ஐந்திணைப் பகுப்பும் சூழலியலும்

                        ஐந்திணைப் பகுப்பும் சூழலியலும்

பழந்தமிழரின் சூழலியல் அறிவைச் ஐந்திணைப் பகுப்பு கோட்பாட்டின் மூலம் விளக்குக.

 முன்னுரை

முதற்பொருள் எனப்படுவது உலகம் தோன்றிய காலம் முதல் இருக்கும் நிலமும், பொழுதும் ஆகும்.


முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே என்று தொல்காப்பிய நூற்பா கூறுகிறது. தொல்காப்பியர் நிலத்தைப் பற்றிக் கூறும்போது நிலத்தோடு தொடர்புடைய தெய்வங்களையும் இணைத்துக் கூறுகிறார்.

            மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே என்றுரைக்கிறது தொல்காப்பிய நூற்பா. இந்நால்வகை நிலங்களிலும் நீண்டகாலம் மழை பொழியாமல் வறட்சியின் காரணமாக அதுவே பாலை நிலமாக மாறுகிறது என்று எடுத்துரைக்கிறது.

            பாலைநிலத்தினை முதலில் இளங்கோவடிகள் காடுகாண் காதையில் “முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” குறிப்பிட்டுள்ளார். இப்பாலை நிலக் கடவுள் கொற்றவை என இளம்பூரணர் கூறுகிறார்.

குறிஞ்சித் திணையும் சூழலியலும்

மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி ஆகும். பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூ மலைப் பகுதிகளில்தான் காணப்படும். அதனால் தமிழர்கள் இந்நிலப் பகுதியை இப்பெயரிட்டு அழைத்தனர் எனலாம். மேற்குத் தொடர்ச்சி மலைகள், கிழக்குத் தொடர்ச்சி மலைகள், ஆனைமலை முதலிய பகுதிகளைத் தமிழகத்தின் குறிஞ்சி நிலப்பகுதியாகக் கூறலாம்.

குறிஞ்சி நிலத்தின் பொழுதுகள்

          கூதிர், முன்பனி என்னும் பெரும்பொழுதுகளும், யாமம் என்னும் சிறுபொழுதும் குறிஞ்சி நிலத்திற்குரிய பொழுதுகளாகும்.

குறிஞ்சி நிலத்தின் கருப்பொருள்கள்

தெய்வம் - சேயோன் (முருகன்)

தலைமக்கள் - பொருப்பன், வெற்பன், சிலம்பன், கொடிச்சி, நாடன், குறவர், குறத்தியர் கானவர்

மரங்கள் - தேக்கு, அகில், சந்தனம், மூங்கில், வேங்கை

விலங்குகள் - கரடி, புலி, யானை, குரங்கு, பன்றி

பறவை - கிளி, மயில்

பறை - தொண்டகம், வெறியாட்டு

பண் - குறிஞ்சிப் பண்

யாழ் - குறிஞ்சி யாழ்

மலர்கள் – குறிஞ்சி, காந்தள்

தொழில் - கிழங்கு அகழ்தல், தேன் எடுத்தல், வெறியாடல், தினை காத்தல், தினை, மலை நெல்லும் விதைத்தல், அருவி நீராடல்

நீர்நிலை - அருவி, சுனை

உணவு - தினை, மலை நெல், மூங்கில்

ஊர் - சிறுகுடி

அக ஒழுக்கம் – புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

புற ஒழுக்கம் - வெட்சி

 “குன்ற நாடன் குன்றத்துக் கவா அன் பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்", "கல்கெழு நாடன் கேண்மை” போன்று சங்க இலக்கியங்களில் குறிஞ்சி நிலம் குறித்த பாடல்கள் பல உள்ளன.

முல்லைத் திணையும் சூழலியலும்

காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும்.  திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகள் முல்லை நிலத்தைச் சார்ந்தவை. அக்காலத்தில் காடுகள் செழிப்புற்றிருந்தன.

முல்லை நிலப் பொழுதுகள்

கார் என்னும் பெரும்பொழுதும், மாலை என்னும் சிறுபொழுதும் முல்லை நிலத்திற்குரிய பொழுதுகளாகும்.

முல்லை நிலத்தின் கருப்பொருள்கள்

தெய்வம் - திருமால்

மக்கள் – ஆயர், ஆய்ச்சியர், இடையர், இடைச்சியர்.

உணவு - வரகு, சாமை

விலங்கு - முயல், மான், புலி

மரம் - கொன்றை, காயா

பறவைகள் - காட்டுக்கோழி, மயில், கருடன்

பூ - முல்லை, தோன்றி

பறை - ஏறு கோட்பறை

ஊர் – பாடி, சேரி

நீர் – காட்டாறு

யாழ் – முல்லை யாழ்

பண் - முல்லைப்பண்

தொழில் - ஏறு தழுவுதல், ஆநிரை மேய்த்தல்.

அக ஒழுக்கம் - இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

புற ஒழுக்கம் - வஞ்சி

இடைச் சிறுவன் பால் விற்றல், ஆடு மேய்த்தல் ஆகிய தொழில்களைச் செய்யும் காட்சியை நற்றிணைப் பாடலில் காணலாம். “பால் நொடை இடையன் நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்பத் தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி சிறு தலைத் தொழுதி ஏமார்த்து அல்கும் புறவினதுவே” என்னும் பாடல் இதனை எடுத்துரைக்கிறது.

எருமை, பசு, ஆடு முதலிய மூவினங்களை வளர்த்து வாழ்க்கை நடத்தும் மக்கள் முல்லைநிலத்தில் வாழ்ந்தனர் என்ற குறிப்புகள் இலக்கியத்தில் காணப்படுகின்றன.  

மருதத் திணையும் சூழலியலும்

வயலும் வயல்சார்ந்த இடமும் மருதம் ஆகும். தஞ்சை, தாகப்பட்டினம், மதுரை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, கடலூர், திருநெல்வேலி முதலான மாவட்டங்களின் பல பகுதிகள் மருத நிலத்தைச் சார்ந்தவை ஆகும். தமிழக ஆறுகளாகிய காவிரி, பெண்ணாறு, பவானி, நொய் அமராவதி, பாலாறு, வைகை ஆகிய ஆறுகள் மருத நிலப்பரப்பில் அடங்கும்.

மருத நிலத்தின் பொழுதுகள்

பெரும்பொழுது - கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்

சிறுபொழுது - வைகறை, விடியல்,

அக ஒழுக்கம் – ஊடலும் ஊடல் நிமித்தமும்

புற ஒழுக்கம் – உழிஞை

கருப்பொருள்கள்

தெய்வம் - இந்திரன் / வேந்தன்

மக்கள் – உழவர், உமுத்தியர்

பறவைகள் - கொக்கு, நாரை, குருகு, வாத்து, அன்றில்

விலங்குகள் – எருமை, நீர் நாய், காளை, ஆடு

 மலர்கள் - தாமரை, கழுநீர், குவளை, அல்லி

மரங்கள் - காஞ்சி, மருதம்

பண் - மருதப்பண்

உணவு - செந்நெல், வெண்ணெல் அரிசி

யாழ் - மருத யாழ்

தொழில் – களை பறித்தல், நாற்று நட்டல், ஏறு தழுவுதல், நெல்லரிதல், கடாவிடல்

நீர்நிலை - பொய்கை, ஆறு, ஏரி, குளம்

பண் – மருதப்பண்

மருதத் திணைக்கு உரிய விலங்கான எருமையை மையமாக்கி எருமைப் பத்து என்ற தலைப்பில் ஐங்குறுநூற்றில் பத்துப் பாடல்கள் உள்ளன. ஆடு, மாடுகளை இரவு நேரத்தில் மந்தையாகத் தங்கச் செய்வர். இது கிடைக்கட்டுதல் எனப்படும். பரத்தை ஒழுக்கம், வாயில் மறுத்தல், புதுப்புனல் ஆடல், தணிவித்தல், பிள்ளைத்தாலி அணிதல் போன்ற சமூக நிகழ்ச்சிகள் மருதத் திணைப் பாடல்களில் காணக் கிடைக்கின்றன.

நெய்தல் திணையும் சூழலியலும்

கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் ஆகும். தமிழகம் சென்னை முதல் குமரி வரை நீண்ட கடற்பரப்பைக் கொண்டுள்ளது. பல பெரிய துறைமுகங்களும், சிறிய துறைமுகங்களும் உள்ளன.  சேரர் துறைமுகங்களாக முசிறி, தொண்டி, நறவு, சோழர் துறைமுகங்களாக புகார், நாகப்பட்டினம், அரிக்கமேடு, பாண்டியர் துறைமுகங்களாக - கொற்கை, சாலியூர், காயல் போன்றனவும் இருந்துள்ளன என்ற பதிவுகள் இலக்கியங்களில் உள்ளன.

பெரும்பொழுது - கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்

சிறுபொழுது - வைகறை, ஏற்பாடு

அக ஒழுக்கம் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

புற ஒழுக்கம் - தும்பை

நெய்தல் நிலத்தின் கருப்பொருள்கள்

தெய்வம் - வருணன்

மக்கள் – சேர்ப்பன், நுளைச்சி, நுளையர், பரதவர், பரத்தியர், வலையர், வலைச்சியர்

பறவைகள் - கடற்காகம், நீர்ப்பறவை

விலங்குகள் - சுறா, முதலை

மரங்கள் – புன்னை, ஞாழல்

மலர்கள் - நெய்தல், தாழை, கடம்பு

பண் - செவ்வழிப் பண்

யாழ் - விளரி யாழ்

தொழில் - மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு உருவாக்கல், உப்பு விற்றல், கடல் கடந்த வணிகம், முத்துக் குளித்தல்

உணவு - மீன், உப்புக்குப் பெற்ற பொருள்கள்

பறை - மீன் கோட்பறை, நாவாய்ப்பம்பை

நீர்நிலை - கேணி, கடல்

ஊர் - பாக்கம், பட்டினம்

            “முழங்குகடல் திரைதரு முத்தம் வெண்மால் இமைக்கும்”, (ஐங்குறுநூறு 105), ''பெருங் கடற் கரையது சிறு வெண் காக்கை" போன்ற பாடல்வரிகளும் கடற்கரை, பெருநீர் பௌவம் போன்ற சொற்களால் நெய்தல் நிலம் குறிக்கப்படுவதைப் பல பாடல்களில் காணலாம்.

வரைவு கடாதல், வரைவு நீட்டித்தல், பகற்குறி, இரவுக்குறி போன்ற அக வாழ்க்கை நிகழ்வுகள், குறிஞ்சியில் உள்ளதுபோல் நெய்தலிலும் உள்ளன. நெய்தல் நில மக்கள் கடல்வழி வாணிபத்தில் சிறந்து விளங்கினர். தமிழகத்தில் நறுமணப் பொருள்கள், முத்துகள், பொன் போன்றவற்றை பண்ட மாற்றாக உரோமானியரும், மரக்கலங்களில் வந்து பெற்றதைப் பழந் இலக்கியங்கள் கூறுகின்றன. எளிய மக்கள் குடிசைகளில் வாழ்ந்து வந்தன செல்வச் செழிப்பாக வாழ்ந்தனர்.

பாலைத் திணையும் சூழலியலும்

குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத் திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலம் பாலை ஆகும். காடுகளாகிய முல்லை நிலமும், குறிஞ்சி நிலமாகிய மலைகளும், நெடுங்காலம் மழை பெய்யாமையால் காய்ந்து வறட்சி அடைந்து பாலைநிலப் பகுதியாக மாறுகிற தமிழகத்தில் இந்தகைய பாலை நிலங்கள் தவிர பாலைவனப் பகுதிகள் கிடையாது

பெரும்பொழுது - இளவேனிற் காலம், முதுவேனிற் காலம்

சிறுபொழுது - நண்பகல்

அக ஒழுக்கம் - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

புற ஒழுக்கம்  - வாகை

பாலைத் திணை கருப்பொருள்கள்

தெய்வம் - கொற்றவை

மக்கள் - விடலை, காளை, எயிற்றி, எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்.

பறவை - கழுகு, பருந்து

விலங்கு – செந்நாய், வலிமை இழந்த யானை, புலி

நீர்நிலை - நீர் வற்றிய கிணறு, சுனை

ஊர் – குறும்பு

மரம் - பாதிரி, மரா, குரா, இலுப்பை, ஓமை, பாலை

பறை - துடி

உணவு - வழிப்பறி செய்த பொருள்கள்

பண் - பஞ்சுரம்

தொழில் - வழிப்பறி

“ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்காடு இனியவோ பெரும் தமியோர்க்கு மனையே” என்ற பாடல்வரி பாலைநிலத்தின் இயல்பினை உணர முடிகிறது.  உடன்போக்கு, நற்றாய் வருந்துதல்,  செவிலி மகளைத் தேடிச் செல்லல், செலவு அழுங்குவித்தல்,  தலைவியை ஆற்றுவித்தல் இவை பாலைத் திணையின் அகவாழ்க்கை நிகழ்வுகள் ஆகும்.

முடிவுரை

            நிலத்தின் இயல்போடு அமைந்த சூழலியலை ஏற்றுக்கொண்டு அக்கால மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறியலாம். 
-------------------------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி