பழந்தமிழரின் நில மேலாண்மை

 பழந்தமிழரின் நில மேலாண்மை

பழந்தமிழரின் நில மேலாண்மை குறித்த செய்திகளை இலக்கிய சான்றுகளுடன் நிறுவுக.

முன்னுரை


நில மேலாண்மை என்பது தேவைகளுக்கு ஏற்ப நிலத்தினைச் சரியாகப்  பயன்படுத்துவதும் அதனைப் பாதுகாத்துப் பராமரிப்பு செய்தலையும் குறிக்கிறது. விவசாய உற்பத்தி, குடியிருப்பு, பொழுதுபோக்கு, கனிமம் பிரித்தெடுத்தல் போன்றவற்றால் நிலத்தின் தன்மை பாதிக்கப்படுகிறது.  இத்தகைய பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் பாதுகாத்தலே நில மேலாண்மை ஆகும். நிலம் வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டாலும் குடியிருப்புகள் உருவாக்கல், நகர்தோறும் தொழில்முறை விரிவாக்கம், போக்குவரத்து மற்றும் சாலைகள் பொழுதுபோக்கு நடவடிக்கைகள், சுரங்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பிற செயல்பாடுகளையும் உள்ளடக்கியதாக உள்ளது.

தமிழரின் வேளாண்மை முறைகள்

விளைநிலம் விரிவாக்கம் செய்தல்

உலகத் தொழில் அனைத்திலும் உயிர் வாழ்ந்திருக்க தேவையான உணவு உற்பத்தியே தலையாய தொழில் என்று பழந்தமிழர் போற்றினர். உணவுப் பொருட்களின் உற்பத்தியைப் பெருக்க, புதர்களையும் கரம்புகளையும் காடுகளையும் அழித்து, விளைநிலமாகப் பண்படுத்தி, உணவுத் தேவையை நிறைவுசெய்ய வழிவகுத்தனர். அவ்விதம் புதிய தினைக் கொல்லையை உண்டாக்கும்போது எழும் புகையினை, 'இதை முயல் புனவன் புகை நிழல் கடுக்கும்' (அகம்.140:11) என்று காட்டுகிறது அகநானூறு. “காடு கொன்று நாடாக்கிக் குளந் தொட்டு வளம் பெருக்கி” (பட்டின. 283–288) என்ற வரிகளில் பயிரிடுவதற்கு ஏதுவாகக் காடுகளைச் சீர்படுத்தி, நீர்நிலைகளை உருவாக்கி வேளாண்மை செய்ததை அறிய முடிகிறது.

பயிரிடும் முறை

வேளாண்மை பண்டைத் தமிழர் வாழ்வியலோடு ஒன்றியிருந்தது. நிலத்தின் தன்மைக்கேற்ப விவசாயம் செய்துள்ளனர். எல்லா நிலங்களிலும் நெல் விவசாயம் செய்ய முடியாது என்பதை, “புன்புல சிறூர் நெல்விளை யாதே" என்ற புறநானூற்றுப் (25) பாடல்வரி புன்செய் நிலத்தில் நெல் விளையாது என்பதைப் புலப்படுத்துகிறது.

ஆடு, மாடு மேய்த்தல் தொழில் செய்வதற்குரிய முல்லை நிலத்தில் ‘வரகு, தினை, கொள்ளு. அவரை இந்த நான்கும் இல்லாமல் பிற உணவுப் பயிர் இல்லை" என்கிறது புறநானூறு (புறம்.335). இதனை, "கருங்கால் வரகே இருங்கதிர் தினையே சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு இந்தான் கல்லது உணவும் இல்லை" என்கிறார் மாங்குடிக் கிழார்.

மலைச் சாரலில் பயிர் செய்வது பற்றி, "மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத் தளி பரம் பெற்ற கான்உழுகுறவர் சில வித்து அகல இட்டென பல விளைந்து" என்ற குறிப்பு நற்றிணையில் (209) உள்ளது.

மலைவாழ் மக்கள், மழைக் காலத்திற்கு முன் தமது தோட்டங்களின் எல்லைகளை விரிவுபடுத்தினர். அதாவது தோட்டத்தின் வேலிக்கு வெளியே உள்ள நிலத்தையும் பயன்படுத்தி வேலிக்குள் கொண்டுவந்தனர்.

தமிழர்களின் உழவு முறைகள்

உழவியல் நுட்பங்களில் முதன்மையானது உழுதல் நுட்பம் ஆகும். இதில் ஆழ உழுதல், பலமுறை உழுதல், ஊறிய நிலம் உழுதல், உழுத பின்னர் ஆறப்போடுதல், கட்டிகளைக் களைதல், சமன் செய்தல் எனப் பல்வேறு கூறுகள் அடங்கும். இவ்வகைக் கூறுகளைப் பழந்தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்கின்றன.

பயிர்செய்யும் நிலத்தின் தன்மையை அறிந்திருக்கும் சிறந்த உழவரை ‘அகல் நீர்ப் புலத்தியல்பு புக்கான் உரைக்கும் (நான்மணி.71.3-4) என்கிறது நான்மணிக்கடிகை.

மண்ணில் நீர்த்தன்மை அதிகரிக்கும் முன் களி பதம் பார்த்து விதைத்துவிட வேண்டும் என்று விதைத்தார்கள். உழுத பிறகு குறைந்த விதைகளை அதிக இடைவெளி விட்டு நடுவு செய்து பயிர்களைச் செழிப்புடன் வளர்த்தார்கள். இந்தத்  முறையே இன்று ஒற்றை நாட்டு நடவு முறை என அழைக்கப்படுகிறது.

உழுத நிலத்தின் மேடு பள்ளங்களைச் சரிசெய்ய தளம்பு என்ற கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். இதனை ‘மலங்குமிளிர் செறுவின் தளம்பு குடிந்திட்ட’ என்கிறது புறநானூறு.   

வேளாண்மையில் விதைகளைத் தேர்வு செய்வதையும், அவற்றை பூச்சிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதையும் தமிழர்கள் நன்கு உணர்ந்து இருந்தனர்.  பண்டைய தமிழர்கள் நெல், கரும்பு, சிறுதானியங்கள், பருப்பு வகை, அவரை, வாழை, புளி, சந்தனம் முதலியவற்றைப் பயிரிட்டனர்.

            தமிழகத்தில் சீரகச் சம்பா, பொற்பாளை, பாற்கடுக்கன், மணல்வாரி, வெள்ளை,  நெடுமூக்கன், பூம்பாளை போன்ற எண்ணற்ற நெல் வகைகள் தமிழகத்தில் பயிரிடப்பட்டன.

விதைத்தல்

அறுவடை செய்த தானியங்களிலிருந்து தரமான விதைகள்  தேர்ந்தெடுக்கப்பட்டு, அடுத்த பருவத்து விதைகள் பாதுகாக்கப்பட்டன. இதனை  “குறித்துமாறு எதிர்ப்பை பெறா அமைப்பின் குரல் உணங்கு விதைத்திணை” என்ற புறநானூற்றுப்பாடல் காய வைத்து விதைக்கப் பயன்படுத்தியதைக் குறிப்பிடுகிறது. மேலும் ‘வித்துக்குறி றுண்ணா விழுப்பம் மிக வினிதே' (40:2) என்று அறிவுறுத்துகிறது இனியவை நாற்பது. அதேபோல, பாத்திகள் கட்டி விதைக்கப்பட்டதையும் சரியான வித்தினைத் தேர்ந்தெடுத்துப் பயிரிடாவிட்டால் பாத்திக்கட்டி விதைத்தாலும் விதைகள் முளைக்காது என்பதையும், ‘பாத்தி புதைத்தாலும் நாறாத வித்து உள (23:2-3) என்று சிறுபஞ்சமூல வரிகள் உணர்த்துகின்றன. இதிலிருந்து வித்தினைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனத்தோடு இருந்தனர் என்பது புலப்படுகிறது.

நீர்ப் பாய்ச்சுதல்

நீர்ப் பாய்ச்கவதால் விளைநிலம் செழிப்படையும் என்பதை, உயிர்நாடி நீரான் வீறெய்தும் விளைநிலம் (86:1) என்று நான்மணிக்கடிகை சுட்டுகிறது. தேவையான நீரே விதையின் முளைக்கும் திறனைத் தூண்டுகிறது.  நீர் இல்லையேல் விளைச்சலின் நலன் கெடும் என்பதையும் இவ்விலக்கியம் அறிவுறுத்துகிறது. மேலும் திருக்குறளும் பாத்தியுள் நீர்சொரிந் தற்று (குறள். 718) என்றுரைக்கிறது. விளைநிலத்தில் நீரின் அளவை உயர்த்த வரப்புகள் உயர்ந்தவையாக அமைக்க அறிவுறுத்தப்பட்டது. வயல்களின் வரப்பானது உயர்ந்திருக்க நீர் நிலைத்து நிற்கும் அங்ஙனம் நீர் மிகுந்து உயர்ச்சி அடைந்தால், நெற்பயிரானது வளர்ந்து உயர்வடையும். நெல் நல்ல விளைவைக் கொடுக்கும் என்றுரைக்கும் சிறுபஞ்சமூலப் பாடல் பின்வருமாறு,

            “வரம்பு உயர வைகலும்

நீர் சான்று உயரவே நெல் உயரும் சீர் சான்ற

தாவாக் குடி உயரத் தாங்கு அருஞ்சீர்க் கோவுயரும்

ஓவாது உரைக்கும் உலகு”(சிறு.46)

வயல்களுக்கு நீர்ப்பாய்ச்ச பூட்டைப் பொறி, பிழா, பன்றிப் பத்தர், இடா முதலானவை முகந்து ஊற்றப் பயன்படுத்தப்பட்டன. பிழா என்பது பனை ஓலையால் செய்யப்பட்டதாகும்.

நீர்ப்பாய்ச்சியதன் மூலம் வயல் முழுவதும் நீர் நிறைந்த வயலாக, பதமான மண்ணாக மாறியது. தெருக்கள் பொன்னால் நிறைந்தன. இத்தகு வளமிகு வாழ்க்கையை, “ஏர்பரந்த வயல் நீர்பரந்த செறு நெல் மலிந்த மனை, பொன் மலிந்த மதகு" என்னும் வரிகளால் அறியலாம்.

களை எடுத்தல்

பயிரில் களைகளைப் பிரித்தறிந்து அவற்றை நீக்கினால்தான் எதிர்பார்த்த விளைச்சலைப் பெற முடியும். ஆகவே, வேளாண் மேலாண்மையில் களைகட்டுப்பாடு வலியுறுத்தப்பட்டது. நெற்பயிர்கள் செழித்து, ஓங்கி வளர்ந்தால் புற்கள் வளர்வது தடுக்கப்படும் என்பதை, ‘நெல் செய்யப் புல் தேய்ந்தாற் போல’ (53:3-4) என்கிறது பழமொழி நானூறு.

பயிரை ஒழுங்கு செய்வதற்கும், களையெடுப்பதற்கும் பலவகை கிளைகளையுடைய சிறிய வகைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டதை,

“பூமி மயங்கப் பலவுழுது வித்திப்

பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக்

களைகால் கழலின் தோடு ஒலிபு நந்தி” (புறம்.120:2-3) என்கிறது புறநானூறு.

எரு இடுதல்

     பண்டைக் காலத்தில் உழவர்கள் கால்நடைக் கழிவாகிய தொழு உரமும் இலை தழைகளாகிய தழையும் பயன்படுத்துவதை மரபு உத்தியாகக் கொண்டிருந்தனர். ‘இரும்புனிற்று எருமைப் பெருஞ்செவிக் குழவி பைந்தாது எருவின்’ (நற்றிணை, 271:1-2), ‘தாது எரு மறுகின் மூதூர்’ (அகம்.165:4) போன்ற இலக்கியக் குறிப்புகள், உரத்திற்காக ஆவினங்களின் எருக்களையும் தழைகளையும் பதப்படுத்தி, பாதுகாத்து பயிர்களும் உரமாகப் பயன்படுத்திய நுட்பங்களைத் தெரிவிக்கின்றன.

பயிர்ப் பாதுகாப்பு

தமது முன்னோர்கள் பறவைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்கப் பரண்களை அமைத்துக்கொண்டனர். தட்டை, தழல் போன்ற இசைகருவிகளைப் பயன்படுத்தினர். பெண்கள் வட்டமாக நின்று பாடும் ஒலியினால் பறவைகளை விரட்டினர். பயிருக்குத் தேவையான உரமிடல், களை எடுத்தல், நீர்ப் பாய்ச்சுதல் என்பனவற்றையும் சரியாகச் செய்து பயிர்களைப் பாதுகாத்தனர்.

மறுகால் உழும் வேளாண் தொழில்நுட்பம்

இம்முறையைத் தமிழக மக்கள் தொன்றுதொட்டுப் பயன்படுத்தினர் என்பதை நற்றிணைப் பாடல்வழி அறியலாம். இம்முறை ஜப்பானிய அறிஞர் மசானபு புகோகாவால் அறிமுகப்படுத்தப்பட்டது. அறுவடைக்குச் சென்ற உழவர்கள் தாங்கள் கையோடு எடுத்துச் சென்ற விதைகளை விதைத்தனர். விதைக்கும்முன் நிலத்தை உழுதனர். இதற்கு மறுகால் உழுதல் என்று பெயர்.  பின் வயலில் இருந்த மீன்களைப் பிடித்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றனர் என்பதை, "அரிகால் மாறிய அம்கண் அகல்வயல் மறுகால் உழுத ஈரச் செறுவின் வித்தொடு சென்ற வட்டி பற்பல மீனொடு பெயரும் யாணர் ஊர" என்றுரைக்கிறது நற்றிணை.  

ஆற்று நீர்த் தேக்கும் வேளாண் முறை

ஆற்று நீரைப் பாய்ச்சி மீன் வாழும் அளவுக்கு எப்போதும் நீர்த் தேக்கம் வைத்தனர். இதனைப் பின்வரும் புறநானூற்றுப் பாடல் மூலம் அறியலாம். “நெடுநீர் பொய்கை பிறழிய வானை நெல்லுடை நெடுநகர் கூட்டுமுதல் பிறமும்” என்கிறது புறநானூறு.

பல்லுயிர்ப் பெருக்க மூன்றடுக்கு வேளாண்முறை

இவகையில் மூன்று அடுக்குகள் உள்ளன. அவையாவன, நீர் மட்டத்தில் குவளை மலர்கள் பூத்திருந்தன; அதற்கும் மேல் நெல் விளைந்திருந்தது, நெல் வயலின் அடியில் மீன்கள் இருந்தன என்பன. இதனை, “கீழ்நீரான் மீன்வழங்குந்து வீநீராற் கண்ணன்ன மலர் பூக்குந்து கழிகற்றிய விளைகழனி" என்ற புறநானூற்றுப் பாடல்வழி அறியலாம்.

இம்முறையில் நீர்த் தாவரங்கள் வளர்ந்து பூக்கும் காலம் வரை களைப் பறிப்பு உள்ளிட்ட மனிதர் செயல்பாடுகள் நடைப்றவில்லை. அவ்வாறு நடைபெற்றிருந்தால் நீர்த்தாவரங்கள் பூக்குமளவு வளர்ந்திருக்காது. இதில் விதைப்புக்குப் பிறகு நீர் மேலாண்மை மட்டுமே நடந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

நீர்த் தேக்க நீண்ட கால வேளாண் முறை

உயர்ந்து வளர்ந்திருந்த நெற்பயிர்களின் உச்சியில் பறவைகள் கூடு கட்டியிருந்தன. அறுவடைக்குச் சென்ற உழவர்கள் பறவைகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தண்ணுமை என்னும் கருவி கொண்டு ஒலி எழுப்பினர். அதனால் பறவைகள் தானாகவே 'சடார்' எனப் பறந்து சென்றன. அந்த அதிர்வில் பனை மடலில் கட்டியிருந்த தேன் கூடுகள் கிழிந்ததால் சுற்றி இருந்த மக்கள் எளிதில் தேன் வடித்துக்கொண்டனர். "வெண்ணெல் அறிஞர் தண்ணுமை வெரீஇ கண்மடல் கொண்ட திம் தேன் இரிய கள் அரிக்கும் குயம்” * இது முற்றிலும் மாறுபட்ட தொழில்நுட்பமாக அக்காலத்தில் இருந்துள்ளது.

கலப்பு மற்றும் சுழற்சி முறை வேளாண்மை

கலப்பு மற்றும் சுழற்சிமுறை வேளாண்மையே மண்வளத்தைப் பேண சிறந்த வழி என்கிறது இன்றைய வேளாண் அறிவியல். மேலும், பொருளாதாரம் ஈட்ட தனிப்பயிர் ஒன்றினை மட்டும் சாகுபடி செய்வதைவிட அதனோடு உகந்த ஊடுபயிரையும் சாகுபடி செய்வது நற்பலனைத் தரும். இத்தகைய ஊடுபயிர்முறையும் சுழற்சிமுறை வேளாண்மையும் அக்காலத்து வேளாண நுட்பமாக இருந்ததை இலக்கியங்கள் காட்டுகின்றன.

தினைப் புனத்தில் முற்றிய நிலையிலுள்ள தினைத் தாள்களில் அவரைக் கொடிகள் பயிரிடப்பட்டிருந்ததையும், மாமரங்களில் மிளகுக் கொடிகள் வளரவிடப்பட்டு, இரட்டைப் பலன் அடைந்ததையும் இலக்கியங்கள் பதிவு செய்கின்றன.

சுழற்சி முறையில் நெல் மற்றும் தினை போன்றவற்றிற்கு அடுத்து உளுந்து பயிரிடப்பட்டது. முற்றிய உளுந்தை அறுவடை செய்து, களத்திலிட்டு உலர்த்தி, தடிகொண்டு அடித்துப் பருப்பைப் பிரித்தெடுத்த காட்சியை இலக்கியங்களில் காணமுடிகிறது. இது, பருவத்திற்கேற்ற பயிரினைச் சுழற்சிமுறையில் பயிரிட்ட நுட்பத்தைக் காட்டுகிறது.

இதனை, ‘பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின் ஊழ்ப்படு முதுகாய்  உழையினம் கவரும்’ (குறு. 68:1-2) என்ற குறுந்தொகைப் பாடல்வழி புலப்படுகிறது.

முடிவுரை

            நில மேலாண்மையியல் பழந்தமிழர்கள் தன்னிகரற்று இயற்கையைத் தங்களின் பயன்பாட்டுக்கேற்ப மாற்றும் தொழில்நுட்பத்தில் மேன்மை பெற்றிருந்தனர் என்பதை அறியலாம்.

------------------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி