தமிழ்நாட்டு அறிவியல் ஆளுமைகள்
தமிழ்நாட்டு அறிவியல் ஆளுமைகள்
தமிழ்நாட்டு அறிவியல் ஆளுமைகள் குறித்துக் கட்டுரை எழுதுக.
அறிவியல் அறிஞர் என்போர் தமக்கு விருப்பமான துறையில் அறிவியல் ஆய்வினை மேற்கொள்வோர் ஆவர். தமிழ்நாட்டு அறிவியல் ஆளுமைகள் என்போர் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு உலகம் முழுவதும் பரவியுள்ள அறிவியல் துறையைச் சார்ந்த அறிவியலாளர்கள் ஆவார். அவர்கள் குறித்து இங்கு விளக்கப்படுகின்றன.
சித்தர்கள்
சித்தர்கள் என்போர் பண்டைய தமிழகத்தின் அறிவியலாளர்கள் ஆவர். அவர்கள் விஞ்ஞானிகள், வானியல், மருத்துவம், வேதியியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி செய்தனர். 96 உடல் தத்துவங்களாகப் பிரித்து மனித உடற்கூறியலை ஆராய்ந்தனர். நோயியல் துறையில் மிக ஆழமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் 4448 என்று வரையறுத்தனர்.
மூச்சுறுப்புகளில் ஏற்படும் நோய்களைக் கப நோய்கள் எனவும், செரிமான உறுப்புகளில் ஏற்படும் நோய்களை பித்த நோய்கள் எனவும், மற்றவற்றை வாத நோய்கள் எனவும் வகைப்படுத்தினர். மருந்தியல் பற்றி விரிவான ஆய்வு செய்தனர். அதன் பயனாகக் கண்டுபிடித்த மருந்துகளை 32 வகை உள்மருந்துகள், 32 வகை வெளி மருந்துகள் என வகைப்படுத்தினர். நரம்பியலை ஆராய்ந்து வர்ம மருத்துவத்தைக் கண்டுபிடித்தனர். இந்த வர்ம மருத்துவம் சித்தர்கள் கண்டுபிடித்த நரம்பியல் மருத்துவமாகும். சித்தர்கள் எழுதிய வாதநூல்கள் அனைத்தும் வேதியியல் துறையில் அவர்களின் ஆழமான ஆராய்ச்சியை வெளிப்படுத்துபவை ஆகும்.
போகர் செயற்கையான வேதிப் பொருள்களாகிய தாதுக்களைத் தயாரிக்கும் முறைகளைக் கண்டுபிடித்தார். அதற்கு வைப்புமுறை என்று பெயரிட்டனர். விண்பொறியியல் துறையில் போகர் ஆராய்ந்திருக்கிறார். அதன் பயனாக பஞ்சபூதத்தால் செய்த ஆகாயப்புரவி என்ற விமானத்தைக் கண்டுபிடித்து சீனாவுக்குப் பயணம் செய்திருக்கிறார். இதனை ஆகாயப்புரவி என்ற ஏழாயிரம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். போகர் உடல், மனம், அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் ஆய்வுகளை செய்து யோக நூல்களையும் படைத்தார். சித்தர்கள் பல்துறை வல்லுநர்களாக விளங்கினர்.
சர்.சி.வி.இராமன் - இயற்பியல் துறை
திருச்சிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் என்னும் ஊரில் கி.பி. 1888-ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி பிறந்தார். சர்சந்திரசேகர வெங்கடராமன் என்பதன் சுருக்கமே சர்.சி.வி. இராமன் என்பதாகும்.
இவர் 1930-இல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும்போது சிதறி ஒளியலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று இவர் கண்டுபிடித்தார். இதற்கு இராமன் விளைவு என்று பெயர். இக்கண்டுபிடிப்பு பொருள்களின் பலவிதமான பண்புகளைக் கண்டறிய மிகவும் பயனுடையதாக உள்ளது.
கி.பி. 1926 இல் இந்திய இயற்பியல் ஆய்விதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணியாற்றினார். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தைத் தொடங்கித் தலைவராகவும் விளங்கினார். இன்றைய அறிவியல் கழகத்தையும் கரன்ட் சயன்ஸ் என்றும் ஆய்விதழையும் நிறுவினார்.
ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் – விண்வெளி பொறியியல்
இவர் கி.பி. 1931-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 13 ஆம் இராமேசுவரத்தில் பிறந்தார். இந்தியாவின் 11-ஆவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார். இவர் மக்கள் சனாதிபதி என அழைக்கப் பெற்றார்.
இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் விண்வெளிப் பொறியாளராகப் பணியாற்றினார்.
ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகனத் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரிதும் பங்காற்றினார். இதனால் இவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று அழைக்கப் பெற்றார்.
1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுதப் பரிசோதனையில் நிறுவனத் தொழில்நுட்ப மற்றும் அரசியல் ரீதியாக இவர் முக்கியப் பங்காற்றினார். இவர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றினார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட பல மதிப்பு மிக்க விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தியா 2020 என்ற நூலில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றத் திட்டங்களை முன்மொழிந்துள்ளார். இவர் 2011 “நான் என்ன தர முடியுமா” என்ற இயக்கத்தை இளைஞர்களுக்காகத் தோற்றுவித்தார்.
ராசம்மாள் பாக்கியநாதன் தேவராசு – ஊட்டச்சத்துவியலாளர்
இவர் கி.பி. 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளத்தில் பிறந்தார். இவர் கி.பி. 1988 முதல் கி.பி. 1994 வரை அவிநாசிலிங்கம் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றினார்.
இவர்தமிழகத்தின் மாநிலத் திட்ட ஆணையம், தமிழக மகளிர் ஆணையம், உலக உணவு மாநாட்டின் துணைத் தலைவர் எனப் பல பணிகளை ஆற்றியுள்ளார். ஓமிக்ரான் நு, ஃபை அப்ஸிலோன் ஓமிக்ரான் ஆகிய அமைப்புகளின் உறுப்பினர். கி.பி. 1992 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதினை வழங்கியது.
எம்.எஸ்.சுவாமிநாதன் – உயிரி சூழலியல்
மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் கி.பி. 1925-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி கும்பகோணத்தில் பிறந்தார். இவர் இந்திய வேளாண் அறிவியலாளர், தாவர மரபியலாளர், உயிர்ச்சூழல் தொழில் நுட்பவியலாளர், நிர்வாகி, மனிதாபிமானவாதி எனப் பன்முகம் கொண்டவர். இவர் பசுமைப்புரட்சியில் உலகளாவிய தலைவராக இருந்தார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு நிறுவனத்தின் அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
கோதுமை மற்றும் அரிசியில் உயர் விளைச்சல் இரகங்களை அறிமுகப்படுத்தி மேம்படுத்தினார். இதனால் இவர் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அறியப்பட்டவர்.
இவர் உயிரணு மரபியல் (சைட்டோ ஜெனடிக்ஸ்) மரபியல் பிறழ்வு இனப்பெருக்கம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தார். 1960 - களில் இந்தியாவில் ஏற்பட்ட கடும் உணவுப் பஞ்சத்தின்போது ஐப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து அதிக உற்பத்தியையும் இருமடங்கு இலாபத்தையும் சாதித்துக் காட்டினார்.
1961- இல் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உலக அறிவியல் விருது, முதல் உலக உணவுப் பரிசு, பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகள் மற்றும் லால்பகதூர் சாஸ்திரி தேசிய விருதுகளையும் பெற்றார். 2024-ஆம் ஆண்டு இந்தியக் குடியரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் பெற்றார்.
ஆலடி இராமகிருஷ்ணன் - இயற்பியலாளர்
இவர் கி.பி. 1923 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதியில் சென்னையில் பிறந்தவர். சென்னையிலுள்ள கணித அறிவியல் கழகத்தின் நிறுவனர். இவர் துகள் இயற்பியல், அணிக்கோவை இயற்கணிதம் போன்றவற்றில் பங்களித்துள்ளார். குவாண்டம் இயக்கவியலில் கண்டுபிடிப்பு அவருக்குப் புகழினைத் தந்தது.
வா. செ. குழந்தைசாமி - நீரியல்துறை அறிஞர்
இவர் கி.பி. 1929 ஆம் ஆண்டு ஜூலை 14 இல் கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கலாம்பாளையத்தில் பிறந்தார். இவர் இந்திய நீரியல்துறை அறிஞர், கல்வியாளர், கவிஞர், எழுத்தாளர் எனத் தன்னைப் பலநிலைகளில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்.
இவர் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவராகப் பணியாற்றியவர். இவர் உலக அளவில் நீர்வளத்துறையில் பல குறிப்பிடத்தக்க பதவிகளை வகித்துள்ளார். பல ஆய்வுக்குழுக்களிலும், திட்டக்குழுக்களிலும் பங்கேற்றுள்ளார். மேலும் இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் இந்திராகாந்தி தேசியத் திறந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணை வேந்தராகவும் பதவி வகித்துள்ளார்.
நீர்வளத்துறையில் இவருடைய கண்டுபிடிப்பு குழந்தைசாமி மாதிரியம் என அழைக்கப்படுகிறது. இவர் குலோத்துங்கள் என்னும் புனைபெயரில் பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ஆங்கிலத்திலும், தமிழிலும் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன், சாகித்ய அகாடமி போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோபால்சாமி துரைசாமி (ஜி.டி.நாயுடு) – இயந்திரவியலாளர்
இவர் மார்ச் 23, 1893-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கலங்கல் என்னும் ஊரில் பிறந்தார். இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளைச் செய்தவர். யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். பேருந்துகள் வந்து புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி, பயணச்சீட்டுகள் வழங்கும் ஓர் இயந்திரம், எஞ்சின் ஒடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் கண்டுபிடிக்க அதிர்வு சோதிப்பான் (Vibrator Tester, டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர், பழச்சாறு பிழிந்தெடுக்கும் கருவி, முகச்சவரம் செய்யும் பிளேடு போன்ற கருவிகளைக் கண்டுபிடித்தார்.
மயில்சாமி அண்ணாதுரை – வானியல்
இவர் ஜூலை2 இல் கி.பி.1958-ஆம் ஆண்டில் பொள்ளாச்சியில் பிறந்தவர். தற்போது தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவராகவும் உள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குநராகப் பணிபுரிந்தார். முப்பதுக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை உருவாக்கிச் சாதனை புரிந்தவர். முதன்முதலில் இந்தியா நிலவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான் திட்ட இயக்குநராகப் பணிசெய்தவர். 2016 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதினைப் பெற்றார்.
கைலாச வடிவு சிவன் – விண்வெளித்துறை
இவர் கி.பி. 1958 இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார். விக்ரம் சாராபாய் விண்வெளி நடுவகத்தில் இயக்குநராக 2015-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். பி.எஸ்.எல்.வி. திட்டத்தில் முக்கியப் பணியாற்றினார். கடந்த 33 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட செயற்கைக்கோள்களில் இவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. ராக்கட்டின் அமைப்பு தொடர்பான சித்தாரா என்னும் பெயரில் மென்பொருளை உருவாக்கியவர். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக 2018 சனவரி 12-ஆம் தேதியில் பதவியேற்றார்.
ஸ்ரீ ஹரி ஓம் அசிரம் பிரடிட் டாக்டர் விக்ரம் சாராபாய் ஆய்வு விருது (1999), இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் மெரிட் விருது (2007), டாக்டர் பிரன்ராய் விண்வெளி அறிவியல் விருது (2011), சத்தியபாமா பல்கலைக்கழக அறிவியல் முனைவர் விருது (2014), அப்துல் கலாம் விருது போன்ற பல உயரிய விருதுகளைப் பெற்றவர்.
தாமசு எசு. அனந்தராமன் - கணினிப் புள்ளிவிவர நிபுணர்
இவர் பேய்சியன் அனுமான அணுகுமுறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். பெங்-ஹிசியுங் ஹுசு உடன் இணைந்து சதுரங்கம் விளையாடும் கணினிகளில் சிப் சோதனை மற்றும் ஆழ்ந்த சிந்தனை ஆகியவற்றில் மேற்கொண்ட ஆய்வில் புகழ்பெற்றவர். இவரது முனைவர்பட்ட ஆய்வின் தலைப்பு கணினி சதுரங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்தபட்ச அதிகபட்ச தேடலின் புள்ளிவிவர ஆய்வு என்பதாகும்.
ஸ்ரீனிவாச இராமானுஜம் – கணிதவியலாளர்
இவர் கி.பி.1887 இல் டிசம்பர் 22 இல் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். மூவாயிரத்திற்கும் அதிகமான புதுக் கணிதத்தேற்றங்களைக் கண்டுபிடித்தவர். இவர் கண்டுபிடித்த எண் மற்றும் செறிவெண் கோட்பாடுகள் இயற்பியல் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
ந. வளர்மதி – விண்வெளி ஆராய்ச்சியாளர்
இவர் தமிழ்நாடு அரியலூரில் கி.பி. 1959 இல் ஜூலை 31 இல் பிறந்தார். இஸ்ரோவின் ரிசாட் 1 செயற்கைக்கோளின் திட்ட இயக்குநர், இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு, சரல் செயற்கைக்கோள், ஜிசாட் – 7, செவ்வாய் சுற்றுகலன் திட்டம், ஜிசாட் – 14 எனும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் பல திட்டங்களில் பணியாற்றியவர். அப்துல் கலாம் விருது, தமிழ்திரு விருது போன்ற விருதுகளைப் பெற்றவர்.
கோ. நம்மாழ்வார் – இயற்கை வேளாண்மை
இவர் தஞ்சாவூரில் கி.பி. 1938 இல் தோன்றியவர். தமிழ்நாட்டில் இயற்கைவழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர். வானகம், குடும்பம் போன்ற அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தவர். பசுமைப் புரட்சி, தொழில் மயமாக்கல், சூழல் மாசடைதல் போன்றன குறித்து விழிப்புணர்வு ஊட்டியவர். பூச்சி கொல்லிகள், மீத்தேன் வாயு திட்டம், இந்திய மரபணு சோதனைகள், விவசாய நிலங்களை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தல் ஆகியவற்றிற்காகப் போராடியவர்.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அறிவியலாளர்கள் தங்கள் கண்டுபிடித்த கருவிகளால் உலகெங்கும் வாழ்ந்து வருகின்றனர். தமிர்கள் அனைத்துத் துறையிலும் சாதனை புரிந்துள்ளனர் என்பது விளங்குகிறது.
--------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக