இணையத் தமிழ் மாநாடுகள்



இணையத் தமிழ் பயன்பாடு

இணையங்களில் தமிழ் வளர்வதற்குக் காரணமான மாநாடுகள் குறித்து எழுதுக.

முன்னுரை

ஒரு அமைப்பு தோன்றிச் செயல்படுவதற்கு மிக முக்கிய காரணிகளாக விளங்குவன அந்த அமைப்பு தோன்றுவதற்கு முன்னர் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களும், மாநாடுகளும், கருத்தரங்கங்களும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.  அறிவியல் உலகமும் தமிழில் இணையத்தளங்கள் செம்மையுற வேண்டிய பல கருத்தரங்குகளையும் மாநாடுகளையும் நடத்தியுள்ளன. இவை அரசாலும், சில தனியார் அமைப்புகளாலும் நடத்தப்பட்டன. அவை குறித்து இங்கு விளக்கப்படுகின்றன.

முதல் தமிழ்க் கணினி கருத்தரங்கு

தமிழும் கணிப்பொறியும் என்ற தலைப்பில் முதன் முதலில் கணினித் தமிழ் கருத்தரங்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகக் கணிப்பொறித்துறையில்  நடைபெற்றது. இது 1994-ஆம் ஆண்டு டிசம்பர் 5, 6 தேதிகளில் நடைபெற்ற இக்கருத்தரங்கினை நடத்தியவர் பேராசிரியர் வெ. கிருஷ்ணமூர்த்தி ஆவார்.  இக்கருத்தரங்கில் முப்பதிற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைக்கப்பட்டன.

தமிழ் எழுத்துருக்கள், சொற் செயலிகள், கணினி கலைச் சொற்கள், மற்றும் விசைப்பலகையைத் தரப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இக்கருத்தரங்கு நடத்தப்பட்டன. இணையத்தமிழ் வரலாற்றில் இக்கருத்தரங்கம் ஒரு திருப்பமாக அமைந்தது.

முதல் உலகத் தமிழ் இணைய மாநாடு

1997-ஆம் ஆண்டு மே 17, 18 தேதிகளில் முதல் தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. சிங்கப்பூர் நாங்யாங் பல்கலைக்கழகப் பேராசிரியர் நா. கோவிந்தசாமியின் முயற்சியால் சிங்கப்பூரில் தமிழ் இணையம் 97’ என்னும் பொருளில் இம்மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டில் தமிழகம், மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பல நாடுகளிலிருந்து தமிழ் மென்பொருள் வல்லுநர்களும், கணினித்தமிழ் அறிஞர்களும் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் இணையத்தளங்களில் தமிழ்ப் பொருண்மைகளை மிகைப்படுத்துதல், விசைப்பலகையைத் தரப்படுத்துதல், தமிழ் எழுத்துருக் குறியீட்டைத் தரப்படுத்துதல், மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் பற்றியும், அடுத்த இணைய மாநாடு நடத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டன.

இரண்டாவது உலகத் தமிழ் இணைய மாநாடு

இரண்டாவது உலகத் தமிழ் இணைய மாநாடு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில் 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7, 8 தேதிகளில் தமிழ் இணையம் 99’ (Tamil Net 99) என்னும் தலைப்பில் நடத்தப்பட்டது.

இம்மாநாட்டில் விசைப்பலகைத் தரப்பாடு, எழுத்துரு ஆகியன தொடர்பாக  வழங்கப்பட்ட கருத்தாய்வுகளைத் தொகுத்து ஒருங்கிணைப்பு செய்ய இரு குழுக்கள் அமைக்கப்பட்டன. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அறிஞர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இம்மாநாட்டின் மூலமாக ஒரே தமிழ் எழுத்துமுறை டாம் (TAM) வகையும், ஆங்கில தமிழ் கலப்பு எழுத்துரு முறையாக டாப் (TAB) வகையும் அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழ் மென்பொருள் ஆராய்ச்சி மானியக்குழு ஒன்று அமைப்பதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களுக்காக இணையம் வாயிலாக உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (Tamil Virtual University) ஒன்றை நிறுவுவதற்கான அறிவிப்பும் இம்மாநாட்டில் வெளியிடப்பட்டது.  இம்மாநாடு தமிழ் இணைய வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2000

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அருண் மகிழ்நன் ஒருங்கிணைப்பில் 2000-ஆம் ஆண்டு ஜீலை மாதம் 22, 23, 24-ஆகிய நாட்களில் தமிழ் இணையம் 2000’ எனும் தலைப்பில் இம்மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் உத்தமம் உலகத்தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்று தமிழிலும் INFIT – International Forum for Information Technology in Tamil என்று ஆங்கிலத்திலும் குழுவொன்று உருவாக்கப்பட்டது.

உத்தமம் குழு உருவான பின்னர் பல்வேறு ஆய்வுப் பணிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. அவை, தமிழ் கலைச்சொல் தொகுப்பு, யூனிகோடு தமிழ் ஆய்வு, இணையத்தள தமிழ் முகவரி வடிவமைத்தல், தமிழ் வரிவடிவக் குறியீட்டுத் தரப்பாடு, ஆங்கில வரிவடிவத் தமிழ்த் தரப்பாடு, தமிழ் எழுத்துரு படித்தறிதல் (Tamil OCR), லினக்ஸில் தமிழ் (Tamil in Linux), தமிழ் அனைத்து எழுத்துரு 16-பிட்டு தரம் போன்ற ஆய்வுகளை நடத்தி வருகின்றன.

நான்காவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2001

இம் மாநாடு 2001-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இம்மாநாடு வளர்ச்சிக்கான வழிகள் எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டது.

இம்மாநாட்டில், ஜெர்மனி பேராசிரியர் நா. கண்ணன் தலைமையில் தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation) என்னும் அமைப்பு தொடங்கப்பட்டது. இவ்வமைப்பிற்கு அந்நாட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ சாமுவேல் அவர்கள் 10000 அமெரிக்க டாலர் நிதியை வழங்கினார். சர்வதேச அளவில் நூற்றுக்கணக்கான அறிஞர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டில் சுமார் ஐம்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைக்கப்பட்டன.

ஐந்தாம் உலகத் தமிழ் இணைய மாநாடு – 2002

ஐந்தாம் உலகத் தமிழ் இணைய மாநாடு அமெரிக்காவில் கலிபோர்னியாவில் 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27, 28, 29-ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ‘மின் இணையப் பயன்பாட்டில் மக்களிடையே நிலவும் இடைவெளியைக் குறைத்தல் – ‘Bridging the Digital divide’ என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு இம்மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டில் தமிழ்த்தகவல் தொழில்நுட்பக் கண்காட்சி உள்ளிட்ட பல பணித்திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன.  தமிழ் யூனிகோடு சிக்கல்கள் தொடர்பாக யூனிகோடு குழும உறுப்பினர்களோடு கலந்தாய்வு, உலக அளவில் நடத்தப்பட்ட இணையதள வடிவமைப்புப் போட்டி ஆகியன இடம் பெற்றன.

மேலும் இம்மாநாட்டில் மின்னஞ்சல் இணையத்தளங்கள் வழி தகவல் பரிமாற்றம், பல்லூடக அடிப்படையில் இணையவழிக் கல்வி, இணையவழி நூலகம், மின்-ஆளுமை போன்ற தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன.

ஆறாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2003

ஆறாவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2003-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22, 23, 24-ஆம் தேதிகளில் தமிழ்க் கல்விக்குத் தகவல் தொழில்நுட்பம் என்னும் தலைப்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

ஏழாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2004

சிங்கப்பூரில் 2004-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11, 12-ஆம் தேதிகளில் இம்மாநாடு நடைபெற்றது. ‘நாளைய தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் – Tamil IT for Tomorrow’ என்னும் கருப்பொருளில் நடைபெற்றது.

எட்டாம் உலகத் தமிழ் இணைய மாநாடு – 2009

சிங்கப்பூரில் நடைபெற்ற ஏழாவது இணைய மாநாட்டிற்குப் பிறகு 2005, 2006, 2007, 2008 ஆகிய ஆண்டுகள் தமிழ் இணைய மாநாடுகள் நடைபெறவில்லை.

 2009-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23, 24, 25 ஆகிய தேதிகளில் எட்டாம் உலகத் தமிழ் இணைய மாநாடு ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இம்மாநாடு கணினிவழிக் காண்போம் தமிழ் என்னும் மையப்பொருளில் நடைபெற்றது. இணையவழிக் கல்வி, மொழிப் பகுப்பாய்வு, தமிழ்த்தரவுகள், மின்னகராதிகள் ஆகிய பொருண்மையில் கட்டுரைகள் படிக்கப்பட்டன.

ஒன்பதாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் 2010-ஆம் ஆண்டு ஜீன் மாதம் 23-27 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாட்டு தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டோடு இணைந்து ஒன்பதாவது உலகத் தமிழ் இணைய மாநாடு இணையம் வளர்க்கும் தமிழ் என்னும் கருப்பொருளில் நடத்தப்பட்டது.

இம்மாநாட்டில் இணையவழி தமிழ் கற்றல்-கற்பித்தல், கணினிவழி மொழியியல் ஆய்வுகள், சொற்திருத்திகள், பேச்சு மற்றும் சொற்பகுப்பு ஆய்வுகள், எழுத்து உணரி செயற்பாடுகள், கையடக்க கருவிகளில் தமிழ், தமிழ் ஒருங்குறி போன்ற தலைப்பினை ஒட்டிப் பல்வேறு கட்டுரைகள் படிக்கப்பட்டன.

தமிழ் மென்பொருள்கள் மற்றும் கல்விக்கான குறுந்தகடு இம்மாநாட்டில் வெளியிடப்பெற்றன. இம்மாநாட்டில் தமிழ் ஒருங்குறி (Unicode)யே இனி அரசின் அதிகாரப்பூர்வமான எழுத்துருவாக பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

பத்தாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2011

உத்தமம் அமைப்பு 2011 ஜீன் மாதம் 17 முதல் 19-ஆம் தேதிவரை அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஹெராய்டு ஷிஃப்மேன் மற்றும் முனைவர் வாசு அரங்கநாதன் ஆகியோர் தலைமையில் இம்மாநாடு நடைபெற்றது.

முடிவுரை

முத்தமிழாக இருந்த தமிழ் நான்காம் தமிழாக மாற்றம் பெறுவதற்குக் காரணமாக இருந்தது கணினித் துறையின் வளர்ச்சி ஆகும். உலக அளவில் தமிழின் பயன்பாடு இணையத்தில் வளரப் பல அறிஞர் பெருமக்களின் அயராத முயற்சியே காரணமாக இருந்தது. விசைப்பலகை, எழுத்துருக்கள் உருவாக்கம் இணையத்தமிழை வளர வழிச்செய்தது. இதற்குக் காரணமாக விளங்கியது மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளின் காரணமாக இணையத்தமிழ் பல்நிலையில் வளர்ச்சி அடைந்தது எனலாம். இம்மாநாட்டின் விளைவால் இணையத்தில் தமிழைப் பயன்படுத்தும் முன்னோடி ஒருங்குறி நியாமம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி