நிலவியல்
நிலவியல்
1.
பழந்தமிழர் பிறநாட்டு அமைப்பினையும்
உலக அமைப்பினையும் அறிந்திருந்தனர் என்பதை இலக்கியப் பதிவுகளின் வழி நிறுவுக.
முன்னுரை
பழந்தமிழர், தாங்கள் வாழும் நாட்டளவில் நில்லாது பிறநாட்டு அமைப்பையும், உலக அமைப்பையும் செய்திகளையும் பதிவு செய்துள்ளனர். பெரிய அளவினதாய் விரிந்து பரந்த ஒரு பெரும் பரப்பாகவும், கடல் சூழ்ந்ததாகவும் உள்ள உலகத்தைத் தம் கடற்பயணத்தால் கண்டனர். அவர்களின் நிலவியல் குறித்த செய்திகள் இங்கு விளக்கப்படுகின்றன.
இவ்வுலகத்தின் எல்லை கடல் (இவ்வுலகம்
நீரால் சூழப்பட்டது என்ற உண்மைக்கு இலக்கியச் சான்றுகள்)
இவ்வுலகம் மலைகளும் கடல்களாலும் சூழப்பட்டது என்ற உண்மையை
அறிந்திருந்தனர். இது குறித்து இலக்கியங்களில் எண்ணற்ற சான்றுகள் உள்ளன. “ஓங்கு திரை வியன் பரப்பின் ஒலி முந்நீர் வரம்பு
ஆக தேன் தூங்கும் உயர்சிமைய மலை நாறிய வியல் ஞாலத்து (மதுரை.1-4) என்ற பாடலடிகள் மட்டும்
இங்குச் சான்றாகக் காட்டப்பட்டுள்ளன.
பழந்தமிழர், தாங்கள் மேற்கொண்ட கடல் பயணத்தால், இந்த உலகம்
முழுவதும் நீரால் சூழப்பட்டுள்ளது என்ற உண்மையை அறிந்தனர். இதனை, 'பொங்குநீர் உடுத்தஇம்
மலர்தலை உலகத்து (புறம். 213:2), 'முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇ' (புறம்.1-2) 'இமிழ்கடல்
வளைஇய ஈண்டகன் கிடக்கை' (புறம் 19:1-2) என்ற சான்றுகள் காட்டுகின்றன.
மேலும், நீரால் சூழப்பட்ட இவ்வுலகத்தை கடல்சூழ் மண்டிலம்
(குறு. 137:7), 'இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து (திருமுருகு.203), 'புலவுக் கடல்
உடுத்த, மலர்தலை உலகம்" (பெரும்பாண். 409-410), 'விரிகடல் வேலி வியலகம்' (சிறுபாண்.114),
விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகம்' (குறு. 41:1), 'இருங்கடல் உடுத்த இவ்வையகத்து' (குறு.41:13, 201:17), முழங்கு முந்நீர் முழுவதும்
வளைஇப் பரந்து பட்டவியல் ஞாலம் (புறம்.18:1-2) என்றும் இலக்கியங்கள் காட்டுகின்றன.
இதேபோல, கடலியல், வானவியல், உலகியல், காலநிலையியல் என்ற பல்துறையிலும்,
தங்கள் ஆதிக்கத்தினைச் செலுத்தியதையும், ஒவ்வொன்றின் தன்மையையும் அளந்தறிய முயன்றதையும்
‘வறிதுநிலைஇய காயமும் என்றாங்கு அவை அளந்து அறியினும்’ (புறம்.20:1-5) என்ற அடிகள்
பழந்தமிழரின் பல்துறை அறிவை விளக்குகின்றன.
இந்திய நாட்டின் நில வரைவியல் (தென்குமரி வடபெருங்கல்
என்பதன் வழி நாட்டின் நிலவரைவியல்)
பனிபொருந்திய உயர்ந்த இமயமலையினை வட எல்லையாகவும், குமரியாற்றினை
(கன்னியாகுமரி) தென் எல்லையாகவும், கிழக்கும் மேற்கும் கடல்களாகவும் நாட்டின் எல்லைகளை
வரையறை செய்திருந்தனர் எனபதை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தென்குமரியிலிருந்து வடபெருமலையாகிய
இமயம் வரையிலும் கிழக்கும் மேற்கும் அமைந்த கடல் எல்லை வரையிலும் உள்ள குன்று, மலை,
காடு, நாடுகளைப் பற்றிய புவியியல் அறிவினைப் பழந்தமிழர் கொண்டிருந்ததை, “தென்குமரி
வடபெருங்கல் குணகுடகட லாவெல்லை குன்று மலை காடுநாடு ஒன்றுப்பட்டு வழிமொழிய (புறம்.17:1-4)
என்ற குறுங்கோழியூர் கிழாரின் அடிகள் காட்டுகின்றன.
இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன், பெரிய புகழையுடைய இமயமும் தெற்கின்கண்ணுள்ள
குமரியும் ஆகிய இவற்றிற்கிடைப்பட்ட நாட்டிலுள்ள செருக்குற்ற மன்னர்களின் மறம் கெட்டழியுமாறு
அவரை வஞ்சியாது பொருது வென்றான் (பதி. 11:23-25) என்று பதிற்றுப்பத்து குறிப்பிடும்
கூற்றுகளும் நிலவரைவியலைச் சுட்டுகின்றன.
தென்றிசைக்கண் குமரியும், வடதிசைக்கண் இமயமும் கிழக்கும்
மேற்கும் கடலும் எல்லையாக, இடையில் வாழ்வோரெல்லாம் நெடுஞ்செழியனிடம் வணங்கி மொழிந்து
ஏவல் கேட்டனர் என்பதை (மதுரைக்.70-72) மதுரைக்காஞ்சியும் எடுத்துரைக்கிறது.
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப (புறம். 168:18), தண்டமிழ்
வேலித் தமிழ்நாட்டகம் (பரி. 8:1), ‘தமிழ்அகப் படுத்த இமிழ்இசை முரசின்’ (அகம்
227:14) என்று தமிழ் வழங்கிய இடங்களை மொழிகிறது இலக்கியம். தமிழ் மன்னர் ஆட்சிக்கு
உட்பட்ட எல்லைகளாகக் கிழக்கு, மேற்குக் கடல்களைச் சுட்டுவர். பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதவின்
ஆட்சி எல்லையைப் பற்றிக் குறிப்பிடுமிடத்து, ‘நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும்
நின் வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும் (புறம்.2:9,10) என்கிறார் புலவர். அதாவது
ஞாயிறு அவன் ஆட்சிக்குட்பட்ட கிழக்குக் கடலில் தோன்றி அவன் ஆட்சிக்கு உட்பட்ட மேற்குக்
கடலில் மறையும் என்கிறார். தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனாரும், ‘வடவேங்கடம்
தென்குமரி ஆஇடைத் தமிழ் கூறும் நல் உலகத்து’ (தொல். சிறப்புப் பாயிரம்) என்று தமிழ்
வழங்கும் நிலத்தினை வரையறுத்துள்ளனர் பழந்தமிழர்.
முன்னுரை
நிலவியல் என்பது புவியின் தோற்றம், வரலாறு, வடிவம், கட்டமைப்பு,
இயற்பியல் இயல்புகள் மற்றும் அதனை உருவாக்கிய வழிமுறை என்பவை தொடர்பான அறிவியலும்,
அவை பற்றிய ஆய்வும் நிலவியல் எனப்படும். இதனைத் தொல்காப்பியம் ‘முதல் எனப்படுவது நிலம்
பொழுதிரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே’ என்றுரைக்கிறது. நிலம், காலம் ஆகிய இரண்டையும்
முதற்பொருள் என்ற கலைச்சொல்லால் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். நிலவியல் பற்றிப்
பல கருத்துகள் உலவுகின்றன. அவற்றில் சில இங்குக் குறிப்பிடப்படுகின்றன.
பெருவெடிப்புக் கோட்பாடு
பெரு வெடிப்புக் கோட்பாடு (Big Bang Theory) என்பது, பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்பதை விளக்கும் ஒரு இயற்பியல் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின்படி, பிரபஞ்சம் ஒரு மிக அதிக அடர்த்தி கொண்ட தீப்பிழம்பாக ஆரம்பித்து, பின்னர் விரிவடைந்தது. 1370 கோடி (13.7 பில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருள்களின் ஆற்றலும் அணுவைவிடச் சிறிய பகுதியில் தீவிரமாக இருந்தது. இது காலப்போக்கில் வடைந்து இன்றைய நிலையை அடைந்துள்ளது.
நிலையான இருப்புக் கொள்கை
பெல்ஜிகாம் நாட்டைச் சார்ந்த பிரட் கொய்லி என்பவர் 1948 ஆம்
ஆண்டு நிலையான இருப்புக் கொள்கையினை வெளியீட்டார். இவ்வுலகிற்கு தொடக்கமும், முடியும்
இல்லை என்பதே இதன் பொருளாகும்.
சுருக்க விரிவுக் கொள்கை
சுருங்குதல் விரிதல் என்னும் முரண்பட்ட செயல்பாடுகளினால்
தோன்றியது இவ்வுலகம் என்பது சுருக்க விரிவுக் கொள்கை ஆகும்.
சூரிய மோதல் கொள்கை
சூரிய மோதல் கொள்கை என்பது வால் போன்ற தோற்றத்தில் இருந்த
வெள்ளிக் கோள் சூரியனின் மீது மோதியதால் இவ்வுலகம் தோன்றியது என்கிறார் லூயின் என்னும்
அறிவியல் அறிஞர்.
லெக்கர் கொள்கை
அடப்பொருள் உடைந்ததால்
உலகம் தோன்றியது என லெக்கர் கூறுகிறார்.
கூப்பியன் கொள்கை
கூப்பியன் என்பவர் சூரியனில் இருந்து வந்த ஒளிக்கற்றைகள்
கோள்களை வெளித்தள்ளின எனக் கூறுவது கூப்பியன் கொள்கை ஆகும்.
லாபிலாஸ் கொள்கை
லாபிலாஸ் என்னும் அறிவியல் அறிஞர் “வாயு, தூசி முதலானவை குளிர்ச்சி அடைத்து உலகம்
தோன்றியது" எனக் கூறுகிறார். இது லாபிலாஸ் கொள்கை ஆகும்.
நிலத்தின் தோற்றம் குறித்த இலக்கியச் செய்திகள்
புவியோட்டின் மேற்புறம் பல வகையான பாறை அடுக்குகளைக் கொண்டுள்ளது.
புவி மேலோடு புவியின் உட்புறத்தில் உருகிய நிலையில் உள்ள நெருப்புக் குழம்பின் மேல்மிதந்துகொண்டிருக்கிறது.
இம்மேலோட்டின் மீது பல வகையான மண் வகைகளும் உள்ளன. இதுவே நிலம் என்றழைக்கப்படுகிறது.
இதனை மதுரைக் காஞ்சி, "நிலம் அமர் வையம்" (மதுரைக் காஞ்சி அடி 470) என்று
சுட்டுகிறது. புவியின் நில அமைப்பு விரிந்து பரந்துள்ளது. விரிந்து பரந்து விளங்கும்
நிலத்தின் சுழற்சியைச் சங்க இலக்கியப் பாடல்களில் வரும் இருநிலம், உருகெழு மாநிலம்,
நனந்தலைப் பைந்நிலம், பெருநிலம், பெருங்கண் மாநிலம், நனந்தலை உலகம் நேமியோடு போன்ற
சொல்லாட்சிகள் மூலம் அறிய முடிகின்றன.
அகன்று கிடக்கும் நிலப்பரப்பு கடற்கரையோடு முடிந்துவிடவில்லை அடியிலும் தொடர்கிறது. பரந்து விளங்கும் கடல் நீரை நிலம் தாங்குறது என்பதை, ‘நீர் நிரந் தேற்ற நிலந்தாங் கழுவத்து' என்று பரிபாடல் குறிப்பிடுகிறது.
தொல்காப்பியர் நிலத்தினை ‘மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன்
மேய மைவரை உலகமும், வருணன் மேய பெருமணல் உலகமும், வேந்தன் மேய தீம்புனல் உலகமும், சொல்லிய
முறையால் சொல்லவும் படுமே என்று நிலத்தின் தன்மைக்கேற்ப நிலத்தை நான்கு வகையாகப் பகுத்து
நிலவியல் கோட்பாடுகளை வரையறுத்துள்ளார்.
ஐம்பூதங்கள்
தொல்காப்பியர் ‘நிலம், நீர், தீ, வளி, விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்க உலகம்" என்று குறிப்படுகிறார். இதன்மூலம் இவ்வுலகம் நிலம், நீர்,
நெருப்பு, காற்று, வானம் ஆகிய ஐம்பூதங்களால் ஆனது எனக் குறிப்பிடுகின்றார். மதுரைக்காஞ்சி
பஞ்ச பூதங்களை உருவாக்கியவர் மழுவாள் நெடியோன் என்றுரைக்கிறது. இதனை,
“நீரும் நிலமும் தீயும் மிக விசும்பொடு ஐந்து உடன் இயற்றிய
மழுவாள் நெடியோன் தலைவன் ஆக வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூத ஐந்தும் அகத்தே நகும்"
என்பது மதுரைக்காஞ்சியின் பாடலடியாகும்.
"மண்திணிந்த நிலனும் நிலன் ஏந்திய விசும்பும் விசுப்பு
தைவரு வளியும் வளித் தலை இய தீயும் தீ முரணிய நீரும், என்றாங்கு ஐம்பெரும் பூதத்து
இயற்கைப் போலப் போற்றார்ப் பொருத்தலும்” என்ற பாடல் மூலம் ஐம்பெரும்பூதங்களின் இணைப்பே
உலகம் என்கிறார் முரஞ்சியூர் நாகராயர்.
முடிவுரை
பழந்தமிழர்களின் இலக்கியங்கள் வழி நிலவியல்
குறித்த செய்திகள் நிறைந்து காணப்படுகின்றன.
-------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக