல்வரி குறிப்பிடுகிறது.

மடு

மடு இயற்கையாக ஆற்றில் போக்கில் உருவாகும் ஆழமான பகுதியாகும். ஆற்றின் நீரோட்டம் குறைந்த காலத்தும் மடுக்களில் நீர் தேங்கி நிற்கும். மடுவின் ஆழத்தை அதிலுள்ள குளிர்ந்த நீரின் தன்மையை வைத்து அறிவர் என்பதை, நீரான் அறிய மடுவினை (நாண்மணி.80:1-2) என்ற அடிகள் காட்டுகின்றன.

பொய்கை

மருத நிலத்து சோலைகளினூடே அமைந்த நீர் நிலையாகப் பொய்கை அறியப்படுகிறது. தேங்கமழ் பொய்கை அகவயல் (ஐந்திணை எழுபது.47:1) என்ற வரியில் மணம் கமழ்கின்ற பொய்கைகளையுடைய வயல்கள் சூழ்ந்தது மருதநிலம் என்றுரைக்கப்பட்டுள்ளது.

அணை

ஓடிவரும் ஆற்றின் ஓட்டத்தினைத் தடுத்து நிறுத்தி, பாசனத் தேவைகளுக்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் பிரித்தளிக்கும் அமைப்பு முறையாகும். அணை கட்டிய செய்தியை, “செறுத்தோறு உடைப்பினும் செம்புனலோடு ஊடார் மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்” (222:1-2) என்று நாலடியார் விளக்குகிறது.  

சோழ மன்னர்களில் மாவீரனாகப் போற்றப்படும் கரிகாலச்சோழனால் கட்டப்பட்டதுதான் கல்லணை. இதன் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி மற்றும் உயரம் 36 அடியாகும். இதன் அமைப்பு வளைந்த கட்டுமானம் ஆகும். வெறும் கல்லில் அடித்தளம் அமைத்து அணை கட்டிய தொழில்நுட்பம் இன்றுவரை வியத்தகு சாதனையாக அமைந்துள்ளது. கல்லணையின் வயது 2010 ஆண்டுகள் ஆகும்.  கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்து கட்டப்பட்டது கல்லணை.

கிணறு

குடிநீர்த் தேவையில் அதிகப் பயன்பாடு உடைய நீர்நிலை கிணறு ஆகும். கடல்நீர் குடிப்பதற்குப் பயன்படாததால், அடிக்கடி நீர் வற்றிப்போகும் சிறு கிணற்றினது ஊற்றையே தேடிக் கண்டு பருகுவர் என்பதை, எறிநீர்ப் பெருங்கடல் எய்தியிருந்தும் அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்” (நாலடி, 275:1-2) என்ற அடிகள் கிணற்றின் பயன்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன.

கூவல்

உண்ணுகின்ற நீர் நிலையான கூவல் போன்றவற்றை நிறைய தோண்டியவன் இறவா புகழுடம்பைப் பெறுவான் என்று  “உண்ணுநீர் கூவல் குறைவின்றித் தொட்டானும் (திரி.16:2-3) என்னும் வரி கூவல் நீர் உண்பதற்குப் பழந்தமிழரால் பயன்பட்டது என்பதை அறியலாம். 

ஊருணி

ஊருணி என்பது குடிநீருக்கான பொது நீர்நிலையாகும். நீர் நிறைந்திருக்கின்ற ஊருணி உலகோரால் பாராட்டப்பெறும் என்பதை, “ஊருணி நீர் நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு” என்கிறார் திருவள்ளுவர்.

 நீரை வெளியேற்ற உதவும் அமைப்புகள்

            தேக்கி வைத்த நீரினைத் தேவைக்கேற்ப வெளியேற்றவும் பழந்தமிழர்கள் அறிந்திருந்தனர். இதனை மடை, மதகு, குமிழ், சேறோடித்துளை, தூம்பு, புதவு, மடை என்ற பெயர்களால் அழைத்தனர்.

மடை

கரையின் துணையால் குளத்தில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், பயன்பாட்டிற்கு வெளியேறும் வகையில் அமைக்கப்படும் அமைப்பே மடை எனப்படும். மடை கதவைத் திறந்தால் நீர் வெளியேறும். இதனை குறைக்கவோ, கூட்டவோ முடியும். இதனாலேயே மடைதிறந்த வெள்ளம் போல் என்ற சொல் உருவானது.

மதகு

மதகு என்பது தணீரைக் குறைக்கவோ, கூட்டவோ முடியக்கூடிய அமைப்பின் அமைந்ததாகும். இது தற்காலத் 'திருகு மதகு' போன்றதாகும்.

குமிழி

வண்டல் மண்ணையும் சேறையும் ஏரியிலிருந்து வெளியேற்ற உதவும் தொழில் நுட்பமே குமிழி ஆகும். இது பெரிய தொட்டி போன்ற அமைப்பில் இருக்கும். ஏரியில் அதிகமான வண்டலும் சகதியும் சேரும்போது இதனைத் திறந்துவிடுவர். இந்த வண்டல் மண் பயிர்களுக்கு உரமாக மாறும். இது தமிழர்களின் வியக்கத்தக்க தூர்வாரும் தொழில்நுட்பம் ஆகும்.

தூம்பு

குழல் போன்ற அமைப்புடையது தூம்பு. குளத்தில் உள்ள நீர் கரையின் அடிப்பகுதி வழியாக வெளியே செய்ய உதவுகிறது. இலக்கியங்கள் கருங்கை என்னும் சொல்லால் தூம்பைக் குறிக்கின்றன. இது பனை மற்றும் மூங்கிலால் உருவாக்கப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு ஒரு முறை இது அகற்றப்பட்டுப் புதிய தூம்புகள் பயன்படுத்தப்படும்.

நீர்நிலைகளைப் புனரமைத்தல்

ஊர் மக்கள் ஒன்றுகூடி நீர் நிலைகளைப் புனரமைக்கும் பணிகள் செய்ததை, "வரைச்சிறை உடைந்ததை வையை வையைத் திரைச்சிறை உடைத்தன்று கரைச்சிறை அறைக எனும் உரைச்சிறைப் பறை எழ ஊர் ஒலித்தன்று" என்ற பரிபாடல் வரிகள் மூலம் அறியலாம்.

முடிவுரை

    வானிலிருந்து பொழியும் மழையைச் சேகரித்து நீண்டகாலத்திற்குப் பயன்படுத்துவ பல முறைகள் காணப்படுகின்றன. பண்டைய காலத்தில் நமது முன்னோர்கள் மழை நீரைச் சேகரிப்பதற்கு பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றியுள்ளனர். மலைச் சரிவுகளில் விழும் நீரை வயலிற்கு அனுப்புவதற்குப்  படிக்கட்டு முறையிலான கால்வாய் உருளை வடிவில் நிலத்தடி நீரைச் சேமித்துள்ளனர்.  மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகம் வாழ மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து நீரைச் சேகரிக்க வேண்டும். நீரைப் பாதுகாத்துச் சேர்த்து வைத்தால் உலகிலுள்ள தண்ணீர்ப் பஞ்சம் ஒழிந்து போகும். மழையினால் கிடைக்கும் நீரானது நிலத்தினால் உறிஞ்சப்படும்.

------------------------------------

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி