சங்க கால திருமண சடங்கு முறை

 

திணைவாழ்வியல் 



சங்க கால திருமண சடங்கு முறைகள் குறித்து எழுதுக?

  •             தலைவன் தலைவியரின் களவு வாழ்க்கையை அறிந்த இருவரின் பெற்றோரும் அவர்களின் திருமணத்திற்கு உடன்படுவர். 
  • திருமணம் ஒரு நல்ல நாளில் நடைபெறும். 
  • தீய கோள்கள் விலகி நிலாவும் உரோகிணியும் கூடும் நன்னாளில் வைகறைப்பொழுதில் திருமணம் நடைபெறும். 
  • திருமண பந்தலின் கீழ் புதுமணல் பரப்பப்படும். 
  • மாலைகள் தொங்கவிடப்படும், அழகிய விளக்குகள் ஏற்றப்படும். 
  • வயது முதிர்ந்த மங்கல மகளிர் தண்ணீரைக் குடங்களில் முகந்து தம் தலையில் சுமந்து வந்து சிறு மண்டை என்ற அகண்ட வாயுள்ள கலத்தில் ஊற்றுவார்கள்.
  • குழந்தைகளைப் பெற்ற மங்கல மகளிர் நால்வர் கூடி சிறு மண்டையில் உள்ள தண்ணீரில் பூக்களையும் நெல்லையும் தூவி அத்தண்ணீரில் மணமகளை நீராட்டுவர். 
  • இச்சடங்கு வதுவை நன்மணம் எனப்படும். 
  • அப்போது அப்பெண்டீர் இவள் கற்பு நெறியில் நின்று கணவனை விரும்பிப் பேணும் துணைவியாவாள் என்று வாழ்த்துவர். 
  • மணமகளின் பெற்றோர் பெரிய ஓர் இடத்திற்கு கிழத்தியாக ஆவாய் என்று வாழ்த்தி அவளை மணமகனுக்குக் கொடுப்பர். 
  • உளுத்தம் பருப்பு கலந்த அரிசிப் பொங்கலை மணவிழாவுக்கு வந்தவர்களுக்கு இடையறாது வழங்குவர். 
  • இறைச்சியும் நெய்யும் சேர்த்து ஆக்கிய வெண்சோற்றையும் வழங்குவதுண்டு.
  • திருமணம் தொடங்கும் முன்னர் கடவுள் வழிபாடு நடைபெறும்.  
  • மண முளவு முழங்கும். 
  • வெண்மையான நூலில் வாகை இலைகளையும் அருகம்புல் கிழங்குகளையும் கோத்த மாலையை மணமகள் அணிந்து கொள்வாள். 
  • திருமணத்தின்போது மங்கல நாண் பூட்டும் வழக்கம் பழந்தமிழரிடையே இல்லை. 
  • ஆரிய பண்பாட்டு கலப்புக்குப் பிறகு தோன்றிய சிலப்பதிகாரத்திலும் தாலி கட்டும் சடங்கு குறிப்பிடப்படவில்லை. 
  • திருமணம் ஆகிவிட்டதைத் தெரிவிப்பதற்காக அக்காலத்து பெண்கள் மங்கல அணி ஒன்றினை அணிந்துள்ளனர். 
  • திருமண நாளன்று அம் மங்கல அணியை ஊர்வலமாகக் கொண்டு வரும் வழக்கம் இருந்திருக்கிறது. 
  • திருமண நாளன்று இரவு மணமக்கள் மணவறையில் கூட்டப்பெறுவர். 
  • அங்கு மணமகள் கசங்காத புத்தாடையால் தன் உடல் முழுவதும் போர்த்திக் கொண்டிருப்பாள்.
  •  சங்க காலத்துத் திருமண விழாவைப் பற்றிக் கூறும் அகப்பாட்டுகள் இரண்டிலும் புரோகிதன் ஒருவன் இடையில் இருந்து மணவினைகள் புரிந்ததாகச் செய்திகள் இல்லை. 
  • இத்தகைய முறையில் பழந்தமிழரின் திருமணச் சடங்கு நடைபெற்றது என்பதை அகநானூற்றுப் பாடல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி