உயிரியல்

 

உயிரியல்

தமிழ் இலக்கியங்களில் காணப்படும் உயிரியல் கருத்துகளை எழுதுக.

முன்னுரை

உயிரியல் என்பது உயிரினங்கள் பற்றிய இயற்கை அறிவியலாகும். அனைத்து உயிரினங்களின் கட்டமைப்பு, தொழிற்பாடு, வளர்ச்சி, தோற்றம் போன்றவை குறித்து இத்துறை ஆராய்கின்றது.


உயிர்களின் தோற்றம், நடத்தை, உயிரியற்கை முதலான உயிரியல் பற்றிய செய்திகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவ்விலக்கியங்களில்  தாவரங்கள், விலங்குகள், பறவைகள், புழு-பூச்சியினங்கள் குறித்த பதிவுகள் காணப்படுகின்றன. அவை குறித்து இங்குக் கூறப்படுகின்றன.

இலக்கியங்களில் குறிப்பிடும் உயிர் வகைப்பாடு

2000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இலக்கண நூல் தொல்காப்பியம். இந்நூல் தாவரத்தின் உயிர், உயர்வு, அறிவு, மற்றைய உயிரினங்களின் அறிவு, உணர்வு,  உயிர் பற்றி எடுத்துரைக்கிறது.

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

இரண்டு அறிவதுவே அதனொடு நாவே

மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே

 நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே

 ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே

ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே !  என்கிறார் தொல்காப்பியர்.

தொடு உணர்வை மட்டும் பெற்ற புல், மரம் ஓரறிவு உயிர்களாகும். தொடு உணர்வுடன் நாவுணர்வும் பெற்ற சங்கு, நத்தை, கிளிஞ்சல் போன்றவை இரண்டறிவு உயிர்கள் ஆகும்.  தொடு உணர்வு, நாவுணர்வு, மூக்கினால் நுகர்ந்தறியும் உணர்வு பெற்ற  கரையான், எறும்பு, அட்டை போன்றவை மூவறிவு உயிர்களாகும்.

இம்மூவகையுடன் கண்களால் கண்டறியும் ஒளியுணர்ச்சி பெற்றவை (நண்டு, தும்பி, வண்டு, தேனீ) நான்கறிவு உயிர்களாகும். இந்நான்கு உணர்வுடன் ஓசையறிதல் ஆகிய செவியுணர்வும் பெற்ற பறவை, விலங்கு போன்றவை ஐந்தறிவு உயிர்களாகும். இந்த ஐந்தறிவு உயிர்களோடு உள்ளத்தால் உய்த்துணரும் அறிவு பெற்றவை ஆறறிவு உயிர்களாகும். இதற்கு உதாரணமாக மக்களை குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.

"மானுடப் பிறப்பினுள் மாதர் உதரத்து கனம்இல் ……”  என்னும் பாடல் வரிகள் மூலம் கரு உருவாவதில் இருந்து குழந்தை பிறக்கும்வரை உள்ள இடர்களை எடுத்துரைக்கிறார் மாணிக்கவாசகர்.

“சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்

கூனும் குறளும் ஊமும் செவிடும்

மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு

எண்பேர் எச்சம் என்று இவை எல்லாம்” (புறநானூறு 434) என்ற பாடல் மூலம் உறுப்பு குறைப்பாடுகள் உள்ள உயிரினங்கள் குறித்துரைக்கப்பட்டுள்ளது.

தாவரவியல் (Botany)

தாவரங்கள் பற்றி விளக்கும் ஓர் அறிவியல் துறை தாவரவியல் ஆகும். மனிதனின் தேவைகளை ஆண்டாண்டுகளாக நிறைவேற்றி வருபவை தாவரங்கள்.  இலக்கியங்களில் பலவகையான தாவரங்கள் குறித்தும் அவற்றின் தன்மைகள், சிறப்புகள் குறித்தும் பேசப்படுகின்றன.

பாக்குமரத்திற்கு நாள்தோறும் தண்ணீர் விடவேண்டும், தென்னை மரத்திற்கு இடைவெளிவிட்டு நீர் விடலாம், பனை மரத்திற்கு ஒருமுறை நீர் விட்டாலே போதுமானது என்ற செய்திகளும் காணப்படுகின்றன.

புல்வகையான மூங்கிலில் ஒருவகை நெல் உருவாகும் என்பதும், அந்நெல் உருவாகியதும் முங்கில் பட்டுப்போகும்  என்பதை, “நிறைவனத்து நெற்பட்ட கண்ணே வெதிர்சாம்” (நான்மணி. 4:2-3) என்ற வரிகள் குறிப்பிடுகின்றன.   வாழை மரமானது குலை ஈன்றதும் இறந்துவிடும் என்பதை, “மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்” (நான்மணி.85:2) என்ற வரி சுட்டுகிறது.

தாவரங்களின் வடிவத்தைப் பல பாடல்கள் காட்டுகின்றன. இவை பிற்கால தாவரவியல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், மூலிகை மருத்துவர்கள் போன்றோருக்குப்  பெரிதும் பயன்படக்கூடியனவாக உள்ளன. காசாம்பூச் செடியின் தோற்றம்

“கருவுற்ற காயாக் கணமயில் என்றஞ்சி” (திணைமாலை.107:1-3) என்ற பாடல் மயிலின் தோகை போன்று இருக்கும் காயாச் (காசாம்பு) செடியின் தோற்றம் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பூவாது காய்க்கும் மரம் உண்டு (சிறு.22.53), பூத்தாலும் காயா மரமும் உண்டு (சிறு.200) என்ற செய்திகளும் பழந்தமிழ் இலக்கியங்கள் மூலம் அறிய முடிகிறது. இது

போன்று எண்ணற்ற தாவரங்கள் குறித்தும் இலக்கியங்களில் காணமுடிகின்றது.

விலங்குகள்

உலகில் காணப்படும் அரிய உயிரினங்களில் ஒன்று விலங்குகள் ஆகும். இவ்விலங்குகள் ஊர்வன, நிற்பன, நடப்பன, பறப்பன, நீந்துவன எனப் பல வகைகளில் உள்ளன.  

தொல்காப்பியர் அவர் காலத்திற்கு முன்பும் அவர் காலத்திலும் வாழ்ந்த விலங்குகளின் இளமைப் பெயர்கள், ஆண்பாற் பெயர்கள், பெண்பாற் பெயர்கள் என மரபியலில் பட்டியலிடுகிறார். அவையாவன,

இளமைப் பெயர்கள்  : பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி

ஆண்பாற் பெயர்கள் : ஏறு, ஏற்றை, ஒருத்தல், களிறு, சேவல், இரலை, கலை, மோத்தை, உதள், அப்பர், மோத்து, கண்டி, கடுவன்

பெண்பாற் பெயர்கள் : பேடை, பெடை, பெட்டை, பெண் மூடு, நாடு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி போன்றனவாகும்.

தொல்காப்பியர் காலத்தில் விலங்குகள் ஆண், பெண் என்று பிரிக்கப்பட்டுள்ளன என்பதை அறிய முடிகிறது.

“அணிற் பல்லன்ன கொங்குமுதிர் முண்டகத்து” (குறுந்.49) என்ற பாடல்வரி அணில் குறித்துப் பேசுகிறது.  ஆமான் என்பது காட்டில் வாழும் பசு வகையைச் சார்ந்த விலங்காகும். இதனை, “தடங்கோட் டாமான் மடங்கல் மாநிரை” (நற்.பா.37), “ஆமா நல்லேறு சிலைப்பச் சேணின்று” (திருமுருகு பா.315) போன்ற என்ற பாடலடிகள் ஆமான் என்னும் விலங்கு குறித்துரைக்கிறது.  

மலை எருது அறுகினது நீண்ட கொத்தைக் கடித்துத் தின்னும் என்பதை, “கண்ணி மருப்பின் அண்ணல் நல்ஏறு செங்காற் பதவின் வார்குரல் கறிக்கும் மடக்காண் மரையா நோக்கி வெய்துற்று” (குறுந் பா.363) என்னும் பாடல் அடிகள் எடுத்துரைக்கின்றன.

சூலுற்ற பெண் குரங்கு ஒன்றின் தோற்றத்தை,

கருவிரல் செம்முக வெண்பல் சூல்மந்தி

பருவிரலால் பைஞ்சுனை நீர்தூஉய்ப் (திணைமாலை.10)

என்ற பாடல்வரி பதிவுசெய்துள்ளது.

 “....... யானை

வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்தாள்

அரிமா மதுகை யவர்  (நாலடி .198) என்ற பாடல்வரியில் சிங்கம் கூரிய, வளைந்த நகங்களையும் வலிமையான கால்களையும் உடையது என்று அடையாளப்படுத்தப்படுகின்றன. ஆமை தடித்த ஓட்டினையும், பிற விலங்குகளைக் கண்டால் தன் உடல் உறுப்புகளை ஓட்டிற்குள் சுருக்கிக்கொள்ளும் தன்மையையும் உடையது என்ற செய்திகளும் காணப்படுகின்றன.

இது போன்று புலி, யானை, மான், பாம்பு, முதலை, பல்லி போன்ற எண்ணற்ற விலங்கினங்கள் பழந்தமிழர் இலக்கியங்களில் காணப்படுகின்றன. மனிதன், அடிப்படைத் தேவையான உணவின் தேவைக்கு முதலில் விலங்குகளைப் பயன்படுத்தத் தொடங்கினான். காலப்போக்கில் அது தொழில் வளர்ச்சிக்கும் பயன்பட்டது. ஆநிரைகள் பால்படு பொருள்களைப் பெறவும், இறைச்சிக்காவும் பயன்படுத்தப்பட்டன. வேளாண் துறையில் உழுதலுக்கு எருதுகள் பயன்படுத்தப்பட்டன. கவரிமான் போன்ற விலங்குகளிடமிருந்து மயிர்கள் எடுக்கப்பட்டு ஆடைகள், கம்பளிகள் நெய்யப்பட்டன. வேட்டையாட நாய்கள் பயன்படுத்தப்பட்டன. போர்க்களத்திலும் போக்குவரத்திற்கும், வலிமையான பொருள்களைச் சுமக்கவும் யானைகள், குதிரைகள் பயன்படுத்தப்பட்டன.

மீன்கள்

சுறா மீன்கள் அளவில் பெரியவை. பிற மீன் கூட்டங்களைத் தாக்கி உண்ணவும், சிதறச் செய்யவுமான செயல்களைச் செய்பவை. சுறா மீன்களின் செயல்களை,

சுறாஏறி குப்பை சுழலும் கழியுள்

இறாஏறி தம் அலற இரைக்கும் (கைந்.58)

என்பதில் காணலாம். இதில் சுறா மீனால் மோதி அடிக்கப்பட்ட மீன் குவியல்களும், இறால் மீன்களை வீசி எறிகின்ற அலைகளும் காட்டப்படுகின்றன.

“ஓவா கலந்து ஆர்க்கும் ஒல்லென் இறாக் குப்பை பாஆர் அம் சேர்ப்பற்கு உரையாய்” (கைந்.49:2-3) என்ற பாடல்வரிகள் அங்கும் இங்குமாகத் திரியும் இறால் மீன்களின் கூட்டம் நிறைந்துள்ள கடலைக் குறிக்கிறது.

வாளை மீன்கள் நன்னீர் நிலைகளில் வாழ்வனவாகக் காட்டப்படுகின்றன. அழகிய சிறிய நாரையின் கொத்துதலுக்குப் பயந்வாளை மீனானது நீல மலர்களின் கூட்டத்துக்குள் புகுந்து மறைந்து கொள்ளும் காட்சியை,

கோலச் சிறுகுருகின் குத்தஞ்சி ஈர்வாளை

நீலத்துப் புக்கு ஒளிக்கும் (ஐ.ஐ.24) என்னும் பாடல்வரிகள் உணர்த்துகின்றன.

இவையட்டுமல்லாமல் கயல்மீன், அயிரை மீன் போன்ற இன்னும் எண்ணற்ற மீன்வகைகளும் இலக்கியத்தில் உள்ளன.

பறவைகள் 

பறவையியல் என்பது பறவைகள் பற்றி ஆய்வு செய்யும் ஒரு துறை ஆகும்.  இப்பறவைகள் குறித்த அறிவினைப் பழந்தமிழர் பெற்றிருந்தனர் என்பது இலக்கியங்கள் வழியாக அறிய முடிகிறது.

பருந்துகள் மிக உயரத்தில் பறக்கக் கூடியவை. மிக உயரமான இடத்தில் கூடுகட்டி வாழக்கூடியவை. பருந்தின் உடலமைப்பைப் பற்றிக் குறிப்பிடும் இடத்து, செஞ்செவி புண் சேவல் என்று சுட்டப்படுகின்றது. இவ்வகைப் பருந்துகள் ஐந்து தலையுடைய வலிமையான நாகத்தைத் தூக்கிக்கொண்டு வானத்தில் பறந்ததை,

“...... செஞ்செவிப் புண்சேவல்

ஐவாய் வயநாகம் கவ்வி விசும்பு இவரும்

சவ்வாய் உவணத்தின் தோன்றும் (களவழி.26) என்னும் பாடல்வழி அறியலாம்.  

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது (குறள்.481)

என்பதில், பகற்பொழுதில் கூகையைக் காக்கை வெல்லும் என்றும், இரவுக் காலத்தில் காக்கையைக் கூகை வெல்லும் என்றும் காட்டப்படுகிறது. இரவிலே கூகைக்கும் பகலிலே காக்கைக்கும் கண் நன்றாகத் தெரியும் என்பதே இதற்குக் காரணமாகும்.

சிரல் என்பது மீன்கொத்திப் பறவை. இது நீர்நிலைகளிலிருக்கும் மரங்களில் அமர்ந்து, தனக்குத் தேவையான இரையை உண்பதற்குக் காத்திருக்கும். இப்பறவையைப் பற்றிக் குறிப்பிடுமிடத்து, “சிறுசிரல் - பின்சென்றும் ஊக்கி யெழுந்தும் ஏறிகல்லா ஒர்புருவங் காட்டிய” (நாலடி 395) என்கிறது நாலடியார்.

வானம்பாடி பறவைகள் மழைநீரை மட்டுமே அருந்தி உயிர் வாழும் என்னும் செய்தியும் காணப்படுகிறது. கிளிகள் வீட்டில் வளர்க்கப்பட்டதற்கான சான்றுகளும், இவை சொல்வதைச் சொல்லும் இயல்புடையவை என்பதற்கான சான்றுகளும் காணப்படுகின்றன. கிளியின் அலகினைப் பற்றி, “பவளவாய்ப் பைங் கிளியும் (ஐ.ஐ.33:1)” என்ற பாடல்வரி பவளம் போன்று சிவந்த மூக்கினை உடைய கிளி என அடையாளப்படுத்தப்படுகிறது.

இலக்கியங்களில் பல வகையான பறவைகள் அவற்றின் உணவு ஒலி எழுப்புதல், செயல்பாடுகள் ஆகியவற்றோடு பதிவு செய்யப்பட்டுள்ளன. கோழி, கிளி, காடை போன்ற எண்ணற்ற பறவைகளின் செயல்பாடுகள், சிறப்பியல்புகள், உடலளவு  போன்ற பலவற்றையும் பதிவு செய்துள்ளன.  

பூச்சியியல் (Entomology)

பூச்சியியல் என்பது பூச்சிகளைப் பற்றிய அறிவியல் ஆய்வுத்துறை ஆகும். 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவையாகக் கருதப்படும் பூச்சிகள் மனிதர்களுடனும், புவியில் உள்ள பிற வகை உயிரினங்களுடனும் பல வகையான தொடர்புகளைக் கொண்டுள்ளன.

பூச்சியினங்களில் வண்டானது மரபு இலக்கியங்கள் தொடங்கித் தற்கால இலக்கியங்கள் வரையிலும் இடம்பெறுகின்ற அறுகால் பறவை (ஆறுகால்) என்று இது அழைக்கப்படுகிறது. “ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம் பூத்தொழி கொம்பின்மேற் செல்லாவாம்” (நாலடி.290:1-2) என்ற வரி இதனைச் சுட்டுகிறது.

வண்டுகள் இனிய ஒலியை எழுப்பக் கூடியவை. பூங்கொத்துகளை நாடிச் சென்று தேனினை உண்ணுபவை. தும்பிகளோ கரிய நிறத்தை உடையவை. புல்லாங்குழல் போல் ஒலியெழுப்பக் கூடியவை. இதனை, “வண்டுபாட இருந் தும்பி இன்குழல் ஊதும் பொழுது” (கார்.15:2-4) என்ற பாடல் காட்டுகிறது.

உயிர்களின் சில நுட்பமான தன்மைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலந்தியின் வயிற்றை வெடித்துக் கொண்டு குஞ்சுகள் வெளியேறும். இதனால் தாய் இறக்கும். இவ்வுண்மையை, “சிலம்பிக்குத் தன் சினை கூற்றம்” (சிறு.11:1) என்ற வரி குறிப்பிடுகிறது.

முடிவுரை

அனைத்துத் துறையறிவும் பழந்தமிழரிடையே இருந்துள்ளது என்பதினை அவர்களின் உயிரியல் பற்றிய அறிவும் எடுத்துரைத்து வியக்க வைக்கிறது எனலாம். 

............................. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி