இணைய நூலகம்


                                             இணைய நூலகம்

 

மனிதன் தன்னுடைய கருத்துகளை கற்பனைகளை எழுத்து வடிவத்தில் உருவாக்கிய மனிதன் கல்லிலும், ஈடுமண் பலகைகளிலும், ஒலைச் சுவடிகளிலும் எழுதி வைத்தான். தொடக்கக்கால நூல்கள் பனையோலை நறுக்குகளில் எழுதப்பட்டன.   அவை சுவடிகள் என்றழைக்கப்பட்டன. பனை ஓலை நறுக்குகள் துளையிட்டுக்  கோர்த்துக் கட்டப்பட்டிருந்த காரணத்தால், அவை பொத்து - அகம் பொத்தகம் எனப்பட்டன.

நூல் நூலகம்

அறிவை வளர்க்கும் புத்தகங்கள் அனைத்தும் ஒன்று கூடும் இடம் நூலகம் ஆகும். மரபு வழியான நோக்கில் இது நூல்களின் சேமிப்பு எனலாம். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்திலேயே நூல் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. பொதுப்பாயிரத்தில் நூல் என்ற சொல்லுக்கான பொருள் காரணம்  விளக்கியுரைக்கப்பட்டுள்ளது.

தச்சர்கள் மரவேலை செய்யும்பொழுது மரத்தின் வளைவுகளைக் கண்டறிந்துள சீர்செய்வதற்கு நூலைப் பயன்படுத்துவது போல மனிதனின் மனதில் உண்டாகும் கோணல்களைக் கண்டறிந்து மனக்கோளாறுகளை ஒழுங்குபடுத்தும் கருவியாக நூல்  செயல்படுகிறது எனப் பவணந்தியார் கூறுகிறார்.

மனிதர்களின் எழுத்துப் பதிவுகளாக அமைந்திருக்கும் நூல்களை ஓரிடத்தில் வைத்துப் பலரும் படித்துப் பயன்பெறும் வகையில் வைத்திருக்கும் இடம் நூலகம் எனப்படும். நூலகங்கள் அரசாலோ, தனி மனித குழுக்களாலோ, தனி நபர்களாலோ, மூலமாகவோ நியமிக்கப்பட்டு நிருவகிக்கப்படுகிறது. இது கட்டணத்துடனும் சில நேரங்களில் இலவசமாகவும் வழங்கப்படும்.

நூலக வரலாறு

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மெசபத்தோமியாவில் வாழ்ந்த மக்கள் தகடுகளில் எழுதினர். அதனைச் சூளைகளில் சுட்டு கோயில் மற்றும் அரண்மனைகளில் வைத்துப் பாதுகாத்தனர். இவை தனித்தனி ஏடுகளாகத் துறை வாரியாகப் பாதுகாக்கப்பட்டு வந்தன. மெசபத்தோமியர்களே முதன்முதலில் நூலகத்தை உருவாக்கியவர்கள்.

The Royal Library of Ashurbanipal என்ற பெயரில் முதல் நூலகம் அழைக்கப்பட்டது. எகிப்தியர்கள் பாப்பிரஸ் என்ற தாளில் எழுதத் தொடங்கினர். கி.மு.300-ஆம் ஆண்டு அலெக்ஸாண்டிரியாவில் 7 இலட்சம் பாப்பிரஸ் உருதுளைகள் கொண்ட கருவூலம் பாதுகாக்கப்பட்டிருந்ததாகவும், இவ்வகைக் கருவூலங்களே தற்போதைய நூலகத்தில் முன்மாதிரியாகவும் கருதப்படுகிறது.

நூலக முறையை முதன்முதலில் ஏற்படுத்தியவர்கள் ரோமானியர்கள் ஆவர். லியஸ்சீசரின் பங்கு இதில் அதிகளவு இருந்தது. நிதிபடைத்தோரிடமிருந்து உதவி பெற்று அவர் பொது நூலகத்தை நிறுவினார். அச்சியந்திரங்கள், காகிதங்கள், அச்சிடும் மை முதலான பொருள்களின் பயன்பாடு பெருகிய கடந்த இரண்டு நூற்றாண்டுகளில்தான் நூல்களும் -நூலகங்களும் பெருகின.

நூலகங்களைப் பொதுவாக, தேசிய நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், கிராம நூலகங்கள், பகுதிநேர நூலகங்கள், நடமாடும் நூலகங்கள் என வசைப்படுத்தலாம். இவ்வகை அரசு நூலகங்கள் மட்டுமல்லாமல், பல்கலைக்கழக நூலகங்கள், கல்லூரி நூலகங்கள், பள்ளி நூலகங்கள், வாசக சாலைகள் முதலான வேறு நூலகங்களும் நாட்டில் இயங்குகின்றன. இத்துடன் கணினி நூலக வசதிகளும் இணைந்துள்ளன.

கணினியும் இணையமும்

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அறிவுத் துறைகள் மட்டுமல்லாமல் அனைத்துத் துறைகளிலும் பெரும் புரட்சியை ஏற்படுத்துகின்ற, அறிவியல் உச்சம் எனக் கருதப்படுகின்ற கணினி மற்றும் இணையங்களின் வளர்ச்சி நூல்கள் மற்றும் நூலகங்களையும் தமதாக்கிக் கொண்டுவிட்டன. கணினியும் இணையமும் மின் நூலகங்களையும் மின் நூலகங்களையும் அறிமுகப்படுத்தின.

மின் நூல்கள்

மின்நூல் என்பது அச்சிடப்பெற்ற நூல் ஒன்றினுடைய மின்னணுவியல் அல்லது எண்முறைப் பதிப்பாகும். கணினி, பலகைக் கணினி, திறன்பேசி முதலான கருவிகளில் வாசிக்கத்தக்கதாய் எண்ணிய முறையில் உருவாக்கப்பட்டிருப்பவை மின் நூலகம் எனப் பெயர் பெறுகின்றன. அவை பல்வேறு அமைப்புகளில் உருவாக்கப்படுகின்றன.  நூல் பதிப்பாளர்களால் மின்னணுவியல் மூலம் தமது புத்தகங்களை விநியோகிப்பதற்காக உருவாக்கப் பெற்று உரை வடிவமாகவோ, நூல் சம்பந்தப்பட்ட சிறப்புத் தகவல்களைத் நின்கைத்தே கொண்டவையாகவோ இருக்கும்.

கோப்பு வடிவம் மற்றும் பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொன்றும் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்படுகின்றன. அவையாவன,

PDF Book - மின் நூல்,  HTML Book - மீயுரை நூல், Flip Book - புரட்டும் நூல், Epub Book – மென்னூல், Mobi Book - கிண்டில் நூல் என்பனவாகும்.

 மின்னூல்கள் - PDF Book

பழைய அச்சு நூல்களை அப்படியே ஸ்கேன் செய்து கணினி, பலகைக் கணினி மற்றும் திறன்பேசிகளில் பயன்படுத்தும்போது அவை PDF வடிவத்தில் இருக்கும். இதனை உருவாக்குவது எளிமையானது.  

மீயுரை நூல் -  HTML Book

ஒரு பக்கத்திலிருந்து வேறு ஒரு பக்கத்திற்கு அதன் மீயுரை சுட்டியால் தட்டுவதன் மூலம் செல்ல முடியும்.

புரட்டும் நூல் - Flip Book

புரட்டும் நூல்களில் அச்சு நூல்களைப் புரட்டுவது போல அனுபவத்தை முடியும்.

Epub Book – மென்னூல்

மின்னூல்கள் கணினி வாசிப்புக்கென்றே உருவாக்கப்பட்டவை. இவ்வகையில்  எழுத்து மற்றும் படங்களைப் பெரிதாகவோ, சிறியதாகவோ மாற்ற முடிவதோடு நூலின் அமைப்பினையும் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ள முடியும்.

கிண்டில் நூல்கள் (Mobi Books)

மின் நூல்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாகச் சிறப்புக் கூறுகள் உள்ளன. கிண்டில் நூல்கள் அமேசான் கிண்டில் கருவிகளில் பயன்படுத்துவதற்காக  உருவாக்கப்பட்டவை. அமேசான் கிண்டில் என்பது அமேசான் நிறுவனம் உருவாக்கி அறிமுகப்படுத்தும் மின் நூல்களை இலகுவாக வாசிக்க உதவும் ஒரு மின் படிப்பான் ஆகும்.

இக்கருவி கம்பியற்ற இணைப்புகளின் உதவியுடன் மின் நூல்கள், செய்தித் இதழ்கள், வலைப்பதிவுகள் அனைத்தையும் இணைய உலாவிகள் மூலம் தேடிப் பெற்றுக் கொள்ளவும், வாங்கவும், வாசிக்கவும் இக்கருவி பயன்படுகிறது.

மின் நூலகங்கள் ( Electronic Library)

எண்ணிம அல்லது மின்னியல் முறையில் சேமித்துப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் மின் நூல்கள், படங்கள், ஆவணங்கள் முதலான தகவல் தொகுப்புகளைக் கணினி மற்றும் இணைய வழியில் அணுகக்கூடிய நூலகம் ஆகும்.

இந்நூலகத்தில் சேகரித்து மேலாண்மை செய்து பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் எண்ணிம உள்ளடக்கங்களை கணினி இணையம் மூலமாக உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தவொரு இணைய கருவிகளின் மூலமும் அணுகிப் பெறலாம். மிக விரிவான எண்ணிம உள்ளடக்கங்களைச் சேகரித்து மேலாண்மை செய்து பாதுகாத்து அதன் பயனாளர்களுக்கு அத்தகவல்களைத் தேவைப்படும்போது எழுதப்பட்ட கொள்கை விதிகளின்படி அளிக்கும் அமைப்புக்கு மின் நூலகம் என்று பெயர்.

மின் நூலகம் என்பது தகவல் மீட்டெடுப்பு ஒருங்கியம் ஆகும். மின் நூலகம், மெய்நிகர் நூலகம் (Virtual Library), எண்ணிம நூலகம் (Digiterary) என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

இன்றைக்குக் கணினி மற்றும் இணையம் சார்ந்த தொழில்நுட்பத்தின் வருகையால் ஏற்பட்டுள்ள அறிவுப் புரட்சியின் திறவுகோலாக மின் நூலகங்கள் இயங்குகின்றன.  இதில் ஒரே நூலை ஒரே நேரத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் படித்துப் பயன்பெறலாம்.

நூல்களைத் தேடி பொருள்செலவு, நேரம் செலவு செய்யாமல் இருந்த இடத்திலிருந்தே திறன்பேசி, பலகைக் கணினி மற்றும் பிறவகை இணைய கருவிகளின் உதவியுடன் மின் நூலகங்களை அணுகி நூல்களை வாசிக்கவும், பதிவிறக்கம் செய்தும் கொள்ளலாம். மாணவர்கள், ஆய்வாளர்கள், சமூகவியல் வல்லுநர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் தேவைப்படும் அனைத்து நூல்களும் எளிதில் கிடைக்கும் வகையில் மின் நூலகங்கள் உள்ளன.

உலகில் சேவை வழங்கி வரும் தமிழ் மின் நூலகங்கள்

தமிழ் இணையக் கல்விக் கழகம், மதுரைத் தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம், சென்னை நூலகம், நூலகத் திட்டம், தமிழ் மரபு அறக் கட்டளை, ஓபன் ரீடிங் ரூம் போன்றன தமிழ் மின் நூலகங்களில் குறிப்பிடத்தகனவாக உள்ளன.

தமிழ் இணையக் கல்விக் கழகம் 

உலகெங்கிலும் உள்ள பன்னாட்டு மாணவர்கள் மட்டுமல்லாது தமிழைப் பயிலும் அனைவருக்கும் பயன்படும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இணையக் கல்விக் கழகத்தில் பயில்வோர் மற்றும் உலகளாவிய தமிழர்கள் பயன்பாட்டிற்கு உருவமைக்கப்பட்டுள்ளது. நூல்கள், பார்வை நூல்கள், அகராதிகள் என்னும் 3 பிரிவுகள் உள்ளன. இலக்கண இலக்கிய நூல்களுக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உரைகள் கிடைக்கின்றன. சங்க இலக்கியப் பாடல்களுக்கு, பக்கம்,  விலங்குகள், பாடல் முதற்குறிப்பு, பாடினோர், மீன்கள், திணை, கொடிகள், பறவைகள், மன்னர்கள், மரங்கள், பாடுபொருள்கள், வள்ளல்கள், சொல், செடிகள், கூற்று போன்ற தலைப்புகளில் நாம் தேவையானச் செய்திகளைத் தேடிப் பெற்றுக்கொள்ளலாம்.  தமிழ்ச்சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களையும், ஆங்கிலச்சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களையும் தேடிப் பெறும் வசதியுள்ளது. இம்மின் நூலகம் ஆராய்ச்சி மாணவர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.  1,00,000 பக்கங்களுக்கு மேல் இம்மின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.

 இம்மின் நூலகத்தில் சங்க இலக்கியம், பதினெண்கீழ்க் கணக்கு, காப்பியங்கள். சங்க இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், திரட்டு நூல்கள், நெறி நூல்கள், சித்தர் நூல்கள் 20-ஆம் நூற்றாண்டு உரைநடை இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள் என்னும் வகைப்பாட்டு முறைமையில் பகுத்தமைக்கப்பட்டுள்ளன.

புறப்பொருள் வெண்பாமாலை, அறுவகை இலக்கணம், யாப்பருங்கலக் காரிகை, தொல்காப்பியம், இலக்கண விளக்கம், யாப்பருங்கலம், சிதம்பரப் பாட்டியல், தொன்னூல் விளக்கம், வீரசோழியம், தமிழ் நெறி விளக்கம், தமிழ் நூல், நவநீதப் பாட்டியல், தண்டியலங்காரம், நம்பியகப் பொருள், நேமிநாதம் போன்ற அனைத்து இலக்கண நூல்களும் உரையுடன் அமைந்துள்ளன

மேலும் 53 இலக்கிய நூல்கள் உரையுடனும், குமரகுருபார் பிரபந்தத் திரட்டு 12 நூல்களும், சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு 24 நூல்களும், இராமலிங்க அடிகளின் திருவருட்பா, தாயுமானவரின் தனிப்பாடல்கள் உள்ளிட்ட 38 நூல்களும் உரையுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஆத்திச்சூடி, மூதுரை, வெற்றி வேற்கை, நீதிநெறி விளக்கம், நீதி நூல், கொன்றை வேந்தன், நல்வழி, உலகநீதி, அறநெறிச்சாரம்,  நீதிவெண்பா போன்றனவும் சித்தர் இலக்கியங்களும் காணப்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டு கவிதை, இலக்கிய உரைநடை, சிறுகதை, புதினம் நாடகம் கட்டுரை என்ற முறையிலும் நூல்கள் உள்ளன.

சென்னை நூலகம்

திரு. கோ. சந்திரசேகரன் என்பவரின் தனிபட்ட முயற்சியால் உருவான நூலகம் சென்னை நூலகம் ஆகும். இது வணிக நோக்கில் இயங்கும் நூலகம். இந்நூலகத்தில் சங்க கால இலக்கியம் தொடங்கி இக்காலம் வரையிலான நூல்கள் இடம்பெற்றுள்ளன. நூலகத்தில் உறுப்பினர்களாக இணைவோர்களுக்குத் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள நூல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

நூலகம் திட்டம்

நூலகம் திட்டம் என்பது ஈழத்து தமிழ் நூல்களையும் எழுத்து ஆவணங்களையும் மின்வடிவில் இணையத்தில் பாதுக்காத்து வைப்பதற்கான இலாப நோக்கில்லா தன்னார்வ முயற்சியாகும். இத்திட்டத்தில் பங்களிக்க விரும்பும் எவரும் எந்நூலையும் மின்னூலாக்கம் செய்யலாம். இந்நூலகத்தில் ஐயாயிரம் ஈழத்து நூல்கள், ஆறாயிரத்திற்கும் மேலான இதழ்கள், இராண்டாயிரத்திற்கும்மேலான பத்திரிகைகள் காணப்பெறுகின்றன. இம்மின்னூலகத்தை தி.கோபிநாத், மு.மயூரன் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.

இன்னும் நிறைய மின்னூலகங்கள் வழக்கில் உள்ளன. இந்நூலகங்களினால் பல அரிய நூல்கள் அழியாமல் பாதுகாக்கப்பட்டு வரப்படுகின்றன

--------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி