அறிவியலுக்கும் தமிழருக்குமான தொடர்பு
அறிவியலுக்கும் தமிழருக்குமான தொடர்பு குறித்து விளக்குக.
முன்னுரை
அறிவியல் மனிதனின் அன்றாட வாழ்க்கையோடு இணைந்துள்ள ஒன்றாகும். மனிதன் சிந்திக்கக் தொடங்கிய தொடக்கக் காலம்தொட்டு இன்றுவரை மனித
வாழ்வியல் அறிவியலோடு கட்டமைக்கப்பட்ட ஒன்றாக உள்ளமு. மனித வாழ்வியலை அறிவியல் எளிமையாக்கியுள்ளது. அறிவியலுக்கும் தமிழருக்குமான தொடர்பு குறித்து இங்கு விளக்குகிறது.
அறிவியல் விளக்கம்
- அறிவியல் (Science) என்பது, "அறிந்து கொள்ளுதல்" எனப் பொருள்படும்.
- இது Scientia எனும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானது.
- இயற்கை, உயிர்கள், உலகம் மற்றும் சமூகத்தைத் தரவுகளின் அடிப்படையில் ஒரு முறையான வழிமுறையைப் பின்பற்றிப் புரிந்துகொள்ளுதல் அறிவியல் ஆகும்.
- ஒன்று நிகழ்வது ஏன்? எதனால்? எப்படி? என்ற வினாக்களின் அடிப்படையில் ஆராய்ந்து அறிதலே அறிவியல் எனலாம்
அறிவியலை மூன்றாகப் பகுத்து ஆராயலாம். அவையாவன,
- இயற்கை அறிவியல்,
- சமூக அறிவியல்,
- முறைசார் அறிவியல்
பருப்பொருளான உலகத்தையும் அண்டத்தையும் ஆராயும் அறிவியல் இயற்கை அறிவியல் ஆகும்.
சமூக அறிவியல்
சமூகத்தில் வாழும் மக்களையும் சமூகங்களையும் குறித்து ஆராயும் அறிவியல் சமூக அறிவியல் ஆகும்.
முறைசார் அறிவியல்
முறைசார் அறிவியலில் சான்றுகள் சார்ந்த அளவையியல் (logic), கணிதவியல் முறைகள் குறித்து ஆராயப்படுகின்றன.
அறிவியல் தோற்றம்
- இவ்வுலகில் அறிவியல் எப்போது தொடங்கியது என்று அறுதியிட்டுக் கூறவியலாது.
- ஆதி மனிதனனின் உணவு தேடலில் அறிவியல் தோன்றியது எனலாம்.
- அதாவது விலங்குகளை வேட்டையாடுதல், இறந்த விலங்குகளை உணவிற்காக வெட்டுதல் ஆகியவற்றில் அறிவியல் தொழில்நுட்பம் தோன்றியது.
- கற்களை உரசி, தீயினை உண்டாக்கும் நுட்பத்தில் அடுத்த கட்ட வளர்ச்சியை அடைந்தது.
- சிறு பொறியாய்த் தொடங்கிய அறிவியல், இன்று பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது.
- தொல்தமிழர் அறிவியலை மெய்யியல் என்று பெயரிட்டு வழங்கியுள்ளனர்.
- தொல்செவ்வியல் காலம் முதல் 19-ஆம் நூற்றாண்டு வரையில் ’மெய்யியல்’ என்ற பெயரிலேயே வழங்கப்பட்டு வந்துள்ளது.
- இயற்கை மெய்யியல் இன்றைய வானியல், மருத்துவம், இயற்பியல் ஆகிய ஆய்வுப் புலங்களைக் குறித்து வந்துள்ளது.
- உலகம், பருப்பொருள்களால் ஆனது.
- இந்தியர்கள் பருப்பொருள்களை ’பூதங்கள்’என்று குறிப்பிட்டுள்ளனர்.
- கிரேக்கத்தில் ’செவ்வியல் தனிமங்கள்’எனவும் குறிக்கப்பட்டன.
- நீர், நிலம், நெருப்பு, காற்று எனப் பருப்பொருள்கள் நான்கு என்றது மேற்கு உலகம்.
- இந் நான்கோடு ஆகாயத்தையும் சேர்த்து ஐந்து என்றது தொல்தமிழர் மெய்யியல்.
பிற்கால அறிவியல் தமிழரின் மெய்யியலையே ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உலகத் தோற்றம் குறித்த தமிழரின் மெய்யியலானது இன்றைய நவீன அறிவியலோடு நேரடியாகவே பொருந்திப்போகிறது.
- அறிவியலாளர் சுட்டும் ஞாயிற்று மண்டிலம், பெருவெடிப்புக் கொள்கை, ஐம்பூதங்களின் தன்மை மற்றும் இயக்கம் போன்றவை, தமிழர் மெய்யியலோடு தொடர்புடையவையாக உள்ளன.
தமிழரின் வேளாண்மை அறிவியல்
- தமிழர் பழங்காலத்திலேயே வேளாண்மையை மிக நேர்த்தியுடன் மேற்கொண்டுள்ளனர். பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி உலகிற்கு முன்னோடியாய் விளங்கியுள்ளனர்.
- தமிழ் நாட்டில் பயிரிடப்படும் சாகுபடிப் பயிர்கள் மற்றும் அவற்றைச் சார்ந்த காட்டுத் தாவரங்களின் மரபணுத் தொகுதியை ஆய்வு செய்த உயிரியல் ஆராய்ச்சியாளர்கள், ‘சிறு தானியங்களான கேழ்வரகு, வரகு, கம்பு, சோளம், தினை, சாமை மற்றும் பயறு வகைகளான பாசிப் பயறு, உளுந்து, கொளுஞ்சி, அவரை ஆகியவை தமிழ்நாட்டில்தான் முதன் முதலாகச் சாகுபடி செய்யப்பட்டு உலகிற்கு வழங்கப்பட்டுள்ளது’ என்று உறுதி செய்துள்ளனர்.
- நெற்பயிரும் இங்கேதான் முதன்முதலாகப் பயிரிடப்பட்டது.
- ‘அரிசி’ என்ற தமிழ்ச் சொல் உலகின் அதிக
மொழிகளில் 'நெல்' என்ற தானியத்தைக் குறிக்கும் சொல்லாக ‘ரைஸ்’, ‘ரைஸோ’ என மருவி வழங்கி வருகின்றது.
தமிழரின் வேளாண் அறிவியல் உத்திகள்
சங்கத் தமிழ் நூல்களில் வேளாண்துறைசார் மரபு நுட்பங்களைக் காணமுடிகிறது.
உழுதல் தொடங்கி அறுவடைவரையிலான பல்வேறு வேளாண்மை
நுட்பங்களை அவை கொண்டுள்ளன.
- தரிசு நிலத்தைப் பண்படுத்தி விளைநிலமாக்குதல்,
- மண்ணை ஆழ உழுதல்,
- பலமுறை உழுதல்,
- வித்துகளைத் தேர்ந்தெடுத்தல்,
- விதைத்தல்,
- நீர் பாய்ச்சுதல்,
- எரு இடுதல்,
- பயிர்களைப் பாதுகாத்தல்,
- அறுவடை,
- தானியப் பாதுகாப்பு என வேளாண் துறைசார்ந்த இலக்கியச் செய்திகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
-------------------நாஞ்சில்
உடுப்புழுக முழுக்கொழு மூழ்க ஊன்றி
என்ற
பெரும்பாணாற்றுப்படை அடிகளிலும் (எண். 199)
பலகாலும்
உழுதலால் பயன்படும் நிலம் போல
என்ற
ஐங்குறுநூற்றின் அடியாலும் (எண்.14) அறியலாம்.
தமிழரின் உடை உற்பத்தி அறிவியல்
- உலகின் ஆதிக் குடிகள் பலவும் மரவுரி தரித்து, காட்டில் திரிந்த காலத்திலேயே பருத்தியிலும் பட்டிலும் ஆடைகள் நெய்யும் அறிவியலைக் கற்றிருந்தவன் தமிழன்.
- துணிகளுக்கு வண்ணம் ஏற்றும் வண்ணக் கலப்பு அறிவியல் நுட்பத்தையும் உடைகளில் பலவகைக் கையலங்கார வேலைப்பாடுகளைச் செய்யும் அழகியலையும் கண்டெடுத்தவன்.
- பருத்திப் பஞ்சிலிருந்து நூலினைப் பிரித்தெடுக்கும் அறிவியல் நுட்பத்தைக் கண்டறிந்தவன்
- ஆடைகளையும் ஆடைவடிவமைப்பு அறிவியலையும் உலகின் பல பாகங்களுக்கும் ஏற்றுமதி செய்தனர் பழந்தமிழர்
- பல்வேறு நுட்பங்களில், தமிழர் உருவாக்கிய துணிகளை 36 வகையான பெயர்களில் பழந்தமிழ் இலக்கியங்கள் பதிவுசெய்கின்றன.
- பாம்பின் தோல், பாலாடை, அருவியின் சாரல், மேகம், மூங்கிலின் உள்தோல் ஆகியவற்றை போன்று பல வகைகளில் தமிழர் ஆடைகளை உருவாக்கியுள்ளனர் என்று சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
- நெசவுத் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் ‘பருத்திப் பெண்டிர்’ (புறம்.326) எனப்பட்டனர்.
அரவுரி அன்ன அறுவை
(பொருநர் ஆற்றுப்படை-82)
கோபத் தன்ன தோயாப்
பூந்துகில் (திருமுருகாற்றுப்படை-15)
துகில்ஆய் செய்கைப்
பாவிரித்தன்ன (அகநானூறு -293)
போன்ற பாடல்வரிகளைச் சான்றாகக் காட்டலாம்
பழந்தமிழர்கள் ஆடைகளை ஏற்றுமதி செய்த நாடுகள்
எகிப்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், இறந்துபோன அரசர்களின் உடல்கள் பலவிதப் பொருள்களால் பதப்படுத்தப்பட்டு, அழியாது, கல்லறைகளில் வைத்துப் பாதுகாக்கப்பட்டுள்ளன. அந்த உடல்கள் இந்திய மசுலின் துணிகளால் பொதியப் பெற்றுள்ளன எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முற்காலத்தில் பாண்டிய நாட்டில் நெய்யப்பெற்ற தாமரை மலர்கள் பொறித்த பட்டுத் துணிகள்
உரோம், கிரேக்கம், எகிப்து, அரேபியா, இலங்கை, கடாரம், சாவகம், சமபாகம், போர்ச்சுகல்
முதலிய பல்வேறு நாட்டு மன்னர்களின் அரண்மனைகளை அலங்கரித்திருக்கின்றன.
பருத்தி நெசவு, முதன்முதலில் இந்தியாவில்தான் செய்யப்பட்ட தென்றும், அங்கிருந்தே மேலைநாடுகளுக்குப் பரவியதென்றும் ’சாண் மார்சல்' கூறுகிறார்.
பண்டைக்கால வரலாற்று ஆய்வாளர்கள், மேலை நாடுகள்,
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த பொருள்களுள் துணியும் ஒன்று எனக் குறிப்பிடுகின்றனர்.
அகழாய்வுச்சான்றுகள்
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் நூல் நூற்கப் பயன்படும் ‘பஞ்சாடை’ எனும் கருவியும் கிடைத்துள்ளது.
கீழடி அகழாய்விலும் ஏறத்தாழ 2,600 ஆண்டுகளுக்கு முன்பாக பழந்தமிழர் பயன்படுத்திய நெசவுக் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இவை, பழந்தமிழர் நெசவுத் தொழில்நுட்ப அறிவியலில் தலைசிறந்து
விளங்கியதற்கான சான்றுகளாய்த் திகழ்கின்றன.
தமிழரின் கட்டுமான அறிவியல்
- மரப் பொந்துகளிலும், கற் குகைகளிலும் வாழ்ந்த மனிதன் தனக்கான இருப்பிடத்தைத் தானே அமைத்துக்கொள்ளத் தொடங்கினான்.
- மனிதன் சேர்ந்து வாழவும் பாதுகாப்பிற்கும் இனத்தை விருத்தி செய்துகொள்ளவும் தம் உடமைகளைப் பாதுகாக்கவும் இருப்பிடம் என்ற ஒன்று தேவைப்பட்டது.
- மனிதன் இடம், சூழலியல், வளம் என அனைத்தையும் ஆய்ந்து, நினைத்த குடியிருப்பை ஏற்படுத்தினான்
- இம் மரபு அறிவு வளர்ச்சியே பல்வகைப்பட்ட கட்டடக்கலை அறிவியல் நுட்பங்களாகப் பின்னாளில் வளர்ந்தது.
தமிழர் தங்கி வாழ்ந்த இடங்களின் பெயர்கள்
பழந்தமிழ்ப் பாடல்களில் தமிழர் தங்கி வாழ்ந்த இடங்கள், ‘அகம், இல், இல்லம், உறையுள், உறைவிடம், கல்லளை, குடில், குரம்பை, குறும்பு, நெடுநகர், புக்கில், மனை, மாடம்’ எனப் பலவாறு குறிக்கப்படுகின்றன.
பெயர் மாறுபாடு போலவே ஒவ்வொன்றின்
தன்மையும் வடிவமைப்பும் பயன்பாடும் மாறுபாடு கொண்டவைகளாக உள்ளன .
தமிழர் வகுத்த அறுபத்து நான்கு கலைகளுள் கட்டடக் கலையும் ஒன்று.
தமிழரின் கட்டடக்கலை நுட்பங்களானது எழில்மிகு அரண்மனைகள், உயர் மாளிகைகள், எழுநிலை மாடங்கள்,
அகல்நெடுந் தெருக்கள், வடிவார்ந்த ஊர்கள், திட்டமிட்ட பெருநகரங்கள், வளம்மிகு பட்டினங்கள்,
உறுதியான கோட்டைகள், ஏற்றமிகு அரண்கள், பயன்மிகு நீர்நிலைகள், விண்ணளக்கும் கலங்கரை
விளக்கங்கள், கலைகள் வளர்க்கும் அரங்குகள், ஆன்மிகம் வளர்க்கும் கோயில்கள் எனப் பரந்துபட்ட அளவில் காணப்படுகின்றன.
நகர வடிவமைப்பு நுட்பம்
- செவ்வியல் இலக்கியங்கள் புகார், மதுரை, காஞ்சி ஆகிய பெருநகரங்களின் வடிவமைப்பு நுட்பங்களை விளக்கியுள்ளன
- மதுரை நகர் தாமரை வடிவில் அமைந்திருந்ததாகப் பரிபாடல் கூறுகிறது.
- இந்நகரில், பாதாள வடிநீர் வழிக்காகப் பூமிக்கடியில் யானைகள் நுழையும் அளவு பெரிய புதைகுழாய்கள்
பதித்திருந்ததைச் சிலம்பு உரைக்கிறது.
- மாயோனது கொப்பூழில் மலர்ந்த தாமரைப் பூவோடு ஒத்த சிறப்புடையது மதுரைப் பேரூர் என்கிறது பரிபாடல் (எண்: 8:1-5).
- தாமரைப்பூவின் அக இதழ்களைப் போன்றவை மதுரைத் தெருக்கள் என்றும்,
- அவ்விதழ்களின் உட்புறமாக விளங்கும் மையத்தைப் போன்றது பெருமையில் சிறந்தவனாகிய பாண்டியனின் அரண்மனை என்றும்,
- அப் பூவில் பொருந்தியுள்ள தாதினைப் போன்றவர் தண்தமிழ் மொழியைப் பேசும் மக்கள் என்றும்,
- அத் தாதினை உண்ணுகின்ற வண்டினைப் போன்றவர்கள் மதுரைக்கண் வந்து பரிசில் பெற்று வாழ்கின்றவர்கள் என்றும் காட்சிப்படுத்தப்படுகிறது. அப் பாடல் வருமாறு:
மாயோன் கொப்பூழ் மலர்ந்த
தாமரைப்
பூவோடு புரையும் சீர்ஊர்
பூவின்
இதழகந்து அனைய தெருவம்
அண்ணல்கோயில்
தாதின் அனையர் நன்தமிழ்க்
குடிகள்
அரண்மனை வடிவமைப்பில் அறிவியல் நுட்பம்
- நெடுநல்வாடையில் நக்கீரர் குறிப்பிடும் அரண்மனைக் கட்டுமான உத்தி இன்றைய நவீன யுகம் வியந்து பார்க்கக்கூடிய வகையில் உள்ளது.
- சித்திரைத் திங்கள் பத்தாம் நாள் தொடங்கி இருபதாம் நாள்வரை உள்ள நாட்களில் ஏதேனும் ஒருநாளில், பகல் பதினைந்து நாழிகையில் ஞாயிற்று மண்டிலம் நிலத்தில் நடுவில் இயங்கும். அவ்வாறு இயங்கும் நாளில், இரண்டு நேரான கோல்களை நட்டு, அக்கோல்களின் நிழல் வடக்கிலோ தெற்கிலோ சாயாமல் அந்தக் கோல்களிலேயே பதினைந்து நாழிகை அடங்கும் காலம் ஆராய்ந்து குறிக்கப்பட்டது.
- அப்படி நின்ற நேரத்தில் வழிபாடுகள் செய்து, அரண்மனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
- இதனை, நூல்களை நன்குப் படித்துத் தேர்ந்த கட்டுமானப் பொறியாளர் மேற்கொண்டனர் என்கிறது நெடுநல்வாடை (72-78).
- இந்த ‘நிழல் இல்லா நேரம்’ (Zero shadow time) பற்றி அறிவியல் உலகம் இன்று வியந்து பேசுகிறது.
- ஆனால், தமிழன் அந்நாளில், அந்நேரத்தைத் தேர்ந்தெடுத்து, அரண்மனைக்கு அடிக்கல் நாட்டிய
அறிவியலின் மர்மத்தை இன்றுவரை அறியமுடியவில்லை.
தமிழரின் மருத்துவ அறிவியல்
- ’நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று முதுமொழி கண்ட சமூகம் தமிழ்ச் சமூகம்.
- பண்டைத் தமிழரின் மருத்துவ அறிவை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
- மருத்துவன், அறவோன், நோய் மருங்கு அறிநன், கற்றான், தீர்ப்பான் என்று மருத்துவனைப் பழந்தமிழர் பல்வேறு பெயரிட்டு அழைத்திருக்கின்றார்கள்.
- வள்ளுவர், பண்டைய காலத் தமிழரின் மருத்துவ அறிவை ’மருந்து’ என்ன அதிகாரத்தில் மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளார்.
- நோயுற்றவன்,
மருத்துவன், மருந்து, மருத்துவனுக்கு உதவியாக இருந்து பணியாற்றுபவன் என்ற நான்கு கூறுகளைக்
கொண்டது மருத்துவம் என்கிறார் (குறள், 950)
உற்றவன் தீர்ப்பான்
மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே
மருந்து
பழந்தமிழர் மருத்துவ முறைகள்
பழந்தமிழர் மருத்துவ முறைகளை
- இயற்கை மருத்துவம்,
- இசை மருத்துவம்,
- அறுவை மருத்துவம்,
- மகப்பேறு மருத்துவம்,
- மனவள மருத்துவம்,
- கால்நடைகளுக்கான மருத்துவம்
- என வகைப்படுத்திக் காண முடியும்.
’சிரல்’ எனும் மீன்கொத்திப் பறவை நீருக்குள் பாய்ந்து மீனைக் கொத்திக்கொண்டு மேலே எழுவதைப் போல, நீண்ட ஊசியால் உடலில் வெட்டுக் காயம்பட்ட பகுதியைத் தைத்துள்ளனர்.
பறவையின் அலகில் மீன் இருந்ததைப் போல, ஊசியின் நுனியில் நூல் இருந்ததாம் (பதிற்றுப்பத்து, 42:2-4). அப் பாடல் அடிகள் வருமாறு:
மீன்றேர் கொட்பிற்
பனிக்கயம் முழ்கிச்
சிரல்பெயர்ந் தன்ன
நெடுவெள் ஊசி
நெடுவசி பரந்த வடுவாழ்
மார்பின்
தமிழரின் உயிரியல் அறிவியல்
தமிழர்தம் உயிர்ப்பாகுபாட்டு அறிவானது உலகினர் வியக்கும் நுட்பம் கொண்டது.
- உடம்பால், அதாவது தொடு உணர்வால் மட்டும் அறிவன ஓர் அறிவு உயிர்கள்;
- உடம்பாலும் நாவாலும் அறிவன இரண்டு அறிவு உயிர்கள்;
- உடம்பு, நா, மூக்கு ஆகிய மூன்றாலும் அறிவன மூவறி உயிர்கள்;
- இவை மூன்றோடு கண்ணாலும் அறிவன நான்கறிவு உயிர்கள்;
- இந் நான்கோடு காதாலும் அறிவன ஐந்தறிவு உயிர்கள்;
- இந்த ஐந்து உறுப்புகள் அன்றி புலனாகாத மனத்தைப் பெற்று, அதன் வழிப் பகுத்தறியும் ஆற்றல் பெற்றவை ஆறறிவு உயிர்கள்
- இத்தகைய உயிரினப் பகுப்புமுறை உலகின் வேறு எந்தச் சமூகத்தாலும் கண்டுரைக்கப்படாத அறிவியலாகும்.
- இதன் மூலம் தாவரங்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் அவற்றின் இயல்புகளையும் அறிந்து அவற்றோடு/அவற்றைப் பயன்படுத்திக்கொண்டு, தன் வாழ்வை அமைத்துக்கொண்டவன் தமிழன்.
கருத்துகள்
கருத்துரையிடுக