வானவியல் (ASTRONOMY)
வானவியல் (ASTRONOMY)
முன்னுரை
வானவியல் (ASTRONOMY) என்பது விண்பொருள்கள், அவற்றின் இயற்பியல், வேதியியல் மாற்றங்கள், பூமிக்கும் அதன் மண்டலத்துக்கும் வெளியே நடைபெறும் நிகழ்வுகள் ஆகியவற்றை ஆராய்ந்து விளக்கும் அறிவியல் துறையாகும்.
சங்க காலத் தமிழர்களின் வானியல் அறிவு
பழந்தமிழர் நிலப் பகுதிகளை ஆய்ந்து உணர்ந்ததைப் போன்று வானத்தையும்,
அதில் விளங்கும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் முதலியவற்றின் செலவினையும் ஆய்ந்து
அறிந்துள்ளான். வானவியலைப் பற்றிய அறிவியல் நூல்களும் அக்காலத்தில் இருந்துள்ளன.
சூரியனது இயக்கம், இயற்கையாக கோள்கள், சூரியனிலிருந்து ஒளிபெற்று விண்மீன்கள், காற்றுவெளியில்
கோள் இயங்குகின்ற திசைகள், காற்று இல்லா வெளி, ஆதாரமும் இன்றித் தானே நிற்கிற ஆகாயம், முதுவேனிற்
காலம் ஆகியவற்றை ஆராய்ந்துள்ளனர். இதனை,
“செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்று
இவை
சென்று அளந்து அறிந்தோர்
போல” (30:1-6) என்ற புறநானூற்றுப் பாடலடிகள் சுட்டுகின்றன.
தமிழகத்தில் வானியல் துறையில் பலர் சிறந்து விளங்கினர் என்பதைக்
கணியன் பூங்குன்றனார், கணிமேதாவியார், பக்குருக்கை நன்கணியார் முதலிய பெயர்கள் சான்று
பகர்கின்றன.
ஐம்பெரும் பூதங்களின் தோற்றங்களை பழந்தமிழர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
விரிந்த வானத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து
தீயும், தீயிலிருந்து நீரும், நிலமும் தோன்றியுள்ள அறிவியல், உண்மையை இவ்வுலகுக்குப்
பதிவு செய்த பெருமையினை உடையவர்கள் நம் முன்னோர்கள். அவை குறித்து இங்கு விளக்கப்படுகின்றன.
பழந்தமிழர்களின் கால அளவீட்டு முறைகள்
பழந்தமிழ் இலக்கியங்களில் காலத்தைக் குறிக்கும் பல்வேறு சொற்கள்
காணப்படுகின்றன. அவையாவன, நாழிகை, நாள், கடிகை, யாமம், வைகறை, வாரம், திதி, மாதம்,
ஆண்டு என்பனவாகும்.
கதிரவனின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, பூமி ஒரு தடவை
சுழலும் கால அளவு ஒரு நாள் எனப்படும். இதனை, “நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும் வாளது
உணர்வார்ப் பெறின” (திருக்குறன் 334), “ஒரு நாள் எழு நாள் போல் செல்லும்" (குறள்
1269) என்று திருக்குறளும் பகல் இரவு சேர்ந்த காலப்பகுதியை நாள் எனக் குறிப்பிடுகின்றன.
வைகறை பொழுதினை “வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை" என்கிறது
அகநானூறு. “வைகறை யாமம் துயில் எழுந்து” என ஆசாரக்கோவை கூறுகிறது.
இரவுப் பொழுதின் நடுப்பகுதி யாமம் என்பதை, “நடுநாள் யாமத்தும்
பகலும் துஞ்சான்”, “தரை உரும் உாறும் அடு இருள் நடுநாள்” என்ற பாடல் வரிகள் சுட்டுகின்றன.
மதத்தைத் திங்கள் என்பது தமிழர் மரபு. நெடுமான் அஞ்சியின்
வலிமையைக் குறிப்பிடும் புறநானூற்றுப் பாடல் மூலம் அக்காலத்திலேயே திங்களைக் கொண்டு
காலம் தணிக்கும் ஆற்றல் பெற்றிருந்ததை அறிய முடிகிறது.
“அற்றைத் திங்கள் அவ்வெண்
நிலவின்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின்”
(புறம்.112) என்ற பாடலும் மாத்ததில் ஒருமுறை பௌணர்மி தோன்றும் என்பதையும் பதிவு செய்துள்ளது.
ஊழி என்பது பல நூறு ஆண்டுகளைத் தன்னகத்தே கொண்டது ஆகும்.
கீரந்தையார் என்னும் புலவர் 1. விசும்பு இல்லாத ஊழி, 2. உருவம் இல்லாத ஊழி, 3. வளி
ஊழி, 4. சந்தீ ஊழி, 5. மழை வெள்ள ஊழி என்னும் ஐந்து ஊழிக்காலங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
கால அளவுகளைக் குறிக்கும் நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம்,
கமலம் போன்ற பேரெண்கள் வழக்கில் இருந்துள்ளன என்பதையும் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.
பழந்தமிழ் இலக்கியங்களில் சூரியன் (ஞாயிறு)
ஞாயிற்றின் ஒளிக்கதிரை நெடுஞ்சுடர்க்கதிர் (Carono), தகதகக்கும்
பரப்பினை 'வெப்ப ஒளிப்படலம்' (Photosphere), அதன் உட்புறம் கலம் அகம் (Solar
interior) என்று இன்றைய அறிவியல் துறை குறிக்கிறது. ஞாயிற்றின் உட்கூட்டில் 'ஹைட்ரஜன்
(Hydyogen) அணுக்கள் ஹீலியம் (Hellum) அணுக்களாக மாறும் போது "அணுக்கருப்பிணைவு'
(Nuclear Fusion) உண்டாகும். அப்பொழுது உமிழும் சக்தியின் வெளிப்பாடே ஆற்றல் மிக்க
சக்தியாகிறது என்பது அன்றைய அறிவியலாளர்கள் கருத்து.
ஞாயிற்றின் இந்நிலையினைச் சங்கப் புலவர்கள் நெருப்புக்குரிய
கனல் என்ற சொற்களைக் கொண்டு குறிப்பிட்டிருக்கின்றனர். இதனை, “வெந்திறல் கனலியொடு மதிவலம்
திரிதரும் தண்கடல் உரைப்பில் தாங்குநர்ப் பெறாது” (பெரும்பாண் வரி 17-10) “வானம் மூழ்கிய
வயங்கொளி நெடுஞ்சுடர்க் கதிர்காய (து) எழுந்(து) அகம் களை ஞாயிறு” (நற்றிணை பா
183-9-10) என்ற பாடல் வரிகள் மூலம் அக்கால மக்களின் அறிவியல் துறை சார்ந்த அறிவினை
அறிந்து கொள்ள முடிகிறது.
சங்க காலப் புலவர்கள் ஞாயிற்றை அதன் தன்மை அடிப்படையில் பரிதி,
கனலி, இருள்வலி, சூரன், எல், செங்கதிரோன், கதிரவன், ஒளி, அனலி, அரி, பகலோன், வெய்யோன்
என்று பெயரிட்டு அழைத்துள்ளனர். புலவர்கள் பெயரை மட்டும் குறிப்பிடாமல் கதிரவனின்
இயல்பினையும், நிறத்தினையும் உணர்த்தும் அடைமொழிகளையும் குறிப்பிட்டுள்ளதையும் காணமுடிகிறது.
“பகல்செய் மண்டிலம்”, “மலர்வாய் மண்டிலம்”, “விங்கு செலல்
மண்டிலம்” போன்ற பாடலடிகள் சான்று பகர்கின்றன.
நக்கீரர் திருமுருகாற்றுப்படையில்
ஞாயிற்றின் பணிகளை,
“உலகம் உவப்பு வலன்ஏர்பு
திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல்கண்
டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு
அவிரொலி” (திருமுருகாற்றுப்படை: 1-3) எடுத்துரைத்துள்ளார்.
இருளைப்போக்கும் ஞாயிற்றின் உட்பகுதி நெருப்பினால் எரிந்து
கொண்டிருக்கிறது என்பதனை, “கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று” (நற்றிணை
161) என்னும் பாடல்வரிகளும் சுட்டுகின்றன.
மேற்குறிப்பிட்டுள்ள பாடல்வரிகள் சூரியன் ஒரு நெருப்புக்கோளம்
என்பதை பண்டைய மக்கள் உணர்ந்திருந்தனர் என்பதை அறிய முடிகிறது.
பழந்தமிழ் இலக்கியங்களில் திங்கள் (நிலா)
விண்வெளியில் பூமிக்கு அருகில் உள்ள கோள் திங்கள் ஆகும்.
ஞாயிற்றின் ஒளி நிலாவில் பட்டுத் தெறிக்கும் எதிரொளிப்பு ஒளியே நிலவின் ஒளியாக உள்ளது.
நிலவானது இரவு நேரங்களில் பழங்காலந்தொட்டு திசைகாட்டும் கருவியாக விளங்கி வருகிறது.
இதனை, “மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும்” (வரி 48) என்று பெரும்பாணாற்றுப்படை குறிக்கிறது.
“நிலவின் கானல்” (வரி. 134) என்று மதுரைக்காஞ்சி நிலவின்
ஒளி குறித்து எடுத்துரைக்கிறது.
நிலவில் ஏற்படும் வளர்பிறை, தேய்பிறை மாற்றங்கள் குறித்து
பெரும்பாணாற்றுப்படை, “அவ்வாய் வளர்பிறை சூடிச் செய்வாய்” , “பிறைபிறத் தன்ன பின்எந்து
கலைக்கடை” என்ற வரிகள் மூலம் குறிப்பிடுகின்றது.
நிலவில் தோன்றும் சந்திர கிரகணம் குறித்துக் கடியலூர் உருத்திரங்கண்ணனார்,
“குழவித் திங்கள் கோள்நேர்ந் தாங்கு” (பெரும்பாண் வரி.334) குறிப்பிட்டுள்ளார்.
இப்பாடல் சிறியதாக வளைந்த பிறைச்சந்திரனைக் கிரகணக் காலத்தின்
போது இராகு என்று சொல்லப்படும் பாம்பு பற்றி இருக்கும் என்றுரைக்கிறது. மேலும் கலித்தொகை,
“தீங்கதிர் மதி ஏய்க்கும் திருமுகம் அம்முகம் பாம்பு சேர்மதிபோல் பசப்பூர்ந்து தொலைந்தக்கால்”
(4-16) என்றுரைக்கிறது.
சேரன் செங்குட்டுவன் என்ற மன்னன் வடக்கே இமயம் வரை சென்று
வெற்றி பெற்று திரும்பினான். அப்போது அவன் கங்கை ஆற்றங்கரையில் தங்கி இருந்தான். அவன் மாலைப் பொழுதில் வானத்தில் வளர் பிறையினைப்
பார்த்தான். உடனே பெருங்கணியன் எழுந்து நின்று “வஞ்சி நகர் விட்டுப் புறப்பட்டு 32
மதியங்கள் ஆயின” என்று குறிப்பிட்டான். அதாவது 32 முழு மாதங்கள் முடிவுற்றன என்றுரைத்தான். இதிலிருந்து நிலவினை வைத்துக் காலத்தைக்
கணித்ததை அறியலாம்.
பெண்கள் பிறையைத் தொழும் வழக்கினைக் கொண்டிருந்தனர் என்பதை,
“ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழுவம் புல்லென் மாலை” என்ற அகநானூறு பாடல் தெளிவுபடுத்துகிறது.
நட்சத்திரங்களில் ஏற்படும் வேறுபாடுகளை முன்கூட்டியே கணித்து
அறிந்தும் வைத்திருந்தனர் என்பதைக் கூடலூர் கிழாரின் பாடல் பதிவு செய்துள்ளது.
நாள்மீன் - கோள்மீன்
தானே ஒளிரக்கூடிய விண்மீன் நாள் மீன் எனப்படும். ஞாயிறு ஒன்று
மட்டுமே தானாக ஒளிவிடக்கூடிய நாள்மீன் ஆகும். சூரியனின் ஒளியைப் பெற்று ஒளிவிடுபவை
கோள் மீன்கள் எனப்படும். நாள்மீன் கோள் மீன்
பற்றி இலக்கியங்களில் பல குறிப்புகள் காணப்படுகின்றன.
இம்மீன்கள் பற்றி “நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும்
நாள்மீன் விராய கோள்மீன் போல மலர்தலை மன்றத்துப் பலருடன் குழிஇ” (07-09) என்று பட்டினப்பாலை
குறிப்பிடுகிறது.
நாள் மீன்கள் ஒளியுடையவை (புறம். 160:8-9, 24:24-25), கோள்மீன்கள் ஞாயிற்றிடமிருந்து ஒளியைப் பெறுபவை (பட்டி.
67-77, புறம்.118:2 புறம்.3:1, புறம். 65:6-8) என்று மேற்குறிப்பிட்டுள்ள பாடல்கள்
குறிப்பிடுகின்றன.
மனிதர் வாழ்க்கை நிலையை நாள் மீனோடு தொடர்புபடுத்தியுள்ளனர்
பழந்தமிழர். வெள்ளி (பெரும்பாண்.318 புறம். 117:2385:1-2, 397:1-2,398:1,399:1-2; பட்டினம்
பதி 24:24-25), சனிமீன்/மைம்மீன் (புறம்.117:1-2), செம்மீன் (புறம் 2), எரிமீன் (புறம்.41), வடமீன் (புறம்.122. புறம்.229:1-22)
ஆகியவற்றின் அமைப்புகளையும், தன்மைகளையும்
பாடல்கள் குறிப்பிட்டுள்ளன.
பொழுது புலரும் விடியற் காலத்தில் வெள்ளிமீன் (புறம்.385:1)
தோன்றும். அது வடக்குப் பகுதியில் எழுந்தால் மழை பெய்யும், தெற்கு பகுதியில் எழுந்தால்
மழை பெய்யாது (புறம்.35:6-7; 388:1,2) என்பன குறித்தும் இலக்கியங்கள் விளக்குகின்றன.
மேலும் எரிகொள்ளி வீழ்தலும் சனிமீன் மாறுபட்டுத் தோன்றுதலும் தீமைக்கு அறிகுறிகளாகக்
(புறம்.395:33-35) குறிக்கப்பட்டுள்ளன..
காற்று வழங்கா வெளி
அண்ட வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் காற்று இல்லாத
நிலையினை அறிந்திருந்தனர். அவ்விடத்தை, 'வளின் வழங்கா வழக்கரு நீத்தம்' (புறம்.365:3)
என்றுரைக்கிறது புறநானூறு. காற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பழந்தமிழர் பெற்றிருந்தனர்
என்பதை, “வளி தொழில் ஆண்ட உரவோன் மருக” (புறம்.66) என்ற பாடல்வரி விளக்குகிறது.
முடிவுரை
பழந்தமிழ் இலக்கியங்கள் மூலம் பழந்தமிழர் வானியல் அறிவிலும் சிறப்பு விளங்கினர் என்பதை அறிய முடிகிறது. அவர்கள் பல்துறை அறிவினையும் பெற்று தங்கள் வாழ்வியலுக்குப் பயன்படுத்தியுள்ளனர்.
---------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக